காப்பியங்களும் புராணங்களும்

Saturday, October 1, 2011
காப்பியங்களும் புராணங்களும்

இக்காலக் கட்டத்தில் பல காப்பியங்களும், புராணங்களும்
தோன்றின. அரிச்சந்திர புராணம் , உதயண குமார காவியம்,
காதம்பரி போன்றவை இக்காலத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க
இலக்கியங்களாகும்.

காப்பியங்கள்

பெருங்கதையில் இடம் பெற்ற உதயணன் பற்றிய ஒரு
காப்பியமும், காதம்பரி போன்ற மொழி பெயர்ப்புக் காப்பியங்களும்
தோன்றின.
உதயண குமார காவியம்

இது, கௌசாம்பி நாட்டு மன்னனான உதயணனின்
வரலாற்றைக் கூறுகிறது. ஆறு காண்டப் பாகுபாடு உடையது. 369
விருத்தப்பாக்களைக் கொண்டது. பெருங்கதையின் முற்பகுதியும்,
பிற்பகுதியும் கிடைக்காமையால் உதயணனின் வரலாற்றை அறிய
இது உதவுகிறது. (பெருங்கதை காலத்தால் மிகவும் முற்பட்டது -
உதயணனின் வரலாற்றைக் கூறுவது). பெயர்தான் காவியமே தவிர,
இதில் காவிய இயல்புகள் இல்லை. பெருங்கதையை அடியொற்றியே
இக்காவியம் செல்கிறது. இக்காவியம் போற்றப்படாததற்குக் காரணம்
இதில் இலக்கியச் சுவை குறைந்திருப்பதே என்பது அறிஞர் கருத்து.
# காதம்பரி

மொழிபெயர்க்கப்பட்ட காவியங்களில் குறிப்பிடத்தக்க ஒரு
நூல், காதம்பரி. இது, கந்தர்வப்பெண் காதம்பரியை உச்சயினி
மன்னன் சந்திராபீடன் மணந்த வரலாற்றைக் கூறுகிறது.
ஹர்ஷருடைய சபையில் கவிஞராக இருந்த பட்டபாணர்
வடமொழியில் வசன நடையில் இதனை எழுதியுள்ளார். அதன்
மொழிபெயர்ப்பே இந்நூல். இதன் ஆசிரியர் ஆதிவராக கவி
ஆவார்.

புராணங்கள்

கி.பி 11 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரையிலான இக்காலக்
கட்டத்தில் புராணங்களும் தோன்றின. தமிழில் தோன்றிய
புராணங்களைப் புராணங்கள் எனவும், புராணக் காப்பியங்கள்
எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். முதற்புராணம்
பெரியபுராணம் ஆகும். புராணம் என்பது பழமையான
நிகழ்வுகளைக் கதை வழியாகக் கூறும் முயற்சியாகும்.
இந்நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்கப் புராணங்களாக,
திருவாதவூரடிகள் புராணம், ஸ்ரீபுராணம் போன்றவற்றைக்
கூறலாம்.
அரிச்சந்திர புராணம்

அரிச்சந்திர புராணம் எனப்படும் அரிச்சந்திர சரித்திரம்,
தமிழ் மக்கள் நன்கு அறிந்த இதிகாசக் கிளைக் கதையாகும்.
இதனுடைய முதற்பதிப்பு இதனை அரிச்சந்திர சரிதம் எனக்
கூறுகிறது. இதனைப் பாடியவர் நல்லூர் வீரை ஆசு கவிராயர்.
நூலின் பாக்கள் சுவையுடையன. எடுத்துக்காட்டாக, அரிச்சந்திரன்
தன் மனைவியின் கழுத்தை வெட்ட வேண்டிய நேரத்தில்
கூறுவதாவது:

உலகுயிர்க்கெலாம் பசுபதி ஒருமுதல் ஆயின்
அலகில் சீர்உடை அவன்மொழி மறையெனின் அதன்கண்
இலகுஅறம் பலவற்றினும் வாய்மை ஈடுஇலதேல்
விலகு உருமல் அவ் வாய்மையை விரதமாக்கொளின்யான்

(அரிச்சந்திரபுராணம், மயான காண்டம், 135)்

(பசுபதி = உயிர்களின் தலைவனாகிய சிவபெருமான்; ஒருமுதல் = தனிப்பெருந்தெய்வம்; அலகில் - அலகுஇல் = அளவில்லாத; இலகு = விளங்கும்; வாய்மை = உண்மை)

சிவபெருமான்தான் முழுமுதற் கடவுள் என்பதும்,
அப்பெருமான் உரைத்ததே வேதம் என்பதும், அவ்வேதத்தில்
கூறப்பட்டுள்ள அறங்களில் இணையற்றது, உயர்ந்தது உண்மை
பேசுதலே என்பதும், அந்த அறத்தை நான் இடைவிடாமல்
கடைப்பிடிக்கிறேன் என்பதும் உண்மையானால், இவ்வாள்
இவளைக் கொல்லாது இருக்கட்டும் என்பது இதன் பொருள்.
# திருவாதவூரடிகள் புராணம்

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம்
545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல்.
சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. பின்னர்
வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில்
மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன்
முக்கியச் சிறப்பு இதுவேயாகும். மந்திரிச்சருக்கம், திருப்பெருந்துறைச்
சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச்
சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற
சருக்கம் என்ற பல பகுதிகள் இப்புராணத்தில் அடங்கியுள்ளன.
சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின்
பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.
# ஸ்ரீபுராணம்

இக்காலத்தில் தோன்றிய மற்றொரு சமணப்புராணமாகும். இது
மகாபுராண சங்கிரகத்தின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர்
பெயர் கிடைக்கவில்லை. இவர் வடமொழிப்புலமையும்,
தமிழ்ப்புலமையும் மிக்கவர் என்பது இந்நூல் மூலம் தெரிய வருகிறது.
இந்நூல் 23 தீர்த்தங்கரர்களின் வரலாற்றைக் கூறுகிறது. இராமாயண,
பாரத, பாகவதக் கதைகள் இதில் பல் வகையான வேறுபாடுகளுடன்
கூறப்பட்டுள்ளன. இந் நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது.
இது உரைநடையாக உள்ளது. கவிதைக்குரிய வருணனைகள்
இந்நூலில் சேர்க்கப்படவில்லை. சமண நூல்களில் இது அளவில்
பெரியது.

இக்காலக் கட்டத்தில் திருப்புத்தூர்க் கோயிலிலுள்ள
சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் ஓங்குகோயில்
புராணம் (கி.பி. 1484) எழுந்தது. இப்புராணம் தற்போது
கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment