ஔவையார்

Monday, December 20, 2010
ஔவையார் ஒருமுறை ஓர் ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார். அப்போது ஓர் ஊரைவிட்டுச்சற்று தூரம் போனபின்பு இருட்ட ஆரம்பித்தது. வழியில் ஒரு பாழடைந்த மண்டபம் இருந்தது. சுற்றிலும் முள் புதர்கள் மண்டிப்போய் பார்க்கவே பயமும் அருவெறுப்பாகவும் இருந்தது.
இருந்தாலும் அங்கேயே ராத்தங்கிச்செல்லலாம் என்று முடிவுகட்டி, ஔவாயார் அங்கு தன் மூட்டையை இறக்கிவைது, இடத்தைச் சுத்தம் செய்து அமர்ந்தார். அப்போது அந்தப்பக்கம் வந்த கிரமத்தினர் சிலர், ஔவையாரைப்பார்த்து, "இங்கே ஒரு பயங்கரப்பேய் இருக்கிறது. அது ஆளை அடிக்கும். ஆகவே இங்கு தங்காதீர்கள். எங்களுடன் கிராமத்துக்கு வாருங்கள் என்றார்கள். ஆனால் ஔவையார் அதற்கு இணங்கவில்லை. "என்னை நானே பார்த்துக்கொல்ள்வேன். அத்துடன் எனக்கு இன்னும் ஓரடிகூட அசையமுடியாது", என்று சொல்லிவிட்டார். கிராமத்தினர் மிக வேகமாக அகன்றனர்.
இரவு வந்தவுடன் முதற் சாமத்தில் பயங்கரமாகக் காற்று வீசியது. நரிகள் ஊளையிட்டன. ஆந்தைகள் அலறின. கழுதைப்புலிகள் சிரித்தன. சர்சரவென்று சப்தத்துடன் ஓர் உருவம் தரையிலிருந்து முளைத்ததுபோல் நெடிது உயர்ந்து நின்றது. புகைம்மூட்டத்தில் அது இருந்தது. பார்க்கவே குலை நடுங்கும்வண்னம் இருந்தது.
ஔவையாரைப் பார்த்து பயமுறுத்தி, "எற்றோமற்றெற்றோமற்றெற்று" என்று கூறியது.
அதற்கு ஔவையார், ஒரு பாடலைச் சொன்னார்.

வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற்றெற்றோமற்றெற்று


வெண்பாவை இரண்டுமுறைப் படித்தபோதே புரிந்துகொள்ள முடியாதவனை, வெற்று ஓலையில் கண்ணால் பார்த்துக் கையால் திருத்தமாக எழுதமாட்டாதவனை ஒரு பெண்பாவி பெற்றாளே!
பெற்றதும் பெற்றாள், பிறர் சிரிக்கப் பெற்றாள்; அப்படிப்பட்டவளை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?

பேய் பெரிதாக அலறிக்கொண்டு ஓடிப்போனது.
இரண்டாம் ஜாமத்தில் மீண்டும் பெரிய காற்று, இடி, மின்னலுடன் வந்தது.
மீண்டும், "எற்றோமற்றெற்றோமற்றெற்று" என்று அரற்றியது.
ஔவையார் இன்னொரு பாடலைச் சொன்னார்.

கருங்குளவிசூரைத்தூறீச்சங்கனிபோல்
வருந்தினர்க்கொன்றீயாதான் வாழ்க்கை - அரும்பகலே
இச்சித்திருந்தபொருள் தாயத்தார்கொள்வாரே
எற்றோமற்றெற்றோமற்றெற்று


ஈச்சமரம் ஒன்று. அதில் கருங்குளவி என்னும் கடுவிஷம் கொண்ட குளவி கூடுகட்டி ஏராளமாக இருக்கிறது. சூரை என்னும் முள் அந்த மரத்தின் தூறில் இருக்கிறது. அந்த ஈச்ச மரத்தின் கனியை யாரும் அண்டி, பறித்து உண்ணமுடியாது. துன்பப்பட்டவர்களுக்கு ஒன்றுமே தானம் செய்யாதவன் வாழ்க்கை எப்படியிருக்கும்? பகலில் அவன் மிகவும் இச்சையுடன் வைத்திருந்த பொருள் அன்று இரவிலேயே பங்காளிகள் கைக்கொள்ளும்வண்ணம் அவன் போவான். அந்த மாதிரி ஈயாலோபியை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?

