நந்திக்கலம்பகம்

Tuesday, November 23, 2010
கவிதைச் சுவை


நந்திக் கலம்பகம் சொற்சுவையும் பொருட்சுவையும் கற்பனை வளமும் மிக்கது. ‘ஊசல்’, மகளிர் மன்னனின் சிறப்பைப் பாடி ஊஞ்சல் ஆடுவது பற்றிய ஓர் உறுப்பு. அதில் இடம்பெற்றுள்ள பாடல் நந்திக் கலம்பகத்தின் கவிதைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.


ஓடரிக்கண் மடநல்லீர்! ஆடாமோ ஊசல்

உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்

ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்

அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்

கூடலர்க்குத் தௌ¢ளாற்றில் விண்ணருளிச் செய்த

கோமுற்றப் படைநந்தி குவலய மார்த்தாண்டன்

காடவர்க்கு முன்தோன்றல் கைவேலைப்பாடிக்

காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்.

(பாடல், 29)


குருக்கோட்டையை நந்திவர்மன் வென்ற புறப்பொருளையும், அவன் மீது காதல் கொண்ட பெண் அவனது உலாவைப்பற்றிக் கூறும் புறப்பொருளையும் இணைத்துப் பாடிய பாடலைப் பாருங்கள்.


எனதே கலை வளையும் என்னதே; மன்னர்
சினவேறு செந்தனிக்கோன் நந்தி - இனவேழம்
கோமறுகிற் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகிற் போகாப் பொழுது.

(பாடல், 2)


நந்தி பவனி வரும்போது அவனைப் பார்த்து ஏங்கும் பெண்ணின் மேகலையும் வளையும் அவள் மெலிவால் நெகிழ்ந்துவிடுகின்றன. அவன் பவனிவராத பொழுதுதான் அந்த அணிகள் அவளுக்குரியவையாக இருக்கின்றன என நயமாகப் பாடுகிறார் கவிஞர்.


நந்தியைப் பிரிந்து தவிக்கும் காதற்பெண்ணின் உருக்கத்தைக் கீழ்க்காணும் பாடலில் காணலாம்.


மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியும் காலம்

மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம்

கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம்

கோகனக நகைமுல்லை முகைநகைக்கும் காலம்

செங்கை முகில் அனையகொடைச் செம்பொன்பெய் ஏகத்

தியாகியெனும் நந்தியருள் சேராத காலம்

அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம்

அவரொருவர் நாமொருவர் ஆனமழைக் காலம்.

(நந்திக்கலம்பகம், தனிப்பாடல், 11)


பிரிந்து சென்ற ஒரு தலைவன் தலைவியிடம் விரைந்து திரும்புகிறான். தேர் ஓடுவதாக அவனுக்குத் தெரியவில்லை. மனம் அவ்வளவு விரைகிறது. உயிரோ தலைவியிடம் முன்னமே சென்றுவிட்டது. ‘தேரில் வெறும் கூடுதான் வருகிறது’ என்று மேகத்திடம் சொல்லியனுப்புகிறான்.


ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில்வெறும்
கூடுவருகு தென்று கூறுங்கோள் - நாடியே
நந்திசீ ராமனுடைய நன்னகரில் நன்னுதலைச்
சந்திச்சீ ராமாகில் தான்.

(நந்திக்கலம்பகம், தனிப்பாடல், 17)

நந்திவர்மனின் வீரத்தை மகட்கொடை மறுக்கும் மறவன் ஒருவனின் கூற்றில் வெளிப்படுத்துவதைப் பாருங்கள்


அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன் அசைந்தேன்
என்றோ வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா!
செம்பொன்செய் மணிமாடத் தௌ¢ளாற்றின் நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்(பு) ஒன்றோ நம்குடிலின் குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே.

(நந்திக்கலம்பகம், 77)


‘தூதனே! கையிலிருப்பது ஓர் அம்புதான். வில் ஒடிந்ததுதான். அதன் நாணும் அறுந்துவிட்டதுதான். நான் வயதானவன் தான். இப்படி எண்ணித்தானே என் மகளை மணம்பேசிவர மன்னன் உன்னை அனுப்பினான். என் குடிலைச் சுற்றிப்பார். குடிலின் குறுங்காலும் நீண்ட வளைமரமும் நந்தியின் பகை அரசர்களின் யானைக் கொம்புகள் அல்லவா? பார்.’


இவற்றைப் போன்ற பல பாடல்கள் நந்திக் கலம்பகத்தின் இலக்கியச் சிறப்பினை எடுத்தியம்புவனவாக உள்ளன.

No comments:

Post a Comment