சிவசித்தன்

Thursday, November 10, 2011
மனிதனை உணரும் நிலை நீ அறிய,
வாசியோகம் நீ அறி மானிடனே !

மனிதனை மாற்ற நீ நினைக்கிறாயா,
நீ வாழும் உலகில் அறிய கலை !

மனிதனே நீ உன்னை அறியும் கலைதான்
சிவசித்தனின் வாசியோக கலை அறியும் !

மனிதனே தன்னை அறியாமல் இறைவனை தேடாதே ,
உன்னை நீ அறிய என்னை படைத்தான்!

மனிதனே என்னை நீ யார் ? என்று அறிய
என் வாசியோக கலை அறி!

மனிதனே உண்மை உண்மையை தேடி அறியும்
நீ என்னை உணர்ந்தால் உன்மனதின் தடை நீ அறிவாய் !

மனிதனே உண்மையை உணர்ந்து அறி, அறிந்த பின்
படைத்தவன் தன்னையே பார்!

மனிதனே உண்மையை நீ உணர்ந்து அறிந்தது இல்லை ! அறிய வா
மனித உடலின் உள்ளிருக்கும் பத்தாம் அறிவையும் , இறைவனையும் அறிய வைக்கிறேன் !


மனிதனே அறியாத உலகில் , மனிதன் தேடி அலைகிறான் !
உலகிற்கு இந்தகலையை வெளிபடுத்த இறைவன் எனக்கு கட்டிய கருவியில் நீயும் ஒருவன் !

என்னை உணர்ந்து செயல் படு !!!

என்றும்
சிவசித்தன்
Read more ...

காப்பியங்களும் புராணங்களும்

Saturday, October 1, 2011
பிறவகை இலக்கியங்கள்

மேற்கண்ட காப்பியங்கள், புராணங்கள் தவிர இக்காலக்
கட்டத்தில் வேறு சில சிற்றிலக்கியங்களும், தோன்றின. அவை
சமயம் சார்ந்த நிலையிலும், சமயம்சாரா நிலையிலும் அடங்கும்.

சமயம் சார்ந்தவை

சமயம் சார்ந்த நிலையில் திருப்புகழ், திருஆனைக்காஉலா,
திருவாய்மொழி நூற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்றவை
உள்ளிட்ட பல நூல்களாகும்.
திருப்புகழ்

இதனைப் பாடியவர் அருணகிரிநாதர். சைவ இலக்கியங்களில்
திருப்புகழுக்குச் சிறப்பான இடம் உண்டு. பண்டைய ஆசிரியர்கள்
திருப்புகழ் பாடல்கள் 16,000 என்பர். தோன்றிய காலம் முதல்
திருப்புகழ் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை
கொண்டுவிட்டது.

திருப்புகழைக் கேட்கத் திருப்புகழைக் கற்கத்
திருப்புகழை நித்தந் தியானிக்கத் - திருப்புகழை
உற்றிருந்து கேட்பாருக் குற்ற வினையிரண்டும்
அற்றிருக்கத் தானே யறும்

நூலின் பெயர் திருப்புகழாய் அமைந்திருப்பதோடு மட்டுமன்றி,
நூலில் அமைந்துள்ள 1307 பாடல்கள் ஒவ்வொன்றுமே திருப்புகழ்
என்றே வழங்கப்படுகின்றன. இதுவே இதன் சிறப்பாகும். முருகப்
பெருமானின் பெருமைகளை இந்நூல் கூறுகிறது. இந்நூலில் சபாஷ்,
சலாம், ராவுத்தன் போன்ற முகமதியச் சொற்கள் கலந்திருப்பது
நோக்கத்தக்கது. அக்கால ஆட்சிப்போக்கினையும், மொழிப்
போக்கினையும் இது உணர்த்துகிறது. இதைப் போலவே அளவுக்கு
மீறிய வடசொற்களும் இதில் கலந்துள்ளன. இந்நூலாசிரியர் பாடிய
பிற நூல்கள் கந்தர் அலங்காரம், கந்தரனுபூதி,
திருஎழுகூற்றிருக்கை, கந்தரந்தாதி போன்றவையாகும்.
கல்வியில் குறைந்தவர்கள்கூட இவரது பாடல்களில் ஆர்வம்
செலுத்துவர். முருகனைப் போற்றும் பாடல்கள் இக்காலக்
கட்டத்தில் அதிகம் தோன்றியுள்ளன.
திருஆனைக்காஉலா

இந்நூலும் சமயம் சார்ந்த நூல்களில் ஒன்றாகும்.
ஆனைக்காவில் உள்ள வெண்ணாவலீசர் மீது பாடப்பெற்றது.
தலச்சிறப்பில் இங்குப் பேறு பெற்றவர்களின் செய்தி கூறப்பட்டுள்ளது.

இந்நூலைப் பாடியவர் காளமேகப்புலவர். நினைத்தவுடன்
தங்குதடையின்றி எப்பொருளைப் பற்றியும், எவ்விதமாகவும்
சாமர்த்தியமாகப் பாடும் ஆற்றல் இவருக்கு இருந்தது. கார்மேகம்
போல இவர் கவிதை மாரி பொழிந்தமை கண்ட பெரியோர்
இவரைக் காளமேகம் என்றனர். இந்நூலிலுள்ள கண்ணிகள் 461,
வெண்பாக்கள் 2 ஆகும். இந்நூல் சிறந்த பக்திச்சுவை கொண்டது.
இறைவனின் பெயரைக் கூறும் போது இவர் பயன்படுத்தும்
தொடர்கள் திருமுறைகளில் இவருக்கு உள்ள ஈடுபாட்டைக்
காட்டுகின்றன. இவர் இயற்றிய பிற நூல்கள் சித்திர மடல்,
சமுத்திர விலாசம் போன்றவை ஆகும்.
திருவாய்மொழி நூற்றந்தாதி

மணவாள முனிகளால் இயற்றப்பட்டது. இவர் பல
பிரபந்தங்கள் செய்தவர். முருகன் மீதான நூல்கள் எழ
அருணகிரிநாதர் காரணமாக இருந்தார். அதுபோல வைணவ
நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட இவரே முக்கிய காரணமாகும்.
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பதிகங்கள் அனைத்தையும்
எடுத்து, பதிகத்துக்கு ஒரு வெண்பா வீதம் 100 வெண்பாக்கள்
பாடியுள்ளார். ஒவ்வொரு பதிகத்தின் முதற்பாட்டின்
முதற்சொல்லையும், கடைசிப்பாட்டின் கடைசிச் சொல்லையும் தாம்
பாடிய ஒவ்வொரு வெண்பாவுக்கும் முதலும் முடிவுமாக வைத்துப்
பாடியுள்ளார். இவருடைய பிற நூல்கள் உபதேச ரத்ன மாலை,
ஆர்த்திப் பிரபந்தம் போன்றவையாகும்.
திருக்கலம்பகம்

திருக்கலம்பகம் இக்காலத்தில் தோன்றிய சமண நூலாகும்.
இதன் ஆசிரியர் உதீசித்தேவர். இந்நூல் அருகனின் தோத்திர
நூலாகும். 110 பாடல்களையுடையது. கலம்பக இலக்கணங்கள்
கொண்டது. ஒரு தலம் குறித்துப் பாடப் பெறாமல் பொதுவாய்
அருகனைத் துதிக்கின்றபடியால், தலத்தைச் சுட்டியதாக வழங்காமல்
திருக்கலம்பகம் என்று பெயர்பெற்றது. நீயே சிவபிரான், நீயே
திருமால், நீயே பிரமன், நீயே முருகன், உனது சக்தியே அம்பிகை
எனப் பலவாறாக அருகனைப் போற்றிய வகையில் பாடல்கள்
உள்ளன. இக்காலக் கட்டத்தில் தோன்றிய பிற சமண நூல்கள்
ஆதிநாதர் பிள்ளைத் தமிழ், அனந்தகவி உரை
போன்றவையாகும்.

சமயம் சாராதவை

சமயம் சாராத நூல்களாக இக்காலக் கட்டத்தில் தோன்றியவை
வருணகுலாதித்தன் மடல், சித்திர மடல், கபிலரகவல்
போன்றவையாகும்.
வருணகுலாதித்தன் மடல்

96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான மடல் வகையைச்
சார்ந்தது இந்த நூல். தலைவன் தான் காதலித்த தலைவியைப்
பெறாத நிலையில், அவளை அடைய, பனங்கருக்கால் குதிரை
போல் ஓர் ஊர்தி செய்து ஊர்தலே இந்நூலின் வடிவமாகும்.
நாகையில் வாழ்ந்த வள்ளல் மீது காளிமுத்து என்னும் தாசி
பாடியது. சொல் நயம், அடுக்கு, எதுகை, மோனை, தொடை நயம்,
முரண் தொடை, மடக்கு முதலிய அனைத்துச் செய்யுள்
நலன்களையும் இம்மடலில் காணலாம். வருணனை, சந்த நடை
சிறப்பாக அமையப் பெற்றது. சிறப்பான இலக்கிய நடையும், சில
சமயம் பேச்சு நடையும் இதில் இழைந்து வருவதைக் காணலாம்.
சித்திர மடல்

இது, மடல் வகையைச் சார்ந்த மற்றொரு நூலாகும். 174
கண்ணிகளும், ஒரு காப்புச் செய்யுளும் உடையது. பின்னர்த்
தோன்றிய மடல் பாட்டுடைத் தலைவனின் சிறப்பை விரித்துக்
கூறும். அக்கூற்றுகள் இதில் காணப்படாதது இதன் சிறப்பம்சமாகும்.
மடல் மரபைக் கூறும் திருக்குறளைக் கேளுங்கள்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி
(1131)

(காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்)
வருந்தினவர்க்கு மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறு
எதுவும் இல்லை என்பது இதன் பொருளாகும்).
# கபிலரகவல்

கபிலர் அகவல், சமூகப்புரட்சியைக் கவிதை வடிவில்
வெளிப்படுத்தியது எனலாம். கடவுளுக்குச் சாதி வேற்றுமை
இல்லை, அவருடைய மெய்யடியார்களுக்கும், ஞானிகளுக்கும்
சாதிவேற்றுமை இல்லை என்பதை நாயன்மார்கள் மற்றும்
ஆழ்வார்களின் வரலாறுகள் காட்டுகின்றன. மக்களாய்ப்
பிறந்தோர் இரப்பவர்க்கு இட்டு, புலையும் (ஊன்), கொலையும்,
களவும் தவிர்த்து அறத்தில் நிற்பார்களாக என்று இவர்
அறிவுரை கூறுகிறார். எக்காலத்திலும் பொருந்தும் வகையில்
கபிலரகவல் கூறும் அறிவுரையைக் கொஞ்சம் கேளுங்கள்:

குலமு மொன்றே குடியு மொன்றே
இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே

இதைப் போலவே சாதியால் உயர்வு கூறுவோரைக்
கண்டிக்கும் மற்றொரு நூல் பாய்ச்சலூர்ப்பதிகம் எனப்படும்.
அது ஒரு நாடோடிப்பாடல் ஆகும்.
Read more ...

காப்பியங்களும் புராணங்களும்

Saturday, October 1, 2011
காப்பியங்களும் புராணங்களும்

இக்காலக் கட்டத்தில் பல காப்பியங்களும், புராணங்களும்
தோன்றின. அரிச்சந்திர புராணம் , உதயண குமார காவியம்,
காதம்பரி போன்றவை இக்காலத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க
இலக்கியங்களாகும்.

காப்பியங்கள்

பெருங்கதையில் இடம் பெற்ற உதயணன் பற்றிய ஒரு
காப்பியமும், காதம்பரி போன்ற மொழி பெயர்ப்புக் காப்பியங்களும்
தோன்றின.
உதயண குமார காவியம்

இது, கௌசாம்பி நாட்டு மன்னனான உதயணனின்
வரலாற்றைக் கூறுகிறது. ஆறு காண்டப் பாகுபாடு உடையது. 369
விருத்தப்பாக்களைக் கொண்டது. பெருங்கதையின் முற்பகுதியும்,
பிற்பகுதியும் கிடைக்காமையால் உதயணனின் வரலாற்றை அறிய
இது உதவுகிறது. (பெருங்கதை காலத்தால் மிகவும் முற்பட்டது -
உதயணனின் வரலாற்றைக் கூறுவது). பெயர்தான் காவியமே தவிர,
இதில் காவிய இயல்புகள் இல்லை. பெருங்கதையை அடியொற்றியே
இக்காவியம் செல்கிறது. இக்காவியம் போற்றப்படாததற்குக் காரணம்
இதில் இலக்கியச் சுவை குறைந்திருப்பதே என்பது அறிஞர் கருத்து.
# காதம்பரி

மொழிபெயர்க்கப்பட்ட காவியங்களில் குறிப்பிடத்தக்க ஒரு
நூல், காதம்பரி. இது, கந்தர்வப்பெண் காதம்பரியை உச்சயினி
மன்னன் சந்திராபீடன் மணந்த வரலாற்றைக் கூறுகிறது.
ஹர்ஷருடைய சபையில் கவிஞராக இருந்த பட்டபாணர்
வடமொழியில் வசன நடையில் இதனை எழுதியுள்ளார். அதன்
மொழிபெயர்ப்பே இந்நூல். இதன் ஆசிரியர் ஆதிவராக கவி
ஆவார்.

புராணங்கள்

கி.பி 11 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரையிலான இக்காலக்
கட்டத்தில் புராணங்களும் தோன்றின. தமிழில் தோன்றிய
புராணங்களைப் புராணங்கள் எனவும், புராணக் காப்பியங்கள்
எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். முதற்புராணம்
பெரியபுராணம் ஆகும். புராணம் என்பது பழமையான
நிகழ்வுகளைக் கதை வழியாகக் கூறும் முயற்சியாகும்.
இந்நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்கப் புராணங்களாக,
திருவாதவூரடிகள் புராணம், ஸ்ரீபுராணம் போன்றவற்றைக்
கூறலாம்.
அரிச்சந்திர புராணம்

அரிச்சந்திர புராணம் எனப்படும் அரிச்சந்திர சரித்திரம்,
தமிழ் மக்கள் நன்கு அறிந்த இதிகாசக் கிளைக் கதையாகும்.
இதனுடைய முதற்பதிப்பு இதனை அரிச்சந்திர சரிதம் எனக்
கூறுகிறது. இதனைப் பாடியவர் நல்லூர் வீரை ஆசு கவிராயர்.
நூலின் பாக்கள் சுவையுடையன. எடுத்துக்காட்டாக, அரிச்சந்திரன்
தன் மனைவியின் கழுத்தை வெட்ட வேண்டிய நேரத்தில்
கூறுவதாவது:

உலகுயிர்க்கெலாம் பசுபதி ஒருமுதல் ஆயின்
அலகில் சீர்உடை அவன்மொழி மறையெனின் அதன்கண்
இலகுஅறம் பலவற்றினும் வாய்மை ஈடுஇலதேல்
விலகு உருமல் அவ் வாய்மையை விரதமாக்கொளின்யான்

(அரிச்சந்திரபுராணம், மயான காண்டம், 135)்

(பசுபதி = உயிர்களின் தலைவனாகிய சிவபெருமான்; ஒருமுதல் = தனிப்பெருந்தெய்வம்; அலகில் - அலகுஇல் = அளவில்லாத; இலகு = விளங்கும்; வாய்மை = உண்மை)

சிவபெருமான்தான் முழுமுதற் கடவுள் என்பதும்,
அப்பெருமான் உரைத்ததே வேதம் என்பதும், அவ்வேதத்தில்
கூறப்பட்டுள்ள அறங்களில் இணையற்றது, உயர்ந்தது உண்மை
பேசுதலே என்பதும், அந்த அறத்தை நான் இடைவிடாமல்
கடைப்பிடிக்கிறேன் என்பதும் உண்மையானால், இவ்வாள்
இவளைக் கொல்லாது இருக்கட்டும் என்பது இதன் பொருள்.
# திருவாதவூரடிகள் புராணம்

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம்
545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல்.
சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. பின்னர்
வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில்
மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன்
முக்கியச் சிறப்பு இதுவேயாகும். மந்திரிச்சருக்கம், திருப்பெருந்துறைச்
சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச்
சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற
சருக்கம் என்ற பல பகுதிகள் இப்புராணத்தில் அடங்கியுள்ளன.
சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின்
பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.
# ஸ்ரீபுராணம்

இக்காலத்தில் தோன்றிய மற்றொரு சமணப்புராணமாகும். இது
மகாபுராண சங்கிரகத்தின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர்
பெயர் கிடைக்கவில்லை. இவர் வடமொழிப்புலமையும்,
தமிழ்ப்புலமையும் மிக்கவர் என்பது இந்நூல் மூலம் தெரிய வருகிறது.
இந்நூல் 23 தீர்த்தங்கரர்களின் வரலாற்றைக் கூறுகிறது. இராமாயண,
பாரத, பாகவதக் கதைகள் இதில் பல் வகையான வேறுபாடுகளுடன்
கூறப்பட்டுள்ளன. இந் நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது.
இது உரைநடையாக உள்ளது. கவிதைக்குரிய வருணனைகள்
இந்நூலில் சேர்க்கப்படவில்லை. சமண நூல்களில் இது அளவில்
பெரியது.

