ஏழு பாசுரம்

Monday, June 27, 2011
முதல் பாசுரம்:

அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தங் காட்டித் தடைகாட்டி – உம்பர்
திவமென்னும் வாழ்வுக்குச் சேர்ந்தநெறி காட்டும்
அவனன்றோ ஆசாரியன்.

விளக்கம்:


இந்த பாசுரத்தால் ஆசாரியன் படியைப் பேசுகிறார். ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவோடே நவவிதசம்பந்தம் உள்ளன. பிதாபுத்திர பாவம், ரக்ஷ்ய ரக்ஷக பாவம், சேஷ சேஷி பாவம், பர்த்ரு பார்யா பாவம், ஜ்ஞாத்ரு ஜஞேய பாவம், ஸ்வத்ஸ்வாமி பாவம், ஆதார ஆதேய பாவம், சரீர ஆத்ம பாவம், போக்த்ரு போக்ய பாவம் என்கிற ஒன்பது விதமான சம்பந்தங்கள் திருமந்திரமானது காட்டும். அது மட்டும் இல்லாமல் நம: என்கிற பதத்தாலே மூன்று விரோதிகளான ஸ்வரூப விரோதி, உபாய விரோதி மற்றும் ப்ராப்யவிரோதி ஆகியவற்றையும், ப்ராப்யமான புருஷார்தத்தையும், ப்ராபகமான உபாயத்தையும் காட்டும். இதை நமக்குக் காட்டி உணர்த்துபவனே ஆசார்யன் என்று அருளிச்செய்கிறார்.

இரண்டாம் பாசுரம்:


அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிகக்கொடியர் நாம் சொன்னோம் – நஞ்சுதான்
ஊனை முடிக்கும் துயிர் முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை

பாசுர விளக்கம்:


அஞ்சு பொருள் என்ற சொல் அர்த்த பஞ்சகத்தைக் குறிக்கும். அர்த்த பஞ்சகமானது ச்வஸ்வரூபம், பரஸ்வரூபம், உபாயஸ்வரூபம், விரோதிஸ்வரூபம் மற்றும் உபேயஸ்வரூபம் ஆகியவை ஆகும். “மிக்க இறை நிலையும் மொய்யாம் உயிர்நிலையும் தக்கநெறியும் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும்” என்னும் திருவாய்மொழித்தனியனில் அர்த்தபஞ்சகம் இன்னவை என்று நிரூபிக்கப்பட்டிருகின்றமையை உணர வேணும் இங்கே. இப்படிப் பட்ட அஞ்சு பொருள்களை அளித்தவனான ஆசார்யன் பக்கலிலே அன்பு இல்லாதவர்கள் நஞ்சை விட மிககொடியவர்கள் என்கிறார். நஞ்சானது வெறும் தேக நாசத்தையே விளைவிக்கும், ஆனால் ஆசார்யன் பக்கல் அன்பில்லாமை ஆனது ஆத்மனாசத்தையே விளைவிக்கும் என்றது ஸ்ரீவசனபூஷணம். இதனையே இந்த பாசுரத்தால் உறுதி படுத்துகிறார்.

குறிப்பு: ஸ்ரீ வசனபூஷண சூத்ரம்: ” இவனுக்கு சரீராவசானத்தளவும் ஆச்சார்ய விஷயத்தில், ” என்னைத் தீ மனம் கெடுத்தாய்”, “மருவித் தொழும் மனமே தந்தாய்” என்று உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும்.

மூன்றாம் பாசுரம்:

பார்த்த குருவின் அளவில் பரிவின்றிச்
சீர்த்தமிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் – கார்த்தகடல்
மண்ணின்மேல் துன்புற்றும் அங்குமே தேங்காமல்
நண்ணுமே கீழா நரகு.

பாசுர விளக்கம்:

எத்தனை ஞான விகாசம் உடையவனாய் இருந்தாலும், விசேஷ கடாக்ஷம் செய்து அருளினவனான ஆசார்யன் இடத்தில் பரிவு இல்லையாகில் அதோகதியே என்று ச்திரமாகச் சொல்கிறார் இப்பாசுரத்தில். அதாவது சம்ஸ்க்ருத வேதாந்த ஞானம், திராவிட வேதாந்த ஞானம் மற்றும் ரஹஸ்யார்த்த ஞானம் இவற்றை அறிந்தவனாயினும், பார்த்த குருவின் அளவில் பரிவில்லையாகில் இந்த கடல் சூழ்ந்த மண்ணுலகில் அனுபவிக்கக்கூடிய க்லேசங்களை எல்லாம் அனுபவித்துக்கொண்டு நித்ய சம்சாரியாய்க் கிடந்து உழல நேரிடும் என்பதை” தேங்காமல் நண்ணுமே கீழா நரகு” என்பதனால் தெளிவு படுத்துகிறார் சுவாமி.

நான்காம் பாசுரம்:

தன்னை இறையைத் தடையைச் சரநெறியை
மன்னு பெருவாழ்வை ஒரு மந்திரத்தின் – இன்னருளால்
அஞ்சிலுங் கேடோட வளித்தவன் பாலன்பிலார்
நஞ்சிலும் கேடு என்றிருப்பன் நான்*

பாசுர விளக்கம்:

பிராப்யஸ்ய பிரம்மனோ ரூபம், ப்ராப்துச்ச்ச ப்ரத்யகாத்மந:, ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா, ப்ராப்தி விரோதிச என்கிற ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட அர்த்தபஞ்சகக் கிராமமே இங்கு விரிவாகக் கூறுகிறார். இந்த அர்த்தபஞ்சகமும் திரு அஷ்டாக்ஷர மகாமந்திரத்திலிருந்து ஆசார்யானாலே உபதேசிக்கப்படும். அதாவது பிரணவத்தில் மகாரத்தாலும், லுப்தசதுர்த்தியாலும், உகாரத்தாலும் ஸ்வஸ்வரூபம், அகாரத்தாலே பரஸ்வரூபம், நமஸ்சில் ம: என்பதாலே விரோதிஸ் ஸ்வரூபமும், நம: என்பதால் உபாயஸ் ஸ்வரூபமும், நாராயணாய என்பதனாலே உபேயஸ் ஸ்வரூபமும் ஆகும். ஆக அச்சர்யன் பக்கலிலே அன்பிலாதார் நஞ்சிலும் கேடு என்கிறார் இந்த பாசுரத்தில்.

