திருமந்திரம்

Wednesday, March 23, 2011
திருமந்திரம்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே



இந்த உடம்பை அழிந்து விட்டால் உயிரும் அழிந்துபோகும். அதன் பிறகு ஞானத்தை உணர்வதெங்கே? அதனோடு சேர்வதெங்கே? அதனால் அரிதாகக் கிடைத்த இம் மானிடப் பிறவி வீணாகிப் போகுமன்றோ? அதனால் இந்த உடம்பை வளர்ப்பதற்காக உபாயங்களை அறிந்து பேணிப் பாதுகாக்கத் தொடங்கினேன். உடம்பைக் காப்பாற்றிக் கொண்டதன் முலம்தான் உயிரையும் காப்பாற்றிக் கொண்டேன் என்கிறார் திருமுலர்.

அழியக்கூடியது உடல் மட்டுமே. உயிர் அல்ல. ஆன்மாவுக்கு அழிவில்லை என்று சமயங்கள் கூறுகின்றனவே. கண்ணபிரான் கீதையில் இதைதானே அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார். திருமுலர் உயிர் அழிந்துவிடும் என்று கூறியுள்ளது முரண்பாடல்லவா? என்று கேட்கலாம்.

உடல் இருந்தாலே உயிர் இயங்க முடியும். ஆன்ம விடுதலைக்காக உழைக்க முடியும். உடல் போய்விட்டால் அதன் பிறகு உயிருக்குச் செயல்பாட்டுத் திறன் ஏது? இந்த உண்மையையே ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறார் திருமுலர்.

பிற சமயத்தவர்கள் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். அப்போதுதான் மெய்ஞ்ஞான நெறியில் செல்ல முடியும் என்று கூறுகின்றனர்.

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை


அடக்கடக் கென்பர் என்ற சொல் நயம் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும் அடக்க வேண்டும் என்று மற்றவர்கள் திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கூறந் தன்மையை அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் அறிவில்லாதவர்கள் என்கிறார்.

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்.
அவர்களை ஏன் அறிவில்லாதவர்கள் என்று கூறுகிறேன் என்றால்

அஞ்சும் அடக்கம் அமரரும் அங்கிலை.
ஐம்புலன்களை அடக்கியவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நீங்கள் கூறும் தேவலோகத்திலும் இல்லை. கடவுளின் முன்று உலகங்களிலும் இல்லை. பின் எதற்காக அப்பாவி மனிதனை மட்டும் அஞசும் அடக்கு அடக்கு என்று கூறுகிறீர்கள்?

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கி அசேதன மாமென்றிட்
டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே!

அஞ்சும் அடக்கினால் ஓரறிவும் இல்லாத சடப் பொருளாகி விடுவாய். (அசேதனம் = அறிவின்மை) அதனால் அஞ்சும் அடக்குவதால் பயனில்லை. அவற்றோடு கூடியிருந்தே வாழ்க்கைப் பயனை அடைய வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன் என்கிறார் திருமுலர் பிரான்.

வாழ்க்கைகு ஏற்ற தத்துவம்! மனிதன் நெறிப்படி நடந்து மற்ற அறங்களையும் கடைப்பிடித்து வந்தால் அவன் அடைய வேண்டிய நற்பயனை அடைந்து விடமுடியும் என்பதே சித்தர் நெறி.

உடலைப் பேண வேண்டும். பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த உடம்புக்குள்ளேதான் இறைவன் இருக்கிறான். அவனை அறிந்து கொள்ள முற்பட வேண்டும்.

தானென்ற வஸ்துவையும் தவிர வேறே
சாதகந்தான் இல்லை யென்று சஞ்சலித்து
பானென்ற சத்தியமாம் வாக்குக் காயம்
பத்தியுடன் சுத்தமதாய்ப் பதிவாய் நின்று
ஆனென்றே இருக்கிறதை ஆத்திக மென்பார்
அன்னாதார சரீரத்தைச் சுலப மாக்க
கோனென்று நிதானித்துப் பின்னை யொன்று
கூறாதே சூத்தரம் என்று சொல்லே.


அகஸ்தியர் வாத சௌமியம்

இந்த உடல் இருக்கிறதே இது அன்னத்தையே ஆதாரமாகக் கொண்டது. உணவு இல்லையென்றால் உடலும் இல்லை. அதனால் உண்டு உடலைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளத்தை ஒருமுகப் படுத்தி உடம்பாலும் உரையாலும் உண்மை நெறி தவறாமல் சுத்தமாய்ப் பதிவாய் நிற்பதே ஆத்திகம் என்று கூறுகிறார் அகத்திய மாமுனிவர்.

No comments:

Post a Comment