இக்காலக் கட்டத்தில் திருப்புத்தூர்க் கோயிலிலுள்ள
சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் ஓங்குகோயில்
புராணம் (கி.பி. 1484) எழுந்தது. இப்புராணம் தற்போது
கிடைக்கவில்லை.
Read more ...

சைவ இலக்கியங்கள் -5

Monday, August 1, 2011
இலக்கண உரைகளும், இலக்கிய உரைகளும்

இக்காலப் பகுதியில் இலக்கண உரை என்ற நிலையில்
வீரசோழியத்திற்கு உரை எழுந்தது. இலக்கியம் என்ற நிலையில்
திருக்கோவையார், புறநானூறு போன்றவற்றிற்கு உரைகள் எழுந்தன.

வீரசோழிய உரை

இக்காலக் கட்டத்தில் வீரசோழியம் என்ற இலக்கண நூலுக்குப்
பெருந்தேவனாரால் உரை எழுதப்பட்டது. பெருந்தேவனார் என்ற
பெயரில் தமிழ்நாட்டில் பெரும் புலவர்கள் பலர் இருந்துள்ளனர்.
குறிப்பிடத் தக்கவர் மூவர். முதலாமவர் சங்கப்புலவர்களுள் ஒருவர்.
மற்றொருவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். மூன்றாமவர்
வீரசோழிய உரை எழுதியவர்.
பெருந்தேவனார் சமயமும் காலமும்

தம் ஆசிரியரிடம் கற்றனவாயும், நேரே ஆராய்ந்தனவாயும்
உள்ள பௌத்த சமயம் தொடர்பான பல பாடல்களைக்
குறிப்பிடுகிறார். இவரது ஆசிரியரான புத்தமித்திரரைப் போலவே
இவரும் பௌத்த சமயத்தினர் எனக் கூறப்பட்டாலும், இவர்
சைவர் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. உதாரணமாக இவருடைய
பெயரே இவர் சைவர் எனக் காட்டும். பெருந் - தேவனார் என்பது
‘மகாதேவர்’ என்ற பெயரின் மொழி பெயர்ப்பாகும். இது
சிவபெருமானின் பெயராகும். பொதுவாக இலக்கண, இலக்கிய
உரைகளில் உரையாசிரியர் எவரும் திருமுறைகளைக்
குறிப்பிடுவதில்லை. இவர் இரு திருமுறைப் பாடல்களைக்
குறிப்பிடுகிறார்.

ழ, ள, ற, ச, என்ற எழுத்துகளைச் சில இடங்களில் மக்கள்
பிழையாக உச்சரிக்கின்றார்கள் எனக் கூறும் போது அறிவில்லாதார்
தமிழைப் பிழைக்க வழங்குவார் என்கிறார் இவ்வாசிரியர். முதலாம்
இராசேந்திரனுடைய மெய்க்கீர்த்தி வரிகளையும் இவர் தம்முடைய
நூலில் கையாண்டுள்ளார்.

வீரராசேந்திரன் காலத்துக்குப் பிற்பட்ட (கி.பி. 1063 - 70) நூல்
எதையும் மேற்கோளாகக் காட்டாததால், இவர் இச்சோழன் காலத்தை
அடுத்து வாழ்ந்தவர் என்பதை உணரலாம்.

திருக்கோவையார் உரை

திருக்கோவையார் உரை தஞ்சை சரசுவதி மகால் நூலக
வெளியீடாக 1951 இல் வெளிவந்தது. உரையாசிரியர் பெயர்
தெரியவில்லை. அவர் சைவர், தில்லையைக் குறிப்பிடும் இடங்களில்
தெற்குத் திருப்பதி, திருச்சிற்றம்பலம் என்கிறார். பல சமயங்களில்
நேரே பொருள் விளங்கும் பதவுரையாகவும், சில இடங்களில் தனியாக
விசேட உரையாகவும் எழுதுகிறார். இவர் மேற்கோள் காட்டியது
தொல்காப்பியம் ஒன்றே ஆகும். இவ்வுரையானது பேராசிரியர் உரை
போன்று பெருஞ்சிறப்புடையது அல்ல. இருப்பினும் சிற்சில நயங்களை
அது பெற்றுள்ளது.

புறநானூற்று உரை

இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு உரை புறநானூற்று
உரையாகும். இதன் ஆசிரியர் பெயரும் வரலாறும் தெரியவில்லை.
இவரது உரைநடையின் அமைதி, உரை நயம், இலக்கணம் கூறும்
திறம் போன்றவை இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர்,
அடியார்க்கு நல்லார் போன்றோருடன் ஒப்பக் கருதும்
அறிவுடையவராக இவரைப் புலப்படுத்துகின்றன.

இவரது உரை எளிய, நயம் மிக்க பொழிப்புரை. மூலத்திலுள்ள
ஒவ்வொரு சொல்லையும் விடாது தெளிவாக விளக்கித் தொடர்புபடுத்தி
உரை எழுதுகிறார். இவர் காலத்தில் அணியிலக்கணம் பெரிதும்
ஆட்சிக்கு வரவில்லை. ஏனென்றால் சில அணிகளையே இவர்
கூறுகின்றார். சிலவற்றின் பெயரைச் சொல்லவில்லை.

செய்யுளில் சொற்கள் அமைந்தவாறே இவர் பொருளைக்
கூறிச் செல்கிறார். இதுவே இவ்வுரையின் சிறப்பு எனலாம். உரை
எளிமையானது; வட சொல்லாட்சி மிகவும் குறைவு.

மேற்கோளாக இவர் எடுத்துக்காட்டும் நூல்கள்
தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, தமிழ்நெறி
விளக்கம், பெரும்பாணாற்றுப்படை, குறுந்தொகை, கலித்தொகை,
சிந்தாமணி போன்றவையாகும். நூற்பெயரைச் சொல்வது இவர்
வழக்கமன்று. நாலடியார், திருக்குறள் வரிகளைத் தம்
உரைநடையாகவே எழுதிச் செல்கிறார்.
Read more ...

சைவ இலக்கியங்கள் - 4

Monday, August 1, 2011
இலக்கிய வரலாற்றில் 12ஆம் நூற்றாண்டு ஒரு பொற்காலம்
என்பார் மு. அருணாசலம். மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு எல்லாத்
துறைகளிலும் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
சோழ நாட்டிலும், தமிழ் நாட்டிலும் பொதுவாக இக்காலப் பகுதியில்
போர் இல்லாமையால் தமிழ் மொழிக்கு இது ஒரு பொற்காலம்.
முதல் குலோத்துங்கனோடு (கி.பி. 1070 - 1120) தொடங்கி,
மூன்றாம் குலோத்துங்கனோடு (கி.பி. 1178 - 1218) முடிவடையும்
இக்காலப் பகுதியில் நான்கு மன்னர்கள் ஆட்சி செய்தனர். இந்
நூற்றாண்டில் விரிவான பெரிய காவியம் எழவில்லை என்ற
குறையைப் போக்குவது பெரியபுராணம் ஆகும். எக்காலத்திலும்,
எந்நாட்டிலும் இல்லாத ஓர் அரிய பக்தி நூல் இதுவாகும்.
வைணவத்தைப் பொறுத்தவரை வைணவரின் தினசரி ஒழுக்கத்தையும்
ஆலய வழிபாட்டு முறைகளையும் இராமானுசர் ஒழுங்குபடுத்தினார்.
அது தவிர நாலாயிரத்திலிருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து
எல்லா வைணவர்களும் தவறாமல் ஓதவேண்டும் என்று நியமித்தார்.
சமண இலக்கியத்தில் பிற நூற்றாண்டுகளைப் போல வளர்ச்சி
இல்லை. வீரசோழிய உரை தவிர பௌத்தத்தில் இலக்கியம் என்ற
பேச்சுக்கே இடமில்லை. இக்காலப்பிரிவின் முற்பகுதியில் தோன்றிய
இலக்கியங்கள் பற்றி இப்பாடத்தில் விளக்கப்படுகின்றது. இந்
நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 1151 - 1200) தோன்றிய
இலக்கியங்கள் பற்றி ’12 ஆம் நூற்றாண்டு - பிற்பகுதி’ என்ற
தலைப்பில், அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

இலக்கியம், இலக்கணம்

12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இலக்கியங்களாகக் கலிங்கத்துப் பரணி, பெரியபுராணம் போன்றவற்றையும் இலக்கணம்
என்ற நிலையில் தண்டியலங்காரம் என்பதையும் கூறலாம்.

இலக்கியம் - கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி (கி.பி. 1112) இக்காலப் பகுதியில்
தோன்றிய குறிப்பிடத்தக்க இலக்கியங்களில் ஒன்றாகும். இதனை
இயற்றியவர் செயங்கொண்டார். இவர் தீபங்குடியைச் சேர்ந்தவர்.
முதல் குலோத்துங்கசோழனால் (கி.பி. 1070 - 1120) போற்றப்
பெற்றவர். இவர் செய்த நூலுள் சிவ வழிபாட்டையே கூறுகின்றார்.
அமைப்பு

இது கடவுள் வாழ்த்துத் தொடங்கி 13 பகுதிகளை உடையது.
பரணி ஒரு போர்க்காவியம். இதில் போரின் வருணனை, பாலை
நில வருணனை, பேய்கள், அவற்றின் செயல்கள் பற்றிய வருணனை
போன்றவை காணப்படுகின்றன.
பல்வேறு சுவைகள்

போரில் வீரர் மாய்வதின் மூலமாக, வீரத்தையும்
அச்சத்தையும் பெருமிதத்தையும் உருத்திரச் சுவையையும்
காட்டலாம். ஆனால் அதே காட்சியை, மாய்ந்த வீரருடைய
பெண்டிர் கண்டு அரற்றும் போது அது சோக நிலையின்
உச்சத்தை எட்டுகிறது. இதையும் நூலாசிரியர் எடுத்துக் கூறுகிறார்.
இவை தவிர நகைச்சுவை, பக்திச்சுவை, அச்சச்சுவை, வீரச்சுவை,
அவலச்சுவை போன்ற பல சுவைகளைக் காணலாம்.
சமணர் இயல்புகள்

சமணர் உயிர்க்கொலை செய்யாதவர்கள், இரவு
உண்ணாதவர்கள், துகிலால் வடித்துக் குடிப்பவர்கள், இந்த
இயல்புகளை ஆசிரியர் சமணப் பேய்க்கு ஏற்றிக் காட்டுகிறார்.
இப்பாடல் நகைச்சுவையை முன் வைப்பதுடன் ஆசிரியர் சமணர்
அல்லர் என்பதையும் நிரூபிக்கின்றது.
பிற பரணிகள்

பரணியில் போர்க்களத்தைக் காளி பேய்களுக்குக் காட்டுவதாக மரபு. ஆனால் ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி இதிலிருந்து மாறுபட்டு, சிவபெருமான்
உமாதேவிக்குக் காட்டியதாகப் பாடப்பட்ட பரணியாகும். இதற்குப்பின்
வந்தவை அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப்
பரணி, சூரன்வதைப் பரணி போன்றவையாகும்.

கலிங்கத்துப் பரணிக்கு முன்பே கொப்பத்துப் பரணி,
கூடல சங்கமத்துப் பரணி என்ற இரு பரணிகள் இருந்தாலும்
அவை தற்போது கிடைக்கவில்லை.

பெரியபுராணம்

இக்காலத்திய மற்றொரு குறிப்பிடத்தக்க இலக்கியம்
பெரியபுராணம் ஆகும். இது, சேக்கிழாரால் இயற்றப்பட்டது.
நம்பியாண்டார் நம்பி தேவாரப் பதிகங்களைத் தொகுத்தமை
பற்றி 11 ஆம் நூற்றாண்டுப் பாடப்பகுதியில் விளக்கப் பட்டது.
12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருத்தொண்டர் புராணம்
எனப்படும் பெரியபுராணம் இயற்றப்பட்டது.

தில்லையம்பலத்தில் இறைவன் ‘உலகெலாம்’ என்று
அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழார் ‘உலகெலாம் உணர்ந்து
ஓதற்கரியவன்’ என்று நடராசப் பெருமான் துதியாகத் தொடங்கி
இந்த நூலைப் பாடினார். அதனுடைய பக்திச் சுவை காரணமாக,
தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற நூல்களுக்கு
இணையாக மதித்து, 12 திருமுறைகளுள் ஒன்றாக -
பன்னிரண்டாம் திருமுறையாக - இதனைப் போற்றுவர்.
காட்சிகள்

இந்நூல், சுந்தரர் கயிலையிலிருந்து இவ்வுலகத்துக்கு வந்து
சேரும் காட்சியுடன் தொடங்குகிறது. பெரியபுராணக் கதையின்
காட்சிகளை, கருங்கல்லில் சிற்பங்களாக இன்றும் தாராசுரம்
ஐராவதேசுவரர் கோயிலில் (தஞ்சாவூர் மாவட்டம், குடந்தை
அருகே) காண முடிகின்றது. மிகச் சிறிய சிற்பங்களாக அழகிய
வேலைப் பாடுகளுடன் அவை காணப்படுகின்றன.
சிவனடியார்களின் தொண்டு நெறி

பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் சிவனடியார்கள் தொண்டு
நெறியில் நின்றனர். இறைவனிடம் தாம் கொண்டிருந்த ஆழமான
பற்றை வெளிப்படுத்தினர். தொண்டிலும் ஒரு குறிக்கோள்.
குறிக்கோளுக்குச் சோதனை, தடை வரும் போது உயிரை மாய்த்துக்
கொள்ளவும் தயங்காதவர்கள். இவர்கள் பல்வேறு இடங்களையும்
குலங்களையும் சேர்ந்தவர்கள்.
செய்திகள்

வரலாற்றியல், நாட்டியல்பு, சமயவியல், சமயத்தத்துவம், பக்திச்
சுவை, இறையுணர்வு, அருள் போன்ற அனைத்து வகையான
செய்திகளும் இக்காப்பியத்தில் விரித்துக் கூறப்பட்டு உள்ளன.

தொடாத துறையே இல்லை. என்று கூறும் அளவிற்குச்
சேக்கிழார் அனைத்துக் துறைகளையும் பெரியபுராணத்தில்
கையாண்டுள்ளார்.

திருஉந்தியார்

இக்காலத்தில் தோன்றிய மற்றொரு சைவ இலக்கியம்
திருவுந்தியார் ஆகும். சாத்திர நூல்கள் 14 ஆகும்.

அவற்றைக் கீழ்வரும் பாடல் பட்டியல் இடுகிறது. :


உந்தி களிறே உயர்போதம் சித்தியார்
பிந் திருபா உண்மை பிரகாசம் - வந்த அருட்
பண்பு வினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மை நெறி சங்கற்பம் உற்று

(வாழ்வியல் நெறிமுறைகளைக் கூறும் நூல்கள் சாத்திரங்கள்
என்றும். இறைவன் புகழைப் போற்றுபவை தோத்திரங்கள் என்றும் அழைக்கப் பெறும்). பன்னிரு திருமுறைகளின் கருத்தை, திருவுந்தியார் குறிப்பதாக அறிஞர் கூறுவர்.

சிவபெருமானின் இயல்பைக் கூறும் பாடல் இதோ:

சொல்லும் பொருளும் சொல்லா தனவும், அங்கு
அல்லனாய் ஆனான் என்று - உந்தீபற
அம்பிகை பாகன் என்று உந்தீபற

(திருவுந்தியார், 21)

(நமது அறிவுக்கு எட்டிய பொருள்களைச் சொற்களால்
அளவுபடுத்திக் கூறுகிறோம். அவ்வாறு கூறும் பொருள்கள்
அனைத்தும் நம்மால் சுட்டி அறியப்படுபவை. நமது கற்பனைக்கும்
எட்டாத முயலின் கொம்பு, ஆகாயத்தாமரை போன்று நமது
சொற்களில் அடங்காத பொருள்கள் இப்பொருள்கள் ஆகும்.
இவ்விரு வகைப் பொருள்களையும் போல் அல்லாமல், நமது
மனத்துக்கும், சொல்லுக்கும் எட்டாத நிலையில் இறைவன் நிற்கிறான்.
என்றாலும் நாம் அவனை உணரும் பொருட்டு ‘அருள்’ ஆகிய
அம்மையோடு கூடிய அம்மையப்பராய் இருக்கிறான்).

‘உந்தீபற’ என்பது இறைவனது புகழைப் போற்றிப் பரவும்
முறையில் மகளிர் இருவர் கூடி விளையாடும் விளையாட்டு
வகைகளில் ஒன்றாகும். (உந்தி - குதித்து பற - வேகமாக
மேலே எழுதல்) ‘உந்தீபற’ என்னும் இச்சொல் பாடல் ஒன்றில்
இரண்டு வீதம் 45 பாடல்களில் 90 இடங்களில் வருவதைக்
காணலாம்.

தண்டியலங்காரம்

12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலக்கண நூல்களும்,
உரை நூல்களும் தோன்றியுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில்
இலக்கண நூல்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.
தண்டியாசிரியர் இன்றும் தமிழ் மக்கள் போற்றி வருகின்ற
தண்டியலங்காரம் என்ற நூலைச் செய்துள்ளார்.
அணியிலக்கணம்

‘அலங்காரம்’ என்பது வடமொழிச் சொல். தமிழில் ‘அழகு’
என்ற பொருளில் இச்சொல் வழங்கப்படுகிறது. பாட்டில் காணப்படும்
அழகை அணி என்கிறோம். இலக்கணங்கள் அணி, அலங்காரம்
என்ற இரு சொற்களையும் ஒரே பொருளில் வழங்கும்.
தண்டியலங்காரம் அணியிலக்கண நூல். பொதுவணியியல்,
பொருளணியியல், சொல்லணியியல் என்ற மூன்று இயல்களையும்,
125 நூற்பாக்களையும் உடையது. இன்று கிடைக்கும் அணி பற்றிய
இலக்கண நூல்களில் தண்டியலங்காரமே பழமையானது.
ஆசிரியர் சிறப்பும் புலமையும்

இந்நூலாசிரியர் கவிச்சுவை தேர்வதில் ரசிகத்தன்மையுடையவர்.
எடுத்துக்காட்டாக, இவர் வினையின் விபரீதப் பயனைச் சுவைபட
ஒப்பிட்டுக் காட்டுவதைப் பார்க்கலாம்.

தலையிழந்தான் எவ்வுயிரும் தந்தான், பிதாவைக்
கொலை புரிந்தான் குற்றம் கடிந்தான் ; - உலகி்ல்
தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேல் தப்பாம்
வினையும் விபரீத மாம்

- (தண்டியலங்காரம், சுப்பிரமணிய தேசிகர் உரை, பொருளணியியல், 111 )

(எல்லா உயிர்களையும் படைத்த பிரமன் தன் தலையை
இழந்தான். தந்தையைக் கொன்ற சண்டீசன் குற்றம் நீங்கினான்.
உலகத்தில் ஒப்பற்ற மேன்மையைக் கொண்டு உயர்ந்துள்ளோர்
நினைத்தால் நல்வினை தீவினைகளின் பயனும் மாறுபடும்
என்பது இதன் பொருளாகும்).

இதன் மூலமாக நல்வினைப் பயன் தீதாகவும், தீவினைப்
பயன் நன்மையாகவும் முடிகிறது என்பது தெரிகிறது.

காவிய தரிசனம் என்னும் வடமொழியின் மொழி பெயர்ப்பே
தண்டியலங்காரம். இந்நூலாசிரியர் வடமொழி, தென்மொழிகளில்
மிக வல்லுநர். தமிழ் மொழியில் இவர் திறமுடையவர் என்பதை
யாரும் மறுக்க இயலாது. முதல் பகுதியாகிய பொதுவணியியலில்
ஆசிரியர் நாமகளை வணங்கிச் செய்யுள் வகையையும், இரண்டாம்
பகுதியாகிய பொருளணியியலில் 35 செய்யுள் அணிகளைக்
குறிப்பிடுகிறார். இதுவே இந்நூலின் சிறப்பான பகுதியாகும்.
சொல்லணியியலில் 35 நூற்பாக்கள் உள்ளன.
சிவனைத் தொழுதலின் பயன்

தில்லையைப் போற்றுகின்ற பாடல்கள் கூட இதில் அதிகமாகக்
காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றை இங்கே காண்போம்.

காலை மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்
மேலை வினையெல்லாம் கீழவாம் - கோலக்
கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
பெருமானைச்சிற்றம்பலத்து

(தண்டி. பொருளணியல், 171)

அழகு பொருந்திய கரிய யானைத் தோலையும்,
வெண்மையான திருநீற்றையும், சிவந்த திருமேனியையும், பசிய
கொன்றை மாலையையும் உடையவன் சிவபெருமான். அந்தச்
சிவபெருமானைச் சிதம்பரத்தில் காலையிலும் மாலையிலும்
கைகளைக் கூப்பித் திருவடிகளைத் தொழுதால் ஊழ்வினையெல்லாம்
குறைந்து நீங்கிவிடும் என்பது இதன் பொருளாகும்.
Read more ...

பிரபந்தங்களும் சித்தர்பாடல்களும்

Monday, August 1, 2011
பிரபந்தங்களும் சித்தர்பாடல்களும்
பதினான்காம் நூற்றாண்டில், பிரபந்த வகை நூல்கள் சிலவும்,
பிறவகை நூல்களும் எழுதப்பட்டன.

பிரபந்தங்கள்

கோவை, மாலை போன்ற பிரபந்த நூல்கள் இக்காலக்
கட்டத்தில் தோன்றின.
கருமாணிக்கன்கோவை

இந்தப் பிரபந்தம் இக்காலப் பகுதியில் தோன்றியது. கப்பலூரில்
வாழ்ந்த கருமாணிக்கன் என்ற யாதவகுல வள்ளல் மீது இக்கோவை
பாடப்பட்டது. காலத்தால் பழமையான நூல்களுள் இதுவும் ஒன்றாகும்.
நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இக்கோவை 400 பாடல்களைக்
கொண்டது. ஆசிரியர்திருமால் பக்தியுடையவர்என்பதை, பாடலின்
அடிகள் உணர்த்துகின்றன. திருக்கோவலூரில் இருந்த வைணவ
ஆசாரியார் ஒருவரைக் கருமாணிக்கன் கப்பலூருக்கு அழைத்துச்
சென்று சிறப்புச் செய்தான் என்னும் செய்தியை இந்நூல்
தெரிவிக்கின்றது.
மதுரைக்கோவை

இது, இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு கோவையாகும்.
இதனை இயற்றியவர் சங்கரநாராயணர் என்பவர். கோவைப்
பிரபந்த வரிசையில் பாண்டிக்கோவை, திருக்கோவையார்,
குலோத்துங்கசோழன் கோவை, தஞ்சைவாணன் கோவை,
அம்பிகாபதிக்கோவை, நாலாயிரக்கோவை போன்ற பல கோவை
நூல்கள் உள்ளன. இவ்வரிசையில் மிகவும் பழமையான கோவைகளில்
மதுரைக்கோவை ஒன்றாகும். இதன் செய்யுள் தொகை 403 ஆகும்.
இந்நூல் மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கேசப் பெருமானைப்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. திருவிளையாடற்புராண
சரிதங்கள் பலவற்றை ஆசிரியர் இக்கோவையுள் சுட்டிக்
காட்டியுள்ளார். 25 வரலாறுகள் இதில் கூறப்பட்டுள்ளன. இலக்கண
விளக்கவுரை மேற்கோள் அமைப்பை ஆராயும்போது, ஆசிரியர்
பண்டைய நூல்கள் என்று தாம் கருதியவற்றை மட்டுமே
பயன்படுத்துகிறார் எனப் புலப்படுகிறது.
பல்சந்த மாலை

பல்சந்த மாலை என்பது 96 வகை பிரபந்தங்களுள் ஒன்று.
இப்போது இந்நூல் கிடைக்கவில்லை. இந்நூலில் 8 பாடல்கள்
உள்ளன. வேறு எங்கும் இதன் பாடல்கள் சொல்லப் பெறவும்
இல்லை. கிடைக்கின்ற பாடல்கள் கட்டளைக் கலித்துறையில்
அமைந்தவையாகும். இவை கலித்துறையாக உள்ளதாலும்,
அகப்பொருளையே கொண்டுள்ளதாலும் கோவை போன்ற நூலோ
என்ற ஐயம் உண்டாகிறது.

சித்தர்பாடல்கள்

சித்தர்களின் பங்களிப்பு முந்தைய நூற்றாண்டுகளில்
ஆங்காங்கே இருந்துள்ளது. சித்தர் பாடல்கள், அவர்களின்
வரலாறு பற்றித் தனியாகப் படிக்கவுள்ளோம் (15ஆம் நூற்றாண்டு
- பாடப்பகுதி). இக்காலப் பகுதியில் தோன்றிய சித்தர்கள் பற்றி
இங்குக் காண்போம்.
சிவவாக்கியர்பாடல்கள்

சிவவாக்கியர் தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களுள் ஒருவர்.
பதினெண் சித்தர்ஞானக்கோவை என்ற தொகுப்பு இவருடைய
பாடல்களையே முதலாவதாகக் கொண்டுள்ளது. இவரது பாடல்
தொகுப்பில் கடைசியாக உள்ள பாடல்,

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே...

என்று தொடங்கும். இப்பாடல் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த
பாடல் எனலாம். சிவவாக்கியர் பாடல்களில் குலாமர் என்ற சொல்
காணப்படுகிறது. குலாம் இடுபவர் குலாமர். குலாம் இடுதல்,
அடிமைத்தொழில் புரிதல், அடிமையாயிருத்தல் போன்றவை போலிச்
சடங்குகளுக்கு அடிமையாயிருத்தலையே குறிக்கின்றன. தமிழ்நாட்டில்
முகமதியர் ஆதிக்கம் ஏற்பட்ட காலத்தில் அவர்களுடைய சொற்கள்
பல தமிழில் புகுந்தன. அவ்வாறு புகுந்த சொற்களில் இதுவும் ஒன்று.
குலாமர் என்ற சொல் வரும் பாடலைக் கேளுங்கள் :

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே

(பாடல் 35)

பட்டினத்தார்பாடல்கள்

பட்டினத்தார் என்று கூறும் போது தமிழறிஞர்கள் பட்டினத்தார்
இருவரைக் கூறுவர். முதல் பட்டினத்தார், நம்பியாண்டார்நம்பியால்
குறிப்பிடப்பட்டவர். நம்பியின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இறுதி.
பட்டினத்தார் பாடிய பாடல்களில் ஐந்து பிரபந்தங்கள் பதினோராம் திருமுறையுள் தொகுக்கப் பெற்றுள்ளன. இந்தப் பட்டினத்தார்
10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்.

மேற்கண்ட பிரபந்தங்கள் அல்லாமல், பட்டினத்தடிகள் பெயரால்
பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு என்ற ஒரு பாடல்
தொகுதி வழக்கத்தில் உள்ளது. இவற்றைப் பாடியவர் முன்கூறிய
பட்டினத்தார் அல்லர்என்றும், இவை பட்டினத்தார்என்ற பெயரோடு
சில நூற்றாண்டுகளின் பின்பு வாழ்ந்த மற்றொரு பட்டினத்தார்
பாடியவை என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இக்காலப் பகுதிக்கு
நாம் எடுத்துக் கொள்வது இரண்டாம் பட்டினத்தாரே. (ஒளவையாரைப்
பற்றிப் படிக்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளவையாரைப் பற்றி
முந்தைய பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம்).

தமிழ்நாட்டில் பிச்சையெடுப்போர்கூட, சில பக்தருடைய
அருட்பாசுரங்களைப் பாடிப் பிச்சை எடுத்து வருகின்றனர்.
அவர்களில் பட்டினத்தார் பாடலைப் பாடுவோர் உளர். மற்ற
சித்தர்களைப்போல இவருடைய பாடல்களிலும் உலக
வாழ்க்கையின் நிலையாமை, அடியவர் சிறப்பு, பக்தியின் சாதனை,
அருளின் அனுபவம், போலிக் கிரியைகளைப் பழித்தல், உண்மை
அன்பின் உயர்வு முதலியவை மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாடலும் சிறப்புடையது என்றாலும், தில்லை, காளத்தி
பற்றிய பாடல்கள் மிகவும் சுவையுடையவையாகும். உள்ளத்தில்
இறைவன் உறைகின்ற முறையை உணர்ந்த பெருமிதம்
பாடல்கள்தோறும் காணப்படுகிறது.
பத்திரகிரியார்பாடல்கள்

பத்திரகிரியார் என்பவர்இக்காலப் பகுதியில் பேசப்படும்
மற்றொரு சித்தர். இவருடைய வரலாறு பட்டினத்தார்(இதற்கு முன்பு
விளக்கப்பட்ட இரண்டாவது பட்டினத்தார்) வரலாற்றோடு
தொடர்புடையது. பத்திரகிரியாரின் பெயரை முதன்முதலாகக்
கண்ணுடைய வள்ளல் குறிப்பிட்டுப்பாடுகின்றார்.