ஐந்தாம் பாசுரம்:

என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வும்
என்பக்கல் நன்மை எனும் இயல்வும் – மன்பக்கல்
சேவிப்பார்க் கன்புடையோர் சன்ம நிருபனமும்
ஆவிக்கு நேரே அழுக்கு.

பாசுர விளக்கம்:

கீழ் பாசுரத்தால் சிஷ்யனுக்குண்டான குறைகளைப் பேசினார். இந்த பாசுரத்தில் ஆசாரியனுக்கு நேரக்கூடிய அவத்யத்தைப் பேசுகிறார். உபதேசிக்கும் ஆசார்யன் ஆனவன் உபதேச சமயத்திலே தன்னுடைய ஆசார்யனே இவனுக்கும் உபதேசகர்த்தா என்றும், தான் அவ்வாசார்யனுக்கு கரண பூதனாகவும் பிரதிபத்திப் பண்ணிக்கொண்டும் உபதேசிக்க வேண்டுமாம், அப்படிச் செய்யாது தன்னை இவனுக்கு ஆசார்யன் என்று நினைப்பது தவறு என்று முதல் அடியில் தெரிவிக்கிறார். மேலும் உபதேச பாத்ரபூதனானவனையும் தன்னைப் போல தன்னுடைய ஆசாரியனுக்கு சிஷ்யனாக பிரதிபத்திப் பண்ணிக்கொண்டு உபதேசிக்க வேண்டுமாம். அதைச் செய்யாமல் இவன் தனக்கு சிஷ்யன் என்று நினைப்பதும் தன்னிடத்தில் ஆசார்யத்வம் உள்ளது என்று நினைப்பதும் தவறு என்கிறார் அடுத்த அடியாலே. மகா பாகவதர்களிடத்தில் பகவத் சம்பந்த பிரயுக்தமான சிறப்பைப் பாராதே அவரவர்களுடைய ஜன்மங்களை நிரூபிக்கையாவது மகா அபசாரம் என்பதை அடுத்த அடியில் தெரிவிக்கிறார். இவை எல்லாம் ஆவிக்கு நேரே அழுக்கு என்றும் உறுதிபடுத்துகிறார் அடுத்த அடியில்.

இந்த பாசுரம் ஸ்ரீ வசனபூஷண சூத்ரம் (308, 194) க்கும் அர்த்தம் ஆகும்.

ஆறாம் பாசுரம்:

அழுக்கென்று இவை அறிந்தேன் எம்பொன் அரங்கா
ஒழித்தருளாய் உள்ளில் வினையைப் – பழிப்பிலா
என்னாரியர்காக எம்பெருமானார்க்காக
உன்னா ரருட்க்காக உற்று.

பாசுர விளக்கம்:

ஆவிக்கு அழுக்காகத் தெரிவிக்கப்பட்ட விஷயங்களைப் பலர் அழுக்கென்று அறிந்திருந்தும், பிரகிருதி வாசனையாலே இவ்வழுக்குகளில் சிக்கி நசிக்கிரார்களே என்று நினைத்து, அது தமக்கு நேராது இருக்க வேணும் என்று எம்பெருமான் திருவடிகளில் பிரார்த்தனை செய்கிறார் இப்பாட்டில். மேலும் அச்மதாசார்யரான பிள்ளை உலகாரியனுக்காகவும், உலகுக்கு ஓர் உயிரான சுவாமி எம்பெருமானாருக்காகவும் இத்திருவருளை அடியேனுக்கு அளிக்க வேணும் என்றும் பிரார்த்திக்கிறார்.

ஏழாம் பாசுரம்:

தீங்கேது மில்லாத தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவுடையோர் – ஓங்காரத்
தேரின்மேல் ஏறிச் செழுங்கதிரின் ஊடுபோய்
சாருவரே அந்தாமந் தான்.

பாசுர விளக்கம்:

தீங்கு ஏதும் இல்லாதவனும், மகா உபகாரகனுமான ஆசார்யனுடைய திருவுள்ளத்திற்கு அனுகூலமாகவும், அவருடைய திருமேனியைப் பேணிக்கொண்டு உண்மையான அன்புடையவர்களாகவும் இருப்பவர்களான சத்சிஷ்யர்கள் பெரும் பேற்றை இந்த பாசுரத்தால் விவரிக்கிறார்.

வையம் மன்னி வீற்றிருந்து என்று சொல்லும் படி, இருக்கும் நாட்களிலே உபயவேதாந்த காலக்ஷேப கோஷ்டியோடும், ததியாராதன ஸ்ரீயோடும், உகந்தருளின நிலங்களில் மங்களாசாசன ஸ்ரீயோடும், தத் கைங்கர்ய ஸ்ரீயோடும் சுவாமி எம்பெருமானாரைப் போல நெடும் காலம் வாழ்ந்திருந்து சரீராவசானத்தில் பரமபக்தி தலையெடுத்து, பிரணவமாகிற தேரின் மேல் ஏறி சாச்வதச்தானமாகிய திருநாடே கிடைக்கப் பெறுவார்களாம்.

No comments:

Post a Comment