பக்தி இயக்கம்

Friday, October 29, 2010
கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் நிலவிய வறுமைச் சூழல் தீராத நிலையில் தெய்வ நம்பிக்கைதான் மக்களுக்கு ஏற்றது என்ற கருத்து உருவாயிற்று. அதுவரை சமண பௌத்த சமயங்களின் அறக்கருத்துகளுக்கு இருந்த மதிப்புக் குறைந்து தெய்வ நம்பிக்கை அந்த இடத்தைப் பிடித்தது.


அறத்தைப் பிரச்சாரக் கருவியாக்கிய, சமண பௌத்த சமயங்களைச் சைவமும் வைணமும் கடவுளையே பிரச்சாரக் கருவியாக ஆக்கி வீழ்த்தின. இக்கட்டத்தில் இலக்கியமும், கோவில்களை மையமிட்டு வளர்ந்தது. சமணமும் பௌத்தமும் எவற்றை வெறுத்தனவோ அவை சைவ வைணவ பக்தி இயக்கத்தினரால் விரும்பி ஏற்கப்பட்டன. அச்சமயங்களால் குற்றமெனச் சொல்லப்பட்ட ஊன் உண்ணுதல் போன்றவை கடவுளை வணங்கினால் மன்னிக்கப்படும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. சமண பௌத்தம் விலக்கி வைத்த இசை, ஆடல், பாடல், நாடகம் ஆகிய கலைகள் ஆதரிக்கப்பட்டன. வாழ்க்கையை வறள் நிலமாகக் காட்டிய முந்தைய தத்துவத்திற்கு மாறாக அதை வளம் மிக்கதாகக் காட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


மக்கள் திரள் ஒன்றிணையும் இடமாகக் கோயில்கள் ஆக்கப்பட்டன. நாளடைவில் அகத் தேவைகளுக்காக மட்டுமன்றிப் புறத் தேவைகளையும் தீர்த்துக்கொள்ளும் அதிகார மையமாகக் கோயில்கள் ஆகும் நிலை ஏற்பட்டது. மக்களைக் கோயிலுக்கு அழைக்கப் பதிகங்களைப் பாடினர். மக்களும் அப்பதிகங்களைப் பாடவேண்டுமென்று கூறினர். கோயில்களைப் பிரபலப்படுத்த, பக்தி இயக்கத்தினர் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.


மக்களைத் தங்கள்பால் ஈர்க்க இசைப்பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போக்கைத் தொடங்கியவர் காரைக்காலம்மையார். பக்திப்பாடல்களில் கும்மிப்பாடல் சந்தங்களும் பயன்படுத்தப்பட்டன; நாயக நாயகி பாவமும் பயன்படுத்தப்பட்டது; மன்னர்களின் தோற்றத்தையும் கொடையையும் வீரத்தையும் பாடியநிலை மாறிக் கடவுளின் அழகையும் வீரத்தையும் கருணையையும் பக்தியியக்கத்தினர் பாடினர். தங்கள் சமயத்தைச் சாராத அரசர்களை எதிர்க்கும் நிலையையும் மேற்கொண்டனர். சம்பந்தர் அரசனை எதிர்த்தார். நாவுக்கரசர் அரசனின் கொடுமையைத் தாங்கி உறுதியாக இருந்தார்.


பழைய இலக்கியங்களில் இயற்கை, முக்கிய இடம் பெற்றிருந்தது. பக்திப்பாடல்களில் இயற்கை இறைவனின் தலச்சிறப்பை உணர்த்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. வடமொழியை ஆதரித்த மன்னர்களையும் சமயங்களையும் எதிர்க்கத் தமிழ்மொழிப் பற்று முன்வைக்கப்பட்டது. தமிழ்ச் சங்கம் பற்றிய செய்திகள் பேசப்பட்டன. கடவுளர் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் என்றும் சொல்லப்பட்டது.


பக்தி இயக்கம் மூன்று வழிகளில் செயல்பட்டது. பக்தர்களின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பரப்புதல், இகபரமான நெறிமுறை அறங்களுடன் கடவுள்பக்தி வழிபாடுகளைத் தூண்டும் தோத்திர வடிவிலான பக்திப்பாடல்களைப் பரப்புதல், பக்தி நலம் கனிந்த காவியங்களைப் (பெரியபுராணம்) படைத்தல் எனும் வழிகளில் செயல்பட்டது.


சைவ பக்தி இயக்கம் வைணவ பக்தி இயக்கத்தினும் செல்வாக்குடையது. திருநாவுக்கரசர் காலத்திலிருந்து தமிழகத்தில் சைவத்தின் அளவு செல்வாக்குடைய சமயம் வேறு இல்லை. வைணவம் தமிழ்நாட்டிற்கு வெளியில் செல்வாக்குடையதாக இருக்கிறது.


ஆயினும் தமிழ்நாட்டுச் சைவத்தில் சமண அறநெறிகள் கலந்தன. சமணர் போற்றிய புலால் உண்ணாமை, கொல்லாமை முதலிய அறக்கொள்கைகள் பல, வட இந்தியாவில் சில பகுதிகளில் இந்து சமயத்தினர் மேற்கொள்ளாதவை; தமிழ்ச் சைவர் வாழ்க்கையில் இன்றுவரை இடம்பெற்றுள்ளவை.


இயற்கைநெறிக் காலத்திற்கும், அறநெறிக் காலத்திற்கும் அடுத்த நிலையில் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய பெருமைக்குரிய காலம் பக்தி இயக்கக் காலமாகும். இந்து சமயத்தின் இருகண்களாகத் திகழும் சைவமும் வைணவமும் தமிழின் பக்தி இயக்கத்திற்கு அடிப்படை அமைத்து வளர்த்தன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தில் பக்தி இயக்கம் சமயக் கருத்துகளைப் பரப்பியதில் மட்டுமன்றித் தமிழ் இலக்கியத்தைச் செழுமையடையச் செய்த பணியிலும் தன்னிகரற்றுத் திகழ்ந்தது.


இவ்வாறு பல சிறப்புகள் இருப்பினும் பக்தி இயக்கம் சில தவறான விளைவுகளுக்கும் காரணமாயிற்று என்பதை மறுப்பதற்கில்லை. தங்கள் சமயம் உயர்ந்தது என்பதை விடச் சமணம் அருவருக்கத் தக்கது என்ற கருத்து சைவ வைணவ சமயத்தாரால் பரப்பப்பட்டது. சமணர்களை அழுக்கர்கள், வேடதாரிகள் எனவும் இவர்கள் தூற்றினர். சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வுகள் மிகவும் கொடியவை. இச்சமயங்களுக்குப் பிராமணர் தலைமையேற்றனர். சாதி அமைப்பு இறுகியது. பா வடிவங்களுக்கும் கூடச் சாதி கற்பிக்கப்பட்டது. பிற தளைகள் கலவாத வெண்பா அந்தணர் பாவானது; அது பல்லவர் கால யாப்பானது. காரைக்காலம்மையாரும் முதலாழ்வார்களும் வெண்பாவில் பாடினார்கள். சூத்திரப்பா எனப்பட்ட வஞ்சிப்பா இக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

No comments:

Post a Comment