பட்டினத்தார் பாடல்

Monday, June 27, 2011
பட்டினத்தார் பாடல்

இளமை முதலே இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச்
சொல்லப்படுகின்றது. வானுலக தேவர்களில் ஒருவரான குபேரன் தான்
இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப்
புராணம் கூறும். இவரது பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர்.
இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர்
வைத்த பெயர் திருவெண்காடர்.

கப்பல் வணிகம் மூலம் பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமாக
உரிய வயதில் ஞானகலாம்பை சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின்
புதல்வியான சிவகலை என்பவரை திருவெண்காடருக்கு மணமுடித்தார்.

இல்லற வாழ்க்கை இனிதே நடந்தாலும் குழந்தையில்லா ஏக்கம்
திருவெண்காடரை வாட்டியது. இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாமே
குழந்தை வடிவாய் சிவசருமர் என்ற சிவபக்தர் மூலம் திருவெண்காடரைச்
சேர்ந்தார். அன்பு மகனை மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்தார்.

குழந்தை பெரியவனானதும் வியாபாரம் செய்ய அனுப்பினார்.
திரைகடலோடித் திரவியம் தேடிச் சென்ற மருதவாணன் கப்பல் நிறையத்
தவிடு மூட்டையும் வரட்டிகளையும் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தான்.
மருதவாணனுக்குப் பித்துப் பிடித்து விட்டதோ என்றஞ்சிய அவர்
வீட்டினுள்ளே சிறை வைத்தார். வரட்டிகளை வெளியே எறிய வரட்டிக்குள்
வைரக்கற்கள் சிதறின. தவிடெல்லாம் தங்கமாக மின்ன திகைத்துப்போன
திருவெண்காடர் தம் மகனைப் பாராட்டத் தேடுகையில் அவரோ தம்
அன்னையாரிடம் சிறு பேழையைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டு
மறைந்து விட்டிருந்தார்.

மைந்தன் கொடுத்துவிட்டுச் சென்றிருந்த பேழையில் காதற்ற ஊசியும்
ஓர் ஓலைச்சீட்டும் இருந்தது. அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண்
கடைவழிக்கே’* என்று எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை
உணர்ந்து கொண்ட திருவெண்காடர் தமது மைந்தனாக இதுநாள் வரை
இருந்தது திருவிடைமருதூர் பெருமான்தான் என்பதை உணர்ந்து மனம்
வருந்தித் துறவறம் பூண்டார்.

*“காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” பட்டினத்தாரின்
இந்த வாசகமும் பாடலும் புதுச்சேரி கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள
அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை
உணர்ந்து நடக்க வேண்டுகிறது.

இந்தத் துறவு நிலை வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை
பொருளாசை, பெண்ணாசை, வித்தையாசை என்று மனம் ஆசையின்
வாய்க்கப்பட்டு அலைக்கழிப்புற்ற நிலையை அழகிய கண்ணிகளாகப்
பாடுகின்றார்.

“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா
பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா”

“மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா”
“மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா”
“பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே”

“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே;
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே”

“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே”

“மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே”

“கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே”

இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு
அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.

“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே”

காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே

என்று அழுகிறார்.

நேற்றிருந்தோர் இன்று இல்லை. கண்ணுக்குக் கண்ணெதிரே
உடல்களெல்லாம் கட்டையில் வேகக் கண்டும் இந்த உடலை நித்தியமான
தென்று எண்ணி நிரந்தரமாக இருப்போமென்று எண்ணி ஆங்காரம்
கொள்ளுகிறதே, நீர்க்குமிழி போன்ற இவ்வாழ்க்கை ஒரு பெருங்காற்றுக்குத்
தங்காதே. பெண்ணாசை மனதை அணுஅணுவாய்ச் சித்திர வதை செய்கிறதே.
அரும்பு விழியழகும், குதம்பை முலையழகும் உரகப்படத் தல்குல் அழகும்,
‘ஆவி உண்பேன்’ என்று என்னை அலைக்கழிக்கின்றதே’.

கன்னி வனநாதா ! கன்னி வனநாதா !
புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
சீரியாய்க் கீடமாய்க் கெட்ட நாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?
பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
அன்னை வயிற்றில் அழிந்த நாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள்போதாதோ?
காமன் கணையால் கடைபட்டல் போதாதோ? (18-24)

“பிறப்பைத் தவிர்த்தையிலை புண்ணாக் கொண்டையிலை
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை”

என்று கூறி கன்னி வனநாதா என்னை உன்னோடு அழைத்துக்கொள் என்று
கெஞ்சுகின்றார்.

இறைவன் அவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொள்வாரா என்ன?
இன்னும் அவரது அருட்புலம்பலைக் கேட்கும் ஆசைப்பேறும் முதல்வன்
முறையீட்டைத் தொடர்ந்து அருட்புலம்பலும் தொடர்கின்றது.

குருவாகி வந்தானோ? குலம் அறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உரு அழிக்க வந்தானோ”(13)

“முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னை யறியவே தான் ஒருத்தி யானேண்டி” (21)

“சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்
மாணிக்கத்துள் ஒளிபோல் மருவி இருந்தாண்டி”
உள்ளுண்வாய் நின்றவர்தம் உணர்வுக்கு உணர்வாண்டி (54)

உடலும் உயிரும்போல் உள்கலந்து நின்றாண்டி

அந்த இறைவன்
ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள்ஒளி காண்
பேசாமல் இருக்கும் பிரமம் இது என்றாண்டி”

என்று தாமறிந்தவற்றை கூறிப் புலம்புகின்றார். இந்தத் துறவியை இனி நாம்
பட்டினத்தார் என்றே குறிப்பிடுவோம்.
காவிரிப்பூம்பட்டினத்துப் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்த சிறப்பு நோக்கி
இவரை எல்லோரும் பட்டினத்தார் என்றே அழைத்தனர்.

இவரது பாடல்களில் பெரும்பாலும் திருவாசக மணமும் நிறைந்து
காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

“புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ? (21-22)

என்ற வரிகள் மாணிக்கவாசகரின்,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்ல ஆ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்”

என்ற சிவபுராண வரிகளை நினைவூட்டுகின்றன.

இன்னும் சில பாடல்கள் இராமலிங்க அடிகளாரின் பாடல்களை
மனத்தினில் நிழலாட வைக்கின்றன.

“தன்னை அறிந்தேன்டி ! தனிக்குமரி ஆனேன்டி
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?

என்ற வரிகள் இராமலிங்கரின் ‘தனித்திருக்க மாட்டேனடி’ என்ற பாடலை
நினைவுறுத்துகின்றன.

மொத்தத்தில் இறைவனை உருக வைப்பதில் மாணிக்க வாசகரும்,
இராமலிங்க அடிகளாரும் கலந்த கலவை இந்தப் பட்டினத்தார் எனலாம்.
அப்படி இறைவனைப் பாடி உருகுகின்ற திருவாசகத்திலும்,
அருட்பாவிலும் நனைந்த ஈர விழிகள் இந்தப் பட்டினத்தார் பாடல்களிலும்
கசிவை ஏற்படுத்துகின்றன.

துறவுக்கோலத்தில் வீடு வீடாய்ப் பிச்சையெடுத்து உண்டு திரிவது
பட்டினத்தாரின் சகோதரிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட
அவமானத்தைத் தேடித் தரும் தம்பி தனக்கு இருந்தென்ன செத்தென்ன
என்ற எண்ணத்துடன் பட்டினத்தாரை விஷம் கலந்த ஆப்பம் கொடுத்துக்
கொல்லப் பார்த்தாள்.

தமக்கையின் கருத்தை அறிந்த பட்டினத்தார், ‘தன்னப்பம் தன்னைச்
சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்’ என்று கூறி வீட்டின் கூரை மீது
அப்பத்தினை வீச அவ்வீடு தீப்பிடித்து எரிந்தது.

இப்படித் துறவியாய்த் திரிந்த காலத்து அன்னை இறந்த துயர் கேட்டு
அங்கே சென்று பச்சை வாழை மட்டை மீது அன்னையின் உடலைக் கிடத்தி
திருப்பதிகம் பாடித் தீயெழுப்பித் தம் அன்னையாருக்குச் செய்ய வேண்டிய
ஈமக்கிரியை செய்து முடித்தார். இவ்வளவு நாட்கள் அவ்வூரில் சுற்றித்
திரிந்தது இதற்காகத்தானே.

இவர் பாடிய இந்த தகனப்பாடல் புதுச்சேரியிலும் அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளிலும் இறுதி ஊர்வலப் பாடலாய்த் திருவாசகத்துடன் சேர்த்துப்
பாடப்படுகிறது. இது வேறு எந்தச் சித்தர் பாடலுக்கும் இல்லாத சிறப்பாய்க்
கருதப்படுகிறது.
“ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பே னினி”
என்று ஓதுவார் பட்டினத்தாரின் இந்தப் பாடலைப் பாடும்போது உயிரற்ற
அந்த உடலை இன்னொரு தரம் பார்க்க வைக்கிறது.

பிணம் சுடுவதற்கு முன்போ அல்லது புதைப்பதற்கு முன்போ
வாய்க்கரிசி இடுதல் என்ற சடங்கு உண்டு. உறவும் சுற்றமும் வாய்க்கரிசி
இடும் நேரத்தில் ஓதுவார் அல்லது பரியாரி இந்தப் பாடலைப் பாடுவார்.

“அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே யமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே யென வழைத்த வாய்க்கு”

என்று வாய்க்கரிசி இடுபவர் மனம் அழும் ஆசையை இப்பாடல்
எதிரொலிக்கிறது.

வெட்டியான் மண்ணால் உடலை மூடுகிறான். அல்லது உடலை
வறட்டியால் (எரு மூட்டையால்) மூடுகிறான். அந்த உடலை இறுதியாக ஒரு
தடவை பார்க்கத் துடிக்கிறது.

“ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பே னினி”

பாசத்திற்கு ஆட்படாதார் ஆர்?

உடலுக்குத் தீ வைக்கச் சொல்லுகிறான் வெட்டியான். மனம் பதறுகிறது.
எத்தனை அருமையாய் எம்மைப் பாதுகாத்த ‘தாய்’ அவளுக்கா இந்தக்
கொடியவன் தீமூட்டச் சொல்லுகிறான். முடியாதய்யா முடியாது.

“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபக லாச்சிவனை யாதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
வெரியத் தழல்மூட்டு வேன்”

தம் குழந்தைப் பருவத்தில் சோறூட்டிய தாயாரின் கருணை முகம்
மனதில் நிழலாடுகிறது. பட்டினத்தார் துடித்துப் போகிறார்.

“வட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலுந் தோன் மேலுங்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்”

பட்டினத்தார் மனத்தடுமாற்றத்தை இன்னுமொரு பாடலும் கூறுகிறது.

“அள்ளியிடுவ தரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேன் முகம்வைத்து முத்தாடி யென்றன்
மகனே யெனவழைத்த வாய்க்கு”

இனியும் காத்திருக்க இயலாது. அன்னை உடல் எரிக்குள் மூழ்குவதே
சரி என்று நினைத்த பட்டினத்தார் அவ்வுடலைப் புதிய முறையில்
பாட்டாலேயே தகனம் செய்கிறார்.

“முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில்
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே”

தீக்கடவுள் பட்டினத்தாரின் வாக்குக்குப் பணிந்து உடலைத்
தீக்கிரையாக்கினான். அப்போது பட்டினத்தாருக்கு உடல் பதறுகிறது.
வெந்தழலில் வேகும் அவ்வுடலைப் பார்த்து,

“வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியே னையகோ - மாகக்
குருவி பறவாமற் கோதாட்டி யென்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை”

தீ உடலை ஏறத்தாழ எரித்துவிட்டது. மேடாக இருந்த உடற்கூடு
சாம்பலாய்ப் போய்விட்டது.

“வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமு
முன்னையே நோக்கி யுகந்துவரங் கிடந்துஎன்
றன்னையே யீன்றெடுத்த தாய்”

இப்பொழுது அவர் மனம் ஏறத்தாழ பக்குவ நிலைக்கு வந்து விட்டது.
உடற் சாம்பல் சேகரிக்கப்படுகிறது. இனி என்ன? நேற்று உடலாய் நடமாடினாள். இன்று சாம்பலாய்த் தோற்றம் தருகிறாள். இதுதான் வாழ்க்கை
என்று சமாதானமடைகிறார்.

