திருமூலர்

Monday, August 1, 2011
திருமூலர்
திருமூலரின் திருமந்திரம் 63 நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும், திருவள்ளுவரின் குருவாகவும் அறியப்படும் திருமூலரால் இயற்றப்பட்டது திருமந்திரம் ஆகும். இந்நூல் சைவ திருமுறைகளுள் பத்தாம் சைவ திருமுறையாக போற்றப்படுகிறது. திருவாவடுதுறையிலிருந்தவாரே இந்நூல் இயற்றப்பட்டதாக வரலாற்றில் காணக்கிடைக்கிறது. திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில்(இயல்கள்) மூவாயிரம் பாடல்களை உடையது. ‘மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது’ என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும். நூல் பெருமை: இந்நூ்ல பண்டைய இந்திய சித்தர்களின் அறிய கண்டுபிடிப்புகளையும் வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்தூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. இந்நூ் இறைவனை துதி செய்வதோடு நில்லாமல் பதி பசு பாசம் என்பனவற்றின் இணைப்பையும் உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும் நல் வாழ்க்கை வழிகாட்டி நூலாகவும் சாத்திர நூலாகவும போற்றப்படுகிறது பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம் குண்டலினி யோகம் மருத்துவம் நல் ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகும் அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்தில் பதியும்படி கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாம். தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். யோகியாகவும் எல்லாம் வல்ல சித்தராகவும், பலகலை அறிந்த ஞானியாகவும், அருள் நிறைந்த நாயன்மாராகவும் விளங்கினார்! இறைவன் பெரிய கருணையினால், உலகுக்கு அளித்த ஆகமப் பொருளை அருந்தமிழ் மறையாய் மூவாயிரம் மந்திரங்களில் நமக்குத் தந்துள்ளார்.
திருமந்திரம் 10ஆம் திருமுறை. தோத்திரமாகவும், சாத்திரமாகவும், யோகநூலாகவும், ஞானநூலாகவும், தந்திர நூலாகவும், மந்திரங்கள் அமைந்த பாராயண நூலாகவும், சமய, சமூக, ஒருமைப்பாட்டு நல்லிணக்க நூலாகவும் திகழ்ந்து உலகுக்கு உயிராக விளங்குகிறது திருமந்திரம். “இறைவனே தமிழொடு – வடமொழியிலும், ஆரியத்தொடு தமிழிலும் உடனே சொல்லிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே” என்கிறார் முத்தமிழ் வேதம் தத்துவம் சதாசிவம். திருமூலர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் இயற்பெயர் சுந்தரர். தமிழகத்தில் பொதிகை மலையில் – அகத்தியர் – தமிழ்ச் சங்கத்தில் உலக நூல்களைக் கற்றார். பின், கயிலைக் குருகுலம் சென்று, ஞான நூல்களான அருமறைகள், ஆகமங்களை நந்தியெம் பெருமானிடம் கற்றார். நந்தி அருளால் ‘நாதன்’ என்ற பட்டம் பெற்று, சுந்தர நாதர் ஆகித் தவம் செய்தார்.
கயிலையில் இவருடன் பாடங்கேட்டவர்கள்: சனகர் – சனந்தனர்- சானாதனர் – சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய ஏழுபேருடன், தானும் உடனிருந்து கற்றதாக அகச்சான்று கூறுகிறார். பதஞ்சலி – வியாக்கிர பாதருடன் இவர் தில்லைக்கு வந்து திருக்கூத்து தரிசனம் செய்தார். மீண்டும் கயிலை சென்றார். பதஞ்சலி வியாக்கிர பாதர் இருவரும் தில்லையிலே ஆசிரமங்கள் அமைத்துக் தங்கிவிட்டனர். தில்லைக் கோபுரத்தில் – திருமூலர்சிலையை காணலாம். இரண்டாவது முறையாக அகத்தியரைக் காண பொதிகை நோக்கி வருகிறார். ‘குறு முனிபால் உற்றதொரு கேண்மையினால் உடன் சில நாள் உறைதற்கு, நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக் கொண்டார்’ என்கிறார் சேக்கிழார். பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும், விளங்குபவர் இறைவன் இதனை மாணிக்கவாசகர், முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! என்கிறார் மாணிக்கவாசகர் உடம்பார் அழியின் உயிரால் அழிவர் திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள திருமந்திரம் என்ற ஒப்பற்ற தத்துவ நூலை இயற்றியவர்தான் திருமூலர். “காயமே இது பொய்யடா… வெறும் காற்றடைத்த பையடா” என்ற மாயாவாதத்துக்கு எதிராக, அறிவு பூர்வமான யதார்த்த வாதத்தை முன்வைத்த சிந்தனைச் சித்தர்தான் திருமூலர். சங்கன்னர் என்ற சித்தரின் அவதாரமாக கருதப்படும் திருமூலர், சிதம்பரம் தில்லை நடராஜரின் சன்னதியில், நீண்ட காலம் நிட்டையில் அமர்ந்துதான், உலகுக்கு மிகச் சிறந்த தத்துவ நூல்களை வழங்கியுள்ளார். உடலை வருத்தித்தான் ஞானத்தை அடையவேண்டும் என்ற கருத்தை மறுத்த அவர், பலவீனமான உடலை வைத்துக்கொண்டு வலிமையான ஞானத்தை அடைய முடியாது என்பதையும் உறுதிப்படக் கூடியுள்ளார்.
இவர் எழுதிய நூல்களில், திருமந்திரம் தலையாயது எனினும்,
திருமூலர் அறுநூற் றொன்று,
திருமூலர் வைத்தியம்,
திருமூலர் ஞானம்,
திருமூலர் வழலைச் சூத்திரம்,
திருமூலர் பல திரட்டு,
திருமூலர் வாதம் இருபத்தொன்று போன்ற மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். உடல் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை நமது ஆன்மீக மரபில் அழுத்தமாகப் பதிய வைத்தவர் திருமூலர்தான். உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ள தெளிந்தமாருக்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே உடலும், அதில் திரண்டுள்ள ஊனும் எம்பெருமான் கோயில் என்று சொல்லும் திருமூலர், வாயைக் கோபுரம் என்றும், உயிரை சிவனென்றும் சித்தரிக்கிறார். புலன்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதால் அவற்றை கள்ளப் புலன்கள் என்கிறார். இயல்பான மனித வாழ்வின் மூலமாக மேன்மையை அடைய முடியும் என்பதே திருமூலரின் சாரமான கருத்து என்று சொல்லலாம். இயற்கைக்கு மாறான வெறுப்பும், சலிப்பும், விரக்தியும் மனிதனுக்கு சிறுமைப் பண்புகளைத்தான் அதிகரிக்குமே தவிர, பேரியல்புகளை வளர்க்காது. திருமூலரின் ஞான மார்க்கம் இந்த அடிப்படையில் அமைந்ததுதான்.
பொதுவாக சித்தர்களின் தத்துவமே, மனித வாழ்விலிருந்து இறைமையை நாடுவதுதான். இறை வாழ்வு என்பதே இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் என்பதே சித்தர்களின் சிந்தனை. திருமூலர், அதைக்கொஞ்சம் அழுத்தமாகவும், விரிவாகவும் சொல்லியிருக்கிறார். அவர் இயற்றியுள்ள திருமந்திரம், நல்வாழ்விற்கு ஒருமந்திரம். “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..” என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம். சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது. முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மொழி இல்லாமல் எது நிலைக்கும்? தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள். ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது. மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும். மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது. முக்காலத்தையும் அறிந்த சித்தர்களுக்கு முத்தமிழின் பெருமை தெரியாமலா போய்விடும்! தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறி இருப்பதைக் கவனியுங்கள்… “முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதியது விரும்பாரன்றே” (திருமந்திரம்) அதனால்தான் “அருமலர் மொழியுஞான அமுதர்த செந்தமிழைச் சொல்வாம்” என்கின்றார் ஞானவெட்டியான். ஆம்… தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை. ஞானாமிர்தமாகப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல.. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது, “பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரே” என்றும் பாராட்டுகின்றார். தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் சிறப்புப் பெற்றார்கள் என்கிறார். “பொதிகை மேவு மகத்தீர ராலெனது போதத் தமிழ் வாக்கியம்” என கேட்பவரை கிறுகிறுக்க வைக்கும் தன்தமிழ் ஆற்றல், பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார். அகத்தியர் தமிழைப் பற்றி என்ன சொல்லுகிறார்? “சிந்தையுறு ஞானத் தெளியவுரை பாடுதற்கு வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே – செந்தமிழ் நூல் காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும் தேவியென்னும் பூரணியே சீர்” (அகத்தியர் ஞானம் 100) என்று தமிழை பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே சித்தரிக்கின்றார்.
பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும், தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார். “முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார் இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -கடைச் சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ நாம் பூமி வாழ்ந்த நலம்” இப்படி மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள். சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள் என்பதை இனியேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment