நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
மனிதன் தனக்கு வரும் நோய்களை மட்டுமல்லாமல் தான் வளர்த்து வரும் வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, போன்றவற்றிற்கு வரும் நோய்களையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே வீட்டு விலங்குகளுக்கு அவன் பார்த்த வைத்தியம் மனித வைத்தியத்தை மேம்படுத்துவதற்கு உதவியாய் இருந்தது.


இயற்கையோடு தொடர்பு கொண்டிருந்த மனிதன் தன்னைச் சுற்றி வளர்ந்துள்ள மரம், கிளை, இலை, வேர், செடி, கொடி, பூ, காய், கனி, விதை ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கினான். இதனால் அவற்றின் மருத்துவக் குணங்களும் அவனுக்குப் புலனாகத் தொடங்கின. ஆங்காங்கே கிடைக்கக் கூடிய தாவர வகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து அவற்றை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டபோது நாட்டு வைத்தியத்தின் மீதும் வைத்தியர்கள் மீதும் மனிதர்களுக்கு நம்பகத் தன்மை உண்டானது.


நோயுற்றவன் தன் மருத்துவனை நம்புவதும், மருத்துவன் மருந்தை நம்புவதும் காலத்தின் தேவையாகியது. இந்நிலையில், நாட்டு வைத்தியர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். இம்மதிப்பைக் காத்துக் கொள்ள அவர்கள் தமக்குத் தெரிந்த மருத்துவத்தில் மேலும் விளக்கம் தேட முற்பட்டனர் இத்தேடல் முயற்சி அவர்களுககு இத்துறையில் அனுபவ முதிர்ச்சியைத் தந்தது, இப்பெரியோர்களின் அனுபவக் கொடையே நாட்டு மருத்துவமாகும், (நா.சந்திரன் 2002 - 14-16).


நாட்டுப்புற மருத்துவத்தின் பல்வேறு பெயர்கள்


நாட்டுப்புற மருத்துவமானது நாட்டுமருத்துவம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம, பச்சிலை வைத்தியம், முலிகை வைத்தியம், இராஜ வைத்தியம், இரகசிய மருந்து வைத்தியம் என மக்களால் பல்வேறு பெயர்களில் மருந்தின் அடிப்படையிலும் மருத்துவம் செய்கின்ற ஆள் அடிப்படையிலும் அமைந்துள்ளன.


நாட்டுப்புற மருத்துவம் குறித்த விளக்கம்


நாட்டுப்புற மருத்துவம் குறித்து அகக்றை கொண்ட அறிஞர்கள் அவற்றைக் குறித்து விளக்கங்கள் பல கூறினர். இவர்களது இந்த விளக்கங்கள் நாட்டுப்புற மருத்துவத்தை வரையறை செய்ய முயன்றதன் விளைவு எனக் கூறலாம்.


தலைமுறை தலைமுறையாத் தெரிந்து கொண்ட அனுபவத்தின் உதவியோடு எளிய முறைகளில் வீட்டிலேயே நோய்களைப் போக்கிக் கொளளும் மருத்துவ முறையே நாடடுப்புற மருத்துவம் என்கிறது ஸ்டெட்மன் மருத்துவ அகராதி (Stedman's Medical Dictionary).

டான்யாடர் (Don Yoder) என்னும் அமெரிக்க அறிஞர் நாட்டுப்புற மருத்துவத்திற்கு வீட்டு வைத்தியம் (Home Remedies) என்று விளக்கம் தருகிறார். அமெரிக்க டாக்டர் ஜார்விஸ் தமது நாட்டுப்புற மருத்துவம் என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார: ‘உலகில் எங்கு நீங்கள் நோய்வாய்ப்பட்டாலும் நோயைத் தீர்க்க அங்கு இயற்கை மருந்து இருப்பதைப் பார்ப்பீர்கள்’.


நாட்டுப்புறத்து மக்கள் தமக்குற்ற நோய்களைத் தீர்க்கக் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் எனலாம் என்பர் சு.சண்முகசுந்தரம் (நாட்டுப்புறவியல் - 139)


ந. சந்திரன் ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்தந்த நாட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு பாமர மக்கள் தம் பட்டறிவால் செய்துவரும் மருத்துவ முறையை நாட்டு மருத்துவம் எனலாம் என்கிறார்.


ந. சந்திரனின் விளக்கப்படி பாமரர்கள் மட்டுமே நாட்டுப்புற மருத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றாகின்றது. ஆனால் இன்றைய நிலையில் நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்பும் பயனும் கற்றவர்களுக்கும் தெளிவாகியுள்ளன. சில குறிப்பிட்ட நோய்களுக்கு நாட்டுப்புற மருத்துவமே ஏற்றது என்பது தெரியவந்துள்ளது. நவீனமான முறைகளில் நாட்டுப்புற மருந்துகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. ஆகவே இன்றைய நிலையில் நாட்டுப்புற மருத்துவம் பாமரர்க்கானது என விளக்கம் சொல்வது சரியன்று. சந்திரனின் விளக்கத்தில் பாமரன் என்பதை மட்டும் நீக்கினால் போதுமானது.


நாம் நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வருமாறு விளக்கலாம். ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்தந்த நாட்டில் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மக்கள் தம் பட்டறிவால் செய்துவரும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம் ஆகும்.

No comments:

Post a Comment