பிராணன்

Friday, April 22, 2011
1 . மனமும் மூச்சும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. பிரணாயமம் எனும்

எளிய மூச்சுப் பயிற்சி மூலம் மனதை எளிதில் ஒருமுகப்படுத்த முடியும். ஆனால்

பயிற்சி முடிந்தவுடன் மனம் மீண்டும் அலைபாயத் தொடங்கும.

2 . உயிர் சக்தியின் அடிப்படை மூச்சு எனப்படும் பிராணன். மனமும் பிராணனை

அடிப்படையாகக் கொண்டதே. மனம் அறிய உதவுகிறது. பிராணன் செய்ய
உதவுகிறது. இரண்டும் உதயம் ஆகும் இடம் ஒன்றே.

3 . மனதை இரண்டு வழிகளில் ஒடுக்கலாம். லயம் (மனோலயம்) என்பது தற்காலிகமாக

மனதை ஒடுக்குதல். இதனால் மனம் மீண்டும் எழும். மனத்தை உரு மாய்த்தல்

(மனோநாசம்) நிரந்தரமாக மனதை மாய்க்கும்.


4 . பிராணாயமம் போன்ற மூச்சு பய்ற்சியினால் மனதை ஒடுக்கி எண்ணங்கள் அற்று

மனதை நிலைகொள்ள செய்ய வேண்டும். அப்பொழுது நான் யார் - என்று

'விழிப்புணர்வு கொள்ளவேண்டும். இதனால் மனம் முழுமையாக அழிந்து போகும்.


5 . மனம் அழியப்பெற்று, 'தான் யார்' என்று யோகி தன் நிலைபெற்ற பின், செயல்கள்

ஏதும் இல்லை. யோகி தன் நிலை அடைந்தார்.
Read more ...

பக்தனின் பெருமை

Friday, April 22, 2011
பக்தனின் பெருமை

நாம் வணங்க வேண்டிய மகான்கள் எத்ததையோ பேர் இருக்கின்றனர். எந்த இடத்தில் எந்த விசேஷம் இருக்கிறது என்பதை நம்மால் உணர முடியாது. நீறு பூத்த நெருப்புப் போல் எத்தனையோ பெரியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தம்மிடத்திலுள்ள விசேஷ மேன்மையை தெரியப்படுத்தாமல் இருப்பார்கள். அதைக் கொண்டே அவர்களிடத்தில் ஒருவிதமான ஏற்றமும் இல்லை என்று நினைக்கக் கூடாது. சிலர் தங்களிடத்திலுள்ள விசேஷங்களை தாமாகவும் பிறர் மூலமாகவும் வெளிப்படுத்தி தங்களை உலகத்து மக்கள் கெளரவிக்கும்படியாக செய்வார்கள். இதைக் கொண்டே அவர்களிடத்தில் ஞானம் ஆசாரம் பக்தி முதலிய குணங்கள் இருப்பதாக ப்ரமிக்க வேண்டாம்.

ஒரு கலசத்தில் தண்ணீரோ எண்ணையோ நெய்யோ பூர்ணமாக இருந்தால் அந்த கலசம் தளும்புவதில்லை. அரைகுரையாக இருந்தால் அது அதிக ஒலியை எழுப்பும். அது போல் சிலர் நிறைய ஞானத்தையும் ஊக்கத்தையும் ஒழுக்கத்தையும் பக்தியையும் பெற்றவர்கள். தங்களைப் பற்றி எதுவும் பேசமாட்டார்கள். பிறர் மூலமாக தங்களுக்கு கெளரவத்தை உண்டாக்க முயற்சியும் செய்ய மாட்டார்கள். இத்தகைய மகான்களே மகான்கள். உத்தமர்கள். மேடையிலிருந்து தங்களை பற்றி புகழ்ந்து கொண்டும் ஆங்காங்கே தங்களுக்கு ஸத்காரம் ஏற்பட்டது என்று சொல்லிக் கொண்டும் திரிகிறவர்கள் அப்படிப்பட்ட மகான்களில் சேரமாட்டார்கள்.

'அப்ரயத்நாகனா: ஸேவ்யா க்ருஹஸ்தைர் விஷயா: ஸதா |' என்றபடி, தாமாகவே பகவத் ஸங்கல்பத்தினால் ஏற்படும் பிறர் மூலமான ஸத் காரியங்களையும் லேளகீக செளகர்யங்களையுமே அவர்கள் பெற விரும்புவார்கள். இம்மாதிரி லெளகீக விஷயத்தில் இந்த மகான்கள் முயற்சி எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள். சந்யாவந்தனம், பகவதாராதானம், மற்றும் சில தர்மங்களில் எம்பெருமானின் உவப்புக்காக தாங்களே முயற்சி செய்ய விரும்புவார்கள்.

சாஸ்திரங்களில், பகவானை சேவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆயினும், அந்த பகவான் தன்னைவிட பக்தர்களே உயர்ந்தவர்கள் என்று கூறுகிறான்; 'மம மத்பக்த-பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத்' என்று. 'எனக்கு என்னிடத்தில் ப்ரீதி உண்டு. என்னைச் சேர்ந்து என்னிடம் பக்தி செலுத்துகிறவரிடம் அதிகப் ப்ரீதி உண்டு. அந்த பக்தரிடத்தில் பக்தி செய்பவனிடத்தில் மிக்க அதிகப் ப்ரீதி உண்டு. இப்படி மேன்மேல் பக்தி செய்பவனிடத்தில் ப்ரீதிக்கு அளவே இல்லை' என்று பகவானே கூறுகிறான். ஆகையால் பகவானிடத்திலும் அந்தப் பாகவதனிடத்திலும் எவனுக்கு உண்மையான பக்தி உள்ளதோ அவனை நான் வணங்குகிறேன் என்பதே பகவானுடைய ஸங்கல்பம்.

