காப்பியங்களும் புராணங்களும்

Saturday, October 1, 2011
பிறவகை இலக்கியங்கள்

மேற்கண்ட காப்பியங்கள், புராணங்கள் தவிர இக்காலக்
கட்டத்தில் வேறு சில சிற்றிலக்கியங்களும், தோன்றின. அவை
சமயம் சார்ந்த நிலையிலும், சமயம்சாரா நிலையிலும் அடங்கும்.

சமயம் சார்ந்தவை

சமயம் சார்ந்த நிலையில் திருப்புகழ், திருஆனைக்காஉலா,
திருவாய்மொழி நூற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்றவை
உள்ளிட்ட பல நூல்களாகும்.
திருப்புகழ்

இதனைப் பாடியவர் அருணகிரிநாதர். சைவ இலக்கியங்களில்
திருப்புகழுக்குச் சிறப்பான இடம் உண்டு. பண்டைய ஆசிரியர்கள்
திருப்புகழ் பாடல்கள் 16,000 என்பர். தோன்றிய காலம் முதல்
திருப்புகழ் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை
கொண்டுவிட்டது.

திருப்புகழைக் கேட்கத் திருப்புகழைக் கற்கத்
திருப்புகழை நித்தந் தியானிக்கத் - திருப்புகழை
உற்றிருந்து கேட்பாருக் குற்ற வினையிரண்டும்
அற்றிருக்கத் தானே யறும்

நூலின் பெயர் திருப்புகழாய் அமைந்திருப்பதோடு மட்டுமன்றி,
நூலில் அமைந்துள்ள 1307 பாடல்கள் ஒவ்வொன்றுமே திருப்புகழ்
என்றே வழங்கப்படுகின்றன. இதுவே இதன் சிறப்பாகும். முருகப்
பெருமானின் பெருமைகளை இந்நூல் கூறுகிறது. இந்நூலில் சபாஷ்,
சலாம், ராவுத்தன் போன்ற முகமதியச் சொற்கள் கலந்திருப்பது
நோக்கத்தக்கது. அக்கால ஆட்சிப்போக்கினையும், மொழிப்
போக்கினையும் இது உணர்த்துகிறது. இதைப் போலவே அளவுக்கு
மீறிய வடசொற்களும் இதில் கலந்துள்ளன. இந்நூலாசிரியர் பாடிய
பிற நூல்கள் கந்தர் அலங்காரம், கந்தரனுபூதி,
திருஎழுகூற்றிருக்கை, கந்தரந்தாதி போன்றவையாகும்.
கல்வியில் குறைந்தவர்கள்கூட இவரது பாடல்களில் ஆர்வம்
செலுத்துவர். முருகனைப் போற்றும் பாடல்கள் இக்காலக்
கட்டத்தில் அதிகம் தோன்றியுள்ளன.
திருஆனைக்காஉலா

இந்நூலும் சமயம் சார்ந்த நூல்களில் ஒன்றாகும்.
ஆனைக்காவில் உள்ள வெண்ணாவலீசர் மீது பாடப்பெற்றது.
தலச்சிறப்பில் இங்குப் பேறு பெற்றவர்களின் செய்தி கூறப்பட்டுள்ளது.

இந்நூலைப் பாடியவர் காளமேகப்புலவர். நினைத்தவுடன்
தங்குதடையின்றி எப்பொருளைப் பற்றியும், எவ்விதமாகவும்
சாமர்த்தியமாகப் பாடும் ஆற்றல் இவருக்கு இருந்தது. கார்மேகம்
போல இவர் கவிதை மாரி பொழிந்தமை கண்ட பெரியோர்
இவரைக் காளமேகம் என்றனர். இந்நூலிலுள்ள கண்ணிகள் 461,
வெண்பாக்கள் 2 ஆகும். இந்நூல் சிறந்த பக்திச்சுவை கொண்டது.
இறைவனின் பெயரைக் கூறும் போது இவர் பயன்படுத்தும்
தொடர்கள் திருமுறைகளில் இவருக்கு உள்ள ஈடுபாட்டைக்
காட்டுகின்றன. இவர் இயற்றிய பிற நூல்கள் சித்திர மடல்,
சமுத்திர விலாசம் போன்றவை ஆகும்.
திருவாய்மொழி நூற்றந்தாதி

மணவாள முனிகளால் இயற்றப்பட்டது. இவர் பல
பிரபந்தங்கள் செய்தவர். முருகன் மீதான நூல்கள் எழ
அருணகிரிநாதர் காரணமாக இருந்தார். அதுபோல வைணவ
நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட இவரே முக்கிய காரணமாகும்.
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பதிகங்கள் அனைத்தையும்
எடுத்து, பதிகத்துக்கு ஒரு வெண்பா வீதம் 100 வெண்பாக்கள்
பாடியுள்ளார். ஒவ்வொரு பதிகத்தின் முதற்பாட்டின்
முதற்சொல்லையும், கடைசிப்பாட்டின் கடைசிச் சொல்லையும் தாம்
பாடிய ஒவ்வொரு வெண்பாவுக்கும் முதலும் முடிவுமாக வைத்துப்
பாடியுள்ளார். இவருடைய பிற நூல்கள் உபதேச ரத்ன மாலை,
ஆர்த்திப் பிரபந்தம் போன்றவையாகும்.
திருக்கலம்பகம்

திருக்கலம்பகம் இக்காலத்தில் தோன்றிய சமண நூலாகும்.
இதன் ஆசிரியர் உதீசித்தேவர். இந்நூல் அருகனின் தோத்திர
நூலாகும். 110 பாடல்களையுடையது. கலம்பக இலக்கணங்கள்
கொண்டது. ஒரு தலம் குறித்துப் பாடப் பெறாமல் பொதுவாய்
அருகனைத் துதிக்கின்றபடியால், தலத்தைச் சுட்டியதாக வழங்காமல்
திருக்கலம்பகம் என்று பெயர்பெற்றது. நீயே சிவபிரான், நீயே
திருமால், நீயே பிரமன், நீயே முருகன், உனது சக்தியே அம்பிகை
எனப் பலவாறாக அருகனைப் போற்றிய வகையில் பாடல்கள்
உள்ளன. இக்காலக் கட்டத்தில் தோன்றிய பிற சமண நூல்கள்
ஆதிநாதர் பிள்ளைத் தமிழ், அனந்தகவி உரை
போன்றவையாகும்.

சமயம் சாராதவை

சமயம் சாராத நூல்களாக இக்காலக் கட்டத்தில் தோன்றியவை
வருணகுலாதித்தன் மடல், சித்திர மடல், கபிலரகவல்
போன்றவையாகும்.
வருணகுலாதித்தன் மடல்

96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான மடல் வகையைச்
சார்ந்தது இந்த நூல். தலைவன் தான் காதலித்த தலைவியைப்
பெறாத நிலையில், அவளை அடைய, பனங்கருக்கால் குதிரை
போல் ஓர் ஊர்தி செய்து ஊர்தலே இந்நூலின் வடிவமாகும்.
நாகையில் வாழ்ந்த வள்ளல் மீது காளிமுத்து என்னும் தாசி
பாடியது. சொல் நயம், அடுக்கு, எதுகை, மோனை, தொடை நயம்,
முரண் தொடை, மடக்கு முதலிய அனைத்துச் செய்யுள்
நலன்களையும் இம்மடலில் காணலாம். வருணனை, சந்த நடை
சிறப்பாக அமையப் பெற்றது. சிறப்பான இலக்கிய நடையும், சில
சமயம் பேச்சு நடையும் இதில் இழைந்து வருவதைக் காணலாம்.
சித்திர மடல்

இது, மடல் வகையைச் சார்ந்த மற்றொரு நூலாகும். 174
கண்ணிகளும், ஒரு காப்புச் செய்யுளும் உடையது. பின்னர்த்
தோன்றிய மடல் பாட்டுடைத் தலைவனின் சிறப்பை விரித்துக்
கூறும். அக்கூற்றுகள் இதில் காணப்படாதது இதன் சிறப்பம்சமாகும்.
மடல் மரபைக் கூறும் திருக்குறளைக் கேளுங்கள்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி
(1131)

(காமத்தால் துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்)
வருந்தினவர்க்கு மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறு
எதுவும் இல்லை என்பது இதன் பொருளாகும்).
# கபிலரகவல்

