நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்


1. பக்க விளைவுகள் இல்லாதது.

2. எளிய முறையில் அமைவது.

3. அதிகப் பொருட் செலவில்லாதது.

4. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு குணம் தரக்கூடியது.

5. அனுபவ முறையில் பெறப்படுவது.

6. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது.

7. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது.

8. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்பகட்டத்திலேயே
தடுப்பு முயற்சிகள் செய்து கொள்ள ஏதுவாகிறது.

9. நாட்டுமருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை; பாமரரும் பின்பற்றலாம்.

10. பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக்
கண்டறிவது மிக எளிதாகின்றது.

11. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக
அமைந்துள்ளது.

12. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம்
சிறப்பானதாக ஆகின்றது.


நாட்டுப்புற மருத்துவ ஆய்வுகள்


ஓ.பி ஜாகி (O.P. Jaggi) என்பவர் 1973-இல் நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine) என்னும் நூலை எழுதியுள்ளார். இதில் இந்திய நாட்டுப்புற மருத்துவக் முறைகள் பற்றிய விளக்கம் உள்ளது. 1956 - இல் சோப்ரா (R.N. Chopra) என்பவரும் மற்றும் சிலரும் சேர்ந்து இந்திய மருத்துவச் செடிகளின் பட்டியல் (Glossary of Indian Medicinal Plants) என்னும் நூலை எழுதியுள்ளனர். இதில் மூலிகைச் செடிகளின் பட்டியல் உள்ளது. மேலும் பல்வேறு அறிஞர்கள் பல கட்டுரைகள் எழுதி அவை ஆங்காங்கே வெளியாகியுள்ளன.

தமிழில் நாட்டுப்புற மருத்துவம் பற்றி வெளிவந்த நூல்கள் குறைவு. இவற்றில் டாக்டர். க, வேங்கடேசனின் ஆய்வு நோக்கில் நாட்டுப்புற மருத்துவம் (1976) என்ற நூலும் டாக்டர் இ. முத்தையாவின் நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள் (1986) என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை. முனைவர் க.சந்திரன் நாட்டு மருத்துவம் (2002) என்னும் நூலை எழுதியுள்ளார்.


சி.எஸ். முருகேச முதலியார் பாடம் ( 1936) என்னும் நூலில் நாட்டுப்புற மருத்துவ முறைகள் சிலவற்றை விளக்குகிறார். ஆ.ரா. கண்ணப்பர் நாட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக நம் நாட்டு மூலிகைகள் என்ற நூலில் எழுதியுள்ளார். இவரைத் தொடர்ந்து புற்றுநோய் மூலிகைகள் என்ற நூலை இரா, குமாரசாமி என்பவர் எழுதியுள்ளார்.


பி. கரேந்திரகுமார் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவையில் (1987) தஞ்சை மாவட்ட நாட்டுப்புற மருத்துவம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியுள்ளார். சோமலெ அவர்கள் ‘தழிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் (1974) என்ற நூலில் ‘மந்திரமும் மருந்தும்‘ என்ற தலைப்பில் மந்திர மருத்துவச் சடங்குகள் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். 1985-இல் ஆ. சிவசுப்பிரமணியன் ‘ஆராய்ச்சி இதழில்‘ பரதவர்களின் நாட்டு் மருத்துவம் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். ஆறு.இராமநாதன் தமது ‘நாட்டுப்புற இயல் ஆய்வுகள்‘ (1997) நூலில் ‘நாட்டுப்புற மருத்துவம் நம்பிக்கைக்கு உகந்ததா?‘ என்றும் கட்டுரையை எழுதியுள்ளார்.


இவை தவிரப் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் ஆய்வு செய்த மாணவர்கள் பலர் தமது ஆய்வுத் தலைப்பாக நாட்டுப்புற மருத்துவக் கூறுகளை எடுத்துக் கொண்டு ஆய்வேடுகளை அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment