சிவவாக்கியர் பாடல்

Monday, June 27, 2011
சித்தர் பாடல்கள்

பெரிய ஞானக்கோவை

1. சிவவாக்கியர் பாடல்

சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை
தரப்படுவதுண்டு, காரணம், இவர் பாடல்களில் வழக்கமான சித்தர்
கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன்
புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும்
கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில்
நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின் பாடல்
கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி இவர் முதலில் நாத்திகராக
இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக
மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.

சிவவாக்கியரின் பாடல்களும் திருமழிசை ஆழ்வார் பாடல்களும்
சந்தத்தில் மட்டுமே ஓரளவு ஒத்துப் போவதாலும் இவர் பாடல் சாயலில்
ஏனைய சித்தர்பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

விக்கிரக ஆராதனை

சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப்
படுகின்றது.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த
உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள்
இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வ
மென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது
அறியாமையே யாகும் என்கிறார்.
“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”

நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல்
மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண
என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன
பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர்
தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில்
நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?

அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும்
அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது
போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற
மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை
கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே
என்கிறார்.

கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும்,
அவைகளுக்குத் தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று
தொட்டு நடந்து வருபவை. இவைகளையெல்லாம் மூடப்பழக்கங்கள்
என்று சாடுவதென்றால் எவ்வளவு துணிவு வேண்டும்? புனிதமான
அடிப்படைக் கொள்கையையே ஆட்டிப் பார்ப்பதென்றால் அதனை
அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?

இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம்
தேவைப்படுகின்றது.

ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள்
கொண்டுவர, நல்வழிப்படுத்த உருவ வழிபாடு தேவைப்படுகின்றது.
சட்டத்துக்கும், சான்றோர் உரைகளுக்கும் கட்டுப்படாத சிந்தைத்
தெளிவில்லாத மனிதர்களுக்கு, ஒரு வடிவத்தைக் காட்டி இதுதான்
கடவுள், இவர் உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை
தரக் காத்திருக்கின்றார். ஆகவே தவறு செய்யாதே என்று கண்டிப்
போமானால் அந்தக் கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்
கடவுள் கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்;
கடவுளின் கட்டளை என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்
படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்
பயனாகிறது. பலரை நல்வழிப்படுத்த உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு
தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.

ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
உருவ வழிபாடு ஒரு மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம்
ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில்
இருப்பதாகவும், மண்ணில் இருப்பதாகவும், மரத்தில் இருப்பதாகவும்,
உருவமைத்துக் காட்டுவது கடவுளையே அவமதிப்பதாகும் என்று
வாதிடுகின்றனர்.

சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற
மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து,
அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே

கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான
பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ
பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம்
இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி
யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்து அழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய
வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தாம்
படைத்த பொருளை அறியாமல் வைத்திருக்கவும் காப்பாற்றவும் வல்லது.
அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது.
இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண
இயலாது. உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே
உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.

இதில் எங்கும் நிறைந்த கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி
படுவது தவறு என்றும், அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய
ஏழைகள் என்றும் சாடுகின்றார்.

உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின்
பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?

“ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

ஊரிலே வாழும் பெரிய மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள
கருத்து வேற்றுமைகளைக் களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை
அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை
இழுக்கிறீர்கள். ஒரு சிறிய உருவத்திற்கு இவ்வளவு பெரிய தேரா?
நூற்றுக்கணக்கான மக்கள் உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி
இருப்பது அறிவுடையமையாகுமா? இதனால் எவ்வளவு பொருள் விரயம்?
எவ்வளவு நேரம் வீணாகிறது?


யாருக்கும் புலனாகாத கடவுள் அறிவின் வடிவானவர். அவரே
ஆதிசித்தநாதர், அவரை சித்தத்தினால் மட்டுமே அறிதல் கூடும். அப்படி
யிருக்கையில் அவரை வழிபட என்னவெல்லாமோ செய்கிறீர்களே! தேராம்,
திருவிழாவாம், கொட்டாம், முழக்காம் - இவையெல்லாம் வெறும் புரளி.
அறிவற்றவர் செய்யும் புரளி. இதனை அறிவுடைய மக்களே ஏற்றுக்
கொள்ளுங்கள் என்று அழைக்கிறார்.

ஆனால் அவரது கொள்கையை இவ்வுலக மக்கள் ஏற்றுக்
கொண்டார்களா என்பதுதான் விளங்காத புதிர்.

மூடப்பழக்கங்களைச் சாடுதல்

சமுதாயத்தில் புரையோடி விட்டிருக்கும் மூடப் பழக்கங்களைச் சாடும்
வித்தியாசமான சித்தராக சிவவாக்கியர் காட்சி தருகின்றார். ஆசார,
அனுஷ்டானங்களைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று தேவையற்ற மூடப்
பழக்கங்களில் மூழ்கித் தவிக்கும் மூடர்களைக் கரையேறி உய்யுமாறு
சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார்.

“பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37)

என்று உண்மை பூசை பற்றியும்,

“வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே”

என்று எச்சில் படாமல் பூசை செய்ய வேண்டும் என்று மடிசாமிதனமாகப்
பேசும் அறிவிலிக்கு எச்சிலைப் பற்றி விளக்கம் தருகின்றார்.



வாயினால் ஓதப்படுவதால் வேதத்திலுள்ள மந்திரங்களும் எச்சில், பசு
மடியில் கன்று குடித்த பால் எச்சில், மாதிருந்த விந்து எச்சில், மதியுமெச்சி
லொளியுமெச்சில் மோதகங்களான தெச்சில் பூதலங்களேழும் எச்சில் எதில்
எச்சிலில்லை? என்று கேள்வி எழுப்புகின்றார்.

புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149)

என்று புலால் மறுத்தலை எள்ளி நகையாடுகின்றார். இன்னும்,

“மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)

“மாட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்” (160)

என்ற பாடலில் மாட்டிறைச்சி தின்பது பாவம் என்று அருவறுக்கும்
வேதியர்களே மாட்டிறைச்சிதான் உரமாக காய்கறிக்கிடுவதை அறிவீர்களா?
ஆட்டிறைச்சி தின்றதில்லை என்கிறீரே, உங்கள் யாக வேள்வியில் ஆகுதி
செய்யப் படுவதும், நெய்யாய் இடுவதும் எது என்பதை யோசிப் பீர்களாக
என்கிறார்.

சாதி வேற்றுமைகளைக் கடிதல்

சிவவாக்கியர் தம் பாடல்களில் சாதி வேற்றுமைகளை மிகவும்
ஆணித்தரமாகக் கண்டிக்கிறார்.

“சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே” (47)

என்று சாதி பேதம் பார்க்கின்றவர்களைப் பார்த்துக் கேட்கின்றார். அது
மட்டுமல்ல, மணமுடிக்க மணப் பெண்ணை குணம் பார்த்துதான் தேர்வு
செய்ய வேண்டுமே தவிர குலம் பார்த்தல்ல என்று இளைஞர்களையும்
கேட்டுக் கொள்கிறார்.

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே” (40)

கீழ் குலத்தைச் சேர்ந்த பறைச்சியும் மேல் குலத்தைச் சேர்ந்த
பார்ப்பனத்தியும் போகம் செய்யும்போது ஒரே சுகத்தைத்தான் அளிக்கிறார்கள்.
இதில் பறைச்சி என்ன? பாப்பாத்தி என்ன? இரண்டும் ஒன்றுதான். ஆகவே
சாதிபேதம் பார்க்காமல் இல்லறத்திற்கேற்ற பெண்ணை என்று தேர்வு செய்து
மணம் முடிப்பதே பெருமைக்குரியது என்று கூறியதுமல்லாது தாமே
இல்லறத்திற்கேற்ற குலப்பெண் ஒருத்தியை மணந்து வாழ்ந்து காட்டினார்.

சிவவாக்கியரின் புரட்சிக் கருத்துக்கள் ஜாதி மதத்தில் காணப்படுவதற்கு
இன்னுமொரு சான்றாக, இவர் சைவராயிருந்தும் வைணவக் கடவுளான
ராமரையும் தம் பாடல்களிலே புகழ்ந்து பாடியதுதுடன் இராம நாமத்தின்
பெருமையையும் பாங்குற எடுத்தியம்புகிறார்.

ராம! ராம! என்று செபித்துக் கொண்டிருந்தால் போதும்; வேறு எந்த
பூசையோ, சந்தி, ஜெப, தபங்களோ செய்ய வேண்டியதில்லை. எல்லா
நன்மைகளும், கிடைக்க வேண்டிய எல்லாப் பலன்களும் இராம நாம உச்சரிப்பில் கிடைத்து விடும்
என்று கூறுகின்றது சிவவாக்கியரின் பாடல்.

“அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே”

என்ற பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சிவவாக்கியர்.

அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய
தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார்.

சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள்,
செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், இராம நாம உச்சரிப்பில்
கிடைக்கும். உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் இராம நாமத்தால் மிகுந்த
வளர்ச்சி யடையும். இவ்வாறு இராம நாமத்தின் பெருமையை
எடுத்துரைக்கின்றார் சிவவாக்கியர்.

நன்மையும் செல்வமும் நாலும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்று இரண்டெழுத்தினால்

என்ற கம்பரின் தனிப்பாடல் கருத்து சிவவாக்கியரின் கருத்தோடு ஒத்து
விளங்குவதைக் காணலாம்.

வைணவத் தெய்வமான இராமனின் பெருமைமிகு மந்திரத்தைப்
போலவே சைவர்களின் தெய்வமான சிவபிரானின் சிவமந்திரமும் பெருமைக்
குரியது என்று சிவநாமப் பெருமையையும் தம் பாடலில் பேசுகின்றார்.

சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே

என்றும்,

அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே

என்று ஐந்து கோடி மந்திரங்களும் ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்தில்
அடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார்.

திருமூலரின் சில கருத்துக்களையும் சிவவாக்கியர் தம் பாடலில்
எடுத்துரைக்கின்றார்.

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’

என்ற திருமூலர் கருத்தினை,

‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே”

என்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம்.

இறைவனை கோயில், பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டிய
தில்லை. நமது உள்ளமே இறைவன் உறையும் கோயில் இந்த உடம்பே
அவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

என்ற திருவள்ளுவரின் கருத்தையும் “மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்”

என்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.

ஒருவர் பலரிடத்தும் பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,
ஞானியாகவும் இருக்கலாம், யோகம் செய்து கொண்டும் இருக்கலாம்,
நாட்டைத் துறந்து காட்டிலே போய்க்கூட வாழலாம். ஆனால் உள்ளத்தில்
தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன
விரதங்கள் யாவும் பாழாய் முடியும். உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்
கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.

அப்படியானால் உண்மையான கடவுள்தான் யார்? என்ற வினாவுக்கு
அறிவுதான் இறைவன் என்று விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு
தான் இறைவன் என்றால் அறிவாளிகள் மட்டும்தான் இறைவனைத் தொழ
இயலுமோ? என்ற வினாவும் எழுகிறது. இல்லை பாமர மக்களும் தம்
அன்பினால் இறைவனைத் தரிசிக்கலாம் என்றும் இறைவன் எங்கும்
நிறைந்திருக்கிறான் என்ற கருத்தையும் சிவவாக்கியர் தம் பாடல்களில்
நிறைத்துக் காட்டுகின்றார்.

No comments:

Post a Comment