கபிலர் அகவல், சமூகப்புரட்சியைக் கவிதை வடிவில்
வெளிப்படுத்தியது எனலாம். கடவுளுக்குச் சாதி வேற்றுமை
இல்லை, அவருடைய மெய்யடியார்களுக்கும், ஞானிகளுக்கும்
சாதிவேற்றுமை இல்லை என்பதை நாயன்மார்கள் மற்றும்
ஆழ்வார்களின் வரலாறுகள் காட்டுகின்றன. மக்களாய்ப்
பிறந்தோர் இரப்பவர்க்கு இட்டு, புலையும் (ஊன்), கொலையும்,
களவும் தவிர்த்து அறத்தில் நிற்பார்களாக என்று இவர்
அறிவுரை கூறுகிறார். எக்காலத்திலும் பொருந்தும் வகையில்
கபிலரகவல் கூறும் அறிவுரையைக் கொஞ்சம் கேளுங்கள்:

குலமு மொன்றே குடியு மொன்றே
இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே

இதைப் போலவே சாதியால் உயர்வு கூறுவோரைக்
கண்டிக்கும் மற்றொரு நூல் பாய்ச்சலூர்ப்பதிகம் எனப்படும்.
அது ஒரு நாடோடிப்பாடல் ஆகும்.
Read more ...

காப்பியங்களும் புராணங்களும்

Saturday, October 1, 2011
காப்பியங்களும் புராணங்களும்

இக்காலக் கட்டத்தில் பல காப்பியங்களும், புராணங்களும்
தோன்றின. அரிச்சந்திர புராணம் , உதயண குமார காவியம்,
காதம்பரி போன்றவை இக்காலத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க
இலக்கியங்களாகும்.

காப்பியங்கள்

பெருங்கதையில் இடம் பெற்ற உதயணன் பற்றிய ஒரு
காப்பியமும், காதம்பரி போன்ற மொழி பெயர்ப்புக் காப்பியங்களும்
தோன்றின.
உதயண குமார காவியம்

இது, கௌசாம்பி நாட்டு மன்னனான உதயணனின்
வரலாற்றைக் கூறுகிறது. ஆறு காண்டப் பாகுபாடு உடையது. 369
விருத்தப்பாக்களைக் கொண்டது. பெருங்கதையின் முற்பகுதியும்,
பிற்பகுதியும் கிடைக்காமையால் உதயணனின் வரலாற்றை அறிய
இது உதவுகிறது. (பெருங்கதை காலத்தால் மிகவும் முற்பட்டது -
உதயணனின் வரலாற்றைக் கூறுவது). பெயர்தான் காவியமே தவிர,
இதில் காவிய இயல்புகள் இல்லை. பெருங்கதையை அடியொற்றியே
இக்காவியம் செல்கிறது. இக்காவியம் போற்றப்படாததற்குக் காரணம்
இதில் இலக்கியச் சுவை குறைந்திருப்பதே என்பது அறிஞர் கருத்து.
# காதம்பரி

மொழிபெயர்க்கப்பட்ட காவியங்களில் குறிப்பிடத்தக்க ஒரு
நூல், காதம்பரி. இது, கந்தர்வப்பெண் காதம்பரியை உச்சயினி
மன்னன் சந்திராபீடன் மணந்த வரலாற்றைக் கூறுகிறது.
ஹர்ஷருடைய சபையில் கவிஞராக இருந்த பட்டபாணர்
வடமொழியில் வசன நடையில் இதனை எழுதியுள்ளார். அதன்
மொழிபெயர்ப்பே இந்நூல். இதன் ஆசிரியர் ஆதிவராக கவி
ஆவார்.

புராணங்கள்

கி.பி 11 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரையிலான இக்காலக்
கட்டத்தில் புராணங்களும் தோன்றின. தமிழில் தோன்றிய
புராணங்களைப் புராணங்கள் எனவும், புராணக் காப்பியங்கள்
எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். முதற்புராணம்
பெரியபுராணம் ஆகும். புராணம் என்பது பழமையான
நிகழ்வுகளைக் கதை வழியாகக் கூறும் முயற்சியாகும்.
இந்நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்கப் புராணங்களாக,
திருவாதவூரடிகள் புராணம், ஸ்ரீபுராணம் போன்றவற்றைக்
கூறலாம்.
அரிச்சந்திர புராணம்