பட்டினத்துப்பிள்ளையினைப் பத்ரகிரி யைப்பரவி
விட்டு விட மாட்டார்வெறுவீணர்

(ஒழிவிலொடுக்கம், 167)

235 கண்ணிகள் கொண்ட சிறு நூலை இவர்பாடியுள்ளார்.
இவர்தம் பாடல் கருத்தையும் சொற்களையும் தத்துவப் பிரகாசத்திலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார். இந்நூலில் 178-ஆம்
பாடலைக் கேளுங்கள் :

எவரெவர்கள் எப்படிக் கண்டு எந்தப்படி நினைத்தார்
அவரவர்க்குத் தான் அப்படி ஆவதுவும் எக்காலம்

இக்கருத்தும் சொற்களும் தத்துவப்பிரகாசம் 137ஆம் பாடலில்
பூசையை முடித்தவிடத்து வேண்டுகோளாகக் கூறும் இடத்தில்
காணப்படுகின்றன.

தேவனே எவரெவர்எப்படிச் சிந்தித்தார்
சிந்தித்த இடத்து அந்த வடிவு ஆகை திடமே

(ஆகை = ஆதல்)
Read more ...

சைவ இலக்கியங்கள் - 2

Monday, August 1, 2011
5.2 இலக்கணமும், உரைகளும்

பதினான்காம் நூற்றாண்டில், சில இலக்கண நூல்களும்
சிறப்புடைய சில உரைகளும் தோன்றின.

5.2.1 இலக்கணம்

இக்காலப் பகுதியில் சிறப்புடைய எந்த இலக்கண நூலும்
எழவில்லை எனலாம். இருப்பினும் இக்காலத்தில் தோன்றிய சில
நூல்கள் பற்றி இங்குக் காணலாம்.
களவியற்காரிகை

இக்காலப் பகுதியில் தோன்றியது. களவியல் என்பது
இறையனார் களவியல் என வழங்கப்படுகின்ற இறையனார்
அகப்பொருள் நூலாகும். அகப்பொருள் இலக்கணம் இல்லையே
எனக் கவலையுற்ற பாண்டிய மன்னனுக்காக மதுரை சோமசுந்தரக்
கடவுள் அறுபது அகப்பொருள் சூத்திரங்களைச் செப்பேட்டில்
எழுதித் தந்ததாக அந்நூல் உரையும், திருவிளையாடல் புராணமும்
கூறும். இக்களவியல், நூற்பாவால் ஆன 60 சூத்திரங்களைக்
கொண்டது. இந்த 60 சூத்திரங்களுக்கு நேராக 60 கட்டளைக்
கலித்துறையால் அக்களவியலைத் தழுவி, மற்றோர் அகப்பொருள்
இலக்கண நூல் எழுதப்பட்டுள்ளது. அதுவே களவியற்காரிகை
எனப்படும். இதற்குச் சிறப்பான உரை உண்டு. இந்நூலுக்கு ஆசிரியர்
பெயரும், நூற்பெயரும் தெரியவில்லை. மரபினையொட்டியே
இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நவநீதப்பாட்டியல்

இந்நூலை இயற்றியவர் நவநீத நாடர். 13-16 நூற்றாண்டு
களிடையே பல பாட்டியல் நூல்கள் தோன்றின. அவற்றுள்
இதுவும் ஒன்றாகும். பாட்டியல் என்பது பாட்டினால்ஆன நூல்களுக்கு
அமைய வேண்டிய இலக்கணங்களைத் தொகுத்துக் கூறும்.
கலித்துறையாப்பால் ஆனதால் இந்நூல், கலித்துறைப்பாட்டியல்
எனப்படும். இது பொருத்தவியல், செய்யுள், மொழி இயல், பொது
மொழி இயல் என்ற மூன்று பிரிவுகளை உடையது. 108
கலித்துறைகளை உடையது. இதனுள் சொல்லப்பட்ட பிரபந்தங்களின்
தொகை 63 ஆகும்.
உரிச்சொல் நிகண்டு

இந்நூல் காங்கேயரால் இயற்றப்பட்டதாகும். இதன் காலம்
திட்டவட்டமாகத் தெரியவில்லை. தமிழில் தோன்றிய ஆதி
நிகண்டுகள், திவாகரமும், பிங்கலந்தையும் ஆகும். பின்னால் வந்த
நிகண்டு நூல்களில் உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு,
நிகண்டு சூடாமணி போன்றவை காலத்தால் பழமையானவையும்
சிறப்பானவையும் ஆகும்.

5.2.2 உரைகள்

இக்காலப்பகுதியில் உரையாசிரியர்கள் என்ற நிலையில்
குறிப்பிடத்தக்கவர்களாக மயிலைநாதர், நச்சினார்க்கினியர்
போன்றோரைக் கூறலாம்.
மயிலைநாதர்

மயிலைநாதர் நன்னூலின் பழைய உரையாசிரியர் ஆவார்.
சமயத்தால் சமணர். இவர் நன்னூல் உரையில் தொல்காப்பிய இளம்பூரணர்உரை, அவிநய உரை, யாப்பருங்கலக் காரிகை
போன்றவற்றை எடுத்துக்காட்டியுள்ளதால் இவர், இவ்வாசிரியர்களின்
காலத்துக்குப் பிற்பட்டவர் எனலாம். இவ்வுரையாசிரியர் சுவைபட
எழுதுவார். எதுகை, மோனைத் தொடை நயம்பட எழுதுவார்.
பண்டைய ஆசிரியர்களை நயம்படப் போற்றுவார். இவர் உரையானது
உரை இலக்கணம் முழுமையும் பொருந்தியது. நன்னூல் பாயிரச்
சூத்திரங்கள் 52 ஆகும். இவை பவணந்தி செய்தனவல்ல என்பதை
இவர் உரை மூலம் அறிய முடிகிறது.
நச்சினார்க்கினியர்

இக்காலத்தில் தோன்றிய மற்றோர் உரையாசிரியர்
நச்சினார்க்கினியர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சீவக
சிந்தாமணி, கலித்தொகை போன்ற நூல்களுக்கு உரை
எழுதியுள்ளார். நச்சினார்க்கினியர் என்பது சிவபெருமானின்
பெயராகும். பத்துப்பாட்டுள் மதுரைக்காஞ்சியில் சில இடங்களில்
(வரிகள் 365, 522) இவர் எழுதிய உரை நுட்பங்கள் இவர்
மதுரைக்குரியவர் எனப்புலப்படுத்தும். தொல்காப்பியம் முழுமைக்கும்
உரை செய்தவர்கள் இவரும் இளம்பூரணருமே. சங்க நூல்கள்
அனைத்திலிருந்தும் இவர் மேற்கோள் காட்டுகின்றார். வடமொழி
வழக்கு, உலக வழக்கு, சாதி சமய வழக்கு ஆகியன இவருடைய
உரையுள் நிரம்பியுள்ளன. வடமொழி நூல்கள் பலவற்றை எடுத்துக்
கூறுகிறார்.
Read more ...

சைவ இலக்கியங்கள் - 1

Monday, August 1, 2011
பதின்மூன்றாம் நூற்றாண்டிலும், பதினான்காம் நூற்றாண்டின்
தொடக்கத்திலும் சோழப்பேரரசும், பாண்டிய அரசும் அழிந்தன.
அதனால் குறுநில மன்னர்கள் ஆட்சி ஏற்பட்டது. இக்காலப்
பகுதியில் தமிழகத்தில் வலிமையான அரசு எதுவும் இல்லை.
குழப்பம், போர், கொந்தளிப்பு இல்லாத நிலை. சமய நூல்கள்
பெருகின. உலகியல் துறையில் மக்கள் மனம் ஒடுங்கியிருக்க
வேண்டிய நிலை காரணமாக ஆன்மிகத் துறையில் அவர்கள்
உள்ளம் விரிவு காண முயன்றது. ஞான மார்க்கத்தில் இக்காலத்தில்
நூல்கள் பெருகியது போல வேறு எந்தக் காலத்திலும் பரவவில்லை.

முகமதிய நாகரிக மோதல், மக்கள் மனத்தில் புரட்சியை
உண்டாக்கியது. புனிதம், நாகரிகம், தெய்வீகம் அனைத்தும்
இவர்களால் பாதிக்கப்பட்ட போது மக்கள் மனத்தில் கொந்தளிப்பு
ஏற்பட்டது. இதன் காரணமாக முன்னைவிட அதிகமான
சமயப்பற்றும், தெய்வ பக்தியும் ஏற்பட்டு, சமய இலக்கியம் தோன்ற
வழிகோலியது. மக்கள் மனத்தில் இக்கொந்தளிப்பு நிலைத்து,
எவ்வித முடிவும் காணாமல் தத்தளிப்பு நிலவியது.

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பல
பெரியோர்களால் புதிய ஞான மரபுகள் எழுந்தன. சிற்றம்பல
நாடிகள் வாயிலாக ஞானாசிரியர் பல பிரிவுகளாகப் பிரிந்தனர்.
சீகாழிக் கண்ணுடைய வள்ளல் ஆதீனம் இக்காலத்தில் தோன்றியது.
திருவாவடுதுறை ஆதீனம், காஞ்சி ஞானப்பிரகாசர் ஆதீனம்,
தருமபுரம் ஆதீனம், துழாவூர்மடம், செப்பறை மடம் முதலியவை
பிற்காலத்தில் தோன்றக் காரணமாயிருந்த பெரியோர்பலர்
இக்காலத்தில் தோன்றினர்.

இக்காலக்கட்டத்தில் சைவ இலக்கியங்கள் அதிக
எண்ணிக்கையில் தோன்றின. இக்காலப்பிரிவில் வெளிவந்த சைவ
இலக்கியங்களைச் சமய நூல்கள் என்றும் சாத்திர நூல்கள் (தத்துவ
நூல்கள்) என்றும் பிரிக்கலாம். வில்லிபுத்தூரார் மற்றும்
இரட்டைப்புலவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கவை.

சைவ இலக்கியப் படைப்பாளர்கள்

இக்காலக்கட்டத்தில், சைவ இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள்
பலர். அவர்களுள் உமாபதி சிவாச்சாரியார், சிற்றம்பல நாடிகள்,
தத்துவப் பிரகாசர், சம்பந்த முனிவர் ஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்கள்.
உமாபதி சிவாச்சாரியார்

இவர் சைவசித்தாந்த ஆசிரியர் நால்வரில் கடைசியாக
வந்தவர். உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம், திருவருட்பயன்
உட்படப் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பிற
நூல்கள் வினா வெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி,
நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப
நிராகரணம், திருமுறைத்திரட்டு, கோயிற்புராணம்,
திருமுறைகண்ட புராணம், திருத்தொண்டர் புராணசாரம்,
சேக்கிழார் புராணம் போன்றவையாகும்.

சிவப்பிரகாசம், சிவஞானபோதத்தின் சார்பு நூலாகும்.
(சிவஞானபோதம் பற்றிக் கடந்த பாடப்பகுதியில் விரிவாகப்
படித்தோம்). இதன் பாயிரத்துள் ஆசிரியர், ஆசாரியார் மரபு, சைவ
நூல்களின் இயல்பு, தீக்கை வகைகள் ஆகியவை பற்றிக்
கூறியுள்ளார்.சிவஞானபோதத்தின் பன்னிரு சூத்திரங்களையொட்டியே
இந்நூல் பாடல்களைப் பாகுபடுத்திக் கூறுவர்.

திருவருட்பயன், திருக்குறள் போன்ற அமைப்பு உடையது.
பத்து அதிகாரங்கள்; ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்து குறள்;
பாடல்கள் அழகாக எளிமையாக உள்ளன. இதன் தலைப்புகள்
எளிமையாக உள்ளன. சித்தாந்த சாத்திரம் கற்கப் புகுவோர் முதலில்
பயில்வது இந்நூலேயாகும்.
சிற்றம்பல நாடிகள்

இவர் துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன்முறுவல்
முதலிய ஐந்து நூல்களை இயற்றியுள்ளார்.

துகளறு போதம் இவர் இயற்றிய நூல்களுள் முக்கியமானது.
மெய்கண்டசாத்திரம் 14 எனக் கணக்கிட்டுக் காட்டும் ‘உந்திகளிறு’
என்ற வெண்பாவில் இந்நூலின் பெயர் காணப்படவில்லை. ஆனால்
பல ஏட்டுப்பிரதிகளில், இப்பாடலில் வரும் உண்மைநெறி விளக்கம்
என்ற பெயர் இல்லாமல் துகளறு போதத்தைச் சேர்த்து 14 எனக்
கணக்கிடப்பட்டுள்ளது. இந்நூல் திராவிட மாபாடியம் செய்த
சிவஞான சுவாமிகள் போன்ற சிறந்த சாத்திர உரையாசிரியர்களால்
எடுத்தாளப்பெற்ற பெருமையுடையது. காப்புச் செய்யுளும், 100
வெண்பாக்களும், இறுதியில் நூற்பொருள் கூறும் இரு பிற்கால
வெண்பாக்களும் உடையது. முக்தி நெறிக்குரிய மார்க்கம், தசகாரியம்
(பத்து படிகள்) என்பது சைவ சாத்திர மரபு. தச காரியங்களை
முப்பது நிலைகளாகச் சில சாத்திரங்கள் கூறும். இவ்வாறு கூறும்
முதல் சாத்திரம் துகளறு போதம் ஆகும்.

சிற்றம்பல நாடிகளின் நேர்மாணாக்கர் நால்வர். அவர்களுள்
தத்துவநாதர், தத்துவப் பிரகாசர் என்போர் நூல் எழுதினார்கள்
(தத்துவநாதர் - உண்மைநெறி விளக்கம் என்ற நூலையும்,
தத்துவப் பிரகாசர் - தத்துவப் பிரகாசம் என்ற நூலையும்
எழுதினர்). மற்ற இருவர் சம்பந்த முனிவர், ஞானப்பிரகாச முனிவர்
என்போர் ஆவர். சம்பந்த முனிவரும் அவர் வழியில் வந்தவரும்
நூல் எழுதியுள்ளனர். ஞானப்பிரகாசரும் அவரது பரம்பரையினரும்
நூல் எழுதவில்லை. சிற்றம்பல நாடிகளின் மாணக்கர்களுடைய
பணிகளை இங்கே காணலாம்.
தத்துவ நாதர்

சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் பதின்மூன்றாவதாக
எண்ணப்படுவது உண்மைநெறி விளக்கம். இதன் ஆசிரியர் சீகாழித்
தத்துவநாதர். இந்த நூலை உமாபதி சிவம் செய்தார் என்ற கருத்தும்
அறிஞர்களிடையே உண்டு. இந்நூல் ஆறு அரிய பாடல்களை
உடையது. அந்த ஆறு பாடல்களும் தசகாரியம் கூறும். இந்நூலுக்குப்
பல உரைகள் உள்ளன. இந்நூலாசிரியர் தத்துவநாதர், அருணந்தி
சிவாசாரியார் பாடிய இருபா இருபஃதுக்குச் சிறப்பான உரை
எழுதியுள்ளார். இந்த உரை, மெய்கண்ட சாத்திர நூல்களுக்கு
எழுதப்பட்ட உரைகள் அனைத்திலும் காலத்தால் மிகப்
பழமையானது.
தத்துவப் பிரகாசர்

தத்துவப் பிரகாசர் எழுதிய நூல் தத்துவப்பிரகாசம்.
(தத்துவப்பிரகாசர் என்ற பெயரில் 14-16 ஆம் நூற்றாண்டுகளில்
பலர் இருந்தனர். அவர்களுள் சீகாழியைச் சேர்ந்தவர் இவர்.
இவ்வரிசையில் காலத்தால் முதலாமவர்). இதற்குத் தத்துவ கவிதை
என்ற பெயரும் உண்டு. சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும்
ஞானபாதம் ஒன்றையே விரித்தும், தொகுத்தும் கூறும். மற்றைய
சரியை, கிரியை, யோகம் ஆகியவை மிகச் சுருக்கமாகச்
சொல்லப்பட்டுள்ளன. இவற்றையும் தமிழால் உணர்த்த வேண்டும்
எனக் கருதி இந்நூலை இவர் செய்ததாகக் கொள்ளலாம்.
சம்பந்த முனிவர்

இவர் பாடிய நூல்களாக இக்காலத்தில் கிடைப்பவை
சிவானந்தமாலை, சிற்றம்பல நாடிகள் சாத்திரக் கொத்திலுள்ள
வெண்பா, தாலாட்டு போன்றவையாகும்.