இதைக் கேட்டு பேய் ஓலமிட்டவாறு ஓடிப்போய்விட்டது.
மூன்றாம் சாமத்தில் மீண்டும் வந்தது. அப்போதும் அது "எற்றோமற்றெற்றோமற்றெற்று!"
என்று அலறியது.
மூன்றாவது பாடலையும் ஔவையார் சொன்னார்.

வானமுளதான் மழையுளதான் மண்ணுலகிற்
றானமுளதாற்றயையுளதால் - ஆனபொழு
தெய்த்தோமிளைத்தோமென்றேமாந்திருப்போரை
எற்றோமற்றெற்றோமற்றெற்று

வானமும் இருக்கின்றதால், மழையும் இருப்பதால், மண்ணுலகில் தானமும் இருப்பதால் தயையும் இருப்பதால் நமக்கு என்ன கவலை? சம்பாதித்தோம், இழந்தோம் என்றவண்ணம் கருக்கடையோ சமர்த்தோ இல்லாமல் ஏமாந்து இருப்போரை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?

பேய் மீண்டும் ஓடிப்போய்விட்டது.
நான்காவது ஜாமத்தில் மீண்டும் பேய் வந்தது. அப்போது அது மிகவும் நெருங்கி வந்து,
"எற்றோமற்றெற்றோமற்றெற்று" என்றது.
அதற்கு ஔவையார் நான்காவதாக ஒரு பாடலைப் பாடினார்.

எண்ணாயிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம்பற்றாக்கிடையேபோற் - பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற்சாராரை
எற்றோமற்றெற்றோமற்றெற்று

எட்டாயிரம் வருடங்கள் தண்ணீரில் ஊறினாலும் உள்ளுக்குள் ஈரத்தைப் பற்றி இழுத்துக்
கொள்ளாத கிடையைப்போல சிலர் இருப்பர். அவர்கள் இந்த உலகிலேயே வாழ்ந்தாலும் இதன் போகங்களில் ஒன்றான பெண் போகத்தில் ஈடுபடாமலிருப்போரை, ஏ பெண்ணாக இருப்பவளே! நீ போய் அவர்களை எற்று, மறுபடியும் எற்று; மீண்டும் எற்று! என்னை ஏன் எற்றுகிறாய்?

இந்த வெண்பாவில் அடங்கிய கருத்துக்கள் அனைத்துமே யதார்த்தமானவை. நியாயமானவை. "அப்படியேல்லாம் ஆட்கள் இருக்கும்போது என்னை ஏன் எற்றவருகிறாய்?
எற்றுவதென்றால் அவர்களைப்போய் எற்று!"

இந்தப் பாடலைச்சொல்லியவாறு, தன் திருநீற்று மடலிலிருந்து ஒரு பிடி திருநீற்றை எடுத்து அந்தப் பேயின் மீது வீசினார்.
"முன்னால் வந்து நில் அப்படியே! பேசு! யார் நீ? ஏன் இப்படிச் செய்கிறாய்? என்ன
வேண்டும் உனக்கு?", என்று பேயைக்கேட்டார்.
பேயின் உருவம் மங்கியது. மீண்டும் வேறொரு உருவம் அங்கு தெரிந்தது.
மிக அழகிய இளம் பெண்.

அது தன் கதையைச் சொன்னது.....

தன் பூர்வீக வாழ்வில் அது ஓர் அரசகுமாரியாக இருந்தது.
பெயர் ஏலவார்குழலி.
மிக அழகான பெண். பலகலைகளையும் அறிந்தவள்.
ஊருக்கு வெளியில் தனியாக இருந்த கன்னிமாடத்தின் பூந்தோட்டத்தில் ஒருநாள் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.
அப்போது அழகிய இளைஞன் ஒருவன் கன்னிமாடத்திற்குள் எப்படியோ வந்துவிட்டான். அப்படியே நந்தவனத்தின் பக்கத்தில் வரும்போது, அரசகுமாரி தட்டிய பூப்பந்து அவன் மேல் விழுந்தது. அதை அப்படியே பிடித்துக்கொண்டான். அதைக் கொண்டுவந்து அரசகுமாரியிடம் கொடுத்தான். கண்டவுடன் காதல் தோன்றியது. அதன் பின்னர் வந்த வழியே போய்விட்டான்.
அரசகுமாரி அவனை யாரென்று கண்டறிய தன்னுடைய அந்தரங்க உளவாளிகளை அனுப்புஇனாள்.
அவன் இன்னொரு நாட்டு இளவரசன். நாடுகளைச்சுற்றிப் பார்க்க அவன் புறப்பட்டவன். வழியில் இந்த நாட்டுக்கும் வந்திருக்கிறான். ஒரு சத்திரத்தில் அவன் தங்கியிருக்கிறான்.
உடனே அவனை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டு, அரசகுமாரி ஒரு காதல் மடலை எழுதினாள். அதில் கன்னிமாடத்தின் அருகே இருக்கும் நந்தவனத்தில் மணிமண்டபத்துக்கு அன்று இரவு இரண்டாம் ஜாமத்தில் வரச்சொல்லி, அதற்குப்
பாதையையும் தெரிவித்தாள்.
இதை மிக ரகசியமாக அவனுக்கு அனுப்பிவைத்தாள்.
சத்திரத்தில் அரசகுமாரனிடம் அந்த மடல் சேர்ப்பிக்கப்பட்டது.
கடிதத்தைப் பார்த்து இளவரசன் திகைத்தான்.
ஏனெனில் இளவரசனுக்கு எழுதப் படிக்கத்தெரியாது.
அருகில் ஒரு சன்னியாசி அமர்ந்திருந்தான். அவன் ஒரு தொழுநோயாளி.
அவனிடம் ஓலைக்கொடுத்துப் படிக்கச்சொன்னான்.
ஓலையைப் படித்து அறிந்த சன்னியாசி, ஒரு சதித்திட்டம் போட்டான்.
இளவரசனைப் பார்த்து, "நீர் இந்த நாட்டு இளவரசியின் கன்னிமாடத்துக்குள் அத்துமீறி நுழைந்துவிட்டதால் உம் தலையை வாங்குமாறு உத்தரவாகியிருக்கிறது. காவலாளிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்", என்றான்.
இளவரசன் சன்னியாசியிடம் என்ன செய்வதென்று யோசனை கேட்டான்.
உடனடியாக ஓடிப்போகச் சொன்னான்.
இளவரசனும் உடனடியாக ஊரைவிட்டு நாட்டைவிட்டுப் போனான்.
இரவு இரண்டாம் ஜாமத்தில் சன்னியாசி தன்னைச் சால்வையால் போர்த்துக்கொண்டு மண்டபத்துக்குச்சென்றான். அங்கு வந்த இளவரசி அவன்தான் இளவரசன் என்றெண்ணி அவனைத் தழுவிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்தே சன்னியாசியை அறிந்துகொண்டாள். அவனும் அரசகுமாரியைப் பலாத்காரம் செய்தான். அதனால் அரசகுமாரி கத்தியால் குத்திக்கொண்டு இறந்துபோனாள்.
இறந்தவள் ஒரு பயங்கர பேயாக மாறினாள்.
அவளுடைய பைசாச வெறியால் அந்த வட்டாரத்தையே நாசப்படுத்திப் பாழடையவைத்தாள். அங்கு வருபவர்களையும் கொன்றுபோட்டாள்.
காதலில் தோல்வியடைந்து உயிருக்குப் பயந்து ஓடிய இளவரசனும் மனம் நொந்துபோய் இறந்துபோனான்.
அவனும் இன்னொரு இடத்தில் பேயாக அலைந்துகொண்டிருந்தான்.
இதையெல்லாம் சொல்லிமுடித்த அந்த அரசகுமாரிப் பேய் ஔவையாரின் கால்களில் விழுந்தது.
ஔவையார் அந்தப் பேயின்மேல் இரக்கம் கொண்டார்.
"நீ உடனடியாக மறுபடியும் பிறப்பாய். நீ ஒரு பெரிய வித்வம்சினியாக இருப்பாய். அறுபத்துநான்கு கலைகள், சாத்திரங்கள், மொழிகள் அறிந்த புலவராக இருப்பாய். உன்னைத்திருமணம் புரிய வருபவர்களுக்கெல்லாம் கடுமையான சோதனைகள் வைப்பாய். அவர்கள் தோற்று உன் அடிமைகளாவார்கள். உன் காதலனாகிய இளவரசன் இன்னொரு ஊரில் பிறப்பான். அவன் ஒரு பெரும்புலவனாகவும் வீரனாகும் திகழ்வான். அவன் உன்னை வென்று உன்னைத் திருமணம் செய்துகொள்வான். நீங்கள் இருவரும் பல காலம் வளமுடன் வாழ்வீர்கள்".

No comments:

Post a Comment