அரிச்சந்திர புராணம் எனப்படும் அரிச்சந்திர சரித்திரம்,
தமிழ் மக்கள் நன்கு அறிந்த இதிகாசக் கிளைக் கதையாகும்.
இதனுடைய முதற்பதிப்பு இதனை அரிச்சந்திர சரிதம் எனக்
கூறுகிறது. இதனைப் பாடியவர் நல்லூர் வீரை ஆசு கவிராயர்.
நூலின் பாக்கள் சுவையுடையன. எடுத்துக்காட்டாக, அரிச்சந்திரன்
தன் மனைவியின் கழுத்தை வெட்ட வேண்டிய நேரத்தில்
கூறுவதாவது:

உலகுயிர்க்கெலாம் பசுபதி ஒருமுதல் ஆயின்
அலகில் சீர்உடை அவன்மொழி மறையெனின் அதன்கண்
இலகுஅறம் பலவற்றினும் வாய்மை ஈடுஇலதேல்
விலகு உருமல் அவ் வாய்மையை விரதமாக்கொளின்யான்

(அரிச்சந்திரபுராணம், மயான காண்டம், 135)்

(பசுபதி = உயிர்களின் தலைவனாகிய சிவபெருமான்; ஒருமுதல் = தனிப்பெருந்தெய்வம்; அலகில் - அலகுஇல் = அளவில்லாத; இலகு = விளங்கும்; வாய்மை = உண்மை)

சிவபெருமான்தான் முழுமுதற் கடவுள் என்பதும்,
அப்பெருமான் உரைத்ததே வேதம் என்பதும், அவ்வேதத்தில்
கூறப்பட்டுள்ள அறங்களில் இணையற்றது, உயர்ந்தது உண்மை
பேசுதலே என்பதும், அந்த அறத்தை நான் இடைவிடாமல்
கடைப்பிடிக்கிறேன் என்பதும் உண்மையானால், இவ்வாள்
இவளைக் கொல்லாது இருக்கட்டும் என்பது இதன் பொருள்.
# திருவாதவூரடிகள் புராணம்

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம்
545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல்.
சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. பின்னர்
வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில்
மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன்
முக்கியச் சிறப்பு இதுவேயாகும். மந்திரிச்சருக்கம், திருப்பெருந்துறைச்
சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச்
சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற
சருக்கம் என்ற பல பகுதிகள் இப்புராணத்தில் அடங்கியுள்ளன.
சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின்
பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.
# ஸ்ரீபுராணம்

இக்காலத்தில் தோன்றிய மற்றொரு சமணப்புராணமாகும். இது
மகாபுராண சங்கிரகத்தின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர்
பெயர் கிடைக்கவில்லை. இவர் வடமொழிப்புலமையும்,
தமிழ்ப்புலமையும் மிக்கவர் என்பது இந்நூல் மூலம் தெரிய வருகிறது.
இந்நூல் 23 தீர்த்தங்கரர்களின் வரலாற்றைக் கூறுகிறது. இராமாயண,
பாரத, பாகவதக் கதைகள் இதில் பல் வகையான வேறுபாடுகளுடன்
கூறப்பட்டுள்ளன. இந் நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது.
இது உரைநடையாக உள்ளது. கவிதைக்குரிய வருணனைகள்
இந்நூலில் சேர்க்கப்படவில்லை. சமண நூல்களில் இது அளவில்
பெரியது.

இக்காலக் கட்டத்தில் திருப்புத்தூர்க் கோயிலிலுள்ள
சிவபெருமானின் திருவிளையாடல்களைக் கூறும் ஓங்குகோயில்
புராணம் (கி.பி. 1484) எழுந்தது. இப்புராணம் தற்போது
கிடைக்கவில்லை.
Read more ...

சைவ இலக்கியங்கள் -5

Monday, August 1, 2011
இலக்கண உரைகளும், இலக்கிய உரைகளும்

இக்காலப் பகுதியில் இலக்கண உரை என்ற நிலையில்
வீரசோழியத்திற்கு உரை எழுந்தது. இலக்கியம் என்ற நிலையில்
திருக்கோவையார், புறநானூறு போன்றவற்றிற்கு உரைகள் எழுந்தன.

வீரசோழிய உரை

இக்காலக் கட்டத்தில் வீரசோழியம