இந்த பக்தர்களிடத்தில் பகவானுக்கு எவ்வளவு ஆசையிருக்கிறதோ அவ்வளவு கோபமும் அந்த பக்தர்களுக்கு துன்பம் விளைவிப்பவரிடத்தில் உள்ளது. பக்தர்களுக்கு ஒருவன் விரோதத்தை உண்டு பண்ணினால் அவனை பகவான் வெறுப்பான்; அவனிடம் கடும் சினம் கொள்வான்; தன்னையும் அறியாமல் அவனிடத்தில் கோபத்தை காட்டி நிக்ரஹ பானங்களைத் தொடுப்பான். 'கோபஸ்ய வசமேயிவாந்' என்பதுதான் உண்மை. பாகவதர்களுக்கு விரோதம் செய்கிற மற்றவரிடம் மட்டுமே கோபம் கொள்வான் என்பதில்லை. பகவான் தன் கையே பாகவதர்களுக்கு இடையூறு செய்யும்போல் தோன்றினால் அதையும் கத்தியால் வெட்டிவிடுவான். இதை பாகவதம் விளக்கமாக காட்டுகிறது.

கார்ய வைகுண்ட லோகத்தில் பகவான் சிம்ஹாசனத்தில் லக்ஷ்மியுடன் வீற்றிருக்கிறான். அப்பொழுது ப்ரம்மாவின் மானஸ புத்திரர்களான ஸனகர் முதலியவர்கள் அங்கே செல்கிறார்னள். ஸனகர், ஸனந்தனர், ஸனாதனர், ஸனத்குமாரர் என்ற நால்வரும் ஐந்து உள்ளவர்கள். ஞானத்திலோ முதிர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் அனைவரையும் சமமாக பார்ப்பவர். எப்பொழுதும் பகவத் த்யானம் செய்பவர்கள்; முனிவர்கள்; எல்லா இடத்திலும் செல்வதற்கு தடையற்றவர்கள்; எந்த சமயத்திலும் செல்ல உறிமை பெற்றவர்கள். இவர்களை வேண்டாம் என்று யாருமே தடுக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட இந்த நால்வரும் வைகுண்ட லோகத்திலுள்ள பகவானை சேவிக்க சென்றபோது ஜயன் விஜயன் என்ற இரண்டு த்வாரபாலகர் தங்கள் கையிலுள்ள பிரம்பை எடுத்து நீட்டி தடுத்து இவர்களை கேலியும் செய்தார்கள்.

பகவானின் சேவையில் அபிலாக்ஷையுடன் வந்த தங்களுக்கு இம்மாதிரி ஏற்பட்ட ஏமாற்றத்தை கண்டு இவர்கள் மிக்க சினம் கொண்டனர்; 'பகவானின் சமீபத்திலேயே வாசம் செய்தும் அடிமையைச் செய்தும் இருக்கிற உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட விபரீத புத்தி உண்டாயிற்று? உங்களது மதி மயக்கத்திற்கு காரணம் யாது? ப்ராசந்த புருஷணான பகவானுக்கு நீங்கள் வேலைக்காரராக இருக்க தகுதியேயில்லை. ஆகையால் சாபத்தைக் கொடுத்தோம் என்றனர்.

அப்பொழுது, சர்வஜ்ஞனான பகவான் ஏதோ பெரிய அனர்த்தம் உண்டாகிவிடும் என்று எண்ணி தன் சிம்ஹாசனத்திலிருந்து இவர்கள் இருக்குமிடம் வந்து ஸனகாதி முனிவர்களை வேண்டிக்கொள்கிறான். 'மகரிஷிகளே! எனக்கு நீங்களே உயர்ந்த தெய்வம். உங்களுடைய அருள் எனக்கு அவசியம் வேண்டும். என் வேலைக்காரர் செய்த குற்றம் என்னுடைய குற்றமே' என்று சொல்லி இருதியில் ஒரு ரசகனமான விஷயத்தைக் கூறுகிறான்.

'எந்த பகவானுடைய ஸத் சரித்திரங்களைக் கூறுவதும் கேட்பதுமாகிய புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வது எல்லா ஜனங்களையும் பரிசுத்தமாக்குகிறதோ அத்தகைய பகவானான நான் உங்களால் அல்லவோ சத்தை பெருகிறேன்? நீங்கள் செய்யும் பூஜையினாலும் நிவேதனங்களினாலும் ஸ்தோத்திரங்களினாலும் மனதில் செய்யக் கூடிய த்யானத்தினாலும் என் உடல் பெருத்துவிடுகிறது. என் ஸ்வரூபமும் நிலை பெறுகிறது. ஆகையால் உங்களுக்கு தடை செய்பவர்களை இப்பொழுதே கொல்ல வேண்டும். உங்களுக்கு பிரதிகூலமாக என் கையே இருக்க நேர்ந்தால் அதையும் அறுத்துதள்ளுவேன் என்றான். இதிலிருந்து பக்தனின் மகிமை எப்படிப்பட்டது என்பதை நாம் நன்கு உணரலாம். பகவான் தன் கைகளையே அறுத்து தள்ளுகிறேன் என்று சொல்லுகிறான் என்றால் விரோதத்தைச் செய்யும் மற்றவர்கள் விஷயத்தை பற்றி கேட்கவும் வேண்டுமா?

பக்தர்களிடத்தில் பகவான் இப்படி அதிகமான அபிநிவேசத்தை வைத்திருப்பதனால் அவர்களிடத்தில் விரோத மனப்பான்மையை காட்டவே கூடாது. அவர்களுக்கு இயன்ற வரையில் அநுகூலமாகவே நடந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவனுக்கும் மனம் வாக்கு சரீரம் என்று மூன்று கரணங்கள் உள்ளன. இந்த முக்கரணங்களினாலும் பாகவதர் விஷயத்தில் அபசாரப்படாமல் இருப்பதும் உபசாரம் செய்துகொண்டு இருப்பதுமே கடமை.