சிவானந்த மாலை 414 வெண்பாக்களைக் கொண்டது. இது
மிகச்சிறந்த சைவ சித்தாந்த நூல். பல சமய உண்மைகளைச்
சுவையுடைய உவமைகளால் தெளிவாக விளக்குகிறது. பல
பாடல்களில் ஞானசம்பந்தரைப் போற்றுகிறார் ஆசிரியர்.
இலக்கியச்சுவை ததும்பும் பல பாடல்கள் இந்நூலுள் உள்ளன.

இவர்களைத் தவிர, சம்பந்த சரணாலயர், சிவாலய முனிவர்,
அருள் நமச்சிவாய தேசிகர், சித்தர் சிவப்பிரகாசர், நமச்சிவாய
தேசிகர் போன்றோர் உள்ளிட்ட பலர் இக்காலப் பகுதியில் சிறந்த
இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளனர்.
கச்சியப்பரின் படைப்பு

கந்தபுராணம் கச்சியப்ப சிவாசாரியாரால் இயற்றப்பட்டது.
இவருடைய காலம் தெளிவில்லாததாக உள்ளது. பலர் பல்வேறு
கருத்துகளைக் கூறினாலும் பொதுவாக அனைவரும்
ஒப்புக்கொள்வது, கச்சியப்ப சிவாசாரியார் கி.பி. 1400க்கு முன்னால்
வாழ்ந்தார் என்பது தான்.

கந்தபுராணம் ஆறு காண்டங்களை உடையது. இதில்
முருகப் பெருமானது தோற்றமும் வீரமும், சூரபதுமன் ஆகியோர்
கொடுமையும், அவர்கள் அழிவும், முருகப் பெருமான் அருளும்,
பிறவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கந்தபுராணத்தில்
சொல்லப்படாத பொருள் எதுவும் இல்லை என்று ஒரு பழமொழி
உண்டு. இராமாயணம், பாகவதம் ஆகிய நூல்களில் வைணவ சமயத்
தத்துவங்கள் காணப்படுவது போல, சைவ சித்தாந்தத் தத்துவங்கள்
கந்தபுராணத்தில் மிகவும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

இரட்டைப்புலவர்படைப்புகள்

இக்காலப் பகுதியில் தோன்றியவர் இரட்டைப்புலவர். சோழ
நாட்டில் ஆடுதுறைக்கு அருகேயுள்ள ஆலந்துறை என்ற ஊரில்
இவர்கள் இருந்தனர். இவர்கள் அத்தை பிள்ளை, அம்மான்
(தாய்மாமன்) பிள்ளையாக இருந்தனர். ஒரு பிள்ளை
கண்ணில்லாத குருடர். மற்றொரு பிள்ளை காலில்லாத முடவர்.
குருடரின் பெயர் இளஞ்சூரியர். காலில்லாத முடவர் முதுசூரியர்.
இருவரும் சேர்ந்து ஒரே உள்ளத்தோடு செந்தமிழ்ப்பாக்கள் பாடும்
தகுதி பெற்றிருந்தனர். இருவரும் எப்போதும் சேர்ந்தே
இருந்தமையால் இருவருடைய இளமைப் பெயர்களும் மறைந்து
இரட்டைப்புலவர் என்ற பெயரே நிலைத்தது.

இவர்கள் பாடிய நூல்கள் திருஆமாத்தூர்க்கலம்பகம்,
தில்லைக்கலம்பகம், காஞ்சி ஏகாம்பரநாதர் உலா,
ஏகாம்பரநாதர் வண்ணம் என்பன. மூவர் அம்மானைப்
பாடல்கள், தியாகேசர் பஞ்சரத்தினம் என்பனவும் இவர்கள்
பாடியனவாகக் கூறுவர்.
திருஆமாத்தூர்க் கலம்பகம்

இந்நூல் 101 பாடல்களும், காப்பு விருத்தம் ஒன்றும் உடையது.
இந்நூலுள் அகத்துறைப் பாடல்களும், சந்தப்பாடல்களும் அதிகமாக
உள்ளன.
தில்லைக்கலம்பகம்

இரட்டைப்புலவர் பாடிய இரண்டாவது கலம்பகம், காப்பு
வெண்பாவும், 100 பாடல்களும் உடையது. சிதம்பரத்தில்
எழுந்தருளியுள்ள நடராசப் பெருமான் மீது பாடப்பெற்றது.
பெருமான் சிறப்பு, வழிபட்டோர், பிற தலங்கள், பஞ்சபூதத் தலங்கள்,
ஐந்து சபைகள் முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

யார் எவ்விதம் இறந்தாலும், புரியைக் (புரி - பழுதை,
வைக்கோல் தாளை முறுக்கிச் செய்த கயிறு) கட்டி இழுத்து
எறிந்தாலும் கூட, சிதம்பரத்தில் சென்று இறத்தல் நன்று என்று
கூறுகிறார்கள் இந்த இரட்டைப்புலவர்கள்.

பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலுமிப் பாழுடலம்
கொழுத்துச் செத்தாலும் மெலிந்து செத்தாலும்
கொலைப்படினும்
புழுத்துச் செத்தாலும் புதைத்தாலும் காலில் புரியைக்
கட்டி
இழுத்துச் செத்தாலும் சிதம்பரத் தேசென் றிறத்தல்
நன்றே

காஞ்சி ஏகாம்பரநாதர்உலா

இது, இரட்டைப்புலவரால் இயற்றப்பட்டது. நூலில்
தலப்பெருமை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. கயிலாயத்தில்
உமாதேவியார், சிவபெருமான் திருக்கண் புதைக்க (மறைக்க)
உலகம் இருளில் மூழ்கியது. உலகத்தைத் துன்பத்தில் ஆழ்த்திய
பாவம் தீருவதற்காகக் காஞ்சியில் சென்று தம்மைப் பூசிக்கும்படி
பிராட்டிக்குப் பெருமான் உத்தரவிட்டார். அம்மையார் காஞ்சியின்
சிறப்புகளையெல்லாம் பார்த்துக் கொண்டு வரும் செய்தி உலாவில்
விளக்கமாக உள்ளது. பின்னர் அம்மையார் பூசித்தல், கம்பை
நதியில் வெள்ளம் கண்டு பெருமான் திருவுருவை அணைக்க
இறைவன் வெளிப்படுதல், பங்குனி விழா, அலங்காரச் சிறப்பு, உலா
வருதல், பின்னர் ஏழு பருவப் பெண்களும் கண்டு விரும்புதல்
என்ற செய்திகள் கூறப்பட்டுள்ளன.

பேரிளம்பெண் என்ற பருவத்தைக் கூறும் போது
சிவபெருமானின் இயல்பை மிகவும் நன்றாக விளக்கியுள்ளனர் இந்த
இரட்டைப்புலவர்கள். காலத்தால் ஓரளவு முற்பட்ட இந்த நூல்,
பின்வந்த புலவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது.
Read more ...

பஞ்சாமிர்தம்

Monday, August 1, 2011
பஞ்சாமிர்தம்

தமிழர் வழிபாட்டு முறைகளில் கோயில் வழிபாடு சிறப்புப் பெற்றது. இறை உருவங்களை பிரதிட்டை செய்து நாளாந்தம் வழிபடும் முறையில் ”அபிடேகம்” முதன்மையானது. அபிடேகத் திரவியங்களில் வரையறை செய்யப்பட்ட பொருட்களும் உள. அவை பல நூல்களில் குறிப்பிடப்ப ட்டுள்ளன. மரபான வழிபாடு நடைபெற்ற போது இவைபற்றிய கருத்து வேறுபாடுகளுக்கு இடமேற்படவில்லை. ஆனால் இன்று புலம்பெயர் வாழ்வியலும் பிறபண்பாட்டின் செல்வாக்கும் சில கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்துள்ளன. அபிடேகத் திரவியங்களில் ஒன்றான பஞ்சாமிர்தம் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உள.

இறைவனுக்குரிய அபிடேகத் திரவியமாக பஞ்சாமிர்தத்தை இன்று யாவரும் ஏற்றுள்ளனர். ஆனால் அதை தயாரிக்கும் நிலையில் முரண்பாடு ஏற்பட்டு உள்ளது. ஐந்து பொருட்களின் இணைவே பஞ்சாமிர்தமாகும். ”பஞ்ச” என்ற வடசொல் இதனைத் தெளிவாய் உணர்த்துகின்றது. இன்று அந்த ஐந்துக்கு மேற்பட்ட பொருட்களால் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. ஐந்து பொருட்களால்தான் தயாரிக்கப்பட வேண்டுமென்ற உணர்வுடனிருப்பவர்களும் வெவ்வேறு பொருட்களை பயன்படுத்துவதைக்காண முடிகின்றது. சிலர் ஐந்து பழங்களின் கலவையே பஞ்சாமிர்தமென்பர். வேறுசிலர் மா,பலா,வாழை, என்ற முக்கனிகளுடன் தேனும் நெய்யும் கலந்து தயாரிப்பதே பஞ்சாமிர்தமென்பர். கிரியைபற்றி விளக்கம் தருபவரும். மா,பலா,வாழை, மாதுளை, தேங்காய்த்துருவல் என்பன சேர்ப்பதே பஞ்சாமிர்தம் என விளக்கம் தருகின்றனர். இங்கு பழங்களோடு தேங்காயும் இணைக்கப்பட்டுள்ளது. இந்துசமய சொல்லகராதி (கோக்கலை ஜே. ராஜன் 1992ல்) ”பஞ்சாமுதம்” எனச் சொல்லை குறிப்பிட்டு வருமாறு விளக்கம் தருகின்றார்.

பஞ்சாமுதம் - பஞ்சாமிர்தம்

தேவர்களுக்குப் படைக்கப்படும் உணவு. சர்க்கரை, தேன், நெய்,

பால், வாழைப்பழம்,திராட்சை இவை கலந்து தயாரிக்கப்படுவது. இது

இறைவனுக்கு அபிஷேகத்துக்குப் பயன்படுகின்றது.
எனவே தற்காலத்தில் ”பஞ்சாமிர்தம்” பற்றிய ஆய்வு தோன்றியதற்கு இத்தகைய வேறுபட்ட கருத்துக்களே காரணமாகும். வழிபாட்டு மரபுகள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. அதனால் பஞ்சாமிர்தம் பற்றிய தௌpவான விளக்கங்கள் தேவைப்படுகின்றது. முக்கனிகளான மா,,பலா, வாழை மூன்றும் அந்த ஐந்து பொருட்களில் சேருவதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஏனைய இரண்டும் தேனும் நெய்யுமாக அமைவதே சாலப் பொருந்தும். தேனும் நெய்யும் மனித உடலுக்கு மிகவும் நன்மையானவை. நெய், தேன் பலநோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகின்றது. "நெய்யுரிக்கி உண்பவர்தம் பேருரைக்கில் போமேபிணி" என்று பழையபாடற் பதிவொன்று அதன் சிறப்பை சொல்கிறது. எனவே நம்நாட்டின் மரபான பழங்களான மா, பலா, வாழையுடன் தேனும் நெய்யும் சேர்ந்தகலவையே நீண்ட ஆயுளைத் தரும் பஞ்சஅமிர்தமாகும். இதுவே இறைவனின் அபிடேகப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது என்பதே முடிவாகும்.
Read more ...

சித்தர்

Monday, August 1, 2011
சித்தர்கள்


இல்லற வாழ்க்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தின் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம். சித்தர்களுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது.


இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் சுத்தமான, வெள்ளையுடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி சிரித்துப் பழகி அன்னதானம் இடைவிடாது செய்து, பல பாடல்களை இயற்றி, கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வடலூர் ராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே!!!

சித்தர்களை வெளித்தோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்துவர்.

பொதுவாகவே நம்மூர்களில் காணப்படும் சாமியார்கள் என்பவர்கள் வேறு. கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் தன்னுடைய கையில் கடவுளைக் காட்டுவார். தான் கண்ட கோவில் கருவறைகளை ஒவ்வொன்றாக சொல்லி, எது வேண்டும் பார் என்பார். அவர் சொல்லாத கோவில்களைச் சொல்லி கேட்கக் கூடாது. கேட்டால் காட்டவும் முடியாது. இதுபோல போலி வித்தைக்காரர்கள் வேறு. சித்தர்கள் இத்தகைய மாயாஜால வித்தைகளை வெறுத்து ஒதுக்கியவர்கள். மக்களை தோஷம் என்று ஏமாற்றுவதும், பரிகாரம் என்று சொல்லிப் பணம் பறிப்பதும், முனிவர்கள் போல் வேஷமிட்டுத் திரிவதும் சித்தர்களின் செயல்கள் அல்ல.

இடைவிடாது பலகாலம் யோகமார்க்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்படியாக இலய யோகம் செய்து (இலயம் என்பது ஒன்றுபடுதல் ஆகும். இறைவனுடன் ஆன்மா ஒன்றுபடும் பயிற்சிகளில் ஈடுபடுவது இலயம் ஆகும்) அஷ்டமா சித்துக்களை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வதில்லை. நாம் செய்வதற்கு அரிய செயல்கள் என்று நினைப்பவற்றை சித்தர்கள் சர்வ சாதாரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களைக் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.
அஷ்டமாசித்துக்கள்::பிராத்தி

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.

திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.

அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்
ஐந்து தொழில்களை நடத்துதல்
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.

திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.
Read more ...

திருமூலர்

Monday, August 1, 2011
திருமூலர்
திருமூலரின் திருமந்திரம் 63 நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும், திருவள்ளுவரின் குருவாகவும் அறியப்படும் திருமூலரால் இயற்றப்பட்டது திருமந்திரம் ஆகும். இந்நூல் சைவ திருமுறைகளுள் பத்தாம் சைவ திருமுறையாக போற்றப்படுகிறது. திருவாவடுதுறையிலிருந்தவாரே இந்நூல் இயற்றப்பட்டதாக வரலாற்றில் காணக்கிடைக்கிறது. திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில்(இயல்கள்) மூவாயிரம் பாடல்களை உடையது. ‘மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது’ என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும். நூல் பெருமை: இந்நூ்ல பண்டைய இந்திய சித்தர்களின் அறிய கண்டுபிடிப்புகளையும் வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்தூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. இந்நூ் இறைவனை துதி செய்வதோடு நில்லாமல் பதி பசு பாசம் என்பனவற்றின் இணைப்பையும் உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும் நல் வாழ்க்கை வழிகாட்டி நூலாகவும் சாத்திர நூலாகவும போற்றப்படுகிறது பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம் குண்டலினி யோகம் மருத்துவம் நல் ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகும் அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்தில் பதியும்படி கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாம். தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். யோகியாகவும் எல்லாம் வல்ல சித்தராகவும், பலகலை அறிந்த ஞானியாகவும், அருள் நிறைந்த நாயன்மாராகவும் விளங்கினார்! இறைவன் பெரிய கருணையினால், உலகுக்கு அளித்த ஆகமப் பொருளை அருந்தமிழ் மறையாய் மூவாயிரம் மந்திரங்களில் நமக்குத் தந்துள்ளார்.
திருமந்திரம் 10ஆம் திருமுறை. தோத்திரமாகவும், சாத்திரமாகவும், யோகநூலாகவும், ஞானநூலாகவும், தந்திர நூலாகவும், மந்திரங்கள் அமைந்த பாராயண நூலாகவும், சமய, சமூக, ஒருமைப்பாட்டு நல்லிணக்க நூலாகவும் திகழ்ந்து உலகுக்கு உயிராக விளங்குகிறது திருமந்திரம். “இறைவனே தமிழொடு – வடமொழியிலும், ஆரியத்தொடு தமிழிலும் உடனே சொல்லிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே” என்கிறார் முத்தமிழ் வேதம் தத்துவம் சதாசிவம். திருமூலர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் இயற்பெயர் சுந்தரர். தமிழகத்தில் பொதிகை மலையில் – அகத்தியர் – தமிழ்ச் சங்கத்தில் உலக நூல்களைக் கற்றார். பின், கயிலைக் குருகுலம் சென்று, ஞான நூல்களான அருமறைகள், ஆகமங்களை நந்தியெம் பெருமானிடம் கற்றார். நந்தி அருளால் ‘நாதன்’ என்ற பட்டம் பெற்று, சுந்தர நாதர் ஆகித் தவம் செய்தார்.
கயிலையில் இவருடன் பாடங்கேட்டவர்கள்: சனகர் – சனந்தனர்- சானாதனர் – சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய ஏழுபேருடன், தானும் உடனிருந்து கற்றதாக அகச்சான்று கூறுகிறார். பதஞ்சலி – வியாக்கிர பாதருடன் இவர் தில்லைக்கு வந்து திருக்கூத்து தரிசனம் செய்தார். மீண்டும் கயிலை சென்றார். பதஞ்சலி வியாக்கிர பாதர் இருவரும் தில்லையிலே ஆசிரமங்கள் அமைத்துக் தங்கிவிட்டனர். தில்லைக் கோபுரத்தில் – திருமூலர்சிலையை காணலாம். இரண்டாவது முறையாக அகத்தியரைக் காண பொதிகை நோக்கி வருகிறார். ‘குறு முனிபால் உற்றதொரு கேண்மையினால் உடன் சில நாள் உறைதற்கு, நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக் கொண்டார்’ என்கிறார் சேக்கிழார். பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும், விளங்குபவர் இறைவன் இதனை மாணிக்கவாசகர், முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! என்கிறார் மாணிக்கவாசகர் உடம்பார் அழியின் உயிரால் அழிவர் திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள திருமந்திரம் என்ற ஒப்பற்ற தத்துவ நூலை இயற்றியவர்தான் திருமூலர். “காயமே இது பொய்யடா… வெறும் காற்றடைத்த பையடா” என்ற மாயாவாதத்துக்கு எதிராக, அறிவு பூர்வமான யதார்த்த வாதத்தை முன்வைத்த சிந்தனைச் சித்தர்தான் திருமூலர். சங்கன்னர் என்ற சித்தரின் அவதாரமாக கருதப்படும் திருமூலர், சிதம்பரம் தில்லை நடராஜரின் சன்னதியில், நீண்ட காலம் நிட்டையில் அமர்ந்துதான், உலகுக்கு மிகச் சிறந்த தத்துவ நூல்களை வழங்கியுள்ளார். உடலை வருத்தித்தான் ஞானத்தை அடையவேண்டும் என்ற கருத்தை மறுத்த அவர், பலவீனமான உடலை வைத்துக்கொண்டு வலிமையான ஞானத்தை அடைய முடியாது என்பதையும் உறுதிப்படக் கூடியுள்ளார்.
இவர் எழுதிய நூல்களில், திருமந்திரம் தலையாயது எனினும்,
திருமூலர் அறுநூற் றொன்று,
திருமூலர் வைத்தியம்,
திருமூலர் ஞானம்,
திருமூலர் வழலைச் சூத்திரம்,
திருமூலர் பல திரட்டு,
திருமூலர் வாதம் இருபத்தொன்று போன்ற மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். உடல் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை நமது ஆன்மீக மரபில் அழுத்தமாகப் பதிய வைத்தவர் திருமூலர்தான். உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ள தெளிந்தமாருக்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே உடலும், அதில் திரண்டுள்ள ஊனும் எம்பெருமான் கோயில் என்று சொல்லும் திருமூலர், வாயைக் கோபுரம் என்றும், உயிரை சிவனென்றும் சித்தரிக்கிறார். புலன்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதால் அவற்றை கள்ளப் புலன்கள் என்கிறார். இயல்பான மனித வாழ்வின் மூலமாக மேன்மையை அடைய முடியும் என்பதே திருமூலரின் சாரமான கருத்து என்று சொல்லலாம். இயற்கைக்கு மாறான வெறுப்பும், சலிப்பும், விரக்தியும் மனிதனுக்கு சிறுமைப் பண்புகளைத்தான் அதிகரிக்குமே தவிர, பேரியல்புகளை வளர்க்காது. திருமூலரின் ஞான மார்க்கம் இந்த அடிப்படையில் அமைந்ததுதான்.
பொதுவாக சித்தர்களின் தத்துவமே, மனித வாழ்விலிருந்து இறைமையை நாடுவதுதான். இறை வாழ்வு என்பதே இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் என்பதே சித்தர்களின் சிந்தனை. திருமூலர், அதைக்கொஞ்சம் அழுத்தமாகவும், விரிவாகவும் சொல்லியிருக்கிறார். அவர் இயற்றியுள்ள திருமந்திரம், நல்வாழ்விற்கு ஒருமந்திரம். “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..” என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம். சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மொழி இல்லாமல் எது நிலைக்கும்? தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது. மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது. முக்காலத்தையும் அறிந்த சித்தர்களுக்கு முத்தமிழின் பெருமை தெரியாமலா போய்விடும்! தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறி இருப்பதைக் கவனியுங்கள்… “முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதியது விரும்பாரன்றே” (திருமந்திரம்) அதனால்தான் “அருமலர் மொழியுஞான அமுதர்த செந்தமிழைச் சொல்வாம்” என்கின்றார் ஞானவெட்டியான். ஆம்… தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை. ஞானாமிர்தமாகப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல.. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது, “பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரே” என்றும் பாராட்டுகின்றார். தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் சிறப்புப் பெற்றார்கள் என்கிறார். “பொதிகை மேவு மகத்தீர ராலெனது போதத் தமிழ் வாக்கியம்” என கேட்பவரை கிறுகிறுக்க வைக்கும் தன்தமிழ் ஆற்றல், பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார். அகத்தியர் தமிழைப் பற்றி என்ன சொல்லுகிறார்? “சிந்தையுறு ஞானத் தெளியவுரை பாடுதற்கு வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே – செந்தமிழ் நூல் காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும் தேவியென்னும் பூரணியே சீர்” (அகத்தியர் ஞானம் 100) என்று தமிழை பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே சித்தரிக்கின்றார்.
பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும், தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார். “முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -கடைச் சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ நாம் பூமி வாழ்ந்த நலம்” இப்படி மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள். சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள் என்பதை இனியேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
Read more ...

பழமொழிகள்

Monday, August 1, 2011
சித்தர் பழமொழிகள். சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை தொகுத்தளித்திருக்கிறார்.
1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்
1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும் உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும் மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.
5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும் ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.
6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?
Read more ...

சித்தர்கள்

Monday, August 1, 2011
சித்தர்கள் வரலாறு இம்மண்ணுலகில் பிறந்த உயிரினங்களில் தலைமையான உயிரினமே மனித இனம். இந்த மணீசர்களோடு பதினெண் சித்தர்கள் உறவு கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்…. என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.
குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:
1. பதினெட்டாம்படிக் கருப்புகள்
2. நவகோடி சித்தர்கள்
3. நவநாத சித்தர்கள்
4. நாத சித்தர்கள்
5. நாதாந்த சித்தர்கள்
6. வேத சித்தர்கள்
7. வேதாந்த சித்தர்கள்
8. சித்த சித்தர்கள்
9. சித்தாந்த சித்தர்கள்
10. தவ சித்தர்கள்
11. வேள்விச் சித்தர்கள்
12. ஞான சித்தர்கள்
13. மறைச் சித்தர்கள்
14. முறைச் சித்தர்கள்
15. நெறிச் சித்தர்கள்
16. மந்திறச் சித்தர்கள்
17. எந்திறச் சித்தர்கள்
18. மந்தரச் சித்தர்கள்
19. மாந்தரச் சித்தர்கள்
20. மாந்தரீகச் சித்தர்கள்
21. தந்தரச் சித்தர்கள்
22. தாந்தரச் சித்தர்கள்
23. தாந்தரீகச் சித்தர்கள்
24. நான்மறைச் சித்தர்கள்
25. நான்முறைச் சித்தர்கள்
26. நானெறிச் சித்தர்கள்
27. நான்வேதச் சித்தர்கள்
28. பத்த சித்தர்கள்
29. பத்தாந்த சித்தர்கள்
30. போத்த சித்தர்கள்
31. போத்தாந்த சித்தர்கள்
32. புத்த சித்தர்கள்
33. புத்தாந்த சித்தர்கள்
34. முத்த சித்தர்கள்
35. முத்தாந்த சித்தர்கள்
36. சீவன்முத்த சித்தர்கள்
37. சீவன்முத்தாந்த சித்தர்கள்
38. அருவ சித்தர்கள்
39. அருவுருவ சித்தர்கள்
40. உருவ சித்தர்கள்

பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.
“எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)”
“எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”
“ஏதமில் நிறை சித்தர் எழுவர்”
“விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”
– என்று பல குறிப்புகள் உள்ளன.
Read more ...

சித்தி பெற்றவர்

Monday, August 1, 2011
சித்தர்கள் “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் – அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் என்றால் அறிவு ; சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு ; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம் சோதிடம் மந்திரம் இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் ஐந்து தகுதிகளாக உள்ளடக்கி சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் அல்ல. “மெய்ப்புலன் காண்பது அறிவு” என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

முதல் சித்தர் பதினெட்டு சித்தர்கள் என்கிற கணக்கு ஏனோ, எப்போதுமே சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டோடு நின்றுவிடவில்லை. அகத்தியர் முதலாய் வள்ளலார் வரையில் அநேக சித்தர்கள் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர். நாம் அறிந்தும், அறியாமலும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாருக்கும் முதல்வராய், ஆதி சித்தர் யாரென தேடினால்……,
“நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நிர்மலமாம் சதாசிவனார் என்னக்குச் சொன்னார்”
- அகத்தியர் -
“சிவனார் உரைத்த மொழி பரிவாய் சொன்னார்”
- தேரையர் -
“தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல”
- போகர் -
“சொல்லவே தேவிக்கு சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல”
- தன்வந்திரி -
“பாதிமதி அணிந்தவர் தான் சொன்னதிது
பதியான விதியாளி அறிவாள் பாரே”
- யூகிமுனி -
இது மாதிரி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை எடுத்தக் காட்டாய்ச் சொல்லலாம். இவர்கள் அனைவரும் சிவன் எனும் சிவபெருமான் சொன்னதாகவே சொல்லுகின்றனர். ஆக, சிவனே முதல் சித்தர் என்று அறுதியிட்டுக் கூறலாம். சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப் படும் இடங்களிலெல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை காணப்படுவது மூல குருவுக்கு வணக்கமாக இருக்கலாம்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. எனினும், முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம்.நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

முதல் தகுதி: சித்தத்தை அடக்கவல்லவர்கள்.
இரண்டாம் தகுதி: எண்வகை சித்துக்களை செய்ய வல்லவர்கள்.
மூன்றாம் தகுதி: முற்றும் துறந்தவர்கள் பாச இருளகற்றவர்கள் யான் என்ற அழுக்கற்றவர்கள்.
நான்காம் தகுதி: பிறப்பிற்குத் காரணமான வினைவித்தைக் கெடுத்து தூய உணர்வில் மாறி ஐம்புலன்களை அடக்கி சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆன்மீக ஆற்றலைப் பெற்று புற உணர்வில் செத்துக்கிடப்பவர்கள்.
ஐந்தாம் தகுதி: உயிரினங்களின் இன்னல்களை நீக்க இடையராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெரிந்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் உணர்ந்து இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும் உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற மருத்துவ முறையைக் கொண்டு வந்தவர்கள்.முக்காலமும் உணர்ந்த முழுமுதல் ஞானிகள். எக்காலமும் எத்தி போற்றப்பட வேண்டிய தமிழ் குலத் தலைவர்கள். இப்பதினெட்டு சித்தர்களுக்கு முன் இரேதாயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுலகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 375000 சித்தர்கள் தோன்றினர் என்று தேரையர் கூறுகின்றார்.
Read more ...

ஓம் - யோகி நிலை

Monday, July 18, 2011
ஓம் எனும் பிரணவ மந்திரம், அ + உ + ம் என்ற எழுத்துக்களின் இணைப்பே. இதில் 'அ' என்பது
விஷ்ணுவையும், 'உ' என்பது சிவனையும், 'ம்' என்பது பிரம்மாவையும் குறிக்கிறது என்பது சமயத் தத்துவமாகும்.

அஷ்ட யோகம் (அ) அஷ்டாங்க யோகம்

ஒருவன் யோகி நிலையை அடைய இவ்வெட்டு வகை யோகத்தையும் கடைப்பிடித்து வெற்றி கண்டால் மட்டுமே முடியும்.

1) இயமம் - பசியை அடக்குவது
2) நியமம் - மதத்தொடர்பான சடங்குகளை அனுஷ்டிப்பது
3) ஆசனம் - உடலை தன்வயப்படுத்தி தான் இஷ்டப்படும் நிலைக்கு கொண்டு வருவது
4) பிராணாயாமம் - மூச்சையடக்கி உடல் செயல்பாட்டினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது
5) பிரத்தியாகாரம் - புலன்களை அடக்குவது
6) தாரணை - மனதை ஒருமுகப்படுத்தி ஒன்றில் நிலைக்கச் செய்வது
7) தியானம் - அமைதியான நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி சிந்தனையே இல்லாத நிலையை அடைவது
8) சமாதி - தன்னைத் தானே ஆன்ம தரிசனம் செய்து கொள்ளும் நிலை

திதிகள்

சந்திரன் சுற்றிவர ஆகும் காலம். சந்திரனின் வளர்பிறையில் 15 திதிகளும், தேய்பிறையில் 15 திதிகளும் இடம்பெறும்.

சுக்கிலபட்ச திதிகள் - அமாவாசையில் தொடங்கி வரும் 15 திதிகள்
அமரபட்ச திதிகள் - பௌர்ணமியிலிருந்து தொடங்கி வரும் 15 திதிகள்

1) பிரதமை 2) துதியை 3) திருதியை 4) சதுர்த்தி 5) பஞ்சமி
6) சஷ்டி 7) சப்தமி 8) அஷ்டமி 9) நவமி 10) தசமி
11) ஏகாதசி 12) துவாதசி 13) திரயோதசி 14) சதுர்த்தசி 15) பௌர்ணமி அல்லது அமாவாசை

திருமாலின் பத்து அவதாரங்கள்

1. மச்ச அவதாரம்

கோமுகன் என்னும் அசுரன் வேதங்களைத் திருடி விழுங்கிவிட்டு மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான்.
அவனை கண்டுப்பிடித்து வதைக்க திருமால் மேற்கொண்டதே மச்ச அவதாரம்.

2. கூர்ம அவதாரம்

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற மந்தார மலையை மத்தாகப் பயன் படுத்தியபோது, அதற்கு முட்டுக் கொடுக்க திருமால்
மேற்கொண்ட ஆமை அவதாரம்.

3. வராக அவதாரம்

இரண்யாட்சன் என்னும் அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளிக்க முயன்ற போது, அதை மீட்க திருமால்
மேற்கொண்ட பன்றி அவதாரம்.

4. நரசிம்ம அவதாரம்

பக்தன் பிரகலாதனை காத்து ரட்சிக்கவும், பிரகலாதனின் தந்தை இரணியகசிபுவை சிட்சிக்கவும் திருமால் மேற்கொண்ட
அவதாரம். உடல் மனிதனாகவும், தலை சிங்கமாகவும் தோன்றிய அவதாரம்.

மேலே உள்ள நான்கு அவதாரங்களிலும் திருமாலுக்குப் பெற்றோர் கிடையாது.

5. வாமன அவதாரம்

காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு திருமால்
வதை செய்வது வாமன அவதாரம்.

6. பரசுராம அவதாரம்

ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைப்
பூண்டோடு அழிக்க முற்பட்ட அவதாரம் இது.

7. இராம அவதாரம்

அயோத்தி மன்னன் தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாய் பிறந்து, சீதையை மணம் முடித்து, இராவணனையும்
இதர அரக்கர்களையும் கொல்வதற்கு எடுத்த அவதாரம்.

8. பல பத்திரர் அவதாரம்

பல பத்திரர் கிருஷ்ணனின் ஒன்று விட்ட சகோதரர் உறவு முறை. இவருடைய தந்தைப் பெயர் வசுதேவர். அவருக்கு
தேவகி, ரோகிணி என இரண்டு மனைவியர் உண்டு. பல பத்திரர் அவதாரம் பிரலம்பன் என்கிற அரக்கனை அழிக்க நேர்ந்த அவதாரம்.

9. கிருஷ்ண அவதாரம்

வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாய்ப் பிறந்து, பாரதப் போரை நடத்தி, உலகத்திற்குத் தேவையான கீதாபதேசம் செய்த அவதாரம்.

10. கல்கி அவதாரம்

உலகை அழித்துப் புது உலகினைப் படைப்பதற்காக திருமால் மேற்கொள்ளவிருக்கிற அவதாரம் இன்னும் நிகழவில்லை.
Read more ...

பஞ்சகவ்வியம்

Monday, July 18, 2011
பஞ்சகவ்வியம்

பஞ்சகவ்வியம் செய்யவேண்டும். அது செய்யும் முறையாவது, ஈசுவரனுடைய கிழக்குப் பாகத்திலாவது அல்லது ஈசானபாகத்திலாவது ஒன்று அல்லது இரண்டு கைமுழ அளவு நான்கு முக்குச்சதுரமாகக்¢ கோமயத்தால் மெழுகி, கிழக்குநுனியாகவும் வடக்குநுனியாகவும் நான்கு நூல்களால் தனித்தனி ஒரு சாணளவுள்ள ஒன்பது கோஷ்டங்களைக்கீறி, ஒவ்வொரு கோஷ்டத்திலும், குருணியாவது, அதற்குப் பாதி அளவுள்ள நெல்லையாவது, அதனினும் பாதி அளவுள்ள அரிசியையாவது, அல்லது தருப்பையையாவது பரப்பி, வடக்கு முகமாக இருந்துகொண்ட நான்கு திக்கிலும் வடக்கு நுனியாகவும் கிழக்கு நுனியாகவுமுள்ள ஐந்து தருப்பைகளைப் பரப்பி,

நான்கு பக்கங்களிலும் புஷ்பங்களால் அலங்காரஞ்செய்து,

சிவதத்துவாய நம:,
சதாசிவதத்துவாய நம:,
வித்தியாதத்துவாய நம:,
புருஷதத்துவாய நம:,
காலதத்துவாய நம:,
பிருதிவி தத்துவாய நம:,
ஜல தத்துவாய நம:,
வாயு தத்துவாய நம:,
பிரகிருதி தத்துவாய நம:


என்று சொல்லிக்கொண்டு, நடு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, ஆக்கினேயம், நிருதம், மாருதம், ஈசானம் என்னும் ஒன்பது கோஷ்டங்களைப் பூசித்து, சுவர்ணபாத்திரம், வெண்கலபாத்திரம், அல்லது உடையாததாயும் கருப்பு நிறமில்லாததாயுமுள்ள மண் பாத்திரங்களையாவது சுத்தஞ் செய்து

ஒன்பது கோஷ்டங்களிலும் வைத்து,

சுப்பிரதிஷ்டபாத்திராய நம:,
சுசாந்தபாத்திராய நம:,
தேஜோமயபாத்திராய நம:,
ரத்தினோதகபாத்திராய நம:,
அமிருதபாத்திராய நம:,
வியக்தபாத்திராய நம:,
சூரியபாத்திராய நம:,
சம்யுக்தபாத்திராய நம:,
அவ்வியக்தபாத்திராய நம:


என்று சொல்லிக்கொண்டு, மேலே கூறியவாறு கோஷ்ட முறையாகப் பாத்திரங்களைப் பூசித்து, தாம்பிரவர்ணமான பசுவின் பாலை மூன்று உழக்கு அளவு நடுப்பாத்திரத்திலும், வெண்மைவர்ணமான பசுவின் தயிரை இரண்டு உழக்கு அளவு கிழக்குப் பாத்திரத்திலும், கபிலவர்ணமான பசுவின் நெய்யை ஒரு உழக்கு அளவு தெற்குப் பாத்திரத்திலும், கருப்புவர்ணமான பசுவின் நீரை இரு அஞ்சலிகள் கொள்ளும் அளவு வடக்கு பாத்திரத்திலும், கருப்புவர்ணமான பசுவின் சாணத்தை ஒரு உழக்கு அளவு எடுத்து ஐந்து உழக்கு நீர் சேர்த்து ஆடையினால் சுத்தி செய்து மேற்குப் பாத்திரத்திலும், விளாம்பழ அளவாவது அல்லது அதற்க் பாதி அளவாவது, அல்லது அதனினும் பாதி அளவாவது, அரிசி, நெல்லிக்கனி, மஞ்சளென்னுமிவைகளையரைத்து எடுத்து ஆக்கினேயம், நிருதம், வாயு என்னுமிந்த மூலைகளிலுள்ள பாத்திரங்களிலும், முப்பத்தாறு, அல்லது இருபத்தைந்து, அல்லது பன்னிரண்டு தருப்பைகளைச் சேர்த்து நீரில் போட்டு, முப்பத்தாறு முதலாகக் கூறப்பட்ட அளவில் பாதியாகிய வேறு தருப்பைகளால் செய்யப்பட்டதாயும், பிரதக்ஷிணமாக வாயுதிக்கில் நின்று சுற்றப்பட்டதாயும், ஒரு கையளவாகவாவது, அல்லது ஒரு ஒட்டையளவாகவாவது உள்ளதாயும், இரண்டங்குல அளவுள்ள முடிச்சுடனும், நான்கு அங்குல அளவுள்ள நுனியுடனும் கூடின கூர்ச்சத்தைச் செய்து, அதை ஒரு மரக்கால் அளவுள்ளதும், சந்தனம், அறுகு என்னுமிவற்றுடன் கூடினதுமான நீரில் போட்டுக் குசோதகஞ் செய்து, ஈசானகோண பாத்திரத்தில் இருதயமந்திரத்தால் அந்த நீரை விட்டு, பால்முதல் கோமயம் ஈறாகவுள்ள பஞ்சகவ்வியங்களை முறையே ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒருமுறை ஈசானாதி மந்திரங்களாலும், அரிசிமாவை இருதயமந்திரங்களாலும், நெல்லிமாவை சிரோமந்திரத்தாலும், மஞ்சளைக்கவச மந்திரத்தாலும், குசோதகத்தை ஆறுமுறை ஆவர்த்தி செய்த பஞ்சப் பிரம்மமந்திரத்தாலும் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

அதன்பின்னர், கோமயத்தைக் கோசலத்திலும், அவ்விரடனையும் நெய்யிலும், அம்மூன்றனையும் தயிரிலும், அந்நான்கினையும் பாலிலும் இருதயமந்திரத்தால் சேர்த்து, அதிலேயே குசோதகத்தையும் மூலமந்திரத்தால் சேர்க்கவேண்டும். பின்னர் பஞ்சப்பிரம மந்திரம் ஷடங்கமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணமமும், கவசமந்திரத்தால் அவகுண்டனமுஞ் செய்து, தேனுமுத்திரை காட்டி, கந்தம் புஷ்பங்களால் பூசித்து, அஸ்திரமந்திரத்தால் தூபதீபங்காட்டி, மூலமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

பஞ்சகவ்வியமுறை முடிந்தது.
Read more ...

சித்தாந்தம்

Monday, July 18, 2011
சித்தாந்தம்
சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்.
சிவ வணக்கம்
சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்கதொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன. வடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர்.
இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது.
சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூல்கள்
இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வைணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன.
சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.
தத்துவ அடிப்படைகள்

பதி (இறைவன்)
பசு (உயிர்)
பாசம் (மலங்கள்)

ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது.

இறைவன்: அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்திருப்பவன், அளவற்ற வல்லமை பெற்றவன்.
உயிர்: உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை ஆனால் மலங்களினால் பிணிக்கப்படும்போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணிப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும்.
மலங்கள்: மலங்கள் சடப்பொருள்கள். அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இவை இறைவனை அடைய முடியாது.
Read more ...

சிவபுராணம்

Monday, July 18, 2011
சிவபுராணம்

சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95


திருச்சிற்றம்பலம்.
Read more ...

சிவபுராணம்

Monday, July 18, 2011
சிவபுராணத்தின் நோக்கம்

முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம். இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.

சிவபுராணத்தின் அமைப்பு

உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.

நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.
பதினேழாவது அடியிலிருந்து இருபது வரை நூலின் நோக்கம் பற்றியும், அதை எழுதுவதற்கு ஆக்கியோனுக்கு உள்ள தகுதியும் கூறப்படுகின்றன.
பின்னர் இறைவனைப் புகழ்ந்து, உயிர் தன்னுடைய குறைகளை இறைவனுக்குத் தெரியப்படுத்தும் அடிகள் வருகின்றன. உயிர், உலகில் பல்வேறு வடிவங்களிற் பிறந்து களைத்துப் போனதைக் கூறுவதாக இருபத்தாறு முதல் முப்பத்தோராவது வரையான ஆறு அடிகள் அமைந்துள்ளன.
இறைவன் திருவடிகளைக் கண்டதில் வீடு பேறு அடைந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் 32 ஆவது அடியைத் தொடர்ந்து மீண்டும் இறைவனின் புகழ் கூறப்படுகின்றது.
50 தொடக்கம் 55 வரையான அடிகள், உயிர், தன்னைச் சுற்றி அமைந்துள்ள மாயையினால் உருவான உடல் பற்றியும், அவ்வுடலின் ஐந்து புலன்களும் தன்னை ஏமாற்றுவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து 83 ஆவது அடிகள் வரை இறைவனின் புகழ் கூறப்பட்டு, 84 ஆம், 85 ஆம் அடிகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் உடம்பினுள் கட்டுப்பட்டிருக்க முடியாமல் இருக்கும் நிலையைக் கூறி உயிர் புலம்புகிறது.
மீண்டும் இறைவனின் புகழ்ச்சியுடன், இந் நூலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் அடையக்கூடிய பயனை இறுதி நான்கு வரிகளில் கூறி நூல் நிறைவு எய்துகிறது.

சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்


சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமயம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்றுகூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது.

இறைவனுடைய இயல்புகள், உயிரின் தன்மை, அவற்றை மலங்கள் பீடித்திருத்தல், உயிர்கள் திரும்பத் திரும்பப் பிறக்கவேண்டியிருத்தல், உயிர்களின் விடுதலை, உயிர்களை விடுவிப்பதில் இறைவனின் பங்கு, இறைவன் அருளைப் பெறுவதில் உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன தொடர்பாகச் சிவபுராணத்தில் குறிப்புக்கள் வருகின்றன.

இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்குபவை.

சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் என்று கூறுகிறது. இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது.

இறைவன்

சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்து எல்லை இலாதானே

அளவிலாப் பெம்மானே
தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய்

உயிரும், மலங்களும்

உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் கன்மம் என்னும் மலமாகவும், வினைப் பயன்களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் மாயை என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துக்கள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன.

எஞ்ஞானம் இல்லாதேன்
பொல்லா வினையேன்
வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்

பிறவிச் சுழல்

உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்.


இச் சுழலிலிருந்து நீங்கி விடுதலை பெறுவதற்கு இறைவன் திருவருள் தேவைப்படுகிறது. பிறவிச் சுழலிலிருந்து உயிர்களை மீட்க வல்லவன் இறைவனே என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பல அடிகளிலே காணப்படுகின்றன.
Read more ...

சிவன்கண்

Monday, July 18, 2011
ருத்ராக்ஷ்ம்

ருத்ராக்ஷ்ம் என்பது ஒரு வகையான மரத்தின் விதைகள்.ருத்ராக்ஷ்ம் என்றால்ருத்திரன்+அஷம்=சிவன்கண்.அதாவது சிவனீன் கண்களில் இருந்து தோன்றியாதாகும்.மேலும் இதனை சிவனீன் சொரூபம் என்றும் கூறலாம். ருத்திரன் என்றால் தீமைகளை அழிப்பவன்.

ருத்ராக்ஷ்ம் தோன்றிய புராணக்கதை


முன்னொரு காலத்தில் தாரகாஷன்,கமலாஷன்,வித்யுன்மாலி என்ற அசுரர்கள் இருந்தார்கள்.இவர்களுக்கு திரிபுர அசுரர்கள் என்று பெயர். திரிபுர அசுரர்கள் கடுமையான தவம் செய்து பெற்ற வரங்கள் மற்றும் சக்திகளை கொண்டு பூலோகம் தேவலோகம் மீது படையெடுத்து சென்று மக்களையும்,தேவர்களையும் வாட்டி வதைத்தனர்.இதனால் துன்புற்ற தேவர்கள் சிவனிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டினர். தேவர்களின் நிலைமை கண்ட சிவன் அவர்களை காக்கும் பொருட்டு ஆயிரம் ஆண்டுகள் கண் விழித்திருந்து அகோரஸ்திரம் என்ற அஸ்திரத்தை படைத்து அந்த அஸ்திரத்தின் மூலம் திரிபுர அசுரர்களை வதம் செய்தார். தேவர்களின் நிலைக் கண்டு வருந்தினார் அப்பொழுது சிவனின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராக்ஷ்ம் மரங்களாக தோன்றின.

ருத்ராக்ஷ்ம் மரம் பற்றிய தாவரவியல் தகவல்கள்

ருத்ராக்ஷ்ம் என்பது ஒரு வகையான மரத்தின் விதைகளே ஆகும். ருத்ராக்ஷ்ம் விதைகள் அம்மரத்தின் பழுத்த பழங்களில் இருந்து கிடைக்கிறது.

ருத்ராக்ஷ்ம் மரங்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து பயன்தர 12முதல் 15ஆண்டுகள் ஆகின்றன.ருத்ராக்ஷ்ம் மரங்கள் முற்றிய நிலையில் 80அடி உயரம் வரை வளரும்.இவற்றின் ஆயுள் காலம் சராசரியாக100ஆண்டுகள் ஆகும்.இவற்றின் இலைகள் பச்சை நிறமாகவும்,பூக்கள் வெண்மை நிறமாகவும்,கனிகள் கருநீலமாகவும் இருக்கும்.

ருத்ராக்ஷ்ம்தாவரவியல்பெயர்"எலொபோ கார்பஸ்"(Eloeocarpus)என்பது பொதுப்பெயர் ஆகும்."எலொபோ கார்பஸ்ஜெனிட்ரஸ்", (EloeocarpusGenitrus),"எலொபோகார்பஸ் செர்ரடஸ்" (Eloeocarpus Serratus) என்ற பெயர்களுடன் ஏறக்குறைய 25 வகையான மரங்கள் உள்ளன.
ருத்ராக்ஷ்ம் மரம்

ருத்ராக்ஷ்ம் கனி


ருத்ராக்ஷ்ம் மணிகளில் இயற்கையிலே தூவாரங்கள் மற்றும் கோடுகள் அமைய பெற்றிருக்கும். இந்த கோடுகளை முகம் என்று அழைக்கிறோம். ருத்ராக்ஷ்ம் முகம் கோடுகளை கொண்டுதான் கணக்கிடபடுகின்றன
Read more ...

காகபுசுண்டர்

Tuesday, July 12, 2011
ஞானம் 80
கயிலாய மலையில் ஒருநாள் மும்மூர்த்திகளும் தேவர்களும்
கூடியிருக்கும் சமயத்தில் சிவபெருமானுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம்
எழுந்தது. “இந்த உலகம் எல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விட்ட பிறகு
எல்லோருக்கும் குருவான நமசிவாயம் எவ்விடத்தில் தங்கும்? பிரம்மா,
விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் எங்கே
இருப்பார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார்.

சிவபெருமானின் கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை. எல்லாப்
பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விஷ்ணுவும் மௌனமாயிருந்தார்.
மார்க்கண்டேயனுக்கு ஆச்சரியம். விஷ்ணுவுக்குக் கூடவா விடை
தெரியவில்லை? மார்க்கண்டேயனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து
கொண்ட விஷ்ணுவும், “உங்கள் கேள்விக்குப் பதில் சித்தர்களிடம்தான்
கிடைக்கும். குறிப்பாக புசுண்ட முனிவரைக் கேட்டால் தெரியும். அவரை
இங்கு அழைத்து வந்து கேட்ப தென்றால் வசிட்ட முனிவரைத்தான் அனுப்ப
வேண்டும்” என்றார்.

தேவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். தேவர்களான தங்களால் யூகிக்க
முடியாத ஒன்றை சித்தர் ஒருவர் யூகித்துக் கூறுவார் என்பதை அவர்களால்
நம்ப முடியவில்லை. எதனால் நீர் இப்படிக் கூறுகின்றீர்? என்று அனைவரும்
விஷ்ணுவைக் கேட்டனர்.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்து விட்ட நிலையில் எனக்கு ஏதும்
வேலையில்லாததால் நான் ஆலிலையின் மீது அறிதுயிலில் ஆழ்ந்திருந்தேன்.
என்னுடைய சக்கரம் வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அந்த
வேகத்தில் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது யாராலும் முடியாத காரியம்.
ஆனால் அப்போது அங்கு வந்த காகபுசுண்டர் எப்படியோ அந்தச்
சக்கரத்தை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைக் கடந்து சென்றார். அதனால்
அவர் எல்லாம் வல்லவர் என்பதை அறிந்தேன் என்றார் விஷ்ணு.

இப்படியெல்லாம் அறிந்தவர் என்று தேவர்களாலேயே ஒப்புக்
கொள்ளப்பட்ட இந்த காகபுசுண்டருக்கு எப்படி இந்தக் காரணப்பெயர்
ஏற்பட்டது என்பதற்கு போக முனிவர் விளக்கம் கூறுகின்றார்.

முன்பு ஒரு காலத்தில் சக்தி கணங்கள் மது உண்டு நடனமாடிக்
களித்திருக்கையில் அப்போது அங்கு சிந்திய மதுத்துளிகள் குடிநீரில்
கலந்துவிட, அந்த நீரினைப் பருகிய தேவலோகத்து அன்னங்களும்
மனமயக்கத்துடன் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தன. இந்த மதுக்களிப்பு
நடனத்தை சிவனும் பார்வதியும் கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில்
மகிழ்ச்சியின் எல்லையில் சிவகணமானது காகத்தின் உருவில் அன்னத்தைச்
சேர அன்னம் அப்போதே கர்ப்பமுற்று இருபத்தொரு முட்டைகள் இட,
இருபது அன்னக் குஞ்சுகளையும் ஒரு காகத்தையும் பொரித்தது. இருபது
அன்னங்களும் அநேக நாட்கள் வாழ்ந்து முக்தியடைய, சிவகலையால் பிறந்த
காகம் மட்டும் அழியாமல் இருக்கும் பேறு பெற்றது. அந்தக் காகமே இந்த
காகபுசுண்டர் என்று சித்தர் பாடல்கள் இவர் வரலாற்றைத் தெரிவிக்கின்றன.


வர ரிஷியின் சாபத்தால் உலகத்தில் சந்திர குலம் விளங்க ஒரு
வெள்ளாட்டின் (விதவை) வயிற்றில் பிறந்தவர் இவர் என்றும், பிரளய
காலத்தில் காக்கை வடிவெடுத்து அப்பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்து
அநேக கோடி வருடங்கள் ஜீவித்து இருந்தாரென்றும் ஒரு வரலாறு
தெரிவிக்கின்றது.

காகபுசுண்டர் அன்னத்தின் முட்டையிலிருந்து பிறந்தவரா?
வெள்ளாட்டின் பிள்ளையாகப் பிறந்தவரா? என்னும் ‘ரிஷிமூலம்’ இன்னும்
உறுதிப்படுத்த முடியாத தேவரகசியம்.

இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர். இவர் உருவம் கருமையாக இருக்கலாம்;
எதையும் கூர்ந்து பார்த்து உண்மை காணும் தன்மையுள்ளவராய் இருக்கலாம்.
உண்மைகளைக் காணப் பலவிடங்களிலும் அலைந்து திரிந்தவராயிருந்த
மையால் இவர் காகபுசுண்டர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சாமி
சிதம்பரனார் கூறுகின்றார்.

இவர் காக்கை வடிவில் இருந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தமைக்கு
இவர் பாடல்களிலேயே ஆதாரம் உள்ளது.

“காகம் என்ற ரூபமாய் இருந்து கொண்டு
காரணங்கள் அத்தனையுமே கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
வெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம் காணேன்”

என்ற வரிகளால் இஃது உறுதிப்படுகின்றது.

தன்னுள்ளே இறைவன் கோயில் கொண்டுள்ளதை யறியாமல் வீணே
இந்த மனிதர்களெல்லாம் வெளியில் பல தெய்வங்கள் உண்டு என்று
அலைந்து திரிகின்றனரே என்பதை,“தானென்ற பிரமத்தை யடுத்திடாமல்
தரணியில் தெய்வமடா அனந்த மென்றும்” (24)

வரிகளில் சுட்டிக்காட்டி,

“முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சக்தியடா மனந்தானே யோக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லந்தான் பணியு முன்னே;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே”

என்று வாசியோக மார்க்கத்தை இறைவனை அடையும் மார்க்கமாக
அறிமுகப்படுத்துகின்றார்.

“அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
கூறுகிறேன் முக்கோண நிலைதாமே” (26)

என்று வாசியோகத்தின் மூலம் குண்டலி யோகம் செய்து இறைவனைக்
காணும் மார்க்கத்தைப் போதிக்கின்றார். மேலும்,

“தாமென்ற உலகத்தில் மனித ரோடே
சஞ்சாரஞ் செய்யாற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதேகாமப்பேய் கொண்டவனோ டிணங்கிடாதே
காரணத்தைக் கண்டு விளையாட்டு வாயே”

“விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
வேகாத தலையாகும் விரும்பிப்பாரு
மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
அக்கினியாம் கம்பமடா சுழுமுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
கபடமற்ற தேகமடா கண்டு பாரே” (28)

இது மனம் காமவயப்படாமல் வாசியோகம் மூலம் குண்டலி எழுப்பி
நித்திய தேகம் பெறும் முறையை உபதேசித்தது ஆகும்.

இவர் கூறும் இந்த அக்கினி கம்பம் சுழுமுனை நாடியாகும். இதனை,

“நேரப்பா நெடுந்தூரம் போகும்போது
நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும்
வெளியொன்றுந் தெரியாம லிருக்குந்தானே”

என்று சுழுமுனைக்கு விளக்கம் தருகின்றார். இந்த சுழுமுனையின் முடிவில்
மனோன்மணி வீற்றிருக்கும் நிலையை,

“இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்” (44)

என்று கூறுகின்றார்.

வாசியோகமே காயசித்தி உபாயமென்பதை,

“சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா
சத்தியமா யண்டத்திற் செல்லும் போது


போற்றுகிற அக்கினியும் பிரவேசித்துப்
புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
மைந்தனே அபுரூப மாகுமப்பா
வாற்றியே நிழற் சாய்கை யற்றுப் போகும்
வலுத்ததடா காயசித்தி யாச்சப் பாரே” (55)

இவர் உலகில் நிலவும் சாதி வேற்றுமையைத் தம் பாடல்களில்
வெகுவாகக் கண்டித்துள்ளார். குருவைத் தேர்ந்தெடுப்பதில் மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறும் இவர் போலி குருவானவர்
உண்மையான பிரமத்தை அறியாதவர்கள் என்றும், அவர்கள் வெறும் வேத
ரகசியங்களை அறிந்ததினால் மட்டும் மெய்ஞானியராக மாட்டார்கள் என்றும்,
வெறும் காவியுடையும் யோக தண்டம் என்னும் முககோல் காலில் பாத குறடு
இவைகள் மட்டும் ஒருவரைக் குருவாக உருவகப்படுத்த இயலாது. இவர்கள்
எல்லாம் ஆணவம் கொண்ட பிறர் அஞ்சத்தக்க வேடதாரிகள் என்று கூறி,
இத்தகைய குருமார்கள் பணம் பறிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்
என்பார் காகபுசுண்டர்.

“குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே”

“பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பார்”

சித்தர்களுக்குச் சாதியும் மதமும் இல்லை என்பதை காகபுசுண்டர் தம்
பாடலில் எடுத்துக் கூறுகின்றார்.

“சாண் அப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என்குலம் சுக்கிலந்தான் மைந்தா”

இவர் அத்வைத கொள்கையில் உறுதியுடையவர் என்பது இவரது
ஞானப்பாடல்களால் புலனாகிறது. சித்தர்கள் பெரும்பாலும் அத்வைதக்
கொள்கையினர் என்பது ஆய்வாளர் முடிவு. ஜீவான்மாவும் பரமான்மாவும்
வேறல்ல. இரண்டும் ஒன்றேதான். இதை உணர்வதுதான் மெய்ஞானம்.
தன்னையும் பரமத்தையும் ஒன்றாக அறிந்து சமாதி நிட்டையில் இருப்பது
தான் ஜீவன் முக்தி நிலை என்றும், இதுவே சிவோகம் பாவனை என்றும்,

பரமான்மா என்பது சூட்சுமப் பொருள்; அதாவது கண்ணில் காண
முடியாத சூட்சுமப் பொருள் என்றும் அதைக் கண்ணால் காண முடிகின்ற
தூலப் பொருளில் தான் அறிய முடியும் என்றும் அதனால் நீ பரமான்மாவைக்
காண வேண்டுமானால் உன் உடம்பிலேயே அதனை அறிந்து கொள்ள
வேண்டும்.

இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், எள்ளுக்குள்
எண்ணெய் அடங்கியிருக்கும் தன்மையையும் ஒரு சிறிய விதையினுள் பெரிய
மரம் ஒன்று அடங்கியிருக்கும் சூட்சுமத்தையும் பசுவின் பாலிலே நெய்
கலந்திருக்கின்ற தன்மையையும் பூவினுள்வாசனை கலந்திருக்கின்ற நிறம்
கலந்திருக்கின்ற உத்தியையும், மயில் முட்டையில் அழகான பலவண்ண
தோகை ஒளிந்திருக்கின்ற ரகசியத்தையும் நீ உணர்ந்து கொள்வாயானால்
உன்னுள் இறைவன் உறைந்து இருக்கும் இரகசியத்தை நீ அறிந்து கொள்வாய்.அகங்காரம் காரணமாக இதை மறந்து இதைக் கண்டறிவதற்கான
சாதனத்தையும் நீ மறந்து விடுவாயானால் உனக்கு அபரோட்ச ஞானம்
கிட்டாது. பரமாத்மாவுடன் ஒன்று மட்டும் முக்தி நிலையும் உனக்குக்
கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.

“வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும்
வித்தனிடம் அடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும்
கன்று ஆவின் பாலிலே நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின் மேல் வர்ணம் போலும்
தூலம் அதி சூட்சுமம்தான் துலங்கி நிற்கும்
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால்
அபரோட்ச ஞானம், முத்தி அரிது தானே”

காகபுசுண்டரின் ஞானப்பாடல் அனைத்துமே அந்தாதித் தொடையில்
அழகுறக் காணப்படுகின்றது. காகபுசுண்டர் உபநிடதம் என்ற தலைப்பிலான
மூன்று பாடல் தொகுப்பும் குறள் வெண்பா தொகுப்பு ஒன்றும் சித்தர் பாடல்
தொகுப்பில் காகபுசுண்டர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

யோகம் அறுபத்து நான்கு என்பதை,
“அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்”

என்ற குறளிலும் சித்தர் பதினெண்மர் என்பதை,

“சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்”

என்ற குறளிலும் புலப்படும் இவர் இப்பதினாறு பாடல் தொகுதியை,


“யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுஉணரு வீர்”

என்று கூறி முடிக்கின்றார்.
Read more ...