“வீற்றிருந்தா ளன்னை வீதிதனி லிருந்தாள்
நேற்றிருந்தா ளின்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும் வாருங்க ளேதென் றிரங்காம
லெல்லாந் சிவமயமே யாம்”

என்று முடித்து எல்லோரையும் பாற்றெளிக்க அழைக்கின்றார் பட்டினத்தார்.

இந்த பட்டினத்தார் பாடலிலே,

“மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமள வெள் ளளவாகினு முன்பு செய்ததவந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே”

என்ற பாடல் பிரசித்தமானது. இப்பாடலைப் பிரசித்தமாக்கியவர் கவிஞர்
கண்ணதாசன். ‘பாத காணிக்கை’ என்ற திரைப்படத்தில்,
“வீடுவரை உறவு; வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?”

என்று அவர் எழுப்பிய கேள்வி இந்தப் பட்டினத்தார் பாடலைப் பார்த்துதான்.
பட்டினத்தார் பாடலை வாசிக்க மறந்தவர்கள் கண்ணதாசனின் இந்தப்
பாடலைக் கேட்க மறந்திருக்க மாட்டார்கள்.

இதுபோலவே பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணத்தைப் படிக்கத்
தயங்குபவர்களுக்கு அதன் சுருக்கமாகப் பின்வரும் திரைப்படப் பாடலையும்
கவியரசு பாடியுள்ளார்.

“எந்த ஊர் என்பவனே !
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?
மேலூரில் வாழ்ந்திருந்தேன்
,,,,,,,,,,,,,,,,,,”

இசையுடன் பாடும்போது எந்தப் பாடலும் ரசனைக்குரியதாகி
விடுகிறதல்லவா?

இதோ பட்டினத்தார் பாடலையும் ஒருமுறை பாட வேண்டாம்;
படித்துத்தான் பாருங்களேன்.

“ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து ஊறுசுரோணிதம்
மீதுகலந்து
பனியில் ஓர்பாதி சிறிதுளிமாது பண்டியல் வந்து
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,”
Read more ...

சிவவாக்கியர் பாடல்

Monday, June 27, 2011
சித்தர் பாடல்கள்

பெரிய ஞானக்கோவை

1. சிவவாக்கியர் பாடல்

சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை
தரப்படுவதுண்டு, காரணம், இவர் பாடல்களில் வழக்கமான சித்தர்
கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன்
புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும்
கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில்
நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின் பாடல்
கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி இவர் முதலில் நாத்திகராக
இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக
மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.

சிவவாக்கியரின் பாடல்களும் திருமழிசை ஆழ்வார் பாடல்களும்
சந்தத்தில் மட்டுமே ஓரளவு ஒத்துப் போவதாலும் இவர் பாடல் சாயலில்
ஏனைய சித்தர்பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

விக்கிரக ஆராதனை

சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப்
படுகின்றது.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த
உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள்
இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வ
மென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது
அறியாமையே யாகும் என்கிறார்.
“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”

நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல்
மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண
என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன
பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர்
தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில்
நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?

அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும்
அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது
போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற
மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை
கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே
என்கிறார்.

கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும்,
அவைகளுக்குத் தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று
தொட்டு நடந்து வருபவை. இவைகளையெல்லாம் மூடப்பழக்கங்கள்
என்று சாடுவதென்றால் எவ்வளவு துணிவு வேண்டும்? புனிதமான
அடிப்படைக் கொள்கையையே ஆட்டிப் பார்ப்பதென்றால் அதனை
அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?

இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம்
தேவைப்படுகின்றது.

ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள்
கொண்டுவர, நல்வழிப்படுத்த உருவ வழிபாடு தேவைப்படுகின்றது.
சட்டத்துக்கும், சான்றோர் உரைகளுக்கும் கட்டுப்படாத சிந்தைத்
தெளிவில்லாத மனிதர்களுக்கு, ஒரு வடிவத்தைக் காட்டி இதுதான்
கடவுள், இவர் உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை
தரக் காத்திருக்கின்றார். ஆகவே தவறு செய்யாதே என்று கண்டிப்
போமானால் அந்தக் கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்
கடவுள் கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்;
கடவுளின் கட்டளை என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்
படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்
பயனாகிறது. பலரை நல்வழிப்படுத்த உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு
தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.

ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
உருவ வழிபாடு ஒரு மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம்
ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில்
இருப்பதாகவும், மண்ணில் இருப்பதாகவும், மரத்தில் இருப்பதாகவும்,
உருவமைத்துக் காட்டுவது கடவுளையே அவமதிப்பதாகும் என்று
வாதிடுகின்றனர்.

சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற
மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து,
அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே

கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான
பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ
பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம்
இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி
யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்து அழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தாம்
படைத்த பொருளை அறியாமல் வைத்திருக்கவும் காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது. உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.

இதில் எங்கும் நிறைந்த கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது தவறு என்றும், அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.

உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?

“ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

ஊரிலே வாழும் பெரிய மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள
கருத்து வேற்றுமைகளைக் களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை
அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை
இழுக்கிறீர்கள். ஒரு சிறிய உருவத்திற்கு இவ்வளவு பெரிய தேரா?
நூற்றுக்கணக்கான மக்கள் உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி
இருப்பது அறிவுடையமையாகுமா? இதனால் எவ்வளவு பொருள் விரயம்?
எவ்வளவு நேரம் வீணாகிறது?


யாருக்கும் புலனாகாத கடவுள் அறிவின் வடிவானவர். அவரே
ஆதிசித்தநாதர், அவரை சித்தத்தினால் மட்டுமே அறிதல் கூடும். அப்படி
யிருக்கையில் அவரை வழிபட என்னவெல்லாமோ செய்கிறீர்களே! தேராம்,
திருவிழாவாம், கொட்டாம், முழக்காம் - இவையெல்லாம் வெறும் புரளி.
அறிவற்றவர் செய்யும் புரளி. இதனை அறிவுடைய மக்களே ஏற்றுக்
கொள்ளுங்கள் என்று அழைக்கிறார்.

ஆனால் அவரது கொள்கையை இவ்வுலக மக்கள் ஏற்றுக்
கொண்டார்களா என்பதுதான் விளங்காத புதிர்.

மூடப்பழக்கங்களைச் சாடுதல்

சமுதாயத்தில் புரையோடி விட்டிருக்கும் மூடப் பழக்கங்களைச் சாடும்
வித்தியாசமான சித்தராக சிவவாக்கியர் காட்சி தருகின்றார். ஆசார,
அனுஷ்டானங்களைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று தேவையற்ற மூடப்
பழக்கங்களில் மூழ்கித் தவிக்கும் மூடர்களைக் கரையேறி உய்யுமாறு
சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார்.

“பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37)

என்று உண்மை பூசை பற்றியும்,

“வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே”

என்று எச்சில் படாமல் பூசை செய்ய வேண்டும் என்று மடிசாமிதனமாகப்
பேசும் அறிவிலிக்கு எச்சிலைப் பற்றி விளக்கம் தருகின்றார்.



வாயினால் ஓதப்படுவதால் வேதத்திலுள்ள மந்திரங்களும் எச்சில், பசு
மடியில் கன்று குடித்த பால் எச்சில், மாதிருந்த விந்து எச்சில், மதியுமெச்சி
லொளியுமெச்சில் மோதகங்களான தெச்சில் பூதலங்களேழும் எச்சில் எதில்
எச்சிலில்லை? என்று கேள்வி எழுப்புகின்றார்.

புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149)

என்று புலால் மறுத்தலை எள்ளி நகையாடுகின்றார். இன்னும்,

“மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)

“மாட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்” (160)

என்ற பாடலில் மாட்டிறைச்சி தின்பது பாவம் என்று அருவறுக்கும்
வேதியர்களே மாட்டிறைச்சிதான் உரமாக காய்கறிக்கிடுவதை அறிவீர்களா?
ஆட்டிறைச்சி தின்றதில்லை என்கிறீரே, உங்கள் யாக வேள்வியில் ஆகுதி
செய்யப் படுவதும், நெய்யாய் இடுவதும் எது என்பதை யோசிப் பீர்களாக
என்கிறார்.

சாதி வேற்றுமைகளைக் கடிதல்

சிவவாக்கியர் தம் பாடல்களில் சாதி வேற்றுமைகளை மிகவும்
ஆணித்தரமாகக் கண்டிக்கிறார்.

“சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே” (47)

என்று சாதி பேதம் பார்க்கின்றவர்களைப் பார்த்துக் கேட்கின்றார். அது
மட்டுமல்ல, மணமுடிக்க மணப் பெண்ணை குணம் பார்த்துதான் தேர்வு
செய்ய வேண்டுமே தவிர குலம் பார்த்தல்ல என்று இளைஞர்களையும்
கேட்டுக் கொள்கிறார்.

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே” (40)

கீழ் குலத்தைச் சேர்ந்த பறைச்சியும் மேல் குலத்தைச் சேர்ந்த
பார்ப்பனத்தியும் போகம் செய்யும்போது ஒரே சுகத்தைத்தான் அளிக்கிறார்கள்.
இதில் பறைச்சி என்ன? பாப்பாத்தி என்ன? இரண்டும் ஒன்றுதான். ஆகவே
சாதிபேதம் பார்க்காமல் இல்லறத்திற்கேற்ற பெண்ணை என்று தேர்வு செய்து
மணம் முடிப்பதே பெருமைக்குரியது என்று கூறியதுமல்லாது தாமே
இல்லறத்திற்கேற்ற குலப்பெண் ஒருத்தியை மணந்து வாழ்ந்து காட்டினார்.

சிவவாக்கியரின் புரட்சிக் கருத்துக்கள் ஜாதி மதத்தில் காணப்படுவதற்கு
இன்னுமொரு சான்றாக, இவர் சைவராயிருந்தும் வைணவக் கடவுளான
ராமரையும் தம் பாடல்களிலே புகழ்ந்து பாடியதுதுடன் இராம நாமத்தின்
பெருமையையும் பாங்குற எடுத்தியம்புகிறார்.

ராம! ராம! என்று செபித்துக் கொண்டிருந்தால் போதும்; வேறு எந்த
பூசையோ, சந்தி, ஜெப, தபங்களோ செய்ய வேண்டியதில்லை. எல்லா
நன்மைகளும், கிடைக்க வேண்டிய எல்லாப் பலன்களும் இராம நாம உச்சரிப்பில் கிடைத்து விடும்
என்று கூறுகின்றது சிவவாக்கியரின் பாடல்.

“அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே”

என்ற பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சிவவாக்கியர்.

அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய
தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார்.

சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள்,
செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், இராம நாம உச்சரிப்பில்
கிடைக்கும். உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் இராம நாமத்தால் மிகுந்த
வளர்ச்சி யடையும். இவ்வாறு இராம நாமத்தின் பெருமையை
எடுத்துரைக்கின்றார் சிவவாக்கியர்.

நன்மையும் செல்வமும் நாலும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்று இரண்டெழுத்தினால்

என்ற கம்பரின் தனிப்பாடல் கருத்து சிவவாக்கியரின் கருத்தோடு ஒத்து
விளங்குவதைக் காணலாம்.

வைணவத் தெய்வமான இராமனின் பெருமைமிகு மந்திரத்தைப்
போலவே சைவர்களின் தெய்வமான சிவபிரானின் சிவமந்திரமும் பெருமைக்
குரியது என்று சிவநாமப் பெருமையையும் தம் பாடலில் பேசுகின்றார்.

சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே

என்றும்,

அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே

என்று ஐந்து கோடி மந்திரங்களும் ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்தில்
அடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார்.

திருமூலரின் சில கருத்துக்களையும் சிவவாக்கியர் தம் பாடலில்
எடுத்துரைக்கின்றார்.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’

என்ற திருமூலர் கருத்தினை,

‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே”

என்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம்.

இறைவனை கோயில், பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டிய
தில்லை. நமது உள்ளமே இறைவன் உறையும் கோயில் இந்த உடம்பே
அவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

என்ற திருவள்ளுவரின் கருத்தையும் “மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்”

என்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.

ஒருவர் பலரிடத்தும் பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,
ஞானியாகவும் இருக்கலாம், யோகம் செய்து கொண்டும் இருக்கலாம்,
நாட்டைத் துறந்து காட்டிலே போய்க்கூட வாழலாம். ஆனால் உள்ளத்தில்
தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன
விரதங்கள் யாவும் பாழாய் முடியும். உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்
கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.

அப்படியானால் உண்மையான கடவுள்தான் யார்? என்ற வினாவுக்கு
அறிவுதான் இறைவன் என்று விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு
தான் இறைவன் என்றால் அறிவாளிகள் மட்டும்தான் இறைவனைத் தொழ
இயலுமோ? என்ற வினாவும் எழுகிறது. இல்லை பாமர மக்களும் தம்
அன்பினால் இறைவனைத் தரிசிக்கலாம் என்றும் இறைவன் எங்கும்
நிறைந்திருக்கிறான் என்ற கருத்தையும் சிவவாக்கியர் தம் பாடல்களில்
நிறைத்துக் காட்டுகின்றார்.
Read more ...

ஏழு பாசுரம்

Monday, June 27, 2011
முதல் பாசுரம்:

அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தங் காட்டித் தடைகாட்டி – உம்பர்
திவமென்னும் வாழ்வுக்குச் சேர்ந்தநெறி காட்டும்
அவனன்றோ ஆசாரியன்.

விளக்கம்:


இந்த பாசுரத்தால் ஆசாரியன் படியைப் பேசுகிறார். ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவோடே நவவிதசம்பந்தம் உள்ளன. பிதாபுத்திர பாவம், ரக்ஷ்ய ரக்ஷக பாவம், சேஷ சேஷி பாவம், பர்த்ரு பார்யா பாவம், ஜ்ஞாத்ரு ஜஞேய பாவம், ஸ்வத்ஸ்வாமி பாவம், ஆதார ஆதேய பாவம், சரீர ஆத்ம பாவம், போக்த்ரு போக்ய பாவம் என்கிற ஒன்பது விதமான சம்பந்தங்கள் திருமந்திரமானது காட்டும். அது மட்டும் இல்லாமல் நம: என்கிற பதத்தாலே மூன்று விரோதிகளான ஸ்வரூப விரோதி, உபாய விரோதி மற்றும் ப்ராப்யவிரோதி ஆகியவற்றையும், ப்ராப்யமான புருஷார்தத்தையும், ப்ராபகமான உபாயத்தையும் காட்டும். இதை நமக்குக் காட்டி உணர்த்துபவனே ஆசார்யன் என்று அருளிச்செய்கிறார்.

இரண்டாம் பாசுரம்:


அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிகக்கொடியர் நாம் சொன்னோம் – நஞ்சுதான்
ஊனை முடிக்கும் துயிர் முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை

பாசுர விளக்கம்:


அஞ்சு பொருள் என்ற சொல் அர்த்த பஞ்சகத்தைக் குறிக்கும். அர்த்த பஞ்சகமானது ச்வஸ்வரூபம், பரஸ்வரூபம், உபாயஸ்வரூபம், விரோதிஸ்வரூபம் மற்றும் உபேயஸ்வரூபம் ஆகியவை ஆகும். “மிக்க இறை நிலையும் மொய்யாம் உயிர்நிலையும் தக்கநெறியும் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும்” என்னும் திருவாய்மொழித்தனியனில் அர்த்தபஞ்சகம் இன்னவை என்று நிரூபிக்கப்பட்டிருகின்றமையை உணர வேணும் இங்கே. இப்படிப் பட்ட அஞ்சு பொருள்களை அளித்தவனான ஆசார்யன் பக்கலிலே அன்பு இல்லாதவர்கள் நஞ்சை விட மிககொடியவர்கள் என்கிறார். நஞ்சானது வெறும் தேக நாசத்தையே விளைவிக்கும், ஆனால் ஆசார்யன் பக்கல் அன்பில்லாமை ஆனது ஆத்மனாசத்தையே விளைவிக்கும் என்றது ஸ்ரீவசனபூஷணம். இதனையே இந்த பாசுரத்தால் உறுதி படுத்துகிறார்.

குறிப்பு: ஸ்ரீ வசனபூஷண சூத்ரம்: ” இவனுக்கு சரீராவசானத்தளவும் ஆச்சார்ய விஷயத்தில், ” என்னைத் தீ மனம் கெடுத்தாய்”, “மருவித் தொழும் மனமே தந்தாய்” என்று உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும்.

மூன்றாம் பாசுரம்:

பார்த்த குருவின் அளவில் பரிவின்றிச்
சீர்த்தமிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் – கார்த்தகடல்
மண்ணின்மேல் துன்புற்றும் அங்குமே தேங்காமல்
நண்ணுமே கீழா நரகு.

பாசுர விளக்கம்:

எத்தனை ஞான விகாசம் உடையவனாய் இருந்தாலும், விசேஷ கடாக்ஷம் செய்து அருளினவனான ஆசார்யன் இடத்தில் பரிவு இல்லையாகில் அதோகதியே என்று ச்திரமாகச் சொல்கிறார் இப்பாசுரத்தில். அதாவது சம்ஸ்க்ருத வேதாந்த ஞானம், திராவிட வேதாந்த ஞானம் மற்றும் ரஹஸ்யார்த்த ஞானம் இவற்றை அறிந்தவனாயினும், பார்த்த குருவின் அளவில் பரிவில்லையாகில் இந்த கடல் சூழ்ந்த மண்ணுலகில் அனுபவிக்கக்கூடிய க்லேசங்களை எல்லாம் அனுபவித்துக்கொண்டு நித்ய சம்சாரியாய்க் கிடந்து உழல நேரிடும் என்பதை” தேங்காமல் நண்ணுமே கீழா நரகு” என்பதனால் தெளிவு படுத்துகிறார் சுவாமி.

நான்காம் பாசுரம்:

தன்னை இறையைத் தடையைச் சரநெறியை
மன்னு பெருவாழ்வை ஒரு மந்திரத்தின் – இன்னருளால்
அஞ்சிலுங் கேடோட வளித்தவன் பாலன்பிலார்
நஞ்சிலும் கேடு என்றிருப்பன் நான்*

பாசுர விளக்கம்:

பிராப்யஸ்ய பிரம்மனோ ரூபம், ப்ராப்துச்ச்ச ப்ரத்யகாத்மந:, ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா, ப்ராப்தி விரோதிச என்கிற ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட அர்த்தபஞ்சகக் கிராமமே இங்கு விரிவாகக் கூறுகிறார். இந்த அர்த்தபஞ்சகமும் திரு அஷ்டாக்ஷர மகாமந்திரத்திலிருந்து ஆசார்யானாலே உபதேசிக்கப்படும். அதாவது பிரணவத்தில் மகாரத்தாலும், லுப்தசதுர்த்தியாலும், உகாரத்தாலும் ஸ்வஸ்வரூபம், அகாரத்தாலே பரஸ்வரூபம், நமஸ்சில் ம: என்பதாலே விரோதிஸ் ஸ்வரூபமும், நம: என்பதால் உபாயஸ் ஸ்வரூபமும், நாராயணாய என்பதனாலே உபேயஸ் ஸ்வரூபமும் ஆகும். ஆக அச்சர்யன் பக்கலிலே அன்பிலாதார் நஞ்சிலும் கேடு என்கிறார் இந்த பாசுரத்தில்.

ஐந்தாம் பாசுரம்:

என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வும்
என்பக்கல் நன்மை எனும் இயல்வும் – மன்பக்கல்
சேவிப்பார்க் கன்புடையோர் சன்ம நிருபனமும்
ஆவிக்கு நேரே அழுக்கு.

பாசுர விளக்கம்:

கீழ் பாசுரத்தால் சிஷ்யனுக்குண்டான குறைகளைப் பேசினார். இந்த பாசுரத்தில் ஆசாரியனுக்கு நேரக்கூடிய அவத்யத்தைப் பேசுகிறார். உபதேசிக்கும் ஆசார்யன் ஆனவன் உபதேச சமயத்திலே தன்னுடைய ஆசார்யனே இவனுக்கும் உபதேசகர்த்தா என்றும், தான் அவ்வாசார்யனுக்கு கரண பூதனாகவும் பிரதிபத்திப் பண்ணிக்கொண்டும் உபதேசிக்க வேண்டுமாம், அப்படிச் செய்யாது தன்னை இவனுக்கு ஆசார்யன் என்று நினைப்பது தவறு என்று முதல் அடியில் தெரிவிக்கிறார். மேலும் உபதேச பாத்ரபூதனானவனையும் தன்னைப் போல தன்னுடைய ஆசாரியனுக்கு சிஷ்யனாக பிரதிபத்திப் பண்ணிக்கொண்டு உபதேசிக்க வேண்டுமாம். அதைச் செய்யாமல் இவன் தனக்கு சிஷ்யன் என்று நினைப்பதும் தன்னிடத்தில் ஆசார்யத்வம் உள்ளது என்று நினைப்பதும் தவறு என்கிறார் அடுத்த அடியாலே. மகா பாகவதர்களிடத்தில் பகவத் சம்பந்த பிரயுக்தமான சிறப்பைப் பாராதே அவரவர்களுடைய ஜன்மங்களை நிரூபிக்கையாவது மகா அபசாரம் என்பதை அடுத்த அடியில் தெரிவிக்கிறார். இவை எல்லாம் ஆவிக்கு நேரே அழுக்கு என்றும் உறுதிபடுத்துகிறார் அடுத்த அடியில்.

இந்த பாசுரம் ஸ்ரீ வசனபூஷண சூத்ரம் (308, 194) க்கும் அர்த்தம் ஆகும்.

ஆறாம் பாசுரம்:

அழுக்கென்று இவை அறிந்தேன் எம்பொன் அரங்கா
ஒழித்தருளாய் உள்ளில் வினையைப் – பழிப்பிலா
என்னாரியர்காக எம்பெருமானார்க்காக
உன்னா ரருட்க்காக உற்று.

பாசுர விளக்கம்:

ஆவிக்கு அழுக்காகத் தெரிவிக்கப்பட்ட விஷயங்களைப் பலர் அழுக்கென்று அறிந்திருந்தும், பிரகிருதி வாசனையாலே இவ்வழுக்குகளில் சிக்கி நசிக்கிரார்களே என்று நினைத்து, அது தமக்கு நேராது இருக்க வேணும் என்று எம்பெருமான் திருவடிகளில் பிரார்த்தனை செய்கிறார் இப்பாட்டில். மேலும் அச்மதாசார்யரான பிள்ளை உலகாரியனுக்காகவும், உலகுக்கு ஓர் உயிரான சுவாமி எம்பெருமானாருக்காகவும் இத்திருவருளை அடியேனுக்கு அளிக்க வேணும் என்றும் பிரார்த்திக்கிறார்.

ஏழாம் பாசுரம்:

தீங்கேது மில்லாத தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவுடையோர் – ஓங்காரத்
தேரின்மேல் ஏறிச் செழுங்கதிரின் ஊடுபோய்
சாருவரே அந்தாமந் தான்.

பாசுர விளக்கம்:

தீங்கு ஏதும் இல்லாதவனும், மகா உபகாரகனுமான ஆசார்யனுடைய திருவுள்ளத்திற்கு அனுகூலமாகவும், அவருடைய திருமேனியைப் பேணிக்கொண்டு உண்மையான அன்புடையவர்களாகவும் இருப்பவர்களான சத்சிஷ்யர்கள் பெரும் பேற்றை இந்த பாசுரத்தால் விவரிக்கிறார்.

வையம் மன்னி வீற்றிருந்து என்று சொல்லும் படி, இருக்கும் நாட்களிலே உபயவேதாந்த காலக்ஷேப கோஷ்டியோடும், ததியாராதன ஸ்ரீயோடும், உகந்தருளின நிலங்களில் மங்களாசாசன ஸ்ரீயோடும், தத் கைங்கர்ய ஸ்ரீயோடும் சுவாமி எம்பெருமானாரைப் போல நெடும் காலம் வாழ்ந்திருந்து சரீராவசானத்தில் பரமபக்தி தலையெடுத்து, பிரணவமாகிற தேரின் மேல் ஏறி சாச்வதச்தானமாகிய திருநாடே கிடைக்கப் பெறுவார்களாம்.
Read more ...

திருமந்திரம்

Tuesday, June 21, 2011
திருமந்திரமும் , பிராணாயாமமும்
திருமந்திரம் என்னும் நூல் தமிழ் ஆகமம். ஆகமம் என்றால் வேதம் என்று பொருள். இந்த நூலை திருமூலர் என்னும் தவயோகி இயற்றியுள்ளார். மக்கள் வாழும் முறை மற்றும் கடவுளை காணும் முறையை அறிவியல் பூர்வமாக இயற்றியுள்ளார். திருமூலர் அஷ்டமா சித்திகள் பெற்ற தவயோகி ஆவார். அவர் இந்த நூலில் மக்கள் நூறு வயது முதல் மூவாயிரம் வருடம் வரை உயிருடன் வாழும் வழிகளை கூறியுள்ளார்.
மந்திரம் :
மூலன் உறை செய்த மூவாயிரம் தமிழ்.
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.
பொருள் :
திருமூலர் ஆகிய நான் உலக மக்களின் நன்மைக்காக மூவாயிரம் மந்திரங்களை (பாட்டு) கடவுள் அருளால் இயற்றியுள்ளேன். காலையில் எழுந்து கருத்தை அறிந்து படித்தால் கடவுளை அடையலாம்.
ஒவ்வொரு தமிழனின் வீடுகளிலும் திருமூலரின் புத்தகங்கள் இருப்பது அவசியம். திருமூலர் உடம்பை வளர்க்கும் மற்றும் அறிவை வளர்க்கும் முறைகளை பற்றி எழுதியுள்ளார். திருமூலரின் வரலாற்றை கூறிய பின் அவருடைய மந்திரங்களையும் அவற்றின் பொருளையும் கூறுவேன்.
திருமூலரின்வரலாறு :
திருமூலரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவர் மூலர் என்னும் உடலில் தங்கியதால் அப்பெயர் அவருக்கு வந்தது. தவயோகி ஒருமுறை காட்டு வழியாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டமாக மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் மிரட்சியுடன் நிற்பதை கண்டார். உடனே அருகில் சென்று பார்த்தார். அங்கே மாடு மேய்ப்பவன் இறந்துக் கிடந்தான். மாடுகள் கவலைப் படுவதைக் கண்டு மனமிறங்கினார் தவயோகி. உடனே மறைவான இடத்துக்கு சென்று தன்னுடைய அஷ்டமா சித்திகளை பயன்படுத்திக் கூடுவிட்டு கூடுபாயும் முறையில் தன் உயிரை மாடு மேய்ப்பவன் உடலில் செலுத்தினார். மாடு மேய்ப்பவன் உயிருடன் வந்தவுடன் மாடுகள் உற்சாகமாயின. மாலை பொழுது சாய்ந்தவுடன் மாடுகள் வீடு திரும்பின. மாடு மேய்ப்பவனும் பின்னே சென்றான். வீடு வந்தவுடன் மாடு மேய்ப்பவன் திரும்பினான். உடனே அவனுடைய மனைவி கையை பிடித்து இழுத்தாள். வீட்டுக்குள் வராமல் எங்கே செல்கிறீர்கள் என்றுக் கேட்டாள். உடனே மாடு மேய்ப்பவன் நான் உன் கணவன் இல்லை என்றுக் கூறினான். மாடு மேய்ப்பவனின் மனைவி நியாயம் கேட்பதற்காக ஊர் மக்களை அழைத்து வந்தாள். அங்கு மாடு மேய்ப்பவன் மண்டபத்தில் தவம் செய்துக் கொண்டிருப்பதைக் கண்டு இவன் உன் கணவன் இல்லை என்றுக் கூறினர். உடனே தவயோகி தன் உடலை மறைவாக வைத்திருந்த இடத்துக்குச் சென்றார். அங்கு அவருடைய உடலை காணவில்லை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. உடனே அவர் கடவுள் நமக்கு புதிய உடலைக் கொடுத்திருக்கிறார் என்று அந்த மாடு மேய்ப்பவனின் உடலில் தங்கிவிட்டார். திருமூலர் காட்டிற்குள் அமர்ந்து இன்னும் இறக்காமல் தவம் செய்துக் கொண்டிருக்கிறார்.
முன்னுரை :
நான் திருமந்திரத்தில் இருந்து மனிதனின் உடலை எப்படி வளர்ப்பது என்பதனை பற்றி முக்கியமாகக் கூறுகிறேன்.
மந்திரம் :
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
பொருள் :
உடம்பு அழிந்தால் உயிர் அழிந்து விடும். உடம்பில் நோய் இருந்தால் தெளிவாக சிந்திக்க முடியாது. ஏதாவது வேலையை ஏற்றுக் கொண்டால் சரிவர செய்ய இயலாது. ஆகவே உடம்பை வளர்க்கும் முறையை அறிந்துக் கொண்ட நான் உடம்பை சரியாகப் பேணி பாதுகாத்து உயிரையும் வளர்க்கிறேன்.
மந்திரம் :
உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புக்கின் றேனே.
பொருள் :
இதற்கு முன்பு உடல் தேவையற்றது என்று நினைத்திருந்தேன்.உடம்பிலே உயிராகிய கடவுள் இருப்பதைக் கண்டேன். ஆகவே உடலை இப்போது பேணிப் பாதுக்காத்து வருகின்றேன்
Read more ...

நாத்திகத்தன்மை

Tuesday, June 21, 2011
சித்தர் இலக்கியம் சீர்திருத்தம் பேசினாலும் நாத்திகத்தன்மை யுடையதன்று சித்தர்கள் இறைப்பற்று மிகவும் உடையவர்கள். தஹ்நெறி, அட்டாங்கயோகம் முதலியவை கடினமாகத் தோன்றினாலும் அவர்கள் எடுத்துரைக்கும் நெறி சிறந்ததாகும். சயை, கியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறியினையும் சித்தர்கள் பின்பற்றியுள்ளனர். சமயப்பொது நோக்கு, சாதி வேறுபாடின்மை. மூடப் பழக்க வழக்கங்களைச் சாடுதல் முதலானவை அவர்தம் பாடல்களில் காணப்பெறும் சீர்திருத்தங்களாகும்.



கோயிலாவது ஏதுடா? குளங்களாவது ஏதுடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லை, இல்லை இல்லையே (சிவவாக்கியர், 34)


சாதி பேதங்கள் சொல்லுகிறீர், தெய்வம்

தானென் றொருஉடல் பேதமுண்டா?

ஓதிய பாலதில் ஒன்றாகி யதிலே

உற்பத்தி நெய்தயிர் மோராச்சு (கொங்கணர் 95)


திருமூலர் பிற சித்தரைப்போல உடம்பை இழித்துக் கூறவில்லை. மாந்தர் உடம்பே இறைவனைக் காண அடிப்படையாக இருத்தலின் அதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.



உடம்பார் அழியில் உயிரார் அழிவர்;

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்;

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த் தேனே (724)



உடம்பினை முன்னம் இழுக்கென றிருந்தேன்;

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்;

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று

உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே (725)



உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்;

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;

தௌ;ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்;

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே; (1823)



மனிதனுக்கு அவனது உடம்பைக் கொண்டு செய்ய வேண்டிய ஞானச் செயலைக் கற்பிக்கும் அனுபவப் பேரறிவுப் பெருநூல் சித்தர் இலக்கியம் எனச் சிறப்பித்துப் பாராட்டுவர் மீ.ப. சோமு. மேலும் அவ்விலக்கியங்கள் அறக்கருத்துக்களை வலியுறுத்தும் என்றும் மனமாசின்றிக் காக்கவும் தீமைகளை நீக்கி நன்மைகைளைச் செய்யவும் பல அறச் செய்திகளைக் கூறுகின்றன என்றும் மனிதனை மனிதனாக்குவதற்கு வேண்டிய மனப் பயிற்சி தந்து அவனை மனிதனாக்கிப் பின் வானவராக உயர்த்தும்உயய நோக்கங்கள் கொண்டவை என்றும் விளக்கியுரைத்துள்ளார்.



சித்தர்கள் வெளியில் சென்று கோயில் வழிபாடு செய்ய விரும்புவதில்லை. புறச் சடங்குகளையும் அவர்கள் ஏற்பதில்லை. மனக் கோயில் வழிபாடே அவர்கட்கு முதன்மையானதாகும். யோகமுறை மூச்சடக்கிப் பயிற்சி செய்தல் ஆகியவற்றையே அவர்தம் நூல்கள் வித்துரைக்கின்றன. மன்பதைக்கு வேண்டிய சீர்திருத்தக் கருத்துக்களும் அவர்களுடைய பாடல்களில் மிகுதியாக உள்ளன.
Read more ...

திருமூலர்

Tuesday, June 21, 2011
திருமூலர் சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமான் மற்றும் நந்தீசரிடம் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் தெரிந்தவர். திருமூலருக்கு அகத்தியர் மீது அதிக அன்பு மற்றும் மரியாதை உண்டு, எனவே அகத்தியரை சந்தித்து சிலகாலம் அவருடன் தங்குவதற்கு விரும்பினார், தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை நோக்கிச் சென்றார்.

போகும் வழியில் பசுபதி, திக்கேதாரம், காசி, நேபாளம் , விந்தமலை, த்ருவாலங்காடு, திருப்பருப்பதம், திருக்காளத்தி, காஞ்சி ஆகிய திரு-தலங்களை தரிசித்து ஆங்கே இருந்த சிவயோகிகளை கண்டு அளவளாவி மகிழ்ந்தார்,

தில்லையில் இறைவனின் அற்புத திருக்கூத்தாடியருளும் திருநடனத்தை கண்டு மகிழ்ந்தார், திருவாவடுதுறையில் இறைவனை வழிபட்டு சென்றபோது காவிரி கரையில் பசு கூட்டங்கள் கதறி அழுவதனை கண்டார்.

மூலன் என்பவர் தினமும் அங்கு வந்து பசுக்களை மேய்ப்பார். அவர் தன் விதி முடிந்த காரணத்தினால் உயிர் நீங்கி இறந்து கிடந்தார். மூலன் இறந்ததை கண்ட பசுக்கள் அவரது உடம்பினை சுற்றி சுற்றி வந்து வருந்தி கதறி கண்ணீர் விட்டன.

பசுக்களின் துன்பம் கண்ட திருமூலர் அவற்றின் துயரை துடைக்க எண்ணினார், எனவே தன்னுடைய உடம்பை மறைவான இடத்தில் வைத்துவிட்டு பரகாயப் பிரவேசம் (கூடு விட்டு கூடுபாய்தல்) என்னும் பவன முறையினால் தனது உயிரை மூலன் உடம்பினுள் புகுமாறு செலுத்தி திருமூலராய் எழுந்தார்.

மூலன் உயிருடன் எழுந்ததை கண்ட பசுக்கள் மகிழ்ந்தன மூலனின் உடலினை மோந்து, நக்கி, களிப்போடு துள்ளி குதித்தன. மனம் மகிழ்ந்த திருமூலர் பசுக்களை மிகவும் நன்றாக மேய்த்தார். வயிரார மேய்ந்த அந்த பசுக்கள் தங்களது ஊரை நோக்கி நடந்தன.

அவற்றை பின் தொடர்ந்து சென்ற திருமூலர் பசுக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றதை கண்டு மகிழ்ந்தார். அப்பொழுது வீட்டில் இருந்து வெளியே வந்த மூலனினுடைய மனைவி, மூலன் வடிவிலிருந்த திருமூலரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்ல என்றும், மூலன் இறந்துவிட்டான் எனவும் கூறினார். இதை நம்பாத அவள் அவ்வூர் பெரியவர்களிடம் முறையிட்டால், திருமூலர் தான் ஏற்றிருந்த மூலனின் உடலில் இருந்து விலகி தான் ஒரு சிவயோகியார் என்பதனை நிருபித்தார். பிறகு மறுபடியும் மூலனின் உடலில் புகுந்தார். இதனை கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியை தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

அவர்களிடம் இருந்து விடைபெட்ற்ற திருமூலர் தனது உடலை தேடி சென்றார், அனால் எங்கு தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை.

மூலனின் உடம்பிலேயே தங்கி திருவாடுதுறை திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை-விளக்கும் ‘திருமந்திரம்’ என்ற நூலை ஓராண்டுக்கு ஒரு-பாடலாக மூவாயிரம் பாடல்களை பாடியருளினார்.

திருமுலருக்கு 16 சீடர்கள் உண்டு, இவர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலை சித்தரும் குறிப்பிடத்தக்கவர்கள் . பாண்டிய மன்னன் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராக கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தனர்.

இவரது வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் பெரியபுராணத்தில் விரிவாக கூறியுள்ளார்,
Read more ...