காலக் கணக்கீடு

Monday, January 24, 2011
அறுபது நொடிகள் ஒரு நிமிடம்

பதினைந்து நிமிடங்கள் கொண்டது ஒரு காஷ்டை

பதினைந்து காஷ்டைகள் கொண்டது ஒரு கலை

முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம்

முப்பது முகூர்த்தங்கள் கொண்டது ஒரு திதி

முப்பது திதிக்கள் கொண்டது ஒரு மாதம்

இரண்டு மாதங்கள் கொண்டது ஒரு ருது

மூன்று ருதுக்கள் கொண்டது ஒரு அயனம்

இரண்டு அயனங்கள் கொண்டது ஒரு வருடம்

இவை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படும்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் தற்போதைய குறைகள் கொண்ட கிரிகோரியன் காலண்டர் முறை வழக்கத்திலிருந்து நீக்கப்பட்டு,இந்துக்காலக்கணக்கீடு முறை எல்லா மதம்,எல்லா நாடு,எல்லா மொழி,எல்லா இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.இந்நிலை கி.பி.2025க்குள்ளாகவே நடைமுறைக்கு வந்துவிடும்...
Read more ...

காயத்ரி

Monday, January 24, 2011
காயத்ரி மந்திரத்தின் பொருள் தத்துவம்
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய “காயத்ரீ” என்ற நூலில் இருந்து -


காயத்ரி மந்திரம் வருமாறு:

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி |
தியோ யோ ந: ப்ரசோதயாத் ||


ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

இது பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ. இதுவே நம் தேசியப் பிரார்த்தனை. இதுவே நம் தேசிய மந்திரம். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இது கையாளப் பட்டு வந்துள்ளது.
ஓம் அல்லது ஓங்காரம் ஓசைகள் அனைத்துக்கும் முதல் காரணம். இது நாதப் பிரம்மம் என்று இயம்பப் பெறுகிறது. பரவஸ்து ஓசை வடிவத்தில் இலங்குகிறது. அகிலாண்டத்தின் இயக்கம் ஓசையை உண்டுபண்ணுகிறது. அந்த ஓசையே ஓங்காரம். ஓங்கார ஓசை இயற்கை முழுவதிலும் ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ஓவாத சத்தத்து ஒலியே போற்றி” என்று இது போற்றப் படுகிறது. ஓம் என்பது பீஜ மந்திரம். இதன் திரிவுகளாக ஏனைய மந்திரங்கள் வந்துள்ளன. ஓங்காரத்தை உச்சரிப்பதற்கு ஏற்ப மனிதன் மேன்மையுறுகிறான். இயற்கை முழுதுக்கும் பொதுவாக அண்டமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இம்மந்திரத்தை யாரோ சிலர் தான் உச்சரிக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடு எதற்காக? சுவாசிக்கும் காற்று எல்லார்க்கும் பொதுவாக இருப்பது போன்று இந்த ஓசையும் பொது.
ஓங்காரத்தை உச்சரித்த பிறகே ஏனைய மந்திரங்களை உச்சரிப்பது ஐதிகம். ஏனென்றால் மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமந்திரமாக அல்லது பீஜமந்திரமாக இருப்பது ஓங்காரம். இதற்கு ஸ்தூல விளக்கம் தருவோம். கணபதி பூஜை பண்ணிய பிறகே ஏனைய தெய்வங்கள் போற்றப் படுகின்றன. கண்பதி ஓங்கார மூர்த்தி. கணபதி வழிபாடு எல்லார்க்கும் சொந்தம். அதினின்றே அவருக்குரிய ஓசை அல்லது மந்திரம் எல்லார்க்கும் பொது என்பது வெளியாகிறது.

பூ: , புவ:, ஸுவ: ஆகிய மூன்று சொற்கள் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்க்கம் எனப் பொருள்படுகின்றன. இம்மூவுலகங்கள் அகத்திலும் இருக்கின்றன, புறத்திலும் இருக்கின்றன. பண்பாடு அடையாதவர்களுக்கு அம் மூவுலகும் புறத்தில் உள என்னும் கொள்கை ஏற்புடையதாகிறது. அகத்திலேயே அம்மூன்றும் அமைந்துள்ளன என்னும் கொள்கை சிறிது பரிபாகம் அடைந்தவர்களுக்கே விளங்குகிறது.
நம்மிடையே இம்மூவுலகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன என்று பார்ப்போம். ஜாக்ரதாவஸ்தை, சொப்பனாவஸ்தை, சுஷுப்தி அவஸ்தை ஆகிய மூன்று அவஸ்தைகளும் (நிலைகள்) நம்மிடத்து மாறி மாறி அமைகின்றன. மக்கள் மட்டும் அல்லர்; பறவைகளும், விலங்குகளும் இந்த மூன்று நிலைகளை அனுபவிக்கின்றன.
நனவு அல்லது விழித்திருந்து புறவுலகோடு இணக்கம் வைப்பது ஜாக்ரதாவஸ்தை. நனவு நிலையில் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் வேலை செய்கின்றன. கனவு என்பது சொப்பனாவஸ்தை. கனவு நிலையில் புறவுலகோடு தொடர்பு வைப்பதில்லை. ஸ்தூல சரீரத்துக்கும் அங்கு வேலையில்லை. அகக் கரணமாகிய மனதே கற்பனையில் ஸ்தூல சரீரத்தையும், புறவுலகத்தையும், அதிலுள்ள உயிர்வகைகளையும் கற்பனை பண்ணிக் கொண்டு வியவகாரம் பண்ணுகிறது. அந்நிலையில் இருக்கின்ற பொழுது அது யாண்டும் ஜாக்ரதாவஸ்தைக்கு நிகராகத் தோன்றுகின்றது. கனவற்ற உறக்கம் சுஷுப்தி அவஸ்தை எனப்படுகிறது. அந்த அவஸ்தையில் அகவுலகம் இல்லை; புறவுலகம் இல்லை. மனதும் செயலற்றுக் கிடக்கிறது. பிரக்ஞை மட்டும் தமோகுணத்தால் [மூவகைக் குணங்களில் ஒன்றான இருள் இயல்பு] மூடப்பட்டிருப்பது போன்று தன்மயமாய் எஞ்சியிருக்கிறது.
(மூவகைக் குணங்கள் பற்றி அறிய: பகவத்கீதை - பாரதியார் மொழியாக்கம் அத்தியாயம் 14 பார்க்கவும்)
இம்மூன்று அவஸ்தைகளிலும் நாம் மாறிமாறி இருக்கின்றோம். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இந்த மூன்று உலகங்களிலும் சற்று ஏறத்தாழ வசித்து வருகிறோம். இந்த மூன்று அவஸ்தைகளே பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் என்று இயம்பப் பெறுகின்றன. நாம் எந்த அவஸ்தையில் இருந்தாலும் சரி, அதாவது எந்த லோகத்தில் இருந்தாலும் சரி, இந்த காயத்ரி மந்திரத்தினுடைய கருத்தையுணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு வருகிற அளவு ஆன்மிகத் துறையில் முன்னேற்றமடைகிறோம்.
விழித்திருக்கின்ற பொழுது நாம் சுவாசிக்கின்றோம்; கனவு காண்கின்ற பொழுதும் சுவாசிக்கின்றோம்; கனவற்ற உறக்கத்திலும் சுவாசிக்கின்றோம். சுவாசிப்பதை நிறுத்துவதில்லை. நிறுத்தினால் ஒழிந்துபட்டுப் போவோம். நிர்விகல்ப சமாதியில் (அனைத்து உணர்வுகளும் ஒடுங்கும் ஒருமை நிலை) இருப்பவர்கள் மட்டும் சுவாசிக்காதும், அழிந்துபட்டுப் போகாமலும் இருக்கின்றனர். மூன்று அவஸ்தைகளிலும் நிறுத்தாது நாம் சுவாசித்து வருவது போன்று மூன்று அவஸ்தைகளிலும் காயத்ரியில் அடங்கியிருக்கிற கருத்துக்கேற்ப நம்முடைய மனத்தைப் பெரிய நிலையில் வைப்போமானால் அதற்கேற்றவாறு ஆத்ம பரிபாகம் நமக்கு வாய்க்கிறது.

சுஷுப்தி அவஸ்தையில் மனது ஒடுங்குகிறது. ஆதலால் கருத்து ஒன்றும் உருவெடுப்பதில்லை. அந்த அவஸ்தையில் கருத்தை மேல்நிலையில் வைப்பது எங்ஙனம் என்ற கேள்வி எழலாம். சுஷுப்தி அவஸ்தையில் தமோகுணம் ஆதிக்கம் செய்கிறது. தமோகுணத்தில் மூன்று நிலைகள் உண்டு - தமஸில் தமஸ், தமஸில் ரஜஸ், தமஸில் சத்துவம் என அம்மூன்று நிலைகள் விளக்கப் படுகின்றன. ஆத்ம பரிபாகம் அடைந்தவர்கள் தமஸில் சத்துவத்துக்கு மேலோங்க முடியும். அது அறிதுயில் அல்லது யோகநித்திரை எனப்படுகிறது. அந்நிலையை எட்டுகிறவர்கள் காயத்ரீ தத்துவத்தைக் கையாண்டவர்கள் ஆகின்றனர். அந்நிலையை எட்டுவதே குறிக்கோள்.

இனி, ஜாக்ரதாவஸ்தையிலேயே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் நமக்கு நாம் அமைத்துக் கொள்ள முடியும். உடல் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துவது பூலோக வாழ்க்கையாகிறது. உள்ளத்தை மேலான எண்ணங்களில் செலுத்துவது புவர்லோகமாகிறது. எண்ணத்தைக் கடவுள் பால் செலுத்துவது ஸ்வர்க்கலோகமாகிறது. அதிகாலையில் எழுந்திருந்து இரவு படுக்கப் போகும் வரையில் வாழ்வாங்கு வாழ்கிற மனிதன் மூவுலகிலும் முறையாக வாழ்ந்தவன் ஆகின்றான்.

இந்த மூன்று லோகங்களிலும் அல்லது மூன்று அவஸ்தைகளிலும் பாரமார்த்திகப் பெருநிலையிலேயே இருந்து பழகுபவன் இரண்டாவது பிறப்பெடுத்தவன் ஆகின்றான். அதற்கு மாறாகப் புலால் உடல் உணர்விலேயே இருந்து புலால் உடலைப் பராமரிப்பதற்காகப் பாடுபடுகிறவன் புலையன் ஆகிறான். (ஒப்பிடுக: ”பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” - திருவாசகம்). ஆக, ஒரு மனிதன், இருபிறப்பாளன் ஆவதும் அல்லது ஒரே உடல் பிறவி எடுத்து அதில் கீழ்மையில் உழல்வதும் அந்தந்த ஜீவனுடைய மனபரிபாகத்தை ஒட்டியதாம். இருபிறப்பாளன் அல்லது துவிஜன் யாண்டும் போற்றுதலுக்குரியவன் ஆகின்றான்.
செய்யுள் மயமாக அமைந்துள்ள காயத்ரியில் உள்ள பதங்களை இப்பொழுது உரைநடைக்குரிய பதங்களாகப் பிரித்து அமைப்போம் -

ஓம் தத் ஸவிது: வரேண்யம்
பர்க: தேவஸ்ய தீமஹி |
திய: ய: ந: ப்ரசோதயாத் ||
ய: - யார், ந: - நம்முடைய, திய: அறிவை, ப்ரசோதயாத் - தூண்டுகிறாரோ, தத் - அந்த, தேவஸ்ய - சுடருடைய, ஸவிது: கடவுளின், வரேண்யம் - மேலான, பர்க: - ஒளியை, தீமஹி - தியானிப்போமாக.

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.

சரியாக அமைந்துள்ள காயத்ரி மந்திரத்தில் பரம்பொருளின் சொரூபத்தை விளக்குவதற்கான பதங்கள் மூன்று அமைந்திருக்கும். ஜீவப் பிரயத்தனத்தையும், தெய்வத்தின் அருளையும் விளக்குவதற்கென்று அமைந்துள்ள வினைச்சொற்கள் மூன்று இருக்கும். இப்பேரியல்புகள் காயத்ரீ மந்திரங்கள் அனைத்துக்குமே பொதுவானவைகள்.

இம்மந்திரத்தில் பரம்பொருளுக்கு விளக்கமாக அமைந்துள்ள மூன்று சொற்களை எடுத்துக் கொள்வோம். ஸவிது: என்னும் சொல் ஸவித்ரு என்னும் சொல்லின் ஆறாம் வேற்றுமையாகும். ஸவித்ரு என்னும் சொல் உயிர்தருகிற, உற்சாகம் ஊட்டுகிற, வாழ்வைச் செப்பனிடுகிற பொருள் என்று சொல்லப் படுகிறது. உலக நடைமுறையில் சூரியன் இச்சொல்லுக்கு இலக்காகிறது. பரதத்துவத்தில் பரமாத்மாவுக்குப் பொருந்தியதாக இப்பதம் அமைகிறது. ஸவித்ரு என்னும் சொல்லைப் பெண்பால் ஆக்குகின்ற பொழுது, அது ஸாவித்ரீ என்று சொல்லப் படுகிறது. காயத்ரீ, ஸாவித்ரீ ஆகிய இரண்டு பெயர்களும் சக்தி தெய்வத்துக்கு உரியவைகள் ஆகின்றன. இந்த இரண்டு பெயர்களுள் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை மொழியுமிடத்து அது இழுக்கு ஆகாது
.
வழிபடுகின்றவர்களுடைய வசதிக்காக ஒரு தெய்வம் ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ கருதப் படுகிறது. சிவ என்பது ஆண்பால்; சிவா என்பது பெண்பால். ஸவித்ரு என்பது ஆண்பால்; ஸாவித்ரீ என்பது பெண்பால். ஆணாகவோ, பெண்ணாகவோ, அலியாகவோ எப்படி வைத்துக் கொண்டாலும், அது உயிர்க்கு உயிராய் இருக்கின்ற பரம்பொருள் ஆகிறது (ஒப்பிடுக: “பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர், விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி” - திருவாசகம்).

பிரபஞ்சத்துக்கும், ஜீவகோடிகளுக்கும் ஆதாரமாகவும், மூலப் பொருளாகவும், முதல் காரணமாகவும் இருப்பது பரம்பொருள். பரம்பொருளுக்குப் புறம்பாக ஜீவர்களுடைய ஜீவ வியக்தி இல்லை. ஜகத்துக்குத் தோற்றம் என்பது இல்லை. கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன. (ஒப்பிடுக: தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல், தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மை போல் - நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே : திருமழிசையாழ்வார், நாலாயிர திவ்யப் பிரபந்தம்).
ஆக, ஜகத்துக்கும் ஜீவனுக்கும் தூண்டுதல் அளிக்கும் பாங்கில் இருக்கிற பரவஸ்து (பரம்பொருள்) ஸவித்ரு என்று சொல்லப் படுகிறது. கட்புலனாகிற சூரியன் இச்செயலைப் பிரபஞ்ச நிலையில் செய்து வருவதால் சூரிய நாராயணனும் ஸவித்ரு என்று சொல்லப் படுகிறார். ஆனால் இதன் லட்சியார்த்தம் (குறியீட்டுப் பொருள்) பரமாத்மாவையே குறிக்கிறது.

பரம்பொருளை விளக்குவதற்கு அமைந்துள்ள இரண்டாவது சொல் தேவ: என்பதாகும். தேவஸ்ய என்பது இதன் ஆறாம் வேற்றுமை. தேவ: என்னும் சொல் திவ்யமானவன், பிரகாசமானவன், மேலாம் நிலையில் இருப்பவன் என்றெல்லாம் பொருள் படுகிறது. பிரகாசத்தோடு கூடியிருப்பது மூலநிலை, யதார்த்த நிலை. பிரகாசத்தை இழந்த நிலை கீழ்மைக்கு வந்துள்ள நிலையாகும். ஜகத்தில் ஜடமாய் இருப்பதெல்லாம் மூலநிலையை விட்டு வழுவிக் கீழ்நிலைக்கு வந்தவைகளாம்.

சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். சூரியன் சுயப்பிரகாசம் வாய்ந்தவன். சூரியனிடமிருந்து சிதறி வந்துள்ள பூமியும், சந்திரனும் சுயப்பிரகாசத்தை இழந்தைவைகள். இந்த இரண்டு கோளங்களையும் எடுத்து மீண்டும் சூரியனுள் போட்டால் முன்னிருந்தபடி இவைகளுக்குச் சுயப்பிரகாசம் வந்துவிடும். ஜகத் (பருப்பொருள் உலகம்) ஜடமயமாக இருக்கிறது. ஜீவர்களோ ஜடம், சேதனம் (உணர்வு) ஆகிய இரண்டும் கலந்தவைகளாக இருக்கின்றன. பின்பு பரமனோ தனது சுயப் பிரகாசத்தை இழந்துவிடாது யாண்டும் பூரணமாகவே இருப்பவன். தேவ: என்னும் சொல் இப்பேருண்மையை விளக்குகிறது. பரம்பொருள் யாண்டும் சுயம்ஜோதி என்பது இதன் பொருள்.

இனி, பரவஸ்துவைக் குறிக்கின்ற மூன்றாவது பதம் பர்க: என்பதாகிறது. பர்க: என்பது ருத்ரனுக்கும், சிவனுக்கும் அமைந்த மற்றொரு பெயர். ருத்ரனாகக் கருதுமிடத்து அழுகையின் வாயிலாக அழுக்கைப் போக்கக் கூடியவன் என்று பொருள்படுகிறது. சிவனாகக் கருதுமிடத்து ஞானப் பிரகாசத்தின் வாயிலாக அக்ஞான இருளைப் போக்குபவன் என்று பொருள்படுகிறது. பரம்பொருளின் சொரூபத்தை ஜீவர்கள் கிரகித்துக் கொள்வதற்கே இந்த அடைமொழி வந்துள்ளது. ஸ்தூல உலகில் சூரியன் தான் இருக்குமிடத்தைத் தானே விளக்குகின்றான். தன் வெளிச்சத்தைக் கொண்டு ஏனைய பொருள்களையும் விளக்குகின்றான். அங்ஙனம் ஞான சொரூபியாகிய பரமாத்மா தன்னைத் தானே விளக்குகின்றான். அவனுடைய சன்னிதானத்தின் விசேஷத்தால் ஜகத்தும், ஜீவர்களும் ஞானக்காட்சிக்கு இலக்காகின்றன.

இங்ஙனம் ஸவித்ரு, தேவ:, பர்க: ஆகிய மூன்று சொற்களையும் நாம் உச்சரிக்கின்ற பொழுது, அச்சொற்களுக்கு இலக்காக இருக்கிற பரமாத்மாவையே பாவனை பண்ண வேண்டும். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்து” என்பது ஆப்த வாக்கியம். பரமனைப் பற்றிய பதங்களைப் பேசுகின்ற பொழுது, அப்பதங்களின் அடிப்படைக் கருத்து உள்ளத்தில் உதயமாக வேண்டும். அப்பொழுது தான் உச்சரிக்கின்ற மந்திரத்துக்கு வலிவு வருகிறது.

காயத்ரீக்கு இன்றியமையாத மூன்று வினைச்சொற்களை இனி ஆராய்வோம். வரேண்யம் என்பது வர்ணித்தல் எனும் வினையின் விகாரமாம். வரேண்யன் என்னும் சொல் போற்றுதற்குரியது என்றும், வர்ணிப்பதற்குரியது என்றும், விளக்குதற்குரியது என்றும் பொருள்படுகிறது. தங்கம், வெள்ளி முதலிய தாதுக்களை விளக்க விளக்க அவைகள் சுடர்விடுகின்றன. பரமனை விளக்குவதற்கு ஏற்ப ஜீவாத்மனிடம் ஞானச் சுடர் வளருகிறது. பரமனை விளக்குதலே ஆராதனையாகிறது. பரமனைப் பற்றிய விளக்கத்தைப் “பொருள்சேர் புகழ்” என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் போற்றுகிறார். நரஸ்துதி பொருள் சேராத புகழ். பரம்பொருளைப் பற்றிய ஸ்துதி பொருள் சேர்ந்த புகழ். ஆயிரம் ஆயிரமாக சொற்களை வாரிக் கொட்டிப் புகழ்ந்து கொண்டு போனாலும் அதனுடைய புகழுக்கு முடிவில்லை. பரமனை இடையறாது புகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டை வரேண்யம் என்னும் பதம் விளக்குகிறது.
செயல் அல்லது சாதனம் வகையாக வடிவெடுக்கின்ற அடுத்த வினைச்சொல் தீமஹி. தியானிப்போமாக என்பது இதன் பொருள். ஆத்மசாதனங்களுள் இது தலைசிறந்தது. அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது அங்கமாக இருப்பது தியானம். இது முதிர்ந்தால் சமாதியாகப் பூர்த்தியாகிறது. காயத்ரி மந்திரத்தைப் பயன்படுத்துகிற பொழுது சிறிது நேரம் தியானம் பண்ணுவது அவசியமாகிறது.

தியானத்துக்காக நிமிர்ந்து உட்காரவேண்டும். சிரசு, கழுத்து, நெஞ்சு ஆகியவை நேராக இருக்கவேண்டும். உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. இங்ஙனம் ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் அரைமணி நேரம் வரையில் தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தியானம் நமது தேசியப் பண்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக பரதகண்டத்துப் பெருமக்கள் காலையிலும், மாலையிலும் சந்தியா நேரங்களில் ஆழ்ந்து தியானத்திலிருந்து பழகி வந்திருக்கிறார்கள். இந்தப் பண்பில் ஊறியிருப்பதற்கேற்ப ஆன்மிகம் மக்களிடத்து ஓங்குகிறது.

ஈண்டு இயம்பியுள்ள இரண்டு நல்வினைகளுள் ஒன்று நாவால் போற்றுவது; மற்றது மனத்தால் எண்ணுவது. ஜீவாத்மன் செய்கின்ற செயல்களுள் இவையிரண்டும் பாரமார்த்திகப் பண்பாட்டுக்கு உரியவைகள். ஆத்ம சாதகன் இவ்விரண்டையும் ஊக்கத்தோடு அனுஷ்டுக்கக் கடமைப் பட்டிருக்கிறான்.

ப்ரசோதயாத் என்னும் வினைச்சொல் மூன்றாவதாக வந்தமைகிறது. தூண்டுகிற என்பது இதன் பொருள். இச்செயல் ஜீவாத்மனுடையதன்று. உள்ளத்தினுள்ளே வீற்றிருக்கின்ற பரமாத்மனுடைய செயல் ஆகின்றது இது. ஜீவாத்மனுடைய செயலுக்குத் துவக்கமும், முடிவும் உண்டு. ஆனால் பரமாத்மனுடைய செயலுக்கோ ஆதி அந்தம் இல்லை. இச்செயலைத் தான் ஆன்றோர்கள் அருள் என்று அழைக்கின்றனர். அருளின் பாங்கு சர்வகாலமும் உள்ளத்தினுள்ளே நிலைபெற்றிருக்கிறது. ஆத்ம போதத்தில் விழிப்படைந்து வருகிறவர்களுக்கு அது விளங்குகிறது. அருளின் பாங்கை உள்ளத்தினுள்ளே உணர்பவனைத் தான் இருபிறப்பாளன் என்று சொல்லவேண்டும். வெறும் உபநயனச் சடங்கால் இந்த உணர்வு உருவெடுக்காது. பரிபாகத்தின் விளைவாகவே இது உருவெடுக்கிறது.
இந்தக் காயத்ரீ மந்திரத்தில் இறைவனுடைய அருளும், ஜீவப் பிரயத்தனமும் இடம் பெற்றிருக்கின்றன. இவ்விரண்டையும் ஒன்று படுத்துவது தான் யோகம். ஆக, பாரமார்த்திகப் பெருவாழ்வுக்குத் தகுதியுடையவர்களே காயத்ரீ மந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வல்லவர்கள் ஆகின்றார்கள்.

காயத்ரீ மந்திரத்தில் மெய்யெழுத்தை நீக்கிவிட்டு உயிரெழுத்தும், உயிர்மெய் எழுத்தும் சேர்ந்து இருபத்து நான்கு அக்ஷரங்கள் இருக்கும். இவை மூன்று வரிகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு வரியிலும் எட்டு எழுத்துக்கள் அமையப் பெற்றிருக்கும். இதுவே காயத்ரீ அமைப்பின் முறைமையாகும். இம்முறைமை வேதங்களில் முக்கிய இடம் பெறுகிறது.
வேதங்களின் உட்கருத்துக்களெல்லாம் காயத்ரீயில் அடங்கியிருக்கின்றன என்பது ஐதிகம். காயத்ரீயில் அடங்கியிருக்கிற கருத்து யாது என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து, பரம்பொருளுக்கும், ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக்கத்தை அது ஞாபகமூட்டுகிறது. ஜீவாத்மனைப் பரமாத்மன் மயமாகப் பண்படுத்துதற்கு அது வழிகாட்டித் தருகிறது. ஆக, ஜீவாத்மன் பரிணமித்து மேலோங்கி வந்து பரமாத்மனைச் சேர்வது குறிக்கோள். இது வேதங்களின் திட்டம். மானுட வாழ்க்கையின் முடிந்த நோக்கம் இதுவேயாம். இந்த நோக்கத்தைச் சுருக்கமாக காயத்ரீ மந்திரம் தெளிவுபடுத்துகிறது. ஆதலால் தான் காயத்ரீ மந்திரத்தை வேதங்களின் சாரம் என்று சான்றோர் சாட்டியிருக்கின்றனர்.
Read more ...

ஓம்

Monday, January 24, 2011
ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். அதன் பின் ஒவ்வொரு மந்திரத்தையும் நமஸ்காரம் செய்யும் போது உச்சரிக்க வேண்டும்.

சூரியனை முழுமுதல் கடவுளாக நம் முன்னோர்கள் போற்றி வணங்கியுள்ளனர். சங்ககால இலக்கியங்களில் சூரியனே முதற் கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி விஞ்ஞான உலகின் ஜீவ நாடியாக உள்ளது. சூரிய உதயத்தைக் கணக்கிட்டுத்தான் ஜாதகப் பலன்களையும் கணிக்கின்றனர். இராகு காலம், எமகண்டம், நல்லநேரம் குறிக்கின்றனர். இதிலிருந்து சூரியனை கடவுளாக வணங்கி வந்தது நமக்கு தெரியவருகிறது. இன்று சூரிய சக்தியை மின்சாரம் முதல் அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த சூரிய சக்தி மனித உடலுக்கு மிகவும் தேவையான அனைத்து சக்திகளையும் கொடுக்கக் கூடியது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சூரியனின் அனுக்கிரகம் அவசியத் தேவையாகும்.

பொதுவாக சூரிய ஒளியின் சக்தியானது நமது உடலில் உள்ள சரும நோய்கள், மேக நோய்கள், சித்தபிரமை மற்றும் இரத்த சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும் சக்தி கொண்டது. ஆகவே சூரிய பகவானை முறையாக வணங்கி அதன் ஆசியைப் பெறுவோம்.

சூரிய நமஸ்காரம் செய்வதில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகையில் 12 நிலைகளும், இரண்டாவது வகையில் 10 நிலைகளும் உள்ளன. இரண்டாவது வகை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் இரத்தக் கொதிப்பு, தண்டுவடப் பிரச்சனை, குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்டோர் தகுதி வாய்ந்த யோகாசன நிபுணரை கலந்து ஆலோசித்த பின்பே சூரிய நமஸ்காரம்பயிற்சிசெய்யவேண்டும்.


சூரியநமஸ்காரவரிசை


1.நமஸ்காரம்ஆசனம்
2.ஊர்த்துவநமஸ்காரஆசனம்
3.பாதஹஸ்தஆசனம்
4. ஏகபாத பிரசரனா ஆசனம்(வலது கால்)
5.துவிபாதபிரசரனாஆசனம்
6.சாஷ்டாங்கஆசனம்
7.புஜங்காசனம்
8. பூதாராசனம் என ஏறுவரிசையில் எட்டு நிலைகளும்
9. ஏக பாத பிரசரனா ஆசனம் (இடதுகால்)
10.பாதஹஸ்தஆசனம்
11.ஊர்த்துவநமஸ்காரஆசனம்
12.நமஸ்காரஆசனம்

- என இறங்கு வரிசையில் நான்கு நிலைகளும் உள்ளடங்கியதாகும்


ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை நீள ஒலித்து தியானம் செய்து, சூரிய பகவானின் நாமத்தை ஓதி முறையான சுவாசத்தோடு சேர்த்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.





நிலை ஒன்று - நமஸ்கார ஆசனம்

சூரிய நமஸ்காரத்தின் நமஸ்கார ஆசனமே ஆரம்ப நிலையும் முடிவு நிலையும் ஆகும்.




செய்முறை

இரண்டு கால்களின் பெருவிரல்களை ஒன்று சேர்த்து கிழக்கு திசை நோக்கியபடி நிமிர்ந்து நிற்கவேண்டும்.

உள்ளங்கைகளை ஒன்றோடொன்று சேர்த்து, நமஸ்கார முத்திரையில் மார்போடு ஒட்டி, கைகளின் கட்டை விரல்கள் நெஞ்சுக் குழியினை தொடுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்களை மூடி மனதில் சூரிய உதயத்தினை கற்பனை செய்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தோடு சூரிய பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.




கவனத்தில் கொள்ளவேண்டியவை

கால் பெருவிரல்கள், குதிகால்கள், கால் மூட்டுகள் தொடைகள் நேராக சேர்ந்து இருக்க வேண்டும்.




சூரிய நமஸ்காரம் தரக்கூடிய நன்மைகளை அதைச் செய்யும் ஒருவர் பெறக்கூடிய மன, உடல் ஆத்ம நலனிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.
Read more ...

மந்திரங்களும் பலன்களும்

Monday, January 24, 2011
மந்திரங்களும் - பலன்களும்


1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.

2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.

3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.

4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.

5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.

6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.

7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.

8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.

9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.

10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.

11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.

12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.

13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.

14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.

15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.

16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.

17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.

18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.

19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.

20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.

21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.

22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.

23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.

24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.

25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.

26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.

27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.

28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.

29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.

30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.

31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.

32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.

33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.

34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.

35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.

36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.

37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.

38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.

39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.

40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.

41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.

42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.

43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.

44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.

45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.

46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.

47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.



ஹரிஹர மந்த்ரம்

“ஓம் ஓம் நமசிவய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவய
Read more ...

உலகம்

Monday, January 24, 2011
பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்


1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.


3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்.
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.


6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்
விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார்.
Read more ...

