நந்திக் கலம்பகம்

Tuesday, November 23, 2010
கலம்பகம்


தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று கலம்பகம், கலம்பகம் என்றால் ‘கலவை’ என்று ஒரு பொருள் உண்டு. பெரும்பாணாற்றுப்படையில்,


‘பல்பூ மிடைந்த படலைக் கண்ணி’


என்ற ஒரு தொடர் வருகிறது, இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ‘பல வகையாகிய பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பக மாலை’ என்று கூறுகிறார். இப்பொழுது பேச்சு வழக்கிலும் பலவகையான பூக்களைச் சேர்த்துத் தொடுத்த மாலையைக் கதம்பம் என்று குறிப்பிடுகின்றனர். கலம்பகம் என்பதே கதம்பம் என்று வழக்கில் மாறி வந்துள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வார் ‘கலம்பகம் புனைந்த அலங்கலந் தொடையல்’ என்று குறிப்பிடுகிறார். இதன் பொருள், ‘பல மலர்களால் புனைந்த மாலை’ என்பதாகும். பல்வேறு மலர்களால் ஆன மாலை கலம்பகம் எனப்படுவது போல பல்வேறு உறுப்புகளும் பொருளும் பாட்டும் கலந்துவரும் பாமாலையான இலக்கிய வகை கலம்பகம் என்று அழைக்கப்படுகிறது. பலவகையான ஓசை நயமுடைய பாக்களும் இனங்களும் உறுப்புகளும் பயின்று, அகமும் புறமும் அகப்புறமுமாகிய திணைகள் விரவி உவகை, பெருமிதம் முதலிய சுவைகளைக் கொண்டதாய்ப் பாடப்படுவது கலம்பகம். கலம் என்றால் பன்னிரண்டையும் பகம் என்பது அதனில் பாதியாகிய ஆறையும் குறிப்பாக உணர்த்தி 18 உறுப்புகளைக் குறிப்பது என்றும் விளக்கம் சொல்வர்.


கலம்பக அமைப்பு


கலம்பக இலக்கியத்தின் பெரும்பாலான உறுப்புகளின் கருக்கள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. பாட்டியல் நூல்கள் கலம்பக இலக்கிய வகையின் உறுப்புகளைக் கூறுகின்றன.


பாட்டியல் நூல்கள் கலம்பக இலக்கியத்தின் முதல் உறுப்புகளாக ஒருபோகு, வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய யாப்பு வகைகளைக் குறிப்பிடுகின்றன. இவை கலம்பக இலக்கியத்தின் தொடக்கத்தில் இடம்பெற வேண்டும். முதல் உறுப்புகள் பாட்டுடைத் தலைவனை வாழ்த்துவனவாக அமையவேண்டும்.


அமைப்பு


பலவகைப் பொருள்பற்றி வெவ்வேறு செய்யுள் வகைகளால் நூறுபாட்டுகள் அமைந்த நூல் கலம்பகம். ஒரு செய்யுளின் இறுதித் தொடர் அல்லது சொல் அல்லது சீர் அல்லது அசை அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமையும் அந்தாதி முறையிலேயே நூறு செய்யுள்களும் அமையும்.


புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்பன கலம்பகத்தின் பதினெட்டு உறுப்புகளாகும். கடவுளுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 90, வணிகருக்கு 50, வேளாளருக்கு 30 எனப் பாடல் எண்ணிக்கை இடம் பெறும் என்றும் இலக்கண நூல்கள் கூறுகின்றன.



நந்திவர்மன் என்ற பல்லவ அரசனைப் புகழ்ந்து பாடப்பட்டது நந்திக் கலம்பகம். இவன் தௌ¢ளாறு எறிந்த நந்திவர்மன் எனப்படுபவன். தௌ¢ளாற்றில் இவன் புரிந்த போர் வெற்றியைக் கலம்பகம் குறிப்பிடுகிறது. இவனது காலம் கி.பி. 825 முதல் கி.பி. 850 வரை. எனவே, இந்த நூல் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பர். இதுவே தமிழில் தோன்றிய முதல் கலம்பக நூல் என்று கூறப்படுகிறது. இதில் 110 பாடல்கள் உள்ளன. சில பாடல்கள் இடைச்செருகலாக இருப்பதால் அந்தாதிப் பாடல் எண்ணிக்கை மாறுபடுகிறது. இதன் பாட்டுடைத் தலைவனும் கிளவித் தலைவனும் நந்திவர்மனே. முதற்கலம்பகமான இதில் புயவகுப்பு, தூது, இரங்கல், மறம், பாண், மடல், ஊசல், காலம், மடக்கு, வெறி விலக்கு, சம்பிரதம், கையுறை, மதங்கியார் ஆகிய 13 உறுப்புகள்தாம் உள்ளன. காலத்தால் முற்பட்டதாதலின் உறுப்புகள் குறைவாகப் பெற்றுள்ளது எனலாம்.


நந்திக் கலம்பகம் உருவானது பற்றிய செய்தி


நந்திவர்மனின் பகைவன் ஒருவன் அவனை ஒழிப்பதற்குப் பல சூழ்ச்சிகள் செய்தானாம். அவை வெற்றி பெறாமல் போகவே, கடைசியில் இவ்வாறு ஒரு சுவையான நூல்பாடி, அதில் அவனுடைய மரணத்திற்கு உரிய வகையில் படிப்படியாகச் சில தொடர்களையும் செய்யுள்களையும் அமைத்து, ஈம விறகு அடுக்கி, அதன்மேல் அரசன் வீற்றிருந்து கேட்குமாறு வேண்டிக் கொண்டான். இவ்வாறு பாடுதலை ‘அறம்பாடுதல்’ என்பார்கள். பாட்டுடைத் தலைவன் அழிவதற்காகத் தீச்சொற்கள் புணர்த்தும் தீய பொருத்தங்களை அமைத்தும் பாடுதல் இது. நந்திவர்மன், தமிழ்ப் பாட்டுகளின் சுவையில் மிகவும் ஈடுபாடு கொண்டவன். இவனைத் தமிழ்த் தென்றல் என்றும் நூற்கடல் புலவன் என்றும் கலம்பகம் குறிப்பிடுகிறது. ஆகையால் அவன் அந்த வேண்டுகோளுக்கு இசைந்தான். பகைவனின் சூழ்ச்சியைப் பற்றி அறிந்த பின்னரும், பாட்டுகளின் சுவையில் திளைத்து ஒன்றுபட்ட அரசன் ஈம விறகின்மேலே அமர்ந்துகொண்டு அனைத்துப் பாடல்களையும் கேட்டான். இறுதிப்பாடல் முடிந்தவுடன் ஈ.ம விறகு பற்றி எரிய உயிர் துறந்தான் என்று சொல்லப்படுகிறது. இது தமிழின் பெருமையைக் காட்டுதற்கும் மன்னனின் அளப்பரிய தமிழார்வத்தைக் காட்டுதற்கும் சொல்லப்பட்ட கதை எனலாம். கவிதை நயம் மிகுந்த அந்த நூறாவது பாட்டு,


வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்

செந்தழல் அடைந்ததுன் தேகம்

யானும்என் கவியும் எவ்விடம் புகுவேம்

எந்தை யேநந்தி நாயகனே.

(நந்திக்கலம்பகம், தனிப்பாடல், 21)


என்பதாகும்.


‘வானுறு மதியை’ என்பதற்கு இரண்டு விதமான பொருள் உண்டு. உன் பொலிவு சந்திரனுக்குத்தான் உண்டு என்பது ஒன்று. உன் பொலிவு சந்திரனை அடைந்துவிட்டது என்பது இன்னொன்று. அப்படியே வீரம், கொடை, செல்வம் மேனியின் நிறம் எனப் பாடலில் வரும் அனைத்திற்கும் இருபொருள் கூறலாம். நந்தி மாண்ட கதையை நம்புபவர்கள் கீழ்க்காணும் பொருளொன்றே கொள்கின்றனர்.


‘வானத்தின் சந்திரனை அடைந்தது, உன் முகத்தின் ஒளி. உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சேர்ந்தது. உன் கொடைவளம் மிகுந்த கைகள், கற்பக மரங்களை அடைந்தன. திருமகள் உன்னை விட்டுத் தன் நாயகனான திருமாலிடமே சேர்ந்து விட்டாள். உன் உடம்போ நெருப்பிடம் சேர்ந்தது. இந்த நிலையில் உன்னைப் பிரிந்து நானும் எனது கவிதையும் எங்கே சென்று சேர்வதோ! எம் தலைவனாகிய நந்திவர்மனே’ என்பது மேற்குறிப்பிட்ட பாடலின் கருத்து.


இந்நூலைப் பாடியவர் காடவர் என்ற கவிஞர் என்று குறிப்பிடுவர். அவர் நந்திவர்மனின் இளைய சகோதரர் என்றும் கூறுவர். தொண்டை மண்டல சதகத்தில் இவ்வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


‘கலம்பகம் கொண்டு காயம்விட்ட தௌ¢ளாற்றை நந்தி’ என்ற தொடரும் ‘நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்ற சிவஞான சுவாமிகளின் செய்யுளடியும் இதற்குச் சான்று என்று குறிப்பிடுவர். நூல் எழுதப்பட்டு முற்றுப்பெறும் காலத்தில் நந்தி இறந்திருக்கலாம். நூலின் தொடக்கத்தில் ‘வடவரை அளவும் தென் பொதி அளவும் விடையுடன் மங்கள விசையமும் நடப்ப’ நந்தி அரசாள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில் ‘செந்தழல் புகுந்ததுன் தேகம்’ என முடிகிறது. நூலாசிரியர் மன்னன் இறந்ததையே இவ்வாறு குறிப்பிட்டிருக்கக் கூடும்.


நந்திக் கலம்பகத்தின் சிறப்பு


ஓர் அரசனைப் புகழும்போது ஒரே வகையான யாப்பினால் பல செய்யுள் இயற்றுவதைவிடப் பலவகை யாப்புகளால் பல செய்யுள் இயற்றும் புதிய மரபைத் தமிழ் இலக்கியத்திற்கு முதலில் வழங்கிய பெருமை நந்திக் கலம்பகத்திற்கு உண்டு. புலவர் தாமே நேரே அரசனைப் புகழ்ந்து பாடுவது பழைய மரபு. ஆனால் நந்திக் கலம்பகத்தில், ஊரார் பாடுவதுபோலவும், வீரன் ஒருவன் தன் தலைவனின் பெருமையைப் பாராட்டிப் பாடுவதாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு வேறு பல துறைகள் அமைத்துச் செய்யுள் இயற்றும் முயற்சியை நந்திக் கலம்பகம் வழங்கியது.


கலம்பக இலக்கியம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்குரிய இலக்கணமாக நந்திக் கலம்பகம் அமைந்துள்ளது.

1 comment: