திருமூலர்

Monday, December 20, 2010
திருமூலர் காலத்திலும் சைவத்திற்கும் வைணவத்திற்குமான சண்டை, சச்சரவுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. திருமூலர் தீவிரமான சைவர், சிவனே தன் தலைவன் என்ற கொள்கையில் ஆழமான பிடிப்புள்ளவர். எனவேதான் அவர் சைவ நாயன்மார்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். ஆனால் மதத் தீவிர வாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே நாயனார் திருமூலர்தான். இந்தக் கூற்றிற்குச் சாட்சியாக திருமந்திரத்திலிருந்து இரு பாடல்களைக் காணலாம்.

“ஒன்றது பேரூர் வழி

ஆறு அதற்குள்

என்றது போல இருமுச் சமயமும்

நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்

குன்று குரைத்தெழு நாய் ஒத்தார்களே”

திருமந்திரம் பாடல் எண்-1543

ருமூலர் வாழ்ந்த காலத்தில் ஆறு சமயங்களே முக்கியமானவையாக இருந்தன. இப்பாடலின் இரண்டாம் வரியில் இருமுச் சமயமும் என அந்த ஆறு சமய நெறிகளையே குறிப்பிடுகிறார் திருமூலர்.

பாடலின் முதல் இரண்டு வரிகளில் வீடுபேறு எனும் முக்தி நிலையை ஒரு பெருநகரமாகவும், ஆறு சமயங்களையும் அந்த நகரத்தைச் சென்றடையும் ஆறு வீதிகளாகவும் உருவகப் படுத்துகிறார் திருமூலர். பெரும்பாலான கிராமங்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கும். கிராமத்தின் உள்ளே செல்லும் அந்த வீதியில்தான் வெளியே வரவும் முடியும்.

ஆனால் பெரு நகரங்களைப் பொறுத்தவரையில் பல வீதிகள் பல இடங்களிலிருந்து அங்கே வந்து சேரும் நகரத்தின் அளவும் முக்கியத்துவமும் அதிகமாக அதிகமாக, அதில் வந்து சேரும் வீதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக ரோம சாம்ராஜ்ஜியம் திகழ்ந்தபோது, அதன் தலைநரான ரோம நகரமே உலகின் மிக முக்கியமான நகரமாகக் கருதப்பட்டது. எனவேதான் எல்லா வீதிகளும் ரோம் நகரையே வந்தடைகின்றன என்ற பிரபலமான சொற்றொடர் உருவாகியது.

மனிதப் பிறவியின் அர்த்தம் அல்லது நோக்கம் வீடுபேறு எனும் முக்தி நிலையை அடைவதே. இந்த நிலையை ஒரு பெரிய நகரம் வீதி என்று வர்ணிக்கிறார் திருமூலர். இந்த நகருக்கு நம்மைக் கொண்டுசெல்லும் ஆறுகளாக ஆறு சமயங்களும் இருக்கின்றன என்பதே முதல் இரண்டு வரிகளின் அர்த்தமாகும். ஒன்றது பேரூர் வழி ஆறு அதற்குள் என்றது போல இருமுச் சமயமும், ஆறு சமயங்களும் முக்திநிலை என்ற இலக்கை நோக்கியே நம்மை வழிநடத்துகின்றன. வழிமுறைகள் வெவ்வேறு¡க இருந்தாலும் இலக்கு ஒன்றுதான். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத மூடர்களே இது நல்ல சமயம், இது தீய சமயம் என தங்களுக்குள் வாதித்து மண்டையை உடைத்துக்கொள்கின்றனர். ‘நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்’ என்ற மூன்றாவது வரி இதையே எடுத்துரைக்கின்றது.

இவ்வாறு வீண் வாதங்களில் ஈடுபடும் வீணர்களை வர்ணிக்க ‘நாய்’ என்ற கடுமையான வார்த்தையை உபயோகிக்கிறார் திருமூலர்.

‘குன்று குரைத்தெழு நாய் ஒத்தார்களே’

குரைத்து குரைத்தே ஒரு பெரிய மலையை வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் நாய்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் என்பதே இந்த நான்காவது வரியின் பொருளாகும். மலை (குன்று) என்ற உவமையில் ஒரு அற்புதமான சூட்சுமம் ஒளிந்து நிற்கிறது. வழக்கமாக கவிஞர்கள் ‘சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற்போல்’ என்று கூறுவதுதான் வழக்கம்.

திருமூலர் சற்றே மாறுபட்டு மலையைப் பார்த்துக் குரைக்கும் நாய்கள் என்கிறார். ஏன்? சூரியன் என்பது பூமியில் உயிர்கள் வாழ ஆதாரமான ஒரு சக்தி. வெப்பம், தகிப்பு, ஜொலிப்பு, சுட்டெரித்தல் போன்ற பல குணங்களை சூரியனுக்குக் கூறலாம். இவை தவிர பகலில் தோன்றி இரவில் மறையும் தன்மையும் சூரியனுக்கு உண்டு. மலைகள் இதற்கு எதிரான தன்மைகளைக் கொண்டவை.

வெப்பம், தகிப்பு, ஜொலிப்பு போன்ற எந்த ஆரவாரங்களும் மலைகளுக்குக் கிடையாது. அவை நிரந்தரமானவை. சூரியனைப் போல் தோன்றி மறைவது இல்லை. உறுதியானவை. நிலைத்தன்மை கொண்டவை. மனதிற்கு இதமளிக்கும் குளிர்ச்சியே மலைகளின் விசேஷத் தன்மை. (எனவேதான் கோடையை வெல்ல மலை வாசஸ்தலங்களுக்குச் செல்கிறோம்)

மதங்கள் மலைகளைப் போன்றவை. அன்பு, அகிம்சை (குளிர்ச்சி) ஆகியவற்றை போதிப்பவை. மனதிற்கு இதத்தையும் ஆறுதலையும் அளிப்பவை. உண்மையான மதங்களில் வெப்பம், தகிப்பு, ஜொலிப்பு ஆகியவற்றிற்கு இடமில்லை. எனவேதான் மதங்களுக்கு உவமையாக மலைகளைக் கூறுகிறார் திருமூலர்.

இதுதவிர வேறு ஒரு சூட்சுமமும் உள்ளது. சூரியனின்றி எந்த உயிரும் பூமியில் உயிர்வாழ முடியாது. மலைகள் இன்றி உயிர் வாழலாம். அதுபோன்றே மதங்கள் இன்றியும் மனிதன் உயிர்வாழ முடியும்.

இந்தச் சிறிய உவமையை மனதில் அசைபோட, அசை போட மேலும் பல சூட்சுமங்கள் உங்கள் உள்ளத்தில் உதிக்கும். திருமந்திரப் பாடல்களின் தனிச்சிறப்பே இதுதான். சுவைக்கச் சுவைக்க பேரின்பம் ஊற்றெடுக்கும். இதே கருத்தை வலியுறுத்தும் வேறொரு திருமந்திரப் பாடலையும் காணலாம்.

‘இத்தவம் அத்தவம் என்று இரு பேரிடும்

பித்தரைக் காணில் நகும் எங்கள் பேர்நந்தி

எத்தவம் ஆகில் என் எங்கு பிறக்கில் என்

ஒத்து உணர்வார்க்கு ஒல்லை ஊர் புகலாமே.

-திருமந்திரப் பாடல் எண் – 1153.

சமயங்கள் கூறும் வழிமுறைகளையும் நெறிமுறைகளையுமே ‘தவம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் திருமூலர். அனைத்து சமயங்களும் நல்வழிகளையும் நன்நெறிகளையுமே போதிக்கின்றன.

எந்த சமயமும் தீய வழிகளைப் போதிப்பதில்லை. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இந்த நெறி, அந்த நெறி (இத்தவம், அத்தவம்) என்று வெவ்வேறு பெயர்களைச் சூட்டி எது உயர்ந்தது என வாதித்தும் போரிட்டும் நேரத்தைக் கழிப்பவர்களை பித்தர்கள் என்கிறார் திருமூலர்.

இத்தகைய பித்தர்களைக் காணும் போது நந்தி தேவன் நகைப்பான்.

‘இத்தவம் அத்தவம் என்று இரு போரிடும்

பித்தரைக் காணில் நகும் எங்கள் பேர்நந்தி’

நந்திதேவன் சிவனின் ரூபவடிவம் என்பது சைவக் கோட்பாடு. தன் தலைவனான சிவனை திருமந்திரத்தின் பல பாடல்களில் நந்தி என்றே குறிப்பிடுகிறார் திருமூலர். இந்த வழி, அந்த வழி என்று பேதம் பிரித்துப் பார்க்கும் பேதைகளைக் கண்டு நகைப்பானாம் சிவன். நகும் என்ற சொல்லிலும் ஒரு சூட்சுமம் உள்ளது.

சிரிப்பு என்பது சந்தோஷ த்தில் கூட வரும், ஆனால் நகைப்பு என் பது ஒரு முட்டாள் தனமான செயலைப் பார்த்து வருவது, பிறரை கேலி செய்து சிரிப்பதையே நகைப்பு என்கிறோம். நகைப்புக்கிடமான செயல் என்று கூறுகிறோம் அல்லவா?

சமயங்களை வேறுபடுத்தி, பேதப்படுத்திப் பார்ப்பதும் ஒரு முட்டாள்தனமான, நகைப்புக்கிடமான செயல் என்பதாலேயே இந்த இடத்தில் நகும் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் திருமூலர்.

இந்தப் பாடலின் மூன்றாவது வரிதான் மிக மிக முக்கியமானது. சமுதாய மறுமலர்ச்சிக்கான ஒரு விதையை இந்த வரியில் தூவியிருக்கிறார் திருமூலர். எத்தவம் ஆகில் என் எங்கு பிறக்கில் என்!

எந்த சமயத்தைச் சார்ந்திருந்தால் என்ன? எங்கு பிறந்திருந்தால் என்ன? திருமூலர் வாழ்ந்த காலகட்டத்திற்கு இந்த வரி மிக மிக புரட்சிகரமான ஒன்று.

எனது சமயமே உயர்ந்தது என ஆறு சமய வாதிகளும் தமக்குள் வாதிட்டுக் கொண்டும், ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டுமிருந்த ஒரு காலகட்டத்தில் (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு) எந்த சமயத்தைப் பின்பற்றினாலும் தவறில்லை என்ற கருத்து மிக மிகப் புரட்சிகரமான ஒன்று.

இதைக் கூறுவது சைவத்தையே தனது உயர் மூச்சாகக் கொண்ட ஒரு நாயனார் என்பதை நினைக்கும்போது நமது வியப்பு பன்மடங்காகிறது.

‘எம்மதமும் சம்மதமே’ என்று கூறிய பெரியவர்களில் மிகமிக முக்கியமானவர் திருமூலர்! மதம் என்பது மனிதர்களது மனதைப் பண்படுத்துவதாக இருக்கவேண்டும். எந்த மதமும் பிறர் மனதைப் புண்படுத்தச் சொல்லுவதில்லை.

சைவத்தின் மீது திருமூலர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடே எத்தவம் ஆகில் என்? என்று அனைத்து மதங்களும் நன்றே என ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை அவரிடம் உருவாக்கியிருக்கிறது. ‘எங்கு பிறக்கில் என்’ எம்மதமும் சம்மதம் என்ற கருத்தைவிடவும் ஒரு படி மேலான கருத்து இது! பிறப்பால் உயர்சாதி, கீழ்சாதி என்ற வர்ண பேதங்கள் திருமூலர் காலத்தில் தமிழகத்தில் வேரோடியிருந்தது.

சைவ சமயத்தில் சாதி பாகுபாடுகளுக்கு இடமில்லை என்றாலும், ஆரியர்களின் ஆதிக்கத்தால் சைவ சமயத்தினுள்ளும் சாதி எனும் நஞ்சு திருமூலர் காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே பரவியிருந்தது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் பாடல்கூட, திருவள்ளுவர் காலத்திலேயே (சுமார் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு) தமிழகத்தில் சாதி எனும் பேய் தலைவிரித்தாடியிருக்க வேண்டும் என்பதையே நிலை நிறுத்துவதாக உள்ளது.

கீழ்சாதியில் பிறந்த நந்தனார் ஒரு சைவ நாயனாராக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, நந்தனார் சரித்திரம் அக்காலத்தில் ‘தீண்டாமை’ இருந்ததற்கும், கீழ்சாதியினர் கோவிலுக்குள் நுழைய தடை இருந்தது என்பதற்கும் சாட்சியமாக உள்ளது! ஆக, சைவ சமயத்திலும் சாதிப் பேய் வேரூன்றியிருந்த ஒரு காலகட்டம் அது.

எங்கு பிறக்கில் என் என்ற கருத்து அந்த காலகட்டத்திற்கு மிக மிகப் புரட்சிகரமான ஒன்று. சித்தர் இலக்கியங்கள் அனைத்திலும் இந்தக் கருத்து முன்னிறுத்தப்படுவதைக் காணலாம். சித்தர்களுக்கெல்லாம் பெருஞ்சித்தர் திருமூலர்.

இனி பாடலின் இறுதி வரியைக் காண்போம்.

‘ஒத்து உணர்வார்க்கு ஒல்லைஊர் புகலாமே’

அனைத்து சமயங்களும் ஒன்று; பிறப்பால் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று உணர்பவர்களுக்கு விரைவாக (ஒல்லை) வீடுபேறு (முக்தி நிலை) கைகூடும் என்பதே இந்த இறுதி வரியின் பொருளாகும்.

இறை எனும் சக்தியோடு இணைந்த நிலையே முக்தி. அதற்கான ஒரே வழி ‘மனம் பண்படுவதே’ என்பதே. இந்த திருமந்திரப் பாடலின் சுருக்கமான- புரட்சிகரமான கருத்தாகும்.

பண்பட்ட மனமே ஞானக் கண்களைத் திறக்கும். நம் அகத்தில் எரியும் சோதியைக் காண இது ஒன்றே வழியாகும்.

No comments:

Post a Comment