இரண்டு கண்கள்

Monday, January 24, 2011
தமிழ்நாட்டில் சைவம், வைணவம் என்னும் இருபெரும் சமயங்களும் இரண்டு கண்கள் போலச் சிறந்து விளங்குவன. இவ்விரண்டும் பழமையும், பெருமையும் வாய்ந்தவை.
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் இலக்கண நூலிலேயே,"மாயோன் மேய காடுறை உலகம்" என்று முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் "திருமால்" என்பது சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதைத் தழுவிப் பிற்காலத்தில் "அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்" என்று சேக்கிழார் பெருமானும் வழி மொழிந்துள்ளார்.
"திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன்" என்று நம்மாழ்வார் பாடுவதற்கு அடிப்படையாக,"மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில், தாவா விழுப்புகழ் பூவை நிலை" என்று தொல்காப்பியம் விதித்திருத்தலும், திருமால் நெறியின் தொன்மையினை வலியுறுத்தப் போதிய சான்றாகும்.
"சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது" என்று விளக்கிய திருவள்ளுவரும், தாம் எந்த சமயத்தையும் வெளிப்படையாகக் கூறாத இயல்பினராயினும்,"மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடியால்" அளந்த திருமாலைப் பற்றிக் (குறள் - 610) குறிப்பிட்டுள்ளார்.
இன்றைக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே, சங்க காலத்தில் திருவேங்கடத் திருப்பதியில், வேங்கடேசப் பெருமாள் நின்ற கோலத்தில் விளங்கிக் காட்சி தரும் சிறப்பு, சிலப்பதிகாரத்தில் எழிலுற இனிது விளக்கப்பட்டுள்ளது. இதனால் 2,000 ஆண்டுகளுக்கும் முன்னரே வைணவ சமயம் தமிழ்நாட்டில் தழைத்தோங்கியிருந்த தன்மையும், தொன்மையும் புலனாகின்றன.
முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வார், சிவபெருமானும், திருமாலும் பிரிவறக் கலந்து பிணைந்து, இணைந்து, திருவேங்கடமலையின் கண் ஓருருவாய்க் காட்சி தருவதைத் தம் செய்யுளில் இப்படி அழகுறப் பாடி அருளியுள்ளார்:-
"தாழ் சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து."
இப்பாடல் வழி பண்டைக்காலத்தில், தமிழக மக்களிடையில் பரவி, நிலவியிருந்த சைவ - வைணவ சமரச மனப்பான்மை தெளிவுறத் தெரிகிறது. சமயம் மக்களைப் பிரிக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள நல்லறிஞர்கள் பலரும், இந்நாளில் இதனையே பெரிதும் வற்புறுத்தி வருகின்றனர். அத்தகையதொரு சிறந்த நல்விருப்பத்துடனும், குறிக்கோளுடனுமே நம்மாழ்வாரும் - மாணிக்கவாசகரும் வாழ்ந்தார்கள்.
பாண்டிய நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் "திருக்குருகூர்" என்னும் தலத்தில், காரியார் - உடையார்நங்கையார் எனும் தம்பதிக்கு மைந்தராகத் தோன்றியருளினார் நம்மாழ்வார்.
Read more ...

பிரதோஷம்

Friday, January 21, 2011
பிரதோஷம் என்றால் சந்தியாக்காலம். சூரியம் அஸ்தமிக்கும் நேரம் பிரதோஷ காலம். பாற்கடலை கடைந்து அமுதம் பெற விழைகின்றனர் அசுரர்களும் தேவர்களும். வாசுகி எனும் பாமப்யே கயிறாகக் கொண்டு மந்திர மலையில் மத்தாக்கி பெரும் பாற்கடலைக் கடைகின்றனர். அமுதின் ஊடே நஞ்சும் எழும்ப, வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷமும் சேர்ந்து கொண்டு எங்கும் கடும் விஷம் கருமையாய் எழும்பி நின்றது. அஞ்சிய தேவர்களும் அசுரர்களுக்கும் ஈஸ்வரன் கருணை உள்ளம் கொண்டு அபயம் அளித்தார். தம் தொண்டர் சுந்தரரை விட்டு விஷம் கொணரச் செய்தார். சிவன் அதனை உட்கொண்ட பின்னர், சற்றே கலங்கிய பார்வதி, சிவனின் தொண்டையில் அழுத்தி விஷத்தை கீழறங்காமல் செய்து விடுகிறாள். திருநீலகண்டன் ஆகிய ஈசனின் கருணை உள்ளத்தை போற்றித் துதித்து சகல ஜீவராசிகளும் வழிபட்ட அந்த நேரம் பிரதோஷ நேரம்.

சகலரையும் காத்து நின்ற ஈசன் மனம் குளிர்ந்து அனைவரின் பயமும் வருத்தமும் போக நந்தி பெரிய ரூபம் எடுத்து நிற்க அதன் கொம்பின் நடுவே ஆனந்த நடனம் புரிகின்றார். இதன் பொருட்டே பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்பின் வழியே இறைவனை

தரிசிப்பது சாலச் சிறந்தது. வளர்பிறை / தேய்பிறையின் பதிமூன்றாம் நாள் பிரதோஷமாக பாவிக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மூன்றரை நாழிகையும் அஸ்தமனம் ஆன பின் மூன்றரை நாழிகையும் பிரதோஷ காலம். இந்நேரத்தில் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சிறந்தது.

பிரதோஷம் என்பது ஒடுங்கும் நேரம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஜீவராசிகள் தங்கள் கூட்டுக்குள் அமிழ்ந்து அடங்கும் நேரம். பிரதோஷத்தை, நித்திய ப்ரதோஷம், பக்ஷப் ப்ரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று பலவாக வகைப் படுத்துகின்றனர்.

நித்திய ப்ரதோஷம் என்பது தினமும் சந்தியா நேரத்தில் சிவனை வணங்கி அவன் தியானத்தில் இருப்பது.
பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச(வளர்பிறை) சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.
மாதப் பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ (தேய்பிறை) திரயோதசியில் பிரதோஷம் அனுஷ்திப்பது
மஹா பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ திரயோதசி சனிக்கிழமை அன்று வந்தால் அன்று மஹா பிரதோஷம்
பிரளய பிரதோஷம் மஹா பிரளய காலத்தில் அண்டசராசங்களும் அழிந்து அனைத்தும் சிவனிடம் ஒடுங்கும் நேரம், பிரளய பிரதோஷம்.

பிரதோஷத்தின்போது து அப்பிரதக்ஷிணமாகவும் பின்னர் பிரதஷிணமாகவும் மாறி மாறி மூன்று முறை (பொதுவாகவே சிவனை மூன்று முறை வலம் வருதல் சிறப்பு) வலம் வருவது சோமசூத்திர வலம் வருதல் எனப்படுகிறது. இது பிரதோஷ காலத்திலோ அல்லது எந்த நாளிலும் கூட செய்வது உத்தமம்.

சிந்தையும் நித்தியம் அஸ்தமனத்தின் போது ஈஸ்வரனை தியானித்தல் மிக நல்ல சித்தியும், அமைதியும் கிட்ட வழிவகுக்கும். அண்டங்களை அழித்தலை (இங்கே கூட்டுக்குள் ஒடுக்குதல் என்று கொள்ளவேண்டும்) அல்லவா சிவனின் பிரதான தர்மம். பிரளயத்தில் அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் ஏற்று பின்னர் மீண்டும் தோன்றச் செய்கிறார் சர்வேஸ்வரன். அப்படிப்பட்டவனை வணங்கி அவன் கருணை பெறுதல் வீடுபேறு எய்த சுலபமான வழி.
Read more ...

உண்மை உணர்ந்தவன்

Friday, January 21, 2011
உலகில் ஒருவனைப்போல் இன்னொருவன் இருப்பதில்லை, ஒவ்வொருவரின் நம்பிக்கை, இலக்கு, ஆசை அபிலாஷைகளும் தனித்துவம் வாய்ந்தவை. இலக்குகள் வேறாக இருப்பதாலேயே அவரவர்களின் தனிப்பட்ட முயற்சியும் வெவ்வேறானவை. அதற்கென அவர்கள் மெனகெடும் விதமும் சிரத்தையும் வித்தியாசப்படும். ஒரே ஒரு அப்துல் கலாம், ஒரே ஒரு பில்கேட்ஸ் என முயற்சிப் படிகளில் ஏறி பதக்கம் பெற்றோரை சுட்டிக் காட்டிவிட முடியும். கோடானகோடி ஜனத்தொகையில் வெகு சொற்பம் மனிதர்கள் பெரிய இலட்சியத்திற்காக செயல்படுகின்றனர். அவற்றுள் வெகு செலரே லக்ஷியத்தை எட்டிப் பிடிக்கின்றனர். அவர்களுள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே லக்ஷியத்தின் உச்சிக் கொம்பை எட்டிப் பிடிக்கிறார்கள். சாமான்ய நடப்புகளுக்கே இப்படியெனில், வாழ்வில் மிகப்பெரிய, உயர்ந்த லக்ஷியமாம், இறையை உணர்தல் என்பது எவ்வளவு கடினம் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இதற்கு முயற்சிப்பவர்களே சொற்பம், வைராக்கியத்துடன் மேல் நடந்து செல்பவர்கள் மிகக் குறைவு அப்படி தொடர்ந்து தேடுபவர்களிலும் எவனோ ஒருவனே எட்டிப் பிடிக்கிறான். இதனை பகவான் க்ருஷ்ணன் கீதையில் குறிப்பிடுகிறான்.

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷு கஸ்சித் யததி சித்தயே |
யததாமபி சித்தானாம் கஸ்சின் மாம் வேத்தி தத்வத: ||

ஆயிரக்கணக்கான மனிதர்களில் எவனோ ஒருவன் முயல்கிறான். அப்படி சித்தி அல்லது முழுமையைப் பெற முயற்சிப்பவர்களுள் எவனோ ஒருவனே என்னைப் பற்றிய உண்மை உணர்ந்தவன் ஆகிறான்.

எல்லோருக்கும் எல்லாமும் சித்தியடைவதில்லை. அதன் பொருட்டு உழைக்க, ஈடுபட மன/உடல் முதிர்ச்சியும் இடம் கொடுப்பதில்லை. ஒரு துறைகளில் வல்லுனர்களாய் இருப்பவர்கள், இன்னொன்றின் மேதாவிலாசத்திற்காக, சிரத்தையுடன் உழைப்பதும் வெகு அபூர்வம். ஆயிரமாயிரம் மனிதர்களில் இறைவனை நாடும் பாதை எவனோ ஒருவனே தேர்ந்தெடுக்கிறான். அப்படிப்பட்ட கடினமான பாதையில் ஒருவன் மனம் ஒன்றி ஈடுபடுவானேயானால், அவன் இலட்சியத்தை எட்டிப் பிடித்தாலும், அல்லது கை நழுவவிட்டாலும் கூட "முயற்சித்த" ஒரு காரணத்திற்காகவே உயர்வு பெறுவான். முயல்வதே வெற்றியின் முதல் படி, வெற்றிக்கு அடையாளம், தன்னம்பிக்கையின் அஸ்திவாரம், இவ்வாறெல்லாம் நடைமுறை வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சிறிய லக்ஷியங்களுக்கே சொல்லப்படுகிற விஷயம். இதுவே இறைவனைத் தேடும் மாபெரும் முயற்சிக்கும் உரித்தாகுகிறது.

கீதையில் அர்ஜுனைன் சந்தேகமும் இதுவே. 'ஒருவன் யோக முயற்சியில் ஈடுபடுகிறான். கர்மம் அல்லாமல் யோகம் பாதையை அவன் மனம் நாடுகிறது. அவன் சிரத்தையோடு துவங்குகிறான். அப்படி ஈடுபடுபவனுக்கு, யோகம் சித்திக்காமல் ஆகிவிடுமேயானால், அவன் யோக மார்கத்திலும் நில்லாமல், கர்ம மார்கத்தை விட்டும் விலகி இருக்க நேரிடுகிறது. அப்படிப்பட்டவனுக்கு என்ன கதி ஏற்படும்? சிதறிய மேகம் போல் சிதறுண்டு போகுமோ அவன் கதி?' என்று வினவுகிறான்.

கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நச்யதி।
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி॥

என்கிறது ஸ்லோகம்.

அதற்கு பகவான்,

பார்த்த நைவேஹநாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே |
நஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி ||
ப்ராப்ய புண்யக்ருதம் லோகானுஷித்வா சாஸ்வதீ: ஸமா: |
சுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ அபிஜாயதே||

நல்லது செய்யும் அவன் துன்பம் அடையவதில்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுக்கு அழிவில்லை. யோகத்தினின்று தவறியவன் நல்ல உலகத்தை அடைந்து பின் நல்ல அறம் வாழும் மனிதர்களின் குலத்தில் பிறப்பெடுப்பான். என்று தெளிவிக்கிறார். முயன்றாலே அதற்கு அப்பேர்ப்ட்ட கதி உண்டாம். முயற்சியில் வெற்றியோ தோல்வியோ பற்றி சிந்திக்காது, சிரத்தையுடன் முயன்றாலே போதுமானது என திருவாய்மொழிகிறார்.

சிரத்தையுடன் எதையுமே செய்ய வேண்டுமென்றால் அலைபாயும் மனதை கட்டுக்குள் வைக்க வேண்டும். இந்திரியங்களை குதிரைகளுடன் ஒப்பிட்டால் அங்கு மனதையே கடிவாளாமிட்டு இந்திரியங்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். நசிகேதஸிடம் யமன் கூறும் உபதேசத்தில், உடம்பைக் தேருக்கு ஒப்பிடுகிறார். அதை புத்தி எனும் தேரோட்டி, மனம் என்ற கடிவாளம் கொண்டு, இந்தியங்களாகிய குதிரைகளை,
உலக நடைமுறை விஷயங்கள் நிறைந்துள்ள பாதையில் சரிவர இயக்க வேண்டும். கடிவாளாமில்லாத குதிரை எப்படி தறிகெட்டு ஓடுமோ, அப்படி ஓடக்கூடிய சுபாவம் வாய்ந்தது இந்திரயங்கள். இந்திரியங்கள் அலையும் போதெல்லாம் புத்தி எனும் தேரோட்டி இயக்க வேண்டும். சிந்தனை சரியாக அமைந்துவிட்டாலே பாதி வெற்றி. சுயமாக ஆர்வம் இருந்தாலேயொழிய, கேட்டும், பார்த்தும், பிறர் கூறும் நல்லுரையாலும் வந்துவிடக்கூடியதல்ல ஆன்மவிசாரம். ஆன்மதேடல் மட்டுமன்றி, மனிதனின் தனிபட்ட முயற்சி, அபிப்ராய பேதங்கள், வெற்றி-தோல்விகள், நல்ல சிந்தனைகள், நல்லன அல்லாத செயல்கள் என பலவற்றிற்கும் மனிதனின் தனிப்பட்ட குணாதிசயங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. தனக்குத் தானே நண்பன் தனக்குத் தானே அவன் பகைவனும் ஆகிறான். இன்னொருவனுக்கு நல்லதும் கெட்டதும், அறிவுரைகளின் பேரில் சொல்லி வருவதில்லை. பெரும்பாலும் சுயமாய் அமைவதே அனைத்தும்.

தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாய்ச் செய்வானும் தானே தான் தன்னைச்
சிறுவனா செய்வானும் தான்

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்த்தலால்
தானே தனக்கு கரி

திருமூலரின் திருமந்திரம்.
Read more ...

ஞானகுரு

Sunday, January 9, 2011
குரு என்ற வார்த்தைக்கு ஜீவன் கொடுத்தது பாரதம்தான். இந்த பாரதத்தில்தான் மனிதப் பிறப்பு என்பதே அந்தப் பிறவியின் மூலம் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே என்ற கோட்பாடும் காலம் காலமாக உண்டுதான். முனிவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் படித்தாலே தெரியும். எதையும் வரமாக அளிக்கும் சக்தி வாய்ந்த ரிஷிகள் அந்த சக்தியை ஒருநாளும் தமக்கென பயன்படுத்திக் கொண்டதில்லை. வசிஷ்டரிடம் நந்தினி என்றொரு பசு வளர்ந்து வந்ததையும், அந்தப் பசு விசுவாமித்திரருடன் கூட வந்த பல்லாயிரம் வீரர்களுக்கு பசியாறச் செய்ததையும் படித்திருக்கிறோம். ஆனால் ஒருநாளும் அந்தப் பசுவிடம் தனக்காக அவர் வேண்டியதில்லை. காட்டிலே வாழ்ந்து எளிய முறையைக் கடைபிடித்து சுகதுக்கங்க்ள் தம்மைத் தாக்காதவாறு வாழ்ந்து காட்டிய புண்ணிய புருஷர்கள் அவர்கள்.

ஆனால் மனிதப் பிறவியையே ஒரு வரமாகப் பெற்ற மனிதன் சுக துக்கங்களில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தவிக்கிறான். அப்படித் தவிக்கும்போது அவனைக் கரையேற்றுபவர் குரு ஒருவர்தான் என்பதும் கூட பாரதம் உலகுக்குக் கற்றுக் கொடுத்த பாடம். உண்மையான தேடலில் உள்ள ஒருவனுக்கு உடனடியாகத் தேவைப் படுவது ஒரு நல்ல குரு என்று எந்தப் பெரியவரும் உடனடியாக சொல்லி விடுவார்கள். குரு என்கிற வார்த்தையே புனிதமானது என்றுதான் நம் இதிகாசங்களும், திருமந்திரமும் சொல்கின்றன..
Read more ...

நம்பிக்கை

Sunday, January 9, 2011
1 (சாத்திர விதிகளின்படியும், கால வழக்கப்படியும் பெரியோர்கள் நடத்திக் காட்டும் பாதையினையும், மற்றும், தேவ அசுர குணங்களால் மனிதர்கள் நடத்தை மாறுபாட்டையும் அறிந்து கொண்டேன்.)

சாத்திர விதிஎன் னென்ன சம்பிர தாயம் எனவென
சூத்திர மறிந்த பின்னும் சுயநல தாகத் ததனால்
நேத்திர மிலங்குவ தெல்லாம் நேயத்தே வைக்கும் அசுரர்
பாத்திர மறிந்தேன் அதர்மப் பாவத்தை அறிந்து கொண்டேன்

2 சிரத்தையுடன் வேள்வி செய்தும், அறியாமையால் சாத்திர விதிகளைமீறுவோருக்கு என்ன கதி கிடைக்கும்?

விதித்த விதியின் வேதம் விதைத்த நெறியின் சாரம்
மதித்த மனிதர் அரிய மந்திரப் பொருளை உணரா
துதித்த போதும் நெஞ்சில் துாய்மை யோடும் வேள்வி
வதித்த யோகம் நலமா வருபயன் என்ன ஆகும்

3 பொருள் தெரியாவிடினும், இதுவே சரியென்ற நம்பிக்கையால், அறியாமல் தவற்றுடன் வேள்வி செய்வதால், பலன் உண்டா?

அர்த்தம் அறியா விடினும் அருமறை புரியா விடினும்
விருத்தம் சாத்தி ரங்கள் விளக்கம் தெரியா விடினும்
சிரத்தை குறை யாமலே செய்கருமம் முடிப் பதனாலே
வரத்தைப் பெறுவ துண்டோ வருங்குண நலமும் உண்டோ

4 ( பெரும்பாலான மனிதர்கள், இறைவழிபாட்டின் பொருள் தெரியாவிடினும், அக்கறையுடன் செய்கிறார்கள். விசயனின் வினா, அத்தகைய மனிதரின் கதியைக் குறித்ததாகும்.)

பாண்டவன் கேட்ட கேள்வி பாரிலே ஏற்ற கேள்வி
மீண்டவன் அறியா மையினால் மீறிய சாத்தி ரத்தால்
ஈண்டது யாது என்று ஈங்கிதைக் கருணை யாலே
ஆண்டவன் விளக்க லாகும் அனுபவம் அறித லாகும்


ஸ்ரீகிருஷ்ணர் உரை

5 மனிதரின் உளப்பாடு முக்குணத்தால் மாறுவது உண்டு. அதன் விகிதத்திலேயே, அவர்களுக்குள் நம்பிக்கை ஏற்படுகிறது. நம்பிக்கை மட்டுமே உலகில் எதனையும் நடத்துகின்றது அல்லவா?

மெய்யுடை அணியும் ஆவி மேவிய குணங்கள் மூன்று
ஐயறி யறிவும் ஆகி அமைவுற மனதில் நம்பிக்
கையெனும் கயிற்றைப் பற்றிக் காலசா கரத்தைத் தாண்டச்
செய்திடும் கருவி யென்று சேதனம் அறியக் காண்க

6 உலகத்தில் உள்ள அத்துணை உயிர்களும், செயல்களும் நம்பிக்கையாலே தான் நிலைக்கின்றன. நன்மை, தீமை, செயல், செயலற்ற தன்மை எல்லாம் நம்பிக்கை என்ற ஆதாரத்தாலேதான் நடக்கின்றன.

நம்பிக் கையே ஆதாயம் நடத்தும் அகிலம் ஆதாரம்
நம்பிக் கையே வேதாந்தம் நயக்கும் நியதிச் சமுதாயம்
நம்பிக் கையினால் உருவாகும் நலமே உயிரின் வரலாறும்
நம்பிக் கையினால் கருவாகும் நாளை மறுநாள் வரலாகும்

7 எண்ணம் நம்பிக்கையைத் தருகிறது. நம்பிக்கையே செயலையும், செயலில் வரும் பலனையும் நிர்ணயிக்கிறது. நம்பிக்கையின் தரமோ குணங்களால் அமைகிறது.

தீர்த்த எண்ணத் தாலே தேர்ந்த நம்பிக் கையால்
வார்த்த தாகும் பிறவி வாய்த்த தாகும் வாழ்க்கை
போர்த்த உடலும் கலனும் பொலியும் நலனும் மனமும்
நேர்த்த குணத்தால் ஆகும் நிலையினச் சொல்வ தறிக



8 நம்பிக்கையின் பொருட்டு வழிபாடு நடக்கிறது. குணங்களின் அடிப்படையில், வழிபாட்டு நம்பிக்கைகளைச் சொல்கிறேன். ஸாத்கன் இறையருளையும், ராஜஸன் தேவர்களையும், தாமஸன் பூதங்களையும் வழிபடுவான்.

வேதப்பலனை இறை யருளை வேண்டித் துதிப்பவன் ஸாத்வீகன்
தேவரசுரர் யட்சர் களைத் தேடித் துதிப்பவன் ராஜஸனே
பூதப்பிரேத மான தனைப் பூசித தடைபவன் தாமஸனே
ஓதற்கரிய உயர் வேதம் உரைத்திடும் ரஹஸிய மானதுவே

9 (ஸாத்வீகருக்கான) இறையருள் தேடுவது இயற்கையில் இறைவன் இருப்பதை உணர்வது. தேவர் வணக்கம் உலகில் வளம் சேர்க்கும் முயற்சி. பூத வணக்கம் கேடு நினைத்தும், பிணமாய் சோம்பித் திரியும் பழக்கம்.

இயைறருள் தேடுதல் இன்பது இயற்கையில் தந்நிலை உணருதல்
நிறைபொருள் யட்சினி பயப்பது நிலத்தினில் பலத்தினை வளர்ப்பது
நடைபிணம் பூதங்கள் நயப்பது நடத்தையில் சோம்பித் திரிவது
உடையவர் மனிதரின் உளத்திலே உதிப்பது குணங்களா யறிவது



10 (17-5) ஸாத்வீகர் அல்லாதோர், சாத்திரத்தில் சொல்லப் படாத கடுமையான தவம், விரதங்களால், உடலையும் மனதையும் வருத்திக் கொண்டு, ஆணவத்துடன், பற்றுதலுடன் வேள்வியைச் செய்கின்றனர்.

ஸாத்வீகர் அல்லா தவரே சாத்திரம் சொல்லாத் தவத்தை
நேர்த்துவர் பொல்லாக் கருமம் நெறியுரை கொள்ளாத் தன்மை
சாற்றுவர் ஆசா பாசச் சக்கரம் ஏறிக் கொண்டு
நுாற்றவர் நோகச் செய்யும் நோம்பினை அனுச ரிப்பர்



11 (17-6) அவர்கள் பலவகையான நோம்புகளை ஏற்றுத் தன்னையும், தன்னுள்ளே விளங்கும் என்னையும் வருத்தப்படச் செய்வர். (உடலை வருத்திச் செய்யும் முறையற்ற தவத்தால், உள்ளம் அமைதி இழந்து, ஆன்ம பலமும் குறைகிறது. இது நன்மையானதல்ல. )

தீயினில் நடப்பதும் சித்து தினசரி நிலைப்பதும் முட்கள்
பாயினில் படுப்பதும் உணவு பட்டினி கிடப்பதும் சிறுமை
நோயினில் இளைப்பதும் உடலை நோகிக் களிப்பதும் உறையும்
நேயனைக் களைப்புறக் கடனை நேர்ப்பது மசுரத் தன்மை



12 (17-7) குணத்திற்கேற்ற வகையில் உணவுப் பழக்கம், வேள்வி, தவம், தானம் ஆகியனவும் மூன்று வகைப்படும். இந்நான்கும் குணத்திற்கேற்று அமைவதனை உனக்கு அடுத்துச் சொல்கிறேன்.

உண்ணும் உணவுத் தன்மை உழைக்கும் வேள்வித் தன்மை
பண்ணும் தருமத் தன்மை பயிலும் தவத்தின் தன்மை
எண்ணும் மும்மூன் றாகும் எடுப்பை எடுத்துச் சொல்வேன்
கண்ணும் கருத்தி லாகும் கல்வி அடுத்துச் சொல்வேன்



13 (17-8) ஸாத்வீகரின் உணவு மிதமானதும், சுவையானதும், துாய்மையானதும், மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமானதும் ஆகும்.

ஆயுளை விருத்தி செய்யும் ஆனந்த நிலையைச் செய்யும்
நோயினை களையச் செய்யும் நோம்பிற் குதவச் செய்யும்
வாயினில் சுவையைச் செய்யும் வலிவினை வளரச் செய்யும்
தூயநல் லுணவே வேண்டித் துய்ப்பது ஸாத்வீஹ மாகும்



14 (17-9) ராஜஸிகரின் உணவு உப்பு, காரம் மிகுந்தும், உலர்ந்தும், உஷ்ணமாயும், உடலுக்கும், மனதுக்கும் கிளர்ச்சியையும், தளர்ச்சியையும் உண்டாக்குவதாக இருக்கும்.

உப்பும் கசப்பும் புளி உரைப்பும் நோய் அலர்ந்தும்
மப்பும் மயக்கம் வலி மருளும் வாய் உலர்ந்தும்
தப்பும் தவறும் வழி தகையத் துயர் உதரம்
அப்பும் உணவு நெறி அமையும் ராஜ ஸமே



15 (17-10) தாமஸ குணமுடையோரின் உணவு பழையதாயும், எச்சில் பட்டும், அழுகியும், அசுத்தமாயும், கெட்டுப் போயும் இருக்கும்.

அக்கறை இல்லா உணவு அழுகினும் எச்சில் ஆகிச்
சிக்கெனக் கெட்டுப் போயும் சிதறினும் பழைய தாயும்
சக்கையாய் ஆகிச் சாரம் சற்றுமே இல்லா தாயும்
தக்கையை உணவாய்ச் சேரும் தன்மையே தாமஸ மாகும்



16 (17-11) ( இப்போது வேள்வியாகிய வழிபடுந்தன்மையைின் வகைகளைச் சொல்கிறேன். ) விதிமுறை தவறாது, கடமை என்ற உறுதியுடன், மிகுந்த நம்பிக்கையுடன், பலனை எதிர்பாராத செய்யும் வேள்வி ஸாத்வீகமானது.

விதிமுறை தவறாத் தன்மை விளைவதை விரும்பாத் திண்மை
மதியுரை வழுவா துண்மை மனதினில் நழுவாத் தண்மை
கதியெனக் கடவுள் அறிவு கருத்தினில் இருத்தும் பரிவு
பதிவுறச் செய்யும் செறிவு படைப்பது ஸாத்வீஹ மாமே



17 (17-12) சாத்திரமுறைப்படி செய்தாலும், படாடோபமாகவும், புகழுக்காகவும், பலனை வேண்டியும் செய்யப்படும் வேள்வி ராஜஸிக வேள்வி எனப்படும்.

சட்டப்படி செய்தா லென்ன சாத்திர மறிந்தும் என்ன
இட்டப்படி பலனை வேண்டி ஈவதோர் புகழை வேண்டித்
திட்டப்படி கர்வத் தாலே திகழ்த்திடும் கர்மம் வேண்டி
நட்டப்படி ஆகும் அதையே நடத்ததுதல் ராஜ ஸீகம்



18 (17-13) விதிமுறையற்று, படைக்கும் உணவையும் கிடைக்கும் பலனையும் பங்கிடாமல், தக்க மந்திரங்கள் அற்றும், நம்பிக்கையில்லாமலும் செய்யும் வேள்வி தாமஸமாகும். அது தீமையைத்தான் விளைக்கும்.

கட்டுப் பாடற்றுத் தரும காரிய மற்றுப் பலனை
விட்டுத் தாராமல் கரும விவரம் புரியாமல் உறுதி
சட்டுப் படாமல் சிரத்தை சற்றும் இலாமல் மறதி
மட்டுப் படாத செயலே மத்தியத் தாமஸ மாகும்



19 (17-14) தவம் என்பது தன்னைத் தானே உருக்கி உயர்வடைதல் ஆகும். வேதங்கள் தவத்தினை தேகம், வாக்கு, மனம் ஆகிய மூன்று உபகரணங்களாலும் செய்யப்படும் வேள்வியாக விளக்குகிறது.

தவமே எனச் சொன்னால் தன்னைத் தானே உருக்கி
சிவமாய் குறை இலதாய்ச் சீரமைத்தல் எனச் சொல்வர்
தவமோ மூன்று வகைத் தன்மையது உண்மை யிதை
பவமே லுரைத்த மொழிப் பண்பினை அறிந் திடுக

20 (17-14) தேகத்தில் தவம் என்பது இறைவன், ஆசான், பெற்றோர், அந்தணர் முதலியோரை வணங்கல், துாய்மை, கொல்லாமை ஆகிய பண்புடனிருப்பது. (உயர்ந்தோர்க்குப் பணிதல்)

தேகத்தில் தவம்எது என்றால் தெய்வத்தைத் துதித்தல் அறவோர்
யோகத்தில் பெரியோர் குருக்கள் உண்மைக்குப் பணிந்து போதல்
மோகத்தில் மிதவாத் தன்மை மோதாமை கொல்லா நோன்பு
ஆகத்தன் வடிவால் நேர்மை ஆக்கிடும் தூய்மை அதுவாம்



21 (17-15) வாக்கிலே தவம் செய்வது என்பது சினம் விளைக்காததும், உண்மையுடையதும், இனியதும், வேதபாடம் செய்வதும் ஆகிய மொழிகளையே உரைப்பது ஆகும். (யாதொன்றும் தீமையிலாச் சொற்களைச் சொல்லல்)

வாக்கிலே தவம்எது என்றால் வாய்மொழி வாய்மை ஆகும்
நாக்கிலே வருசொல் நயமும் நன்மையே விளைக்குந் திறனும்
போக்கிலே கோபம் விட்டுப் பொறைநெறி வேதா சாரம்
தேக்கிடத் தெளியும் நாதம் தெரிவிக்கும் பேச்சில் ஆகும்



22 (17-16) மனத்திலே தவம் செய்வது என்பது அமைதி, துாய்மை, மெளனம் ஆகிய பண்புகளால் மனதில் துாய்மையும், அமைதியும் கொண்டிருத்தல். (மனத்துக்கண் மாசிலன் ஆதல்)

மனத்திலே தவம்எது என்றால் மனத்துக்கண் மாசிலன் ஆதல்
குணத்திலே பணிதல் துாய்மை கொள்ளுதல் எண்ணம் நெஞ்சம்
கணத்திலே மாறாத் தன்மை கண்ணியம் கட்டுப் பாடு
எனத்துணை யாகும் மெளனம் என்பதை அறிதல் நன்று



23 (17-17) ஸாத்வீகத் தவம் என்பது (மேலே கூறியபடி) தேகம், வாக்கு, மனம் ஆகியவற்றால் செய்யும் நற்றவம் ஆகும்.

வடிவாலும் வாக்கி னாலும் வைத்தமன நோக்கி னாலும்
முடிவான தவத்தை ஏற்று முயற்சியால் நம்பிக் கையால்
கடிதான யோகம் ஆற்றும் கைப்பலனைத் தாரை வார்க்கும்
படிவான பாதை அறிவாய் பண்புடை ஸாத்வீகத் தவமாய்




24 (17-18) ராஜஸத் தவம் என்பது மதிப்பு, கெளரவம், ஆடம்பரத்திற்காகச் செய்யப்படுவது. அது நிலையற்றது. அற்பமானது.

தனக்கு மதிப்பு வேண்டும் தன்னைப் புகழ வேண்டும்
கணக்குப் பார்த்து எல்லாக் கருமம் நடத்த வேண்டும்
எனக்கு எனக்கு என்றே எண்ணும் அற்ப யோகம்
பிணக்கு ராஜ ஸத்தால் பிறக்குந் தவமாய் ஆகும்



25 (17-19) தாமஸத் தவம் அறியாமையால், தன்னைத் தானே வருத்தியும், பிறரைத் துன்புறுத்தியும் செய்வதாகும்.

அறிவில்லை அதனால் தத்தம் அங்கத்தை வருத்திக் கொண்டும்
பரிவில்லை அதனால் எவர்க்கும் பங்கத்தை விருத்தி செய்தும்
செறிவில்லை செயலில் உள்ளம் சேருதல் ஆகா தான்மா
குறியில்லை குணத்தால் தொல்லை கொள்வது தாமஸத் தவமே



26 (17-20) (தானமும் மேற்கூறிய குணங்களினால், மூன்று வகையாகச் சொல்லப்படும்.) ஸாத்வீகத் தானம் என்பது கைம்மாறு கருதாமல் தக்கோருக்குத் தக்கதைத் தக்க நேரத்தில், தகுந்த அளவு கொடுப்பது ஆகும்.

தகுதி யான வர்க்குத் தகுதி யான பொருளைத்
தகுதி யான சமயம் தகுதி யான இடத்தேப்
பகுதி ஏதும் இன்றிப் பயனும் தேடல் இன்றி
மிகுதி யாகத் தானம் மிக்க ஸாத் வீஹம்

27 (17-20) அறம் செய்ய விருப்பமும், செய்யும் போது சினவடக்கமும், செய்வதைச் சொல்லாப் பணிவும், செய்வோருக்குத் துணையாகும் பண்பும் வேண்டும்.

அறம்செய்ய விருப்பம் வேண்டும் ஆறுகின்ற சினமும் வேண்டும்
அறம்செய்த செயலைப் பேச்சில் ஆற்றாத மனமும் வேண்டும்
அறம்செயத் துணிவார் துணையில் அடங்குதல் வேண்டும் பலனை
அறம்செயப் பெறுத லாகும் ஆசையை அறுத்தல் வேண்டும்


28 (17-21) ராஜஸத் தானம் என்பது மனதில் கிலேசத்துடன், ஏதேனும் ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வதாகும்.

குறையாத மனமும் பயனும் கூடுமோ எனும் பயமும்
திரையாய் ழும் நினைவும் திருப்தி வாரா நிலையும்
நிறையாத தாகும் நெஞ்சும் நிறைஎதிர் பார்ப்ப தஞ்சும்
மறையாத தானம் அறிவாய் மத்திமம் ராஜஸ மாகும்



29 (17-22) தாமஸத் தானம் என்பது தவறான இடத்தில், தவறானபேர்க்குத் தவறானவற்றை, மரியாதை இன்றி, இகழ்ச்சியுடன் செய்வதாகும்.

தகாத பொருளைக் கொள்ளத் தகாத பேர்க்கு நன்மை
உகாத காலா தேசம் உலவிய நோக்கும் உள்ளம்
புகாத பண்பும் கர்வப் பூரிப்பும் அவமானம் செய்தும்
தகாத தாகும் தர்மம் தாமஸத் தானம் ஆகும்



30 (17-23) உணவு, தானம், தவம், வேள்வி ஆகிய பழக்கங்கள் குணத்தால் நிர்ணயிக்கப்படுவன எனும் உண்மையைப். புத்தியால் யோசித்து, முறைப்படி தன் கடமையைச் செய்தாலும், இயற்கை நியதியால், ஏதேனும் பங்கம் ஏற்படுவது உறுதி. (அதாவது, மனிதரின் செயல்களில் அறிந்தும் அறியாமலும் தவறுகள் வருவதியற்கை.)

தானம் தவம் வேள்வி தருவது நலமே எனினும்
பூணும் மனிதர் உள்ளம் புலன்கள் செயலில் கள்ளம்
காணும் அறியா மையினால் கலங்கத்தை குறையைச் சேரும்
பேணும் பூஜா பலனால் பெருமைக்குப் பங்கம் நேரும்

31 (17-23) இத்தவற்றினை மாற்றி, நற்பயன் தர வேதங்கள் ஓம் தத் ஸத் என்ற பிரம்ம மந்திரத்தைத் தரும். இம்மந்திரமே உலகில் பிராமணங்கள், வேதங்கள், வேள்விகள் ஆகியன ஆக்கிய பரம்பொருளின் அடையாளம்.

மாம்ஸத் தாலான உடலில் மாறியே ஆடும் மனதில்
தாமஸத் தாலான செயலில் தன்னறி யாமை யாலே
நாம்செய் ததான பாவம் நலம்பட மாற்றச் செய்யும்
ஓம்தத் ஸத்என்ப தான ஒப்பற்ற வார்த்தை போதும்

32 (17-23) ஓம் தத் ஸத் பிரம்மத்தை மூன்று வகையில் காட்டும். இதில் ஓம் உலகங்களை ஆக்கிய நாதமூலம்.

திடப்பொருள் திரவம் வாயு திரட்டிய தாகும் எல்லாம்
சடப்பொருள் உயிர்கள் பயிர்கள் சகலணு வான துகள்கள்
சுடப்பெறும் தீயில் ஊற்றில் சுற்றிடும் புவியில் காற்றில்
நடப்பவை எல்லாம் ஓம்எனும் நாதத்தில் விளைவ தாகும்

33 (17-23) ஓம், ஓம் என்ற நாதவடிவமே, யாதும் ஆக்கிய தாய். (அணுவிஞ்ஞான ஆய்வினால், உலகில் உள்ள பொருட்களும், உயிர்களும், செயல்களும் ஒலியாகிய மெல்லிய வடிவாலானது அறிவோம். எல்லாவித ஒலி வடிவமும் ஒன்றாய் இணைய, ஓம் என்ற பிரம்மத்வனி கிடைப்பதும் அறிவியல் விளக்கம். )

பிறப்போம் அகிலம் படைப்போம் பிறிதுயிரை வளர்ப் போம்
சிறப்போம் செயல் பயிற்போம் சேர்த்தருள் திறனும் ஓம்
இறப்போம் இயற்கை இயற்போம் ஈர்த்தகிலம் கலைப் போம்
துறப்போம் பிரணவத் துதிப்போம் துாயப்பிரம் மமும் ஓம்

34 (ஓம் எனும் பிரணவமே அனைத்துக்கும் ஆதாரம். )

எல்லாமே ஓம்எனும் நாதம் எழுப்பிய தாம்எனும் தம்
கல்லாயோ கற்பது வேதம் காட்டிய வேதியர் ஓதும்
நல்லாக மாமது யக்ஞம் நடத்துமன நாதப் பிரம்மம்
சொல்லாத சொல்லிது வைரம் சொல்லுவது ஓம்எனும் பிரணவம்



35 (17-24) ஆகவே பிரம்மவாதிகளால் விதிப்படி செய்யப்படும் செயல்கள் எப்போதும் ஓம் என்ற சொல்லுடனே தொடங்கும். அதுவே நல்ல பலன் தரும்.

ஓம்எனத் தொடங்கிச் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்ல
தாம்எனத் தெளியக் காண்க தவறுகள் வரினும் கற்றுக்
காம்பெனக் கிள்ளித் துார்த்தக் களிப்பயன் எடுத்துத் தெய்வம்
நோம்பினை ஏற்றுக் கொள்ளும் நோய்தனை தீர்க்கச் செய்யும்



36 (17-25) தத் என்ற பதம், ஓம் என்ற பதத்தால் வணங்கப்பட்ட பிரம்மத்தை தனக்கு வெளியே இருப்பதாக சுட்டிக் காட்டும்.

தத்என்ற அடுத்த வார்த்தை தள்ளியே நிறுத்திக் காட்டும்
வித்தினைக் குறித்த தாகும் வெளியிலே இருத்தி மீட்டும்
மத்தினைக் கடையத் தெரியும் மறைபொருள் மனதில் முழ்கும்
முத்தினை அடையத் தெளியும் மூலப் பொருளு மாகும்

37 (17-25) என்றாலும், உண்மையான ஆராய்ச்சியால், உலகில் உள்ளவை எல்லாம் ஒரே பொருளாலானது தெரியும்.

அதுஅது எனவே உலகில் அமைவன பிரித்துப் பார்க்க
இதுஇது எனவே உன்னை இருத்திட வேண்டும் சேர்க்கப்
பொதுவித மான தெல்லாம் பூர்க மான தென்னும்
புதுவித மான உண்மை புலப்படத் தெளியக் கூடும்

38 (17-25) தத் என்ற பதத்தினால், தத்துவம் அறியக் கருதிச் செய்யும் செயல்கள் நல்ல பலனையே தரும்.

முக்தியைத் தேடிச் செல்ல முனைவரும் ஞானச் சீலர்
சக்தியை அறிவர் எனவே சாற்றிடும் தத் பரத்தில்
யுக்தியை அறிவர் அதையே உச்சரிப் பதனால் நன்மை
நித்தியம் பெறவ தான நிச்சயம் அறிவ ராவர்.





39 (17-26-27) ஸத் என்ற இறுதிச் சொல் நன்மை என்ற பொருளில் வழங்கி, செய்கின்ற கர்மத்தை உண்மையுடையதாக மாற்றுகிறது. (தன்னுள்ளே உறையும் சீவாத்மா, பரந்துள்ள பரமாத்மாவுடன் இணைவது ஸத்தியம் என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது.)

ஸத்தென்ற இறுதிச் சொல்லே சத்தியம் ஆவ தாகும்
ஸத்தெனும் உறுதி ஆக்கம் சாற்றுதல் ஆகும் நன்மை
வித்திடும் வினையைச் செயலை விளம்பிடும் பரம ஞான
தத்துவம் அதுவே இதுவாய்த் தாரகப் பொருள் குறிக்கும்


40 (17-28) நம்பிக்கை இல்லாமலும், அக்கறை இல்லாமலும் செய்யப்படும் வேள்வி, தானம், தவம் எல்லாம் அஸத் என்கிற பொய்மையாகி விடும். எனவே ஒன்றிய மனத்துடன், யோகத்தை நீ செய்வாயாக.

அக்கறை இல்லா ததனால் ஆக்கிடும் செயல்கள் எல்லாம்
மிக்குற வுறுதல் இல்லை மெய்த்திட முடிவ தில்லை
இக்குண மான யோகம் இன்னாது அஸத்தே என்ற
பக்குவம் அறிவாய் பார்த்தா பணியினில் துணிவு காண்பாய்
Read more ...

சிவபெருமான்

Sunday, January 9, 2011
சிவ பூஜையில் முதலாவதாக சிவாசன பூஜையைச் செய்ய வேண்டும்.

சிவாசனமாவது கிழங்கு, தண்டு, முடிச்சு, இதழ்கள், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றால் வகுக்கப்பட்ட தாமரைப் பூவின் வடிவையுடையதாயும், பிருதிவிதத்துவ முதல் சுத்த வித்தை முடிவாக முப்பத்திரண்டு தத்துவம் முடிவான உயரமுடையதாயும், மேலிருக்கும் சதாசிவ மூர்த்தியுடன் கூட நிவிர்த்தி கலை முதல் சாந்திகலை ஈறான தத்துவம் வரை உயரமுள்ளதாயுமிருக்கும். அதற்கு மேல் சாந்திய தீதகலை அளவாக வித்தியா தேகம் இருக்கும். அதன் சொரூபத்தை அறிதற் பொருட்டு நிவர்த்தி முதலிய கலையின் அளவும், அக்கலையிலடங்கிய தத்துவங்களின் சொரூபமும் கூறப்படுகின்றன. அவை வருமாறு:-

நிவிருத்தி கலையானது நூறு கோடி யோஜனை அளவுள்ள பிரமாண்ட ரூபமாயுள்ளது. அக்கலையில் பிருதிவிதத்துவம் ஒன்றுதானுண்டு அதற்குமேல் ஆயிரங் கோடி யோஜனையளவுள்ள பிரதிட்டாகலை இருக்கிக்கின்றது. அதில் அப்பு முதலிய நான்கு பூதங்களும், கந்தமுதலிய ஐந்து தன்மாத்திரைகளும், ஐந்து கன்மேந்திரியங்களும், ஐந்து ஞானேந்திரியங்களும், மனமும், அகங்காரமும், புத்தியும், பிரகிருதியுமாகிய இருபத்து மூன்று தத்துவங்களுண்டு. அதற்கு மேல் அயுதகோடி யோஜனை அளவுள்ள வித்தியா கலை இருக்கின்றது. அதில் புருடன், அராகம், நியதி, கலை, வித்தை, காலம், மாயை யென்னும் ஏழுதத்துவங்களுண்டு. அதற்கு மேல் லக்ஷங்கோடி யளவுள்ள சாந்தி கலை இருக்கின்றது. அதில் சுத்தவித்தை, மகேசுவரமென்றுமிரண்டு தத்துவங்களுண்டு. அதற்குமேல் பத்து லக்ஷங்கோடி அளவுள்ள சாந்திய தீதகலை இருக்கின்றது. அதில் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களுண்டு. அதற்கு மேல் அளத்தற்கு முடியாவண்ணம் சிவதத்துவமிருக்கின்றது.

நிவிர்த்தி கலை ரூபமான பிருதிவி தத்துவமானது தாமரைக் கிழங்கு அளவாக இருக்கின்றது. பிரதிட்டை வித்தையென்னும் இருகலைகளிலுமடங்கியுள்ள அப்பு முதல் காலமீறான இருபத்தொன்பது தத்துவங்கள் தாமரைத் தண்டாக இருக்கின்றன. அந்தத் தத்துவங்களிலிருக்கும் எழுபத்தைந்து புவனங்கள் முட்களாகும். அந்தப் புவனங்களிலடங்கியுள்ள உயிர்களின் ஐம்பது புத்தி தரமங்கள் தண்டிலடங்கியுள்ள நூல்களாகும். வித்தியா கலையில் காலத்திற்கு மேலிருக்கும் மாயாதத்துவம் தாமரைத் தண்டின் முடிச்சாகும். சாந்திகலையிலிருக்கும் சுத்த வித்தியா தத்துவம், இதழ், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றின் ரூபமாயிருக்குந் தாமரையாக இருக்கின்றது. சுத்த வித்தையின் மேலிருக்கும் மகேசுவர தத்துவமானது சிவனுடைய சூக்கும மூர்த்தியாயிருக்கின்றது. சாந்திய தீத கலையிலிருக்கும் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களும் வித்தியாதேகமாயிருக்கின்றன
Read more ...