ஸ்ரீவைகுண்டம் என்ற உலகத்தையடைந்து அங்கு எம்பெருமானுடைய அநுபவத்தை பெறுவதாகிற மோக்ஷத்தை அடைய, வேதாந்தங்களில் முப்பத்திரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. இவற்றுக்கு 'ப்ரஹமவித்யா' என்று பெயர். சாண்டில்ய வித்யை, உபகோஸல வித்யை, தஹர வித்யை, ஸத் வித்யை இம்மாதிரியானவை அவை. இவற்றுள் ஏதாவது ஒரு ப்ரஹமவித்யையை பயின்று வந்தால் பரிபூர்ண ப்ரஹமாநுபவம் என்ற மோக்ஷம் கிடைக்கும். இவற்றை அநுஷ்டிப்பவன்தான் பக்தன், பாகவதன், ப்ரபன்னன் என்று சொல்லப் பெறுகிறான். இவன் விஷயத்தில் பகவானுக்கு அளவற்ற உவப்பு உண்டாகிறது. 'உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்' என்றும் 'வாசுதேவ: சர்வம்' என்றும் எம்பெருமானையே தனக்கு தாரகணாகவும் போஷகணாகவும் போக்யணாகவும் நினைப்பவன் இவன். உலகத்திலுள்ள மாந்தர் தங்கள் தங்களுக்கு சோறு பால் வெற்றிலை முதலியவற்றை தார: பொஷ: போக்யங்களாக நினைப்பார்கள். இந்த பக்தன் இவற்றில் பற்றற்று, 'எல்லா பொருள்களும் பகவானே என்று நினைக்கிறான் அல்ப சுகங்களில் ஆசையற்று 'எல்லாம் பகவானுக்கே' என்று எண்ணி தன் முக்கரணங்களையும் பகவானிடத்திலேயே அர்ப்பனம் செய்கிறபடியால் இவனை பகவான் 'மகாத்மா' என்று சொல்கிறான். உலகத்தில் ஏதோ சில காரணத்தை முன்னிட்டு ஒருவனை 'மகாத்மா' என்று சொல்லுவது வழக்கம். அதுபோல் இல்லாமல் பகவானே கொண்டாடிய இவன்தான் மகாத்மா. இத்தகைய மகாத்மாவை பகவான் தான் பெற்றபிறகு ஒரு சமயத்திலும் கைவிடமாட்டான். இவர்கள் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தபிறகு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி 'நான் மறுபடி ப்ரக்ருதி மண்டலத்திற்கு போய் வருகிறேன். எனக்கு பதிலாக மற்றொரு பொருளை ப்ரதிநிதியாக வைக்கிறேன்' என்று சொன்னாலும் பகவான் இவனை அனுப்பமாட்டான். 'பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே' என்றன்றோ சொல்வது?

இந்த பக்தர்கள் தங்களது பக்தியோகம் முடிந்து உடலை மோக்ஷத்துக்கு போகவிடும்போது தங்களுடைய பாவங்களையும் புண்ணியங்களையும் தங்களது சத்ருக்களிடத்திலும் ஸ்நேகிதர்களிலத்திலும் விட்டு போகிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. பகவானிடத்தில் அதிக பக்திபெற்ற இவர்களுக்கு பாவம் இருக்குமா என்று நினைக்கவேண்டாம். அனாதிகாலமாக ஸம்ஸாரத்தில் சூழன்றுகொண்டு இருந்தவர்கள்தாமே இப்பொழுது பக்தர்களானார்கள்? அந்தந்த உடலை எடுத்து ப்ரக்ருதி மண்டலத்தில் இருக்கும்போது அளவற்ற பாவங்கள் அனைவருக்கும் ஏற்படுவது சகஜம்தானே? அறிவு பெற்று ஆசார்யனை அடைந்து காலக்ஷேபங்களை செய்து வேதாந்த ஞானம் முதிர்ந்து வந்து பிறகுதான், 'பகவானுடைய உத்தரவுபடி நாம் இருக்கவேண்டும். அவனிடம் அடைக்கலம் நாம். அவனுடைய சட்டதிட்டங்களுக்கு அடங்கியிருக்கவேண்டும். பாவங்களை செய்யக் கூடாது' என்ற எண்ணங்கள் பெரும்பாலும் உண்டாகும். ஆகையால் எத்தனையோ பிறவிகளில் இவர்கள் அநேக பாவங்கள் செய்திருக்கலாம், ஆகவே இவர்கள் செய்த எல்லா பாவங்களும் இருதியில் உடலை விடும்போது இவர்களிடத்தில் அபசாரப்பட்டிருக்கும் விரோதியினிடத்தில் சேர்ந்துவிடும். ஆகையால்தான் பக்தர்களிடத்தில் விரோத மனப்பான்மை காட்டக்கூடாது. சாதாரணமாக நாம் செய்த பாவங்களே அளவற்று இருக்க, பாகவதர்களிடத்தில் அபசாரப்பட்டு அதனால் வரும் அவரது பாவங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டால் இவற்றுக்கு விமோசமே இல்லாமல் போய்விடும். அதனால்தான் ஒரு பாகவதனிடத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது குற்றம் செய்துவிட்டால் அவருடைய பாவமும் நம்மிடம் வந்துவிடுமே என்று எண்ணி, அவரது கடைசி காலத்திலாவது அவரிடம் சென்று, 'அடியேன் தேவரீரடத்தில் பல குற்றங்களை செய்திருப்பேன். அடியேனை மன்னிக்க வேண்டும்' என்று ப்ரார்த்திப்பார்கள்.

ஆகையால் அவருடைய பாவங்கள் நமக்கு வந்துவிடுமே என்று அஞ்சி அவரிடம் கோபத்தை காட்டாமல் இருப்பவன் உத்தமன்.

ப்ரஹ்மவித்பாபவர்காணாமநந்தாநாம் மஹீயஸாம் |
தத்த்வேஷிஸங்க்ரமம் ஜாநந் த்ரஸ்யேத் ததபராதத: ||

'அந்த பாகவதர் நம்மிடத்தில் ஏதாவது விரோதத்தைக் காட்டினால் நாம் எப்படி வெறுமனே இருப்பது ? பதிலுக்குப் பதில் ஏதாவது செய்ய வேண்டாமா? அவர் எவ்வளவோ நம்மிடத்தில் விரோதத்தைக் காட்டுகிறாரே. ஆகவே நாமும் அவருக்கு ஏதாவது விரோதத்தைச் செய்வது நல்லது' என்று நினைக்கக் கூடாது. அவர் செய்த பாவங்களுக்கு சிக்ஷையைக் கொடுக்க பகவான் இருப்பதனால் நாம் வாளா இருப்பதே நல்லது. அப்படி ஏதாவது நாம் செய்ய ஆரம்பித்தால் ஈர்வரன் செய்ய வேண்டிய வேலையை நாம் எடுத்துக் கொண்டதுபோல் ஆகிவிடும். அதனால் நம்மை ஈச்வரன் வெறுப்பான். 'வோடுமீச்வரக்ருத்யாநி தத்விரோதாதபீப்ஸதி' என்று அருளிச் செய்தார் ஸ்ரீஸ்வாமி தேசிகன்.

இப்படியும் சிலர் நினைக்கலாம்: இரண்டு பாகவதர்கள்; அவர்களில் ஒருவன், 'நானும் பகவத் பக்தன்தானே?. மற்றொரு பக்தனிடத்தில் விரோதத்தை செய்தால் நமக்கு ஒரு வித தீங்கும் வராது. அவருடைய பாவங்கள் நம்மிடம் வந்துவிடுமே என்று அஞ்சவேண்டாம். நாமும் பக்தரானபடியால் நமது பாவம் நம் விரோதிகளிடத்தில் போவது போல் நம்மிடம் வந்த அவரது பாவங்களும் நமது விரோதிகளிடத்தில் போய்விடப்போகின்றன. ஆகையால் நமக்கு ஒருவித தீங்கும் இல்லை என்று எண்ணலாம் அல்லவா? நமது பாவம் போலவே பாகவதர்களின் பாவம் நம்மிடம் வந்ததும் நமது பாவங்களாகவே ஆகிறபடியால் அது கடைசியில் நம் விரோதியினிடத்தில் போகப்போவது வாஸ்தவம்தான். ஆனாலும் அந்த பாவம் உடல்போவதற்கு முன்பாகவே பலன் கொடுக்கக்கூடியதாக இருந்தால் அது உடனே பலித்து பெரிய அநிஷ்டத்தை கொடுத்துவிடும்; பெரும் கஷ்டத்தை கொடுத்து துன்புறுத்தும். எல்லா பாவங்களும் வெகுகாலம் கழித்துதான் பக்குவமாகும் என்ற நிர்பந்தம் இல்லையே? ஆகையால் இப்படிப்பட்ட கஷ்டங்கள் நமக்கு வராமல் இருக்கவேண்டும் என்று எண்ணி பக்தர்களும் ஒருவரிடம் ஒருவர் அபசாரபடாமல் இருப்பதுதான் நல்லது.

இப்படியே பாகவதரின் புண்ணியங்களும் அவர்களின் ஸ்நேகிதர்களிடத்தில் வரும்; ஆகையால் சில்லரையான சில தொண்டுகளை பாகவதர்களிடத்தில் செய்து அவர்களது அளவற்ற புண்ணியங்களை எளிதில் பெற்றுவிடலாம். ஆகையால் அவர்களிடத்தில் அபசாரப்படாமல் இருப்பதும் சில நற்காரியங்களை செய்திருப்பதும் நன்மையை கொடுக்கும். எனவே பாகவர்கள் எல்லோரிடத்திலும் ஒரேவிதமான அபிமானத்தை வைத்தும், வேறுபாட்டை காட்டாமலும் இருந்து உபசரிக்கவேண்டும். இதில், 'நமக்கு இவர்தான் வேண்டியவர். இவர் வேண்டாதவர் என்ற பாகுபாட்டை காட்டக் கூடாது. ஏனெனில் பகவத் பக்தி என்ற ஒரு பெரும் குணத்தை இட்டுத்தானே நாம் பாகவதர்களை உபசரிக்கிறோம்? அது யாரிடத்தில் இருந்தால் என்ன? ஒரே விதமாகத் தானே நாம் அவர்களை கருதவேண்டும்? இப்படி கருதாமல் விஷம புத்தியுடன் நடந்தால் நம்மை எம்பெருமான் வெறுப்பானே தவிர உவக்கமாட்டான். கல்விகளை நன்கு கற்று ஞானம், அநுஷ்டானம், வைராக்யம், பக்தி இவற்றை பெற்ற வித்வான்களிடத்தில் சமமான எண்ணத்தை வைத்து எல்லோரையும் நாம் ஒரே விதமாக ஆதரிப்பதுதான் பகவானை சந்தோஷிப்பிக்கும்.
Read more ...

திருமந்திரம்

Wednesday, March 23, 2011
திருமந்திரம்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே



இந்த உடம்பை அழிந்து விட்டால் உயிரும் அழிந்துபோகும். அதன் பிறகு ஞானத்தை உணர்வதெங்கே? அதனோடு சேர்வதெங்கே? அதனால் அரிதாகக் கிடைத்த இம் மானிடப் பிறவி வீணாகிப் போகுமன்றோ? அதனால் இந்த உடம்பை வளர்ப்பதற்காக உபாயங்களை அறிந்து பேணிப் பாதுகாக்கத் தொடங்கினேன். உடம்பைக் காப்பாற்றிக் கொண்டதன் முலம்தான் உயிரையும் காப்பாற்றிக் கொண்டேன் என்கிறார் திருமுலர்.

அழியக்கூடியது உடல் மட்டுமே. உயிர் அல்ல. ஆன்மாவுக்கு அழிவில்லை என்று சமயங்கள் கூறுகின்றனவே. கண்ணபிரான் கீதையில் இதைதானே அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார். திருமுலர் உயிர் அழிந்துவிடும் என்று கூறியுள்ளது முரண்பாடல்லவா? என்று கேட்கலாம்.

உடல் இருந்தாலே உயிர் இயங்க முடியும். ஆன்ம விடுதலைக்காக உழைக்க முடியும். உடல் போய்விட்டால் அதன் பிறகு உயிருக்குச் செயல்பாட்டுத் திறன் ஏது? இந்த உண்மையையே ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறார் திருமுலர்.

பிற சமயத்தவர்கள் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். அப்போதுதான் மெய்ஞ்ஞான நெறியில் செல்ல முடியும் என்று கூறுகின்றனர்.

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை


அடக்கடக் கென்பர் என்ற சொல் நயம் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும் அடக்க வேண்டும் என்று மற்றவர்கள் திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கூறந் தன்மையை அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் அறிவில்லாதவர்கள் என்கிறார்.

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்.
அவர்களை ஏன் அறிவில்லாதவர்கள் என்று கூறுகிறேன் என்றால்

அஞ்சும் அடக்கம் அமரரும் அங்கிலை.
ஐம்புலன்களை அடக்கியவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நீங்கள் கூறும் தேவலோகத்திலும் இல்லை. கடவுளின் முன்று உலகங்களிலும் இல்லை. பின் எதற்காக அப்பாவி மனிதனை மட்டும் அஞசும் அடக்கு அடக்கு என்று கூறுகிறீர்கள்?

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கி அசேதன மாமென்றிட்
டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே!

அஞ்சும் அடக்கினால் ஓரறிவும் இல்லாத சடப் பொருளாகி விடுவாய். (அசேதனம் = அறிவின்மை) அதனால் அஞ்சும் அடக்குவதால் பயனில்லை. அவற்றோடு கூடியிருந்தே வாழ்க்கைப் பயனை அடைய வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன் என்கிறார் திருமுலர் பிரான்.

வாழ்க்கைகு ஏற்ற தத்துவம்! மனிதன் நெறிப்படி நடந்து மற்ற அறங்களையும் கடைப்பிடித்து வந்தால் அவன் அடைய வேண்டிய நற்பயனை அடைந்து விடமுடியும் என்பதே சித்தர் நெறி.

உடலைப் பேண வேண்டும். பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் இந்த உடம்புக்குள்ளேதான் இறைவன் இருக்கிறான். அவனை அறிந்து கொள்ள முற்பட வேண்டும்.

தானென்ற வஸ்துவையும் தவிர வேறே
சாதகந்தான் இல்லை யென்று சஞ்சலித்து
பானென்ற சத்தியமாம் வாக்குக் காயம்
பத்தியுடன் சுத்தமதாய்ப் பதிவாய் நின்று
ஆனென்றே இருக்கிறதை ஆத்திக மென்பார்
அன்னாதார சரீரத்தைச் சுலப மாக்க
கோனென்று நிதானித்துப் பின்னை யொன்று
கூறாதே சூத்தரம் என்று சொல்லே.


அகஸ்தியர் வாத சௌமியம்

இந்த உடல் இருக்கிறதே இது அன்னத்தையே ஆதாரமாகக் கொண்டது. உணவு இல்லையென்றால் உடலும் இல்லை. அதனால் உண்டு உடலைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளத்தை ஒருமுகப் படுத்தி உடம்பாலும் உரையாலும் உண்மை நெறி தவறாமல் சுத்தமாய்ப் பதிவாய் நிற்பதே ஆத்திகம் என்று கூறுகிறார் அகத்திய மாமுனிவர்.
Read more ...

மாயை - சிவசித்தன்

Saturday, March 12, 2011
மாயை

என்பது பற்றிப் பெரும்பாலும் எதிர்மறையாகவே பொருள் கொள்ளப்படுகிறது. மாயை என்பது அறியாமை, நிலையாமையை நிலைத்தவை எனக் கொள்ளும் மயக்கம், மாயையிலிருந்து விடுபட்டால்தான் பிரம்மத்தை அறிதல் சாத்தியம் என்று மாயை என்பதே துறக்கப்பட வேண்டிய ஒன்று என்பதுபோல் எல்லாம் எண்ணங்கள் வேரூன்றியிருக்கின்றன.
உண்மையில் மாயையே பிரம்மத்தை அறிவதற்கான திறவுகோலாக உள்ளது.
மாயையானது, அது உள்ளளவும் சாசுவதமானதாகவே உள்ளது. சங்கரரின் கயிறும் பாம்பும் நியாயம் இதைத்தான் சொல்கிறது.
அதாவது கயிறு பாம்பாகத் தெரியும் வரை அது பாம்பாகவே உணரப்படுகிறது. அவ்வாறு உணரும் பரியந்தம் அது வாஸ்தவமாகப் பாம்பாகவே உள்ளது. மட்டுமல்ல. பாம்பாக இருந்ததுதான் கயிறாகவும் உள்ளது. அதாவது இரண்டுமே ஒன்றுதான்.
நமது பார்வையின் தன்மைக்கேற்ப, சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப, அது வெவ்வேறாகத் தென்படுகிறது. இதுதான் கயிறு-பாம்பு நியாயத்தின் உட்பொருளாகும்.
இதை இன்னும் விவரித்தால் கயிறு-பாம்பு இரண்டுமே நிஜம், அவையவற்றின் காலப் பிரமாணப் பரியந்தம் அவை நிஜமாக இருக்கும், இருக்க வேண்டும். கனவானது கனவு காணும்வரை தத்ரூபமாகவே உள்ளது. விழிப்பு நிலை வருகையில்தான் கனவு என்பது உறைக்கிறது. விழிப்பு நிலை வராது கனவு நீடிக்கும்வரை அது தன்னளவில் நிஜமான ஒன்றாகவே உள்ளது.
ஏனெனில், மாயை என்பது உறைநிலையில் உள்ள சக்தியைப் போன்று ப்ரம்மத்தின் வெளிப்படாத நிலையே ஆகும். மாயையை பிரம்மத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதால்தான் அது ஒரு வேண்டாத அம்சம்; பிரம்மத்தைக் காணவிடாமல் மறைக்கும் இடையூறு என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.

என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன், மம மாயா என்றும் தைவீ மாயா என்றும் இந்த மாயையைப் பற்றிக் குறிப்பிடுகிறான். மம என்றால் என்னுடைய என்றும் தைவீ என்றால் தெய்வீகமான என்றும் பொருள்படும்.
ஏஷா என்றும் மாயைக்கு ஒரு அடைமொழி கொடுக்கிறான். அதாவது புலன்களால் உணரக் கூடியது. கண்களால் காணவும், செவிகளால் கேட்கவும், சருமத்தால் உணரவும், மனதால் புரிந்துகொள்ளக் கூடியதுமான மாயை. ஆக, மாயையின் வடிவில் உனக்கு எந்நேரமும் நான் காட்சியளித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நமக்கு உறுதி கூறுவதாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
என்னை வெளிப்படுத்திக்கொள்ளாத பிரம்மமாக இருக்கையில், நானே மாயையாக இருக்கிறேன் என்றும் ஸ்ரீ க்ருஷ்ணன் தெளிவாகவே குறிப்பிடுகிறான்.
மாயையை நாம் அன்னையின் வடிவிலேயே உணர்கிறோம். மஹா மாயை என அவளைத் துதிக்கிறோம். ஸ்ரீ க்ருஷ்ணன் பெண்மையின் குணாம்சத்தை வெளிப்படுத்துகையில் அவ்வாறாக அமைகிறான் என இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆணானாலும் பெண்ணானாலும் இருவர் உடம்பிலுமே ஆண்-பெண் ஹார்மோன்கள் இருப்பது, அவற்றின் விகிதாசாரம் அமைவதை ஒட்டியே ஆண், பெண் நிர்ணயம் ஆகிறது. ஆனாலும், பரஸ்பரம் ஆண் பெண் தன்மைகள் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருப்பதையும் உடற்கூறு விஞ்ஞானம் தெரிவிக்கிறது.
இதேபோல் அவசியமான தருணங்களில் தம்மை ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றிக்கொள்ளும் ஜீவராசிகளும் உள்ளன. மண்ணுக்கடியில் அடைகாக்கப்படும் நிலையில் உள்ள முதலையின் முட்டைகளுக்குள் வளரும் குட்டிகள் அவையவை வைக்கப்பட்டுள்ள அடுக்குகளின் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப ஆணாகவும் பெண்ணாகவும் பிறவி எடுக்கின்றன. சில தாவரங்களிலும் ஆண் பெண் தன்மைகள் ஒரு சேர இருந்து எப்போது எது அவசியப்படுகிறதோ அப்போது அது வெளிப்படுவதாக இருக்கிறது. .இவ்வளவும் சொல்லக் காரணம், ஸ்ரீ க்ருஷ்ணனே அவசியம் கருதி மஹா மாயையாகவும் இருக்கிறான் என்பதை நினைவூட்டத்தான்.
மாயையை அறிந்து, மாயையை உணர்ந்து, மாயையை அனுபவித்து, மாயையைக் கொண்டாடி, அதன்பின் மாயையைக் கடந்து செல்லப் பழக வேண்டும். மாயையை வெறுத்து அல்ல, மாயையை துவேஷித்து அல்ல, மாயையை அறியாமை என நினைத்து அல்ல, மாயையை இடையூறு என எண்ணியல்ல.
மாயையானது அசுத்தமானது, ஜீவாத்மாக்களுக்கே அது உரித்தானது என்றெல்லாம் எண்ணிப் புறந் தள்ளத் தேவையுமில்லை. அதிலும் இறைச் சக்தி உறைந்து இருப்பதை உணர்த்துவதற்காகத்தான் திருமாலின் செவி அழுக்கிலிருந்து வெளிப்பட்ட அசுரர் கதையைப் புராணம் சொல்கிறது. மேலும் அசுத்தம் அவசியமான உணவாகவும் சில ஜீவராசிகளுக்கு அமைகிறது.
மாயை என ஒன்று இருப்பதால்தான் பிரபஞ்சம் இருக்கிறது. அதன் இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் காரணமாகத்தான் இயற்கையின் மகத்தான சாதனைகளை அனுபவிக்க முடிகிறது.
சரி. இவ்வாறெல்லாம் மாயை செயல்பட வேண்டிய அவசியம் என்ன? இப்படியொரு லீலைக்கு என்ன அவசியம்?
இதற்கு விடை தேடித்தான் மெய்ஞ்ஞானிகள் காலங்காலமாக சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். விஞ்ஞானிகளும்தாம். நாத்திகர்களுக்குப் பிரச்சினை இல்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று போய்விடலாம்.
மாயை என்பது உறை நிலையில் உள்ள பிரும்மம் என்று ஸ்ரீ க்ருஷ்ணன் உணர்த்தியிருக்கிறான். இதில் உள்ள ஒரு நுட்பமான விஷயம், பிரும்மம் உறைநிலையில் இருக்கும்போதுதான் மாயையாக, சக்தியாக இயங்கி பலவற்றையும் தோற்றுவிக்கிறது !
பிரும்மம் இயக்க நிலையில் இருக்கிறபோது செயலற்றதாக அதாவது ஒருவர் சமாதி நிலையில் இருப்பதுபோல நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கிறது!
முரண்பாடு போலத் தோன்றும் இந்த உண்மையை வார்த்தைகளால் புரியவைப்பது கஷ்டம். என்னை நான் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளாதபோது மாயையாக இருக்கிறேன் என்று என் எஜமானன் ஸ்ரீ க்ருஷணன் சொல்வதைத்தான் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இறைச் சக்தி தன்னை பகிரங்கமாக வெளிப்படுதிக் கொள்ளாமல் மாயையான பிரபஞ்சத் தோறறங்களின் மூலம் தன் இருப்பை சூசகமாக உணர்த்துகிறது.
இதைப் புரிந்துகொண்டதால்தான் ஞானியர் ஜடப் பொருள் உள்ளிட்ட சகலத்திலும் இறைச் சக்தியைக் காண்கின்றனர். இதில் சுயமும் அடக்கம். மாயை என்று எதையும் தூஷிப்பதில்லை.
அத்வைதம், த்வைதம் இரண்டுமே இதில்தான் வந்து ஒடுங்குகின்றன.

நானே கடவுள் என்பது அத்வைதம் அல்ல. மாயையின் நிலையில் சகலத்திலும் பிரதிபலிக்கும் பிரும்மம் என்னுள்ளும் பிரதிபலிக்கிறது என்பதை உணர்தலே அத்வைதம். நீர்த்துளியில் சூரியன் பிரகாசிப்பதுபோல. நீர்த்துளி இருக்கும்வரை சூரியனும் அதில் இருக்கும். நீர்த்துளி உலர்ந்துபோகையில் அதில் உள்ள சூரியனும் மறையும். ஆனால் சூரியன், தொடர்ந்து விண்ணில் பிரகாசித்துக்கொண்டு இருக்கும்.
மாயா லீலையின் நோக்கம் பரிணாமம் என்றால் பரிணாமத்தின் நோக்கமும் அவசியமும் என்ன என்பது அடுத்த கேள்வியாகும்.
படிப்படியாக முதிர்ச்சிபெற்று இறுதியாக ஆன்மிகத்தில் முழுமையாகத் தோய்தலே அதன் நோக்கமும் அவசியமும் என்றால் அதற்கும்தான் என்ன அவசியம்? பாழுங் கிணற்றில் தள்ளிவிட்டு அரும்பாடுபட்டு மேலே ஏறிவரச் செய்யும் விளையாட்டு குரூரமாக அல்லவா இருக்கிறது?
முயற்சி செய், முயற்சி செய், முயற்சி செய்துகொண்டே இரு, அதற்கான பயிற்சியே அது. நீச்சல் பழக வேண்டுமெனில் நீரில் தள்ளிப் பழக்குகிற மாதிரி.
சிரத்தையும் விடா முயற்சியும் இருந்தால் மாயையின் இறுதி நோக்கமும் அவசியமும் மறைந்திருக்கிற பிரபஞ்ச ரகசியம் புரிந்துவிடும். இன்றைய விஞ்ஞானம் அதை நோக்கித்தான் வெகு விரைவாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதற்குள் மனிதன் தனது அகந்தையாலும் பேராசையாலும் பொறுப்பினைமையாலும் சூழலை நாசம் செய்து காரியத்தைக் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும்.
மஹா மாயையின் லீலா வினோதங்களை நாம் அனுபவித்து மகிழலாம் (வலி, வேதனைகள் உள்படத்தான்! உடல் நோவையும் பிற துயரங்களையும் அனுபவிக்க நேர்கையில் பெரியவர்கள் தமது கர்ம வினைகள் கரைந்து போவதாகவே அதனைக் கருதி மகிழ்கின்றனர். இறைச் சக்திக்கு நன்றி தெரிவிக்கின்றனர். மற்றவர்கள்தான் இதற்கு மாறாக ஆண்டவனே உனக்குக் கண்ணில்லையா என்று புலம்புகின்றனர்).
அதன் ரகசியம் புரிந்தாலும் பிறருக்கு வார்த்தைகளால் புரிய வைக்க இயலாது. அவரவரும் தாமே முயற்சி செய்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயமிது. வாதப் பிரதிவாதங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை.
Read more ...

பிரபஞ்ச சக்திகளில் நான்கு

Saturday, March 12, 2011
பிரபஞ்ச சக்திகளில் நான்கு வித சக்திகள் இணைந்து இவ்வுலகைத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள்
முன்னோடியாக விளங்குவது ஆதி பராசக்திதான். ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன்,மகாவிஷணு, மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினர். இந்த நால்வரையும் சதுர்வேதங்கள் என்றும்
குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணங்களும் ஆவர். பாரசக்தி, பிரம்மதேவன், மகாவிஷ்ணு, மகேஸ்வரன்
இவர்களின் சக்திகளைக் கொண்டு அறிவியல் நிபுணர்கல் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாக சுட்டிள்ளனர்.


பராசக்தி - கரியமிலா வாயு [ Carbon Dioxide ]
மகாவிஷ்ணு - பிராண வாயு [ Oxygen ]
பிரம்மதேவன் – நைட்ரஜன் [ Nitrogen ]
மகேஸ்வரன் – ஹைட்ரஜன் [ Hydrogen
Asrto Physics என்ற விஞ்ஞான ஆய்வின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துகொள்ளலாம்.
திரிமூர்த்தி என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் “எலக்ரோன்” (Electron ), ”நியுட்ரோன்”,(Neutron)
, “புரோட்டன்” (Proton) - என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே.

எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்து விட்ட மையப்
புள்ளியாக ஆகிறார். புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமையின் கீழ் பிரம்மதேவன்
சிருஷ்ப்பதிலும், மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்பவராகவும்
பொறுப்பேற்றனர்.

நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயமாக ஆதிபராசக்தி திகழ்கின்றாள்.
அவளுக்கு துணையாக :-
“ எலக்ரோன்” (Electron), - பிரம்மதேவனும்,
” நியுட்ரோன்”, (Neutron), - விஷ்ணுவும்,
“ புரோட்டன்” (Proton) - மகேஸ்வரனும்,….,
-- விளங்குகின்றனர்.
இதை கண்ணுறும்போது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் வெளியான அரும்பெரும்
தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரிய பொருளாக விளங்குகிறது.

மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். “கார்பன்’ தான் உலகில் சக்தி பெற்ற உலோகம்.
இந்த உலோகமே காந்த சக்தி பெற்ற உலகையே ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில் அதிகமாக இருப்பதால்
மற்ற கிரங்களையும் அதைச் சுற்றி வரச் செய்கிறது.

பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோதுதான் முதன் முதலில் இரும்பு சக்தி வெளியானது.
இரும்பு சக்தி மகாலெட்சுமி. மகாலெட்சுமி கருமை நிறமாகக் காட்சி தந்தாள். அதுவே கார்பனாகிய
இரும்பு சக்தி. இதிலிருந்து செம்பு, சொர்ணம், கனகம், வைரம் வெளியானது என்பது இங்கு
குறிபிடத்தகக்கதாகும். மகாலெட்சுமி என்ற இரும்புச் சக்தியைக் காப்பாற்றவே விஷ்ணு வந்தார்.
உலகின் ஒப்பற்ற சக்தியான இரும்புச் சக்தியைப் பத்திரப்படுத்த வேண்டும்.
பாற்கடலில் பிறந்த பாவையான மகாலெட்சுமி கருநெய்தல் பூவால் புனைந்த
மாலையை ஏந்தி, உவந்து திருமாலுக்குச் சூட்டி அவனைத் தழுவினாள்
இச்செய்தி செவ்வை சூடுவார் பாகவத்தில் இடம் பெற்றுள்ளது.

இதனை பிரதோஷ காலத்தில் கூறி பெண்கள் வழிபட்டு வந்தால் நல்ல கணவன் கிடைப்பான்
என்றும், இப்பாடலை ஓதும் அனைவருக்கும் திருமகளின் அருள் கிடைக்கும். அப்பாடலை
இனிக் காணலாம்.

’ உளத்திடை இவ்வாறு உன்னி
உவந்திலன் எனை என்றாலும்
களிப்புறும் யானே சென்று
கலப்பன் என்று “அமலை” யாவும்
அளிப்பவன் அலங்கல் சூட்டி
அருமனை “முதலி” மார்பின்
துளிப்பு யன் மணக்கு மின்னில்
தோய்ந்தனன் துயக்கு அற்றான்.
...................................................................................................
திருப்பாற் கடலைக் கடைந்த நிகழ்ச்சியை நினைவுக் கொள்ளூம் வண்ணம், இன்றும் திபேத்தியர்கள்
அந்த நிகழ்வை கொண்டாடி மகிழ்கிறார்கள். திருப்பாற் கடலைக் கடைந்த நாளில் தேவர் பள்ளத்தாக்கில்
God of Valley -இல் திபேத்திகள் பெரும் திரளாகக் கூடி அதனை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
வண்ணத் தோரணங்கள் கட்டி, கொடியேற்றும் விழாவும் உண்டு.

திருப்பாற் கடலைக் கடைந்த நாளில் கடலைக் கடைவதாக பாவனையில் இரு பக்கதிலிருந்தும் கயிற்றை
கட்டி இழுக்கிறார்கள். இறுதியாக சுமார் 15 அடி உயரமுள்ள கொடி மரத்தை கயிற்றின் மூலம் தூக்கி
நிறுத்துகிறார்கள்.அந்த கொடி மரம் மறுவருடம் வரை இருக்கும். மறு வருடம் விழாக்கொண்டாடி புதிய
கொடி மரத்தினை நடுவார்கள்.
இமையாது உயிராது இருந்தாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி
ஊழி ஏழான ஒருவா போற்றி....
-- திருநாவுக்கரசர்-
Read more ...

தீபம் ஏற்றும் முறை

Saturday, March 12, 2011
தீபம் ஏற்றும் முறை :

வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் கலந்து தீபமிடுவதால் செல்வம் உண்டாகும். இது மேலும் தெய்வத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
மருத்துவ குணம் நிறைந்த இம்மூன்று எண்னெய் கொண்டு தீபம் ஏற்றுதல் சுற்றுச் சூழல் மற்றும் உடல் நலம், மன நலம் இவையனைத்திற்கும் சுகம் விளைவிக்கக் கூடியதாகும்.

நெய், விளக்கெண்னெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்களையும் எவர் ஒருவர் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் பூசை செய்கின்றனரோ அவருக்கு தேவியின் அருள் மந்திரசக்தி உண்டாகும்.

தீபம் ஏற்றும் திசைகளின் பயன்கள் :

கிழக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட துன்பம் ஒழியும். கிரகக் கோளாறுகள் நீங்கும்.

மேற்கு : இந்நிலையில் தீபமேற்றி வழிபட கடன் தொல்லை, சனிப்பீடை, கிரகதோசங்கள், சல்லியதோசம், பங்காளிப் பகை இவை நீங்கும்.

வடக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட திரண்ட செல்வம், மங்களம், திருமணத்தடை, கல்வித்தடை இவையனைத்தும் நீங்கி, சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு : இத்திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும்பாலும் அபசகுனமாகும்.

திரி ஏற்றும் முகப்பக்கம் :

ஒரு முகம் ஏற்றுவது - மத்திமம்.

இரண்டு முகம் ஏற்றுவது - குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும்.

மூன்று முகம் ஏற்றுவது - புத்திரசுகம்.

நான்கு முகம் ஏற்றுவது - பசு பரி இனத்தைத் தரும்

ஐந்து முகம் ஏற்றுவது - செல்வத்தைப் பெருக்கும்.



திரி தரும் பலன்கள் :

பஞ்சுதிரி : குடும்பத்தில் மங்களம் நிலைக்கும்.

தாமரைத் தண்டு திரி : முன் வினைப்பாவம் நீங்கி, செல்வம் நிலைக்கும்.

வாழைத்தண்டு திரி : மக்கட் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் நீங்கி மன அமைதி ஏற்படும்.

வெள்ளை எருக்கன் பட்டைத் திரி : பெருத்த செல்வம் சேரும்

புது மஞ்சள் துணித் திரி : திருமணத்தடை நீங்கும், மலட்டுத் தன்மை நீங்கும்.

புது வெள்ளைத் துணித் திரி : தரித்திரம் நிவாரணமாகி, குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.

அம்மை துதி :

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து.
Read more ...

ஆலய தரிசனம்

Saturday, March 12, 2011
வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.

ஆலய தரிசன விதி முறைகள் :

1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.

2. ஆலயத்திற்குள் செல்லும் முன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் பெரியோர்.

3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள் செபித்துக் கொண்டே கொடிமரத்தைப் பார்த்து வணங்க வேண்டும்.

4. பின்பு விநாயகப் பெருமானை தோப்புக்கரணம் இட்டு வணங்க வேண்டும். இதுவும் ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.

5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர் நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே செல்ல வேண்டும்.

6. பின்பு ஈச்சுவரரின் காவல் தெய்வங்களாகிய துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க வேண்டும்.

7. எம்பெருமானை வணங்கி மும்முறை வலம் வர வேண்டும்.

8. வலம் வரும் போது குருவாகிய தட்சிணாமூர்த்தி சுவாமிமுன் நின்று கண்களை திறந்து அவரைப் பார்த்து வணங்க வேண்டும்.

9. அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராயக் காட்சியளிக்கும் முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.

10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று, அவரிடம் ஆசி பெற வேண்டும்.
எக்காரணம் கொண்டும், தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர் சந்நிதியில் கைதட்டியோ, ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது.
Read more ...