தேவாரம்

Friday, October 29, 2010
தேவாரம்


பல்லவர் காலத்தில் எழுந்த பக்திப் பாடல்களில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடியனவே பெரும்பான்மை. மூவர் பாடிய பாடல்களை இனிமை கருதித் ‘தேவாரம்’ என்பர். பல்லவர் காலத்தைத் தேவார காலம் என்றே குறிப்பிடுவர். முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகின்றன.


முதல் மூன்று திருமுறைகள் (சம்பந்தர் பதிகங்கள்)



முதல் மூன்று திருமுறைகளையும் பாடியவர் திருஞானசம்பந்தர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் வாழ்ந்தவர் இவர். இவரது பெற்றோர்கள் சீகாழியைச் சார்ந்த சிவபாத இருதயரும் பகவதியாரும். தமிழ்நாட்டுத் தலங்களுக்குத் தொண்டர்களுடன் பலமுறை பயணம் மேற்கொண்டு அவற்றைப் பாடியவர் ஞானசம்பந்தர். பாமரர் நடுவே பக்தியைப் பரப்பிய சிறப்பு இவருக்குண்டு. இவர் பாடியவை 16000 பாடல்கள் என்பர். கிடைத்தவை 4158 பாடல்களே (384 பதிகங்கள்).


தமிழகத்தில் பரவியிருந்த சமண பௌத்த சமயங்களை ஒடுக்குவதில் முனைந்து செயல்பட்டமையால் இவருக்குப் ‘பரசமய கோளரி’ என்ற பட்டப்பெயர் உண்டு. மதுரையில் சமணரையும் போதிமங்கையில் பௌத்தரையும் வாதத்தில் வென்றவர். பாண்டியன் நின்றசீர் நெடுமாறனைச் சமணத்தினின்றும் மாற்றிச் சைவத்தில் சேர்த்துத் தென்தமிழகத்தில் சைவம் தழைக்க இவர் காரணமானார்.


ஆடல் பாடல் ஆகிய கலைகளை வழிபாட்டிற்குரியவைகளாக ஆக்கியவர் திருஞானசம்பந்தர். பல பாடல்களில் அந்த அந்த ஊர்க் கோயில்களைப் பாடும் பாடல்களில் கோயில்களைச் சூழ்ந்த இயற்கை அழகை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.


இவரது பதிகங்கள் பெரும்பான்மையும் 11 பாடல்களைக் கொண்டவை. இவரது பாடல்களில் ஓர் அமைப்பு ஒழுங்கு இருப்பதைச் சேக்கிழார் உணர்த்துகிறார். ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாடலில் இராவணன் கைலை மலையைத் தூக்கி எடுக்க முயன்று துன்பப்பட்டதைப் பற்றியும் சிவபக்தன் ஆனதைப் பற்றியும் பாடுகிறார் என்பதாகும். பிழையை உணர்ந்து வருந்தி முறையிடும் அன்பர்களை இறைவன் பாதுகாப்பான் என்பதை இது உணர்த்துகிறது. ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணமுடியாத பெருமை உடையவன் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். பத்தாம் பாடலில் சமண பௌத்தத் துறவிகளின் போலி வாழ்க்கையை எள்ளியும் கடிந்தும் கூறுகிறார். இராவணன் போன்ற பேரரசனே சிவனுக்கு அடங்கியவன் என்று உணர்த்த வேண்டிய தேவை அக்காலத்தில் இருந்திருக்கலாம். அக்கால அரசர்களுக்கு இதை உணர்த்துவதற்காகப் பாடியிருக்கலாம். மற்ற கடவுளரைவிடச் சிவனே உயர்ந்தவன் என்பது சைவ நெறி பரப்புவதே எனலாம். சமண பௌத்தத்தைத் தாழ்த்துவது சைவத்தை நிலைநாட்டுதற்கே எனலாம். இவ்வாறு சம்பந்தர் திட்டமிட்டு இவ்வமைப்பில் பாடியிருக்கிறார் என்று தோன்றுகிறது. பதினொன்றாம் பாடல் பதிகப்பயனையும் சம்பந்தரின் திறனையும் பெருமிதத்ததுடன் குறிப்பிடுகிறது. சேக்கிழார் இதனை திருக்கடைக்காப்பு என்கிறார். இப்பெயர் இவரது மூன்று திருமுறைகளுக்கும் வழங்குகிறது.


இறைவன் பெண் ஒரு பாகமாய் இருக்கும் கோலத்தைச் சுட்டிக்காட்டி, இந்த உலகத்தில் நல்லமுறையில் வாழ முடியும் என்ற ஆர்வத்தை ஊட்டி, பிறகு நல்ல நிலையை அடையலாம் என்பதைக் கீழ்க்குறிப்பிடும் பாடலில் வெளியிடுகிறார் திருஞானசம்பந்தர்.


மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின் நல்லகதிக்கு யாதுமோர்குறைவிலை
கண்ணின் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.


(சம்பந்தர் தேவாரம் 3052)


இப்பாடல் சைவர்களின் திருமணங்களின்போது, மகிழ்ச்சியுடன் ஓதப்படுகின்றது. இவரது பாடல்கள் இசையோடு பாடுவதற்கு ஏற்ற வகையில் பண் வகுக்கப்பட்டவை என்று பார்த்தோம்¢. இவரோடு சென்று பண்ணிசைத்து யாழ் வாசித்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர்.


தமிழ்ப் பாவினங்களின் வளர்ச்சிக்குச் சம்பந்தர் பாடல்கள் பெரிதும் உதவியுள்ளன. மொழிமாற்று, மாலைமாற்று, வழிமொழி, மடக்கு, யமகம், ஏகபாதம், தமிழ் இருக்குக்குறள், எழுகூற்றிருக்கை, ஈரடி, ஈரடி மேல்வைப்பு, நாலடி மேல்வைப்பு, முடுகியல், சக்கரமாற்று, கோமூத்திரி எனப்படும் சித்திரகவி வகைகளை மூல இலக்கியமாகத் தந்துள்ளார்.


சம்பந்தருடைய பாடல்களில் பெரும்பாலும் இரண்டு அடிகள் இயற்கையைப் பற்றியனவாக இருக்கும். அவருக்கு இயற்கை ஈடுபாடு இருந்ததை இது உணர்த்துகிறது. அந்த இரண்டு அடிகளில், அவர் பாடும் தலத்திற்குரிய இயற்கை அழகைப் பாடுகிறார். இதனால் அத்தலம் சார்ந்த மக்களை அவர் கவர முடிந்தது. திருமுதுகுன்றம், திருவையாறு, திருவீழிமிழலை முதலான தலங்களை இவ்வாறு அவர் கற்பனை நயத்தோடு பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


சங்க அகத்திணை மரபினையொட்டித் தம்மைத் தலைவியாகவும் தோணிபுரத்து ஈசனைத் தலைவனாகவும் பாவித்துப் பாடிய பாடல்கள் கடவுள் காதலை உணர்த்துவன. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான சைவர்களும் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் முதலான வைணவர்களும் நாயக-நாயகி நெறியில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


சம்பந்தரின் பதிகங்களில் கோளறு பதிகம், நமச்சிவாயத் திருப்பதிகம், திருவைந்தெழுத்துப் பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநெடுங்களப் பதிகம் என்பன சைவர்களால் நாள்தோறும் ஓதப்படும் சிறப்புடையன.

No comments:

Post a Comment