சிவபோகசாரம்

Sunday, January 9, 2011
சித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன்
பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை
தருநாதன் நம்குருநா தன். 1

ருவும் உருவும் அருவுருவும் அல்லா
ஒருவ னுயிர்க்குயிரா யோங்கித் – திருவார்
கமலைவரு ஞானப்ர காசனென வந்தே
அமலபதந் தந்தெனையாண் டான். 2

ஆரறிவார் நீதிவழி யாரறிவார் சித்திமுத்தி
ஆரறிவார் நற்றவங்கள் அன்பனைத்தும் – பாரெவர்க்கும்
கத்தன் கமலையில்வாழ் ஞானப்ர காசனெனும்
அத்தனென்போல் வந்திலனா னால். 3

அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாச னாகி
இருக்கின்றா னாரூரில் இன்று. 4

கண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்
துண்டேன் சுகானந்தத் துள்ளிருந்தேன் – வண்டிமிர்காத்
தேனைப் பொழிகமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ர காசனையே நான். 5

உள்ளிருந்தே யென்று முணர்ந்துகினும் கண்டிலரென்(று)
உள்ளும் புறம்புமா வோமென்று – மெள்ள
நரருருவாய் ஆரூரில் வந்தான் நமையாண்
டருள்புரிஞா னப்பிரகா சன். 6

இருளுதய நீங்கும் இரவியைப்போல் என்னுள்
அருளுதய நன்றா யருளி – மருளுதய
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்
சாற்றியஞா னப்பிரகா சன். 7

ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்
விழியா திருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற் கருள். 8

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன். 9

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய். 10
Read more ...

திருப்பாவை

Sunday, January 9, 2011
திருப்பாவை பாசுரம்

திருப்பாவை பாசுரம் ஒன்று சிவாஜி படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஷ்ரேயா introduction பாடலில் கோமதிஸ்ரீ பாடிய மனதை வருடும் பாடல் அது.

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

விளக்கம்
திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு
பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில்
உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம்
போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும்,
பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும்,
கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய
சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே,
இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.
திருப்பாவை பாசுரம் ஒவ்வொன்றும் “ஏலோரெம்பாவாய்” என்று முடிவதைக் காணலாம். பாவையை அல்லது பாவை நோன்பிற் காலந்து கொள்ளும் பெண்களை விளித்துக்கூறும் வண்ணம் அமைந்த வாய்பாடு போலவே இதனைக் கருதவேண்டும். சிலர் இதனை ‘ஏல் ஓர் எம்பாவாய்’ எனப் பிரித்துப்
பொருள் கூற முயல்வர். இவ்வாறு பொருள் கூறுவது எல்லாவிடத்திலும் பொருந்திவராது. ஆதலால் அடிநிறைக்கவந்த சொற்றொடராகவே இதனைக் கொள்ளுதல் தகுதி என்று கூறுவர். திருப்பாவையில் ‘ஏலோரெம்பாவாய்” என்னும் சொல்லுக்கு முன்னரே பாட்டின் பொருள் முடிவு பெற்றுவிடுவது கருத்திற் கொள்ளவேண்டும். சான்றாக “பாரோர் புகழப் படிந்து” “உய்யுமா றெண்ணி உகந்து” “நீங்காத செல்வம் நிறைந்து” எனப் பாசுர முடிவுகள் (திருப்பாவை 1 – 3) பொருள் முற்றுபெற்று நிற்பதைக் காணலாம். “உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்” (திருப்பாவை – 17) போன்ற பாசுர முடிவுகள் இதற்கு விலக்காக அமையும். எனவே பாவை பாடலுக்கு ஏற்ற மகுடமாகவும், அதே சமயம் அடிநிறைக்க வந்த சொற்றொடராகவும் இதனைக் கொள்வதுவே பொருத்தமாகும். பிற்காலத்தில் வந்த பாவை நூல்களும் “ஏலோரெம்பாவாய்” என்றே முடிவு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது


ஆண்டாள்

ஆண்டாளைப் பற்றி சரித்திரக் குறிப்புகள் அதிகம் கிடையாது. குரு பரம்பரைப்படி, ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் கிடந்த பெண் குழந்தை என்று சொல்கிறது. இவளைப் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.

பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து, இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என எண்ணிக்கொடுத்து அனுப்புவாளாம். அதைத் தினமும் செய்து வந்தாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு, “இது தகாத காரியம்” என்று கோபித்துக்கொண்டார். அடுத்த முறை சூடாத மாலையை எடுத்துக்கொண்டு சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உகப்பானது; அதை எடுத்து வாரும்!” என்றாராம்.

பெரியாழ்வார் வியந்து, ‘நம் பெண் மானிடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமித் தாயாராக இருக்கலாம்’ என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, “நீ யாரை மணம் செய்துகொள்வாய்” என்று தந்தை பெரியாழ்வார் வினவ, அவள்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே.

[தேவர்களுக்காக அந்தணர்கள் யாகங்களில் சேர்த்த உணவை காட்டில் திரியும் நரி புகுந்து மோப்பம் பிடிப்பது போல, உடலைப் பிளக்கும் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்ப்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது]

என்று சொல்லிவிட்டாள். அவன் எந்த ஊரான் என்று பெரியாழ்வார் கேட்டு, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தையும் சொல்ல, திருவரங்கனின் பெயர் கேட்டதும் நாணினாள். ‘இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம்? அரங்கனோடு மணம் புரிவதாவது’ என்று பெரியாழ்வார் கவலைப்பட அவர் கனவில் பெருமாள் தோன்றி `”அவளை அலங்கரித்து கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று கட்டளையிட்டார். கோவில் பரிசனங்களுக்கும் அவள் வரவைத் தெரிவித்தார். அவ்வாறே கோதையை அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர, அவர்களுக்குப் பெரிய வரவேற்பு. பெருமானிடத்தில் அவளை விட்டுவிட, கோதை அவருடன் ஐக்கியமாகி மறைந்து போனாள்.

இது ஆண்டாளை பற்றி குரு பரம்பரை சொல்லும் ஏறக்குறைய உண்மையின் அருகில் இருக்கும் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள் ஆண்டாளின் பல பாசுரங்களில் இருக்கின்றன. மேலும் கண்ணன் மேல் ஆசைப்பட்டு, அவனை விரும்பிப் பாவை நோன்பு, ‘வாரணமாயிரம் சூழ வலம் செய்து’ என்று துவங்கும் நாராயணனுடைய திருமந்திரத்தைப் பற்றி பாசுரங்கள் எல்லாம் இந்த வசீகரமான கதையின் அடிப்படையாகின்றன.

அவைகளில் நமக்கு வெளிப்படும் பெண்ணின் தெய்வீகச் சாயல்களுக்கும் திருமாலை மணக்கும் இச்சைக்கும் பொருத்தமாக, பின்னர்தான் ஆண்டாளின் திவ்ய சரித்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். தெய்வத்தை மணக்கும் பெண் தெய்வீகம் பொருந்தியிருக்க வேண்டும். மானிடருக்குப் பிறந்தவளாக இருக்கக்கூடாது என்று அவள், சனக மன்னர் யாக சாலைக்கு ஸ்தலம் எழுப்பும்போது சீதை கண்டெடுக்கப்பட்டதுபோல் கண்டெடுக்கப்படுகிறாள். ‘நாச்சியார் திருமொழி’யில் வரும் பாடல்கள் அனைத்தும் திருமாலை விரும்பி அவருடன் ஐக்கியமாகிவிடும் இச்சையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்கள். அந்தப் பாடல்களுக்கேற்ப சரித்திரம் பின்னப்பட்டிருக்கிறது என்று நம்பலாம். எப்படியாவது என்னைத் திருமாலிடம் சேர்த்துவிடு என்று காமதேவனை வேண்டிக்கொண்டு நோன்பெடுக்கும் பாடல்களில் துவங்குகிறது நாச்சியார் திருமொழி. அதன்பின் கண்ணனின் லீலைகளில் திளைக்கும் பாடல்கள்; தரையில் வட்டம் வரைந்து அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற கவிதைத்தனமான விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலைப் பற்றி பேசுவது;ரணமாயிரம் சூழ வலம் செய்யும் கல்யாணத்தைக் கனவு காண்பது; அவன் ஆடையைக் கொண்டு என்மேல் வீசுங்கள், அவன் திருத்துழாயை என் குழலில் சூட்டுங்கள், அவன் மாலையை என் மார்பில் புரட்டுங்கள், அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள், அவன் அடிப்பொடியை என் மேல் பூசுங்கள்; இப்படி ஆண்டாள் பாசுரங்கள் அனைத்திலும் ஒருவிதமான பாசாங்கற்ற உடல்சார்ந்த விருப்பம் இருப்பதைக் காண்கிறோம். பக்தி மறைமுகமாகத்தான் உள்ளது.

யார் இந்தப் பெண்?

ஆண்டாளின் பாடல்களின் உள்ளடக்கத்திலிருந்து நமக்கு மிக மிக உண்மையான ஒரு பெண்ணுருவம் கிடைக்கிறது. பெரியாழ்வாரின் பாடல்களின் சாயல் இருந்தாலும் அவை ஒரு பெண்ணுக்கே உரிய மென்மையான எண்ணங்கள் வெளிப்படும் பாடல்கள் என்பதில் சந்தேகமே இல்லை. திருமாலின் மேல் அதீதமான விருப்பம் தன் உடலை வாட்டும் ஒரு பெண்ணால்தான் இப்படி எழுத முடியும்.

பிரேமா அருணாச்சலம் எழுதிய ‘பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும்’ என்ற நூலில் பெண் தன் காதல் வேட்கையை வாயினால் சொல்வதற்கு வாய்ப்பூட்டு போடும் தொல்காப்பிய விதியான, “தன்னுள் வேட்கை கிழவன் முற் கிலித்தல் எண்ணும் காலை கிழத்திக்கில்லை” என்கிற தளையை ஆண்டாளே முதன் முதலில் உடைத்தது. ஆண்டாளாகிய பெண் இலக்கியவாதியின் இந்த மரபு மீறலின் குரல் வியப்பானதே” என்கிறார். எனினும் ஒரு தெய்வத்தின் மூலம்தான் இந்த மரபு மீறல் முடிந்திருக்கிறது.

காமமும் காதலும் மிகுந்த இந்தப் பாடல்களை வைணவ சம்பிரதாயத்தில் வேறுவடிவில் பார்க்கிறார்கள். ‘தமிழ் இலக்கியத்தில் வைணவம்’ என்கிற இந்திரா பார்த்தசாரதியின் நூலில் இந்த வரிகள் கவனிக்கத்தக்கவை. இவர் ஸ்ரீ வைணவத்தின் ஒரே பெண் ஆழ்வார். விஷ்ணு பூமியுடன் கொண்ட தொடர்பு நன்கு தெரிந்ததே! மனித குலம் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாக உள்ள பூமி விஷ்ணுவின் கூட்டுறவால் வளமுடையதானது என்பதை மையமாகக்கொண்ட பல கதைகள் தோன்றின. அதனால் காதற் கடவுளான காமன் விஷ்ணுவுடன் இந்த நோக்கில் ஒன்றாகிறான். விஷ்ணு கிருஷ்ணன், காமன் எனப்படுகிறான்; கண்ணனுக்கும் காமனுக்கும் வேறுபாடில்லை. காமனின் பெயரால் திருமால் வழிபடப்படுகிறான். விஷ்ணுவின் பல பெயர்களில் காமனும் ஒன்று என்று மகாபாரதம் கூறுகிறது. ஆகவே இந்த இணைப்பிலுள்ள சிற்றின்பக் கூறு என்பது நாச்சியார் திருமொழியில் உள்ள சிற்றின்பப் பாடல்கள் காமனாக இருந்த கண்ணன் ஆண்டாளிடம் உருவாக்கிய இன்ப உணர்வு மனநிலைகளின் வெளிப்பாடாகும். ஆண்டாளை பூமித்தாயாகவும் விஷ்ணுவை வரங்களை நல்கும் கடவுளாகவும் கொண்டு படித்தால் கோதையின் கதை வேறு பல புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியின் 143 பாடல்களைப் பலர் பலவிதத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். சிலர் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். சிலர் மிக ஆழ்ந்த விசிஷ்டாத்வைதக் கருத்துகளைக் கண்டிருக்கிறார்கள். ஆண்டாளைப் படிப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர் பாடல்களால் பாதிப்பு அடையாமல் இருக்கவே முடியாது.

ஒரு பெண் தன் காதலனை அடையச் செய்யும் பிரார்த்தனைகள், குட்டித் தெய்வங்களிடம் வேண்டுகோள்கள்; சிறு நம்பிக்கைகள் இவைகளை எல்லாம் அழகாகச் சித்திரிக்கும் பலவகைப் பாடல்கள் உள்ளன. அவள் காதலன் மானிடனல்லாமல் திருமால் என்று உயரும்போது அதில் உள்ள காதல் உணர்ச்சிகள் எல்லாம் தூய்மையடைகின்றன. இருந்தாலும் அவள் காட்டும் விருப்பம் மிகமிக மனம் சார்ந்தது. அந்தரங்கமும் அன்னியோன்யமும் எச்சிலும் வாசனைகளும் கொண்டது.

கடவுளா மனிதனா, பக்தியா காதலா என்கிற இருநிலை, நாச்சியார் திருமொழியில் எப்போதும் விரவியிருக்கிறது. ஆண்டாள் தனக்காகப் பாடுகிறார்; சிறுமிகளுக்காகப் பாடுகிறார்; ஆயர்பாடிப் பெண்களுக்காகப் பாடுகிறார்; கூடல் குறிப்புகள் கேட்கிறார். குயில், மேகம் போன்றவற்றைத் தூது விடுகிறார். நேராக வழிபடுகிறார். கனவுகளில் திருமாலை மணந்து கொள்கிறார். இப்படிப் பலவித உணர்வுகளைக் காட்டும் நாச்சியார் திருமொழி, ஓர் இளம் பெண்ணிடம் இத்தனை எண்ணங்களா, சொல்லாட்சியா, இத்தனை அழகான வரிகளா என்று வியக்க வைக்கின்றன. உலக இலக்கியத்தில் வேறு எந்த மொழியிலும் இவ்வகையிலான கவிதைகள் இருப்பதாக தெரியவில்லை. காரைக்கால் அம்மையார், சில சங்ககால அகத்துறைப் பாடல்கள், கன்னடத்தில் அக்கமகாதேவியின் வசனங்கள், மீரா பஜன் போன்றவை ஆண்டாளின் கவிதைகளுக்கு அருகில் வருகின்றன. ஆனால் ஆண்டாள் தருவது முழுமையான உடலையும் உள்ளத்தையும் இரண்டறக் கலக்கும் அனுபவம்.

வாலண்டைன்ஸ் டே- காதலர் தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஆண்டாள் தினம் என்று பெயர் மாற்றலாம். அந்த அளவுக்குக் காதல் தெய்வமான மன்மதன் பண்டிகைக்கான விவரங்கள் தருகிறார். மதமத்தம் பூவும் முருக்கம் பூவும் சேர்த்து, சுவரில் மன்மதன் பேரை எழுதி, பெண் கவரிமானைப் பிடித்துக் கட்டி, கரும்பை வில்லாகக் கட்டித்தந்து நெல், கரும்பு, கட்டியரிசி படைத்து, உதடுகளை வெண்மையாக்கி தலையலர்த்தி ஒரு வேளை மட்டும் உண்டு (இது போன்ற பழக்கங்கள் அந்த நாள்களில் இருந்திருக்க வேண்டும்) இவைகள் எல்லாம் செய்கிறேன் திருமாலை மட்டும் எனக்குக் கட்டிவை என்கிறபோது, மிகமிக யதார்த்தமான ஒரு மானுட நோன்பை தெய்வத்தை அடையப் பயன்படுத்தும் போது, அதன் குறிக்கோள் கொச்சை நீக்கப்படுகிறது. காமம் காதலாகி பக்தியாகிறது.

பெண்களில் சிலருக்கு இளமை, அழகு போன்றவை ஒரு சுமையாக உபத்திரவமாக இருந்திருக்கிறது. மனிதர்களைக் கல்யாணம் செய்வதும் பிள்ளை பெறுவதும் பிடிக்காமல் தெய்வத்தை நாடும் ஒரு விதமான மனப்பாங்கு எல்லா நூற்றாண்டுகளிலும் சில பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்றுகூட பலரை நாம் பாக்கலாம். அவ்வையார், காரைக்கால் அம்மையார், மணிமேகலை, அக்கமாதேவி, மீரா போன்றவர்கள் உதாரணம். இந்த மரபில் வந்த கிறித்தவ கன்னியா ஸ்த்ரீகள், புத்த பிக்ஷுணிகள், பிரம்மகுமாரிகள் இவர்களுக்கெல்லாம் ஆண்டாள் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்பதுதான் அவர்கள் எண்ணங்களின் சாரம். இந்தப் பாடல்களின் ஆழ்ந்த கருத்துகளில் சிற்றின்பத்திலிருந்து பேரின்பம் நாடும் தத்துவத்தையும் பார்க்க முடிகிறது.

நாச்சியார் திருமொழியின் முதல் பத்து பாடல்கள் காமனுக்குத் தொழுதலுடன் துவங்குகிறது. அடுத்த பத்துப் பாசுரங்களை நதிக்கரையில் மணல் வீடு கட்டும் சிறுமிகள், எங்கள் சிறிய வீட்டைக் கலைக்காதே, நாங்கள் போட்ட கோலங்களைச் சிதைக்காதே என்று கெஞ்சும் பாடல்களாக யாத்திருக்கிறார். அடுத்த பத்துப் பாசுரங்களை ஆண்டாள் அதிகாலைப் பொய்கையில் குளிக்கச் சென்ற கன்னிப் பெண்களில் ஒருத்தியாகத் தன்னை எண்ணிக் கொண்டு கண்ணன் அவர்கள் ஆடைகளைக் கவர்ந்து செல்ல அவனிடம் திருப்பித்தா என்று கெஞ்சும் பாடல்களாக எழுதியிருக்கிறார். தலைவனைப் பிரிந்த பெண்கள் அவன் வருவான் என்று நிமித்தம் அறிய தரையில் சுழித்து அது கூடுகிறதா என்று பார்க்கும் வழக்கம் கூடல் குறிப்பு என்று அந்த நாள்களில் இருந்திருக்கிறது. ஆண்டாள் இந்த வகையில் பத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

ஆண்டாள் திருப்பாவை

ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்கு ‘சங்கத் தமிழ்மாலை’ என்றுதான் பெயர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு என்பது குறிப்பிடப்படுகிறது. பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.

“நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை” என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். ‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணனை அனுசரித்த பெண்ணாக தன்னை பாவித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகக் கொண்டு வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த பாவை நோன்பை ஆண்டாள் செய்வதாக யாத்த முப்பது பாட்டுகளின் மேல் வைணவ ஆச்சாரியர்களுக்கு- குறிப்பாக இராமானுஜருக்கு- மிகுந்த ஈடுபாடு. (அவரை திருப்பாவை ஜீயர் என்றும் அழைப்பர்). இதற்கு வைணவ ஆச்சாரியர்கள் பலர் விளக்கம் எழுதியுள்ளனர். அவைகளில் பெரியவாச்சான்பிள்ளை மூவாயிரப்படியும் அழகிய மணவாளப் பெருமான் நாயனார் ஜகந்நாதாசாரியார் போன்றவர்கள் வியாக்கியானங்களும் முக்கியமானவை.

திருப்பாவையின் முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் அனுசரிப்பது வைணவர்கள் வழக்கம். பாவை நோன்பு என்பது பெண்கள் பழகும் ஒரு விதமான austerity. இது எல்லா நோன்புகளிலும் இருப்பதைப் பார்க்கலாம். கிறித்தவர்களின் லெண்ட், இஸ்லாமியர்களின் ரம்ஜான் போன்றவையுடன் ஒப்பிட முடிகிறது. எல்லா மதங்களிலும் நம்பிக்கைகளிலும் கடவுளை அடைய கொஞ்சமாவது மெய்வருத்தம் தேவை என்கிற கருத்து அடிப்படையானது. இதன் அதீத வடிவங்கள்தாம் காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, முதுகுத் தோலில் கொக்கி வைத்து தேர் இழுப்பது போன்றவை.

ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக் கூடியவை

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

“நெய் கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோ ம், கோள் சொல்ல மாட்டோம் (குறளை), அதிகாலையில் (நாட்காலே) குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும் பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு (ஆந்தனையும்) கொடுப்போம். இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது எம் பாவை நோன்பு.”

அதற்காகத் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.

திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவை, கீழ்வானம் வெளுப்பது, கோழி கூவுவது, பறவைகள் ஒலிப்பது, முனிவர்களும் யோகிகளும் துயிலெழுந்து செல்வது போன்றவை. அதை விரிவாகக் கீழே பார்க்கலாம். காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.

மார்கழி மாதம் பெளர்ணமியில் துவங்குகிறது திருப்பாவை. மார்கழி மாதத்தை வைஷ்ணவமான மாதம் என்று சொல்வார்கள். கண்ணன் கீதையில் “மாஸாநாம் மார்க ஸீர்ஷோ அஹம்” என்னும்போது மாதங்களில் நான் மார்கழி என்கிறார். மழை பெய்து பயிர்கள் விழிக்கும்போது உயிர்களும் விழிக்க வேண்டுமல்லவா? மார்கழி மாதத்தில் மட்டுமில்லாமல் எல்லா மாதங்களிலும் பெண்கள் இப்படியே இருந்துவிட்டால் உலகத்தில் கலகமே இருக்காது என்பது யோசிக்கத்தக்கது. பெண்களின் அழகினாலும் அலங்காரத்தினாலும் போர்களே நிகழ்ந்திருக்கின்றதைச் சரித்திரம் கூறுகிறது.

ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந்தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

வருண தேவனே சிறிதும் ஔதக்காதே (கைகரவேல்) சமுத்திரத்தினுள்ளே புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி மாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து அவனுடைய சங்கம் போல அதிர்ந்து முழங்க அவனுடைய சக்கரத்தால் சிதறப்பட்ட சரங்கள் போல மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ நாங்களும் அந்த மழையில் நனையப் பொழிவாயாக.

மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.
Read more ...

ஞானகுரு

Sunday, January 9, 2011
உலகில் நான்குவிதமான பக்தர்கள் இருப்பதாக கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார் – ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி என்று அவர்களைப் பற்றி சொல்வார். ஆர்த்தி என்பவர்கள் தங்கள் குறைகளைக் கூறி துன்பங்களில் இருந்து விடுபடவேண்டும் என்று வணங்குபவர்கள். அர்த்தார்த்தி என்பவர்கள் பொருளை விரும்பி வேண்டி வணங்குபவர்கள். ஜிக்ஞாஸு என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுதலை பெற வேண்டி வணங்குபவர்கள். ஞானி என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு உண்மை நிலையில் உருவமான இறைவனை வணங்குபவர்கள். தற்போது நம் கண்களுக்குத் தெரியும் பக்தர்களில் முதலில் சொல்லியிருக்கும் இரண்டுவிதமான பக்தர்களையே அதிகம் காண்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும் போது ‘குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ என்ற பாடலைக் கேட்கும் போது வித்தியாசமாக இல்லை?


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா – உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா.

விளக்கம்:
வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா…எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா…அதனால் என்ன…நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு…அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர…வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா…நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா…திருமலையில் நிற்கும் என் அப்பா…என்னைக் காப்பவனே கோவிந்தா…

மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா…உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்…என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா…நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்…அது போதும் எனக்கு…நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…

வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது… அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்… அழகிய சுருள்முடியை உடைய கேஸவா… மலையப்பா…நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை…உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது…நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்…ஆனால் அன்னையோ அப்படி அல்ல…அவள் கருணைக்கடல்…என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்…அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா… மணிவண்ணா… மலையப்பா… கோவிந்தா…கோவிந்தா…
Read more ...

யோக வழி 2011

Sunday, January 9, 2011
யோகா என்றால் பலருக்கு புரிந்தது யோகாசனங்கள் தான். உடலை நீட்டி, வளைத்து செய்யும் ஆசனங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் யோகா வெறும் உடற்பயிற்சி ஆசனங்கள் மட்டுமல்ல. ஆசனங்கள் பிராணயாமம் இவை யோகாவின் ஒரு சில அங்கங்கள். உண்மையில் யோகா, ஏட்டுத் தத்துவத்தை விட நடைமுறையில் மனதுக்கும், உடலுக்கும் மருந்தாகும் வழிகளை கூறுகிறது. உடல், மன, இவற்றின் முழு ஆரோக்கியமே யோகாவின் லட்சியம். தவிர ஆன்மீகத்தையும் யோகா போதிக்கிறது.
வடமொழியில் யோகா என்றால் “சங்கமம்” – இறைவனுடன் இணைவது என்று அர்த்தம்.
யோகா ஒரு வாழும் வழி, புலனேந்திரியங்களை கட்டுப்படுத்தி, விருப்பு, வெறுப்பில்லாமல், பற்றன்றி, வாழும் முறைகளை யோகா கற்றுக் கொடுக்கிறது. நாலுவகை நிலைகளை சொல்கிறது. அவை:-
தர்மம்
பிறருக்கும், தனக்கும் செய்ய வேண்டிய கடமைகள், மிதமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தால் அதுவே சிறந்த தர்மமாகும்.
அர்த்தா
சம்சார வாழ்க்கை, சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவது. செல்வத்தை சேர்த்து வைப்பது மட்டுமின்றி அதை சரியாக பயன்படுத்துவது.
காமம்
உடலும், உள்ளமும் ஆரோக்கிய நிலையில் இருக்கும் போது வாழ்வின் இன்பங்களை, நேர்மையான முறையில் அனுபவிப்பது.
மோட்சம்
இந்த பிறவியின் சிற்றின்பங்களிலிருந்து விடுபட்டு, பேரின்பமான மோட்ச நிலையை அடைவது.
ஆசனங்களை போதிக்கும் “ஹதயோகம்” மட்டுமின்றி, இறைவனை அடைய நாலு வழிகளையும் யோகா வலியுறுத்துகிறது. அவை.
1. ஞானயோகம்
அடிப்படையில் இந்த யோகம் ஒரு தியானப்பயிற்சி முழுமனதையும் ‘குவித்து’ ஒரு நிலையில் கொண்டு வரும் பயிற்சி ஜபம், தியானமாகும். அறிவு, ஞானம் இவற்றை நாடி ஆன்மீகம் பற்றி தெரிந்து கொண்டு, சுய முன்னேற்றமடைவது ஞானயோகம் இது இறைவனை அடையும் வழிகளில் ஒன்று.
2. பக்தி யோகம்
இறைவனை தவறாது வழிபடுதல், அவன் புகழை அனுதினமும் பாடுதல்,
இறைவனை அன்புடன் நேசித்தல் இவை பக்தியோகத்தின் சாரம். எல்லாவித ஜனங்களுக்கும் ஏற்ற வழிமுறை கடவுள் பக்தி, நம்பிக்கை இவையாகும்.
3. கர்ம யோகம்
பற்றின்றி பணி செய்தல் கர்மயோகமாகும். உழைக்க வேண்டும். வேலை
செய்ய வேண்டும். செயல்பாடுகள் செவ்வனே இருக்க வேண்டும். செய்யும் தொழிலில் ஈடுபாடு செலுத்தி திறமையாக செய்ய வேண்டும். அதே சமயம் பிரதி பலனை எதிர்பாராமல் பணியாற்ற வேண்டும். தனக்கு விதிக்கப்பட்ட பணிகளை விரும்பி செய்பவர், இறைவனை அடைவார்கள், பற்றின்றி செய்பவர்கள் கர்மயோகிகள்.
4. ராஜ யோகம்
உடல், மனதின் யோகா யோகாசனங்களை விவரிக்கும் “ஹதயோம்”
ராஜயோகத்தின் ஒரு அம்சமாகும். ராஜ யோகம் எட்டு ‘கிளைகள்’ உடையது. அதனால் ‘அஷ்டாங்க யோகம்’ எனப்படும். யமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரதியாஹாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி என்று எட்டு நியதிகள் ராஜயோகத்தில் சொல்லப்படுகின்றன. இந்த எட்டு அம்சங்களில் சொல்லப்படுபவை அற்புதமான அறிவுரைகள், அஹிம்சை, உண்மை, திருடாமை, பிரம்மசரியம், பேராசையின்மை, உடல் மன சுத்தம், திருப்தி, எளிய வாழ்க்கை, சுயஞானம், இறை நெறி போன்றவை போதிக்கப்படுகின்றன.
பகவத் கீதையில் யோகா கீழ்க்கணடவாறு வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
1. வெற்றியிலும், தோல்வியிலும், சமநிலை நோக்குடன் இருப்பது யோகா.
2. யோகா என்பது திறமையும், லாவகமும்.
3. விவரிக்க முடியாத ஆனந்தத்தை கொடுப்பது யோகா.
4. அமைதி, சாந்தம் இவை தான் யோகா.
5. வேதனையை அழிப்பது யோகா.
யோகா ஒரு முழுமையான கல்வி முறை. பரமசிவனால்
ஆரம்பிக்கப்பட்டதால் யோகாவின் ‘பரமகுரு’வாக அவர் கருதப்படுகிறார். பல விதங்களானது யோகா. பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம், ராஜயோகம், தியான யோகம், அஷ்டாங்க யோகம், ஹதயோகம், குண்டலினி யோகம், தாந்தீரிய யோகம், நாதயோகம், கிரியாயோகம், லய யோகம், ஜடயோகம் இத்யாதி யோகங்கள் உள்ளன.
பதஞ்சலி முனிவர் யோகக் கலைகளை தொகுத்து ‘யோக சூத்திரங்கள்’ என்று வடிவமைத்தார். அஷ்டாங்க யோகா (எட்டு வகை யோகங்கள்) பதஞ்சலி முனிவரால் ஒழுங்குபடுத்தப்பட்ட லட்சியங்களும், வழிமுறைகளும், யோகாவின் கொள்கைகளாக கருதப்படுகின்றன.
Read more ...

சிவபெருமான்

Sunday, January 9, 2011
சித்தர்களின் மதம் –எல்லா மதங்களிலும் ஞானிகள் இருக்கிறார்கள். இஸ்லாமிய
மதத்தில் அவர்களுக்கு சூப்பிக்கள் என்று பெயர், பௌத மதத்தில் அவர்களுக்கு
ஜென் ஞானிகள் என்று பெயர். நம் மதத்தில் சித்தர்கள். ஞானிகளுக்கும்
சித்தர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, அது என்னவென்றால் ஞானிகள்
அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள், சித்தர்கள் ஞானத்தில்
சிறந்தவர்களாகவும், சித்திகளில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். மற்ற
மதங்களில் இறை தூதர்களுக்கு மட்டுமே சித்திகள்
தெரிந்திருக்கின்றன.சித்தர்கள் நம் இந்துமத்த்தினை சார்ந்தவர்கள்.
அதற்காக தற்போது கோவில்களில் வேதமந்திரங்கள் சொல்லி சிலைகளுக்கு அபிசேகம்
செய்யும் பிராமணர்கள் போல எண்ணிவிடாதீர்கள்.
இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் சீவனே சிவம் என உணர்ந்து, அதையே
மக்களுக்கு போதித்தவர்கள். இதனால் சித்தர்களை ஏற்காத பல மதவாதிகளும்
உண்டு.இயற்கையான இயல்புகளை உடைத்தெறியக் கூடியவர்களாக மட்டுமல்லது மனதினை
மட்டுமே கடவுளாக போற்றுகின்ற சித்தர்களும் உண்டு. ஆன்மீகத்தில் தன்னையே
கடவுளென போதிக்கும் வகையிலும் சிலர் வருகின்றார்கள். மனதினை அடக்கி ஆளும்
வகையிலே யோகிகளாகவும், பல துறைகளில் சிறந்து விளங்கும் ஞானிகளாகவும்
இருந்திருக்கின்றனர். இப்படி பல்வேறுபட்ட கருத்துகளை சித்தர்கள் பாடல்கள்
நமக்கு சொல்லுகின்றன. குறிப்பாக நான்கு வழிகள்.
1. சாலோகம் – இறைவனோடு ஒரே இடத்தில் இருக்கும் நிலை.
2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.
3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு.
4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.ஜீவாத்மா
பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலை.
அகத்தியர் லிங்க வழிபாட்டினை விரும்பியவராக இருந்துள்ளார். பாம்பாட்டி
சித்தர், அகப்பேய் சித்தர் போன்றோர் மனதினையை கடவுளாக நினைத்துள்ளனர்.
இப்படி பலவகையான கொள்கைகள் உடையவர்களாக சித்தர்கள் இருந்தாலும் அவர்கள்
அனைவரும் சொன்னது மனதினை வென்று உயரிய வழிக்கு செல்லும் முறை
மட்டுமே.சித்தர்களினால் ஏற்பட்ட பலன் –சித்தர்களின் அறிவு திறத்தால்
ரசவாதம், நாடிசோதிடம், பட்சி சாத்திரம், சித்த வைத்தியம், யோகா, தியானம்
போன்ற பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்களைப் பற்றி ஆய்வு
செய்தவர்கள் தற்போது உள்ள சோதனைக் கூடங்கள் போல சிலவற்றை அமைத்து
சித்தர்கள் தங்களது துறையில் வல்லுனர்கள் ஆனார்கள் என்கின்றனர்.
Read more ...

சிவபெருமான்

Sunday, January 9, 2011
சித்தம்
தெளிவான மனக் கொள்கை சித்தம் ஆகும். மனதால் உணர்ந்ததை அறிவு வயப்படுத்தி அதன்பின் மனதாலும் அறிவாலும் அறிந்த கொள்கை முடிபுகளை நிலை நிறுத்திக் கொள்வது சித்தம் ஆகும்.

''அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீபற - பர
ஆனந்தம் கண்டோ ம் என்று தும்பீபற!
மெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர

மேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற! 77
அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற''

என்பது சித்தத்தின் தெளிவைக் காட்டுவதாகும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் வாய்த்து ஆனந்தம் காணும் நிலை சித்தநிலை ஆகும். இந்த நிலையை அடைந்துவிட்டால் துன்ப வலை இல்லை. மேலேற்றம் உண்டு.

இ¢ம்மேலேற்றநிலை பெற்றமைக்கு அமைந்த படிநிலைகளைப் பின்வரும் செய்யுளடிகள் விளக்குகின்றன. இவை முன்பே விளக்கப் பட்டவை என்றாலும் அவற்றை ஒருங்குகூட்டி இந்தப் பாடல் தருகின்றது.
- பரஞ்
சோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற! 78
ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
அறிவே பொருளாம் எனத் தும்பீபற!
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
தெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற! 79
மூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர
முத்தி நிலை சித்தியென்றே தும்பீபற!

ஐம்பொறி அடக்கி, நிறை அறிவே பொருளாகி முக்தி நிலை காணும் பேறே சித்தநிலை ஆகும். மேலும் சித்தநிலையில் தெளிவாகக் கண்ட மெய்மைகளைப் பின்வருமாறு இடைக்காடர் பட்டியல் இடுகின்றார்.

தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச்
செகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற! 80
பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
பற்றற்றோம் என்றேநீ தும்பீபற!
வாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற! 81
எப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல
கெல்லாம் அழியுமென்றே தும்பீபற!
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
அழிவில்லாதது ஆதியென்றே தும்பீபற! 82

இவ்வடிகள் மூலமாக ''உலகப் பொருள்கள் அனைத்தும் அழியும் மாயப் பொருள்கள் ; ஆதியாகிய இறைவனே அழியாதவன் என்பதும், உலகப் பற்று நீங்கவேண்டும்'' என்பதும் ஆகிய உண்மைகள் தெரியவருகின்றன. அதாவது மூவகை மலங்களான ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றில் மாய உலகத்தின் இயல்பை மேற்காண் வரிகள் காட்டுகின்றன. இந்த மாயையை அறியும் அறிவே சித்தம் ஆகின்றது.

மாயா மலத்துடன் ஆணவமும் கன்மமும் கலந்து நிற்க வாய்ப்புள்ளது. இந்த அகக் கருவிகளின் இயல்புகளைச் சித்தம் தொடர்பான செய்திகளோடே இடைக்காடர் தருகிறார்.
Read more ...

சிவபெருமான்

Sunday, January 9, 2011
ஆண்டவனை அறிதல்
''எல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த
வல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே. 67
கட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்
உட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே. 68
அன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே. 76 ''

ஆண்டவன் அனைத்துப் பொருள்களையும் படைத்தளித்துக் காக்கும் வல்வன். ஆனால் அவன் எந்தப் பொருளின் கண்ணுக்கும் நேருக்கு நேராய்த் தெரியாதவன். என்றாலும் அவ்வெல்லாப் பொருள்களிலும் ஒன்றாய் நிற்பவன். உயிர்க்கு முன்னவன். தோற்றுவிக்கப் பட்டப் பொருள்களுக்கு எல்லாம் முன்னவன். எல்லாப் பொருள்களையும் படைப்பதால் அவனே அன்னை. தன்னுள் பிறந்த உயிர்களைக் காக்கும் அன்னையைப் போல் அவன் விளங்கி அனைத்தையும் தன் குழந்தைகளாகக் காத்துவருகின்றான். மேலும் அவன் ''மெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப் பொய்யில் ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே. (70)'' என்றவாறு மெய்யினுள்ளும் பொய்யினுள்ளும் இருப்பாகி நிற்கின்றான் என்று இருப்பிடம்¢ காட்டுகிறார் இடைக்காடர். இது ஆண்டவனை அறியும் அறிவாகும்.
Read more ...

சிவபெருமான்

Sunday, January 9, 2011
முத்தியைப் பெற்றுவிட
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சிவபுண்ணிய நெறிகளில் உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு ஒழுகி வருபவர்களின் மும்மல அழுக்கை நீக்கி அவர்களை ஞானசாகரத்தில் மூழ்குவித்துச் சிவானந்தம் மேலிடச் செய்து மேல் வரும் பிறப்பை ஒழித்து இறைவன் முத்தியைத் தந்தருள்வான் என்று சிவாகமங்கள் ஆகிய சித்தாந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.எனவே சிவாகம நெறியின் படி நடப்பவர்கள் இப்பிறப்பிலேயே முத்தியைப் பெறலாம் என்பது தெளிவு.

சரியை முதலிய நெறிகளில் நின்று எவ்வாறு ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்திகிட்டும்?

சரியையில் சரியை, சரியையில் கிரியை முதலிய பதினாறு வகைகளில், ஞானத்தில் சரியை ஞானத்தில் கிரியை முதலிய நான்கு வழிகளில் நின்று ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்தி கிட்டும்.
அந் நான்கு வழிகள் வருமாறு :-

‘ஞானத்தில் சரியை' என்பது, திருமுறைகள் மற்றும் சைவசித்தாந்தப் பொருள்களைப்பற்றித் தக்கவர்களிடம் ‘கேட்டல்' ஆகும்.

‘ஞானத்தில் கிரியை' என்பது, அவற்றைக் காரண காரிய இயைபுபடுத்தி எடுத்துக்காட்டுக்களையும் கருத்தில் கொண்டு ‘சிந்தித்தல்' ஆகும்.

‘ஞானத்தில் யோகம்' என்பது அவற்றைச் சந்தேகமோ விபரீதமோ இன்றித் தெளிதல் ஆகும்.

‘ஞானத்தில் ஞானம்' என்பது, அவ்வாறு தெளிவடைந்த பிறகு, சிவபெருமானின் திருவருளையன்றி நமக்கு எந்தவிதச் செயலும் இல்லை; அறிவும் இல்லை; என்று நினைந்த ‘சிவபெருமானையே சதாகாலமும் நினைந்திருத்தல்' ஆகும். இதனை ‘நிட்டை கூடுதல்' என்று சாத்திரங்கள் பேசும்.

சாத்திரங்களைக் கற்றலும், பதி, பசு, பாச உண்மைகளை ஆராய்தலும் பர ஞானம் எனப்படும். சரியை முதலிய நான்கனுள் ஈற்றில் உள்ள ஞானத்தை இருவகையாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒன்று அபரஞானம்; மற்றொன்று பரஞானம்.

அபர ஞானம், பரஞானத்தைக் கூடுவிக்கும்; சாத்திரங்களைக் கற்பதோடு அமையக் கூடாது; சரியை, கிரியை, யோகங்களுக்கு அங்கமாகத்தான் சாத்திரங்களை ஓத வேண்டும். சரியை, கிரியை, யோகங்களின் மூலமும் சாத்திர ஞானத்தின் மூலமும் நாம் இறைவனிடத்து, பத்தியை (அன்பை) மிகுவித்துக் கொள்ள வேண்டும். அன்பின் முதிர்வில் இறைவன் குருநாதனாக வந்து ‘பரஞானம்' ஆகிய வியாபக உணர்வை நமக்கு உணர்த்துவான். வியாபக உணர்வின் மூலந்தான், இறைவனோடு இரண்டறக் கலந்து, பேரின்பத்தை அனுபவிக்க முடியும். எனவே பரஞானத்திற்கு பத்தி மிகவும் இன்றியமையாதது என்பதை நாம் நன்றாக உணரவேண்டும்.

இந்நால்வழிகளும் உயிர்கள் முத்தி பெறும்பொருட்டே உள்ளமையால் சைவசித்தாந்த சாத்திரங்களைக் கற்க வேண்டுவது இன்றியமையாததாகும்.

இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
கிளத்தல் என ஈர் இரண்டாம்; கிளக்கின் ஞானம்
வீட்டை அடைந்திடுவர்" (276)

என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.
‘ஞானம் கிளக்கின்' என்பது ஞானத்தில் சரியை என விரித்துக் சுறுமிடத்து என்பது பொருள். ‘நிட்டை கிளத்தல்' என்பது, ‘நிட்டை கூடுதல்' ஆகும்.
Read more ...

தன்னை அறிவதே, உண்மையான அறிதல்

Sunday, January 9, 2011
தன்னை அறிவதே, உண்மையான அறிதல்


வாழ்க்கையின் நெடுகே நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும் , அறிவறிதலில் தலையாயதும், நிலையாயதும், உண்மையானதும் தன்னை அறிதலே ஆகும்.

சித்தர்களும் இதையே முதன்மை படுத்தி சொல்கிறார்கள், இவர்களே இதை முதன்மை படுத்தி சொல்லும் போது தன்னை அறிதல் என்பதைத் தவிர்த்த அறிதல்கள் எதுவும் பெரியதாகாது, இதையே திரு மூலர்,

"என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்"

என்றும்,

"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுக்கிறான்"

என்றும்,

"தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே"

எனச் சொல்கிறார் திருமூலர்.

இதையே சிவவாக்கியார்,

"என்னிலேயிருந்த ஒன்றையறிந்த தில்லையே
என்னிலேயிருந்த ஒன்றை யறிந்து கொண்டபின்
என்னிலேயிருந்த ஒன்றை யாவர் காணவல்லரே
என்னிலேயிருந்த ருந்திருந்து யாதுணர்ந்து கொண்டேனே"

என்கிறார். ஆக , சித்தர்கள் எல்லோரும் மனிதனாய் பிறந்தவன் அறியவேண்டியதில் முதன்மையானது, தன்னை அறிவதே என்கிறார்கள்
Read more ...

சிவபெருமான்

Friday, January 7, 2011
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20

பொருள்:
அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.
சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்
அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து
உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை
முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

குறிப்பு:
1. "சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"
என்ற இவ்வரிகள் அன்பினால் நிறை நிற்கின்ற அடியவர்க்கு மட்டுமல்லாது தத்துவம்
விரும்புவோருக்கு� �் பெரும்பொருள் வாய்ந்தது. திருவாசகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்து,
"இறைவன் தானே வந்து ஆட்கொள்கிறான்." கட்டுண்டு தவிக்கும் பசுக்களாகிய நம் எல்லா
உயிர்களின் பொருட்டு அரியவனாகிய இறைவன் எளிமையாக நிற்பது சித்தாந்தத்தில் காண்க.
அவ்வாறு எளிமையாக வந்திருக்கும் இறைவனைத் தொழுவதற்கும் அப்பெருமானுடைய அருளையே
துணையாகக் கொண்டாலேயே அது முடியும்.
(அருளே துணையாக ... அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே - சம்பந்தர்)
Read more ...

சிவபெருமான்

Friday, January 7, 2011
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

பொருள்:
நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

குறிப்பு:
1. மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற
திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல்
வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது
அவருடைய பணிவன்பின் வெளிப்படை.
2. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப்
போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன.
வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகை
அடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள்
அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும்
வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட� �டதாலும் இறைவனை,
"ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்" எனப் போற்றுகின்றார்.
3. இறைவன் ஒருவனே. (ஏகம் சத் - வேதம், ஒன்றே குலமும்
ஒருவனே தேவனும் - திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும்
பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.
Read more ...

சிவபெருமான்

Friday, January 7, 2011
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

பொருள்:
என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.
பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.
தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள)
பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.
கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.
தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும்
பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

குறிப்பு:
1. வேகம் கெடுத்தல் - துயரம் நீக்குதலைக் குறிக்கும். மனத்தின் வேகத்தையும்
(நிலையில்லாமல் அலைபாய்தல்) அதனால் வரும் கேட்டின் வேகத்தையும் குறைத்து
தன் பால் மனத்தை நிலைபெறச்செய்யும� � ஈசனின் கருணையையும் குறிக்கும்.
2. பிஞ்ஞகன் - பீலி அணிந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.
(இறைவன் குரண்டாசுரனின் பீலியை அணிந்த விபரம் கந்த புராணம் ததீசி முனிவர் வாக்கில் காண்க.)
3. சேயோன் - சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்.
Read more ...

பொங்கல்

Friday, January 7, 2011
காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
கணுப்பிடி

கணுப்பிடி இந்தநாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.
Read more ...

பொங்கல்

Friday, January 7, 2011
மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
Read more ...

பொங்கல்

Friday, January 7, 2011
தைப்பொங்கல்
தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.


பொங்கலை ஒத்த பிற விழாக்கள்

மேற்குநாடுகளில் பொங்கல் போன்றே ஒரு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
Read more ...

பொங்கல்

Friday, January 7, 2011
போகிப் பண்டிகை

போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இதுநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த வருடத்திற்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை.

அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
Read more ...

கேதாரேஸ்வர விரதம்

Friday, January 7, 2011
கேதாரேஸ்வர விரதம் அனுஷ்டிக்கும் முறை

ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்த்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து பூக்கள் வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.
இவ்விரத்தை அனுஷ்டிக்கக் கூடியவர்கள்

ஐந்து மாதங்களிற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும் மாதவிலக்கு நீக்கப்பெற்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருக்கலாம். ஏனையோர் மாதவிலக்கு அம்முறை வந்தபின் அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ 7 நாட்களோ மூன்று நாட்களோ அல்லது அன்றைய தினமோ இவ் விரத்த்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்ட்க்கலாம்.
பூலோகத்தில் இவ்விரதம் பரவிய முறை

சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்ர்வராஜனுக்கு கூறியருளினார். விரத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். மிகவும் வறுமையினால் வாடிய இவ்விரத்த்தை அனுஷ்டிக்க சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார்.
விரதபலன்

தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்
Read more ...

கேதாரகௌரி விரதம் 1

Friday, January 7, 2011
கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தெவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது.

முன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பியைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌதமுனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடுதிரும்பிய மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார்.
Read more ...