திருமந்திரம்

Saturday, February 26, 2011
திருமூலர் அருளிய திருமந்திரம்
திருக்கூத்து தரிசனம்

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 1

சிவனது சத்தி `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் நிறைந்திருத்தலால், `சத்தியே அவனது திருமேனி` என்பது பற்றி எங்கும் அவனது திருமேனி உள்ளதாம். `சத்தியே அவனது இருப்பிடமாகிய பர வெளி, அல்லது சிதாகாசம்` என்பது பற்றி, எங்கும் அவன் இருக்கும் சிதாகாரம் உள்ளதாம்; `அவனது சத்தி, அல்லது திருவருளே அவனது செயல்கள்` என்பது பற்றி, அவனது திருக்கூத்து எங்கும் நிகழ்வதாம். இவ்வாற்றால் எங்கும் எல்லாம் சிவமயமாய் இருத்தலால், எங்கு நிகழும் எந்தச் செயலும் அவனது திருவருள் திருவிளையாட்டேயாம்.



சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2

அறிவே வடிவாதல் பற்றி, பரஞ்சோதியாய் மேலான ஒளியாய் - விளங்குகின்ற சிவனது அருள் விளையாட்டாக முன் மந்திரத்தில் கூறப்பட்ட அத்திருக்கூத்துத் தான் பலவாயினும் அவை, `சிவானந்தத்க் கூதது, சுந்தரக் கூத்து பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து` என ஓராற்றால் ஐந்து வகையாகின்றன. அவற்றின் மேலும் பலவாகின்ற கூத்தினை இயற்றுகின்ற அவனது ஆற்றலை யாரே அளவிட்டறிவார்!

No comments:

Post a Comment