சைவ இலக்கியங்கள் - 1

Monday, August 1, 2011
பதின்மூன்றாம் நூற்றாண்டிலும், பதினான்காம் நூற்றாண்டின்
தொடக்கத்திலும் சோழப்பேரரசும், பாண்டிய அரசும் அழிந்தன.
அதனால் குறுநில மன்னர்கள் ஆட்சி ஏற்பட்டது. இக்காலப்
பகுதியில் தமிழகத்தில் வலிமையான அரசு எதுவும் இல்லை.
குழப்பம், போர், கொந்தளிப்பு இல்லாத நிலை. சமய நூல்கள்
பெருகின. உலகியல் துறையில் மக்கள் மனம் ஒடுங்கியிருக்க
வேண்டிய நிலை காரணமாக ஆன்மிகத் துறையில் அவர்கள்
உள்ளம் விரிவு காண முயன்றது. ஞான மார்க்கத்தில் இக்காலத்தில்
நூல்கள் பெருகியது போல வேறு எந்தக் காலத்திலும் பரவவில்லை.

முகமதிய நாகரிக மோதல், மக்கள் மனத்தில் புரட்சியை
உண்டாக்கியது. புனிதம், நாகரிகம், தெய்வீகம் அனைத்தும்
இவர்களால் பாதிக்கப்பட்ட போது மக்கள் மனத்தில் கொந்தளிப்பு
ஏற்பட்டது. இதன் காரணமாக முன்னைவிட அதிகமான
சமயப்பற்றும், தெய்வ பக்தியும் ஏற்பட்டு, சமய இலக்கியம் தோன்ற
வழிகோலியது. மக்கள் மனத்தில் இக்கொந்தளிப்பு நிலைத்து,
எவ்வித முடிவும் காணாமல் தத்தளிப்பு நிலவியது.

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பல
பெரியோர்களால் புதிய ஞான மரபுகள் எழுந்தன. சிற்றம்பல
நாடிகள் வாயிலாக ஞானாசிரியர் பல பிரிவுகளாகப் பிரிந்தனர்.
சீகாழிக் கண்ணுடைய வள்ளல் ஆதீனம் இக்காலத்தில் தோன்றியது.
திருவாவடுதுறை ஆதீனம், காஞ்சி ஞானப்பிரகாசர் ஆதீனம்,
தருமபுரம் ஆதீனம், துழாவூர்மடம், செப்பறை மடம் முதலியவை
பிற்காலத்தில் தோன்றக் காரணமாயிருந்த பெரியோர்பலர்
இக்காலத்தில் தோன்றினர்.

இக்காலக்கட்டத்தில் சைவ இலக்கியங்கள் அதிக
எண்ணிக்கையில் தோன்றின. இக்காலப்பிரிவில் வெளிவந்த சைவ
இலக்கியங்களைச் சமய நூல்கள் என்றும் சாத்திர நூல்கள் (தத்துவ
நூல்கள்) என்றும் பிரிக்கலாம். வில்லிபுத்தூரார் மற்றும்
இரட்டைப்புலவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கவை.

சைவ இலக்கியப் படைப்பாளர்கள்

இக்காலக்கட்டத்தில், சைவ இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள்
பலர். அவர்களுள் உமாபதி சிவாச்சாரியார், சிற்றம்பல நாடிகள்,
தத்துவப் பிரகாசர், சம்பந்த முனிவர் ஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்கள்.
உமாபதி சிவாச்சாரியார்

இவர் சைவசித்தாந்த ஆசிரியர் நால்வரில் கடைசியாக
வந்தவர். உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம், திருவருட்பயன்
உட்படப் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பிற
நூல்கள் வினா வெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி,
நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப
நிராகரணம், திருமுறைத்திரட்டு, கோயிற்புராணம்,
திருமுறைகண்ட புராணம், திருத்தொண்டர் புராணசாரம்,
சேக்கிழார் புராணம் போன்றவையாகும்.

சிவப்பிரகாசம், சிவஞானபோதத்தின் சார்பு நூலாகும்.
(சிவஞானபோதம் பற்றிக் கடந்த பாடப்பகுதியில் விரிவாகப்
படித்தோம்). இதன் பாயிரத்துள் ஆசிரியர், ஆசாரியார் மரபு, சைவ
நூல்களின் இயல்பு, தீக்கை வகைகள் ஆகியவை பற்றிக்
கூறியுள்ளார்.சிவஞானபோதத்தின் பன்னிரு சூத்திரங்களையொட்டியே
இந்நூல் பாடல்களைப் பாகுபடுத்திக் கூறுவர்.

திருவருட்பயன், திருக்குறள் போன்ற அமைப்பு உடையது.
பத்து அதிகாரங்கள்; ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்து குறள்;
பாடல்கள் அழகாக எளிமையாக உள்ளன. இதன் தலைப்புகள்
எளிமையாக உள்ளன. சித்தாந்த சாத்திரம் கற்கப் புகுவோர் முதலில்
பயில்வது இந்நூலேயாகும்.
சிற்றம்பல நாடிகள்

இவர் துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன்முறுவல்
முதலிய ஐந்து நூல்களை இயற்றியுள்ளார்.

துகளறு போதம் இவர் இயற்றிய நூல்களுள் முக்கியமானது.
மெய்கண்டசாத்திரம் 14 எனக் கணக்கிட்டுக் காட்டும் ‘உந்திகளிறு’
என்ற வெண்பாவில் இந்நூலின் பெயர் காணப்படவில்லை. ஆனால்
பல ஏட்டுப்பிரதிகளில், இப்பாடலில் வரும் உண்மைநெறி விளக்கம்
என்ற பெயர் இல்லாமல் துகளறு போதத்தைச் சேர்த்து 14 எனக்
கணக்கிடப்பட்டுள்ளது. இந்நூல் திராவிட மாபாடியம் செய்த
சிவஞான சுவாமிகள் போன்ற சிறந்த சாத்திர உரையாசிரியர்களால்
எடுத்தாளப்பெற்ற பெருமையுடையது. காப்புச் செய்யுளும், 100
வெண்பாக்களும், இறுதியில் நூற்பொருள் கூறும் இரு பிற்கால
வெண்பாக்களும் உடையது. முக்தி நெறிக்குரிய மார்க்கம், தசகாரியம்
(பத்து படிகள்) என்பது சைவ சாத்திர மரபு. தச காரியங்களை
முப்பது நிலைகளாகச் சில சாத்திரங்கள் கூறும். இவ்வாறு கூறும்
முதல் சாத்திரம் துகளறு போதம் ஆகும்.

சிற்றம்பல நாடிகளின் நேர்மாணாக்கர் நால்வர். அவர்களுள்
தத்துவநாதர், தத்துவப் பிரகாசர் என்போர் நூல் எழுதினார்கள்
(தத்துவநாதர் - உண்மைநெறி விளக்கம் என்ற நூலையும்,
தத்துவப் பிரகாசர் - தத்துவப் பிரகாசம் என்ற நூலையும்
எழுதினர்). மற்ற இருவர் சம்பந்த முனிவர், ஞானப்பிரகாச முனிவர்
என்போர் ஆவர். சம்பந்த முனிவரும் அவர் வழியில் வந்தவரும்
நூல் எழுதியுள்ளனர். ஞானப்பிரகாசரும் அவரது பரம்பரையினரும்
நூல் எழுதவில்லை. சிற்றம்பல நாடிகளின் மாணக்கர்களுடைய
பணிகளை இங்கே காணலாம்.
தத்துவ நாதர்

சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் பதின்மூன்றாவதாக
எண்ணப்படுவது உண்மைநெறி விளக்கம். இதன் ஆசிரியர் சீகாழித்
தத்துவநாதர். இந்த நூலை உமாபதி சிவம் செய்தார் என்ற கருத்தும்
அறிஞர்களிடையே உண்டு. இந்நூல் ஆறு அரிய பாடல்களை
உடையது. அந்த ஆறு பாடல்களும் தசகாரியம் கூறும். இந்நூலுக்குப்
பல உரைகள் உள்ளன. இந்நூலாசிரியர் தத்துவநாதர், அருணந்தி
சிவாசாரியார் பாடிய இருபா இருபஃதுக்குச் சிறப்பான உரை
எழுதியுள்ளார். இந்த உரை, மெய்கண்ட சாத்திர நூல்களுக்கு
எழுதப்பட்ட உரைகள் அனைத்திலும் காலத்தால் மிகப்
பழமையானது.
தத்துவப் பிரகாசர்

தத்துவப் பிரகாசர் எழுதிய நூல் தத்துவப்பிரகாசம்.
(தத்துவப்பிரகாசர் என்ற பெயரில் 14-16 ஆம் நூற்றாண்டுகளில்
பலர் இருந்தனர். அவர்களுள் சீகாழியைச் சேர்ந்தவர் இவர்.
இவ்வரிசையில் காலத்தால் முதலாமவர்). இதற்குத் தத்துவ கவிதை
என்ற பெயரும் உண்டு. சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும்
ஞானபாதம் ஒன்றையே விரித்தும், தொகுத்தும் கூறும். மற்றைய
சரியை, கிரியை, யோகம் ஆகியவை மிகச் சுருக்கமாகச்
சொல்லப்பட்டுள்ளன. இவற்றையும் தமிழால் உணர்த்த வேண்டும்
எனக் கருதி இந்நூலை இவர் செய்ததாகக் கொள்ளலாம்.
சம்பந்த முனிவர்

இவர் பாடிய நூல்களாக இக்காலத்தில் கிடைப்பவை
சிவானந்தமாலை, சிற்றம்பல நாடிகள் சாத்திரக் கொத்திலுள்ள
வெண்பா, தாலாட்டு போன்றவையாகும்.

சிவானந்த மாலை 414 வெண்பாக்களைக் கொண்டது. இது
மிகச்சிறந்த சைவ சித்தாந்த நூல். பல சமய உண்மைகளைச்
சுவையுடைய உவமைகளால் தெளிவாக விளக்குகிறது. பல
பாடல்களில் ஞானசம்பந்தரைப் போற்றுகிறார் ஆசிரியர்.
இலக்கியச்சுவை ததும்பும் பல பாடல்கள் இந்நூலுள் உள்ளன.

இவர்களைத் தவிர, சம்பந்த சரணாலயர், சிவாலய முனிவர்,
அருள் நமச்சிவாய தேசிகர், சித்தர் சிவப்பிரகாசர், நமச்சிவாய
தேசிகர் போன்றோர் உள்ளிட்ட பலர் இக்காலப் பகுதியில் சிறந்த
இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளனர்.




கச்சியப்பரின் படைப்பு

கந்தபுராணம் கச்சியப்ப சிவாசாரியாரால் இயற்றப்பட்டது.
இவருடைய காலம் தெளிவில்லாததாக உள்ளது. பலர் பல்வேறு
கருத்துகளைக் கூறினாலும் பொதுவாக அனைவரும்
ஒப்புக்கொள்வது, கச்சியப்ப சிவாசாரியார் கி.பி. 1400க்கு முன்னால்
வாழ்ந்தார் என்பது தான்.

கந்தபுராணம் ஆறு காண்டங்களை உடையது. இதில்
முருகப் பெருமானது தோற்றமும் வீரமும், சூரபதுமன் ஆகியோர்
கொடுமையும், அவர்கள் அழிவும், முருகப் பெருமான் அருளும்,
பிறவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கந்தபுராணத்தில்
சொல்லப்படாத பொருள் எதுவும் இல்லை என்று ஒரு பழமொழி
உண்டு. இராமாயணம், பாகவதம் ஆகிய நூல்களில் வைணவ சமயத்
தத்துவங்கள் காணப்படுவது போல, சைவ சித்தாந்தத் தத்துவங்கள்
கந்தபுராணத்தில் மிகவும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

இரட்டைப்புலவர்படைப்புகள்

இக்காலப் பகுதியில் தோன்றியவர் இரட்டைப்புலவர். சோழ
நாட்டில் ஆடுதுறைக்கு அருகேயுள்ள ஆலந்துறை என்ற ஊரில்
இவர்கள் இருந்தனர். இவர்கள் அத்தை பிள்ளை, அம்மான்
(தாய்மாமன்) பிள்ளையாக இருந்தனர். ஒரு பிள்ளை
கண்ணில்லாத குருடர். மற்றொரு பிள்ளை காலில்லாத முடவர்.
குருடரின் பெயர் இளஞ்சூரியர். காலில்லாத முடவர் முதுசூரியர்.
இருவரும் சேர்ந்து ஒரே உள்ளத்தோடு செந்தமிழ்ப்பாக்கள் பாடும்
தகுதி பெற்றிருந்தனர். இருவரும் எப்போதும் சேர்ந்தே
இருந்தமையால் இருவருடைய இளமைப் பெயர்களும் மறைந்து
இரட்டைப்புலவர் என்ற பெயரே நிலைத்தது.

இவர்கள் பாடிய நூல்கள் திருஆமாத்தூர்க்கலம்பகம்,
தில்லைக்கலம்பகம், காஞ்சி ஏகாம்பரநாதர் உலா,
ஏகாம்பரநாதர் வண்ணம் என்பன. மூவர் அம்மானைப்
பாடல்கள், தியாகேசர் பஞ்சரத்தினம் என்பனவும் இவர்கள்
பாடியனவாகக் கூறுவர்.
திருஆமாத்தூர்க் கலம்பகம்

இந்நூல் 101 பாடல்களும், காப்பு விருத்தம் ஒன்றும் உடையது.
இந்நூலுள் அகத்துறைப் பாடல்களும், சந்தப்பாடல்களும் அதிகமாக
உள்ளன.
தில்லைக்கலம்பகம்

இரட்டைப்புலவர் பாடிய இரண்டாவது கலம்பகம், காப்பு
வெண்பாவும், 100 பாடல்களும் உடையது. சிதம்பரத்தில்
எழுந்தருளியுள்ள நடராசப் பெருமான் மீது பாடப்பெற்றது.
பெருமான் சிறப்பு, வழிபட்டோர், பிற தலங்கள், பஞ்சபூதத் தலங்கள்,
ஐந்து சபைகள் முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

யார் எவ்விதம் இறந்தாலும், புரியைக் (புரி - பழுதை,
வைக்கோல் தாளை முறுக்கிச் செய்த கயிறு) கட்டி இழுத்து
எறிந்தாலும் கூட, சிதம்பரத்தில் சென்று இறத்தல் நன்று என்று
கூறுகிறார்கள் இந்த இரட்டைப்புலவர்கள்.

பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலுமிப் பாழுடலம்
கொழுத்துச் செத்தாலும் மெலிந்து செத்தாலும்
கொலைப்படினும்
புழுத்துச் செத்தாலும் புதைத்தாலும் காலில் புரியைக்
கட்டி
இழுத்துச் செத்தாலும் சிதம்பரத் தேசென் றிறத்தல்
நன்றே

காஞ்சி ஏகாம்பரநாதர்உலா

இது, இரட்டைப்புலவரால் இயற்றப்பட்டது. நூலில்
தலப்பெருமை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. கயிலாயத்தில்
உமாதேவியார், சிவபெருமான் திருக்கண் புதைக்க (மறைக்க)
உலகம் இருளில் மூழ்கியது. உலகத்தைத் துன்பத்தில் ஆழ்த்திய
பாவம் தீருவதற்காகக் காஞ்சியில் சென்று தம்மைப் பூசிக்கும்படி
பிராட்டிக்குப் பெருமான் உத்தரவிட்டார். அம்மையார் காஞ்சியின்
சிறப்புகளையெல்லாம் பார்த்துக் கொண்டு வரும் செய்தி உலாவில்
விளக்கமாக உள்ளது. பின்னர் அம்மையார் பூசித்தல், கம்பை
நதியில் வெள்ளம் கண்டு பெருமான் திருவுருவை அணைக்க
இறைவன் வெளிப்படுதல், பங்குனி விழா, அலங்காரச் சிறப்பு, உலா
வருதல், பின்னர் ஏழு பருவப் பெண்களும் கண்டு விரும்புதல்
என்ற செய்திகள் கூறப்பட்டுள்ளன.

பேரிளம்பெண் என்ற பருவத்தைக் கூறும் போது
சிவபெருமானின் இயல்பை மிகவும் நன்றாக விளக்கியுள்ளனர் இந்த
இரட்டைப்புலவர்கள். காலத்தால் ஓரளவு முற்பட்ட இந்த நூல்,
பின்வந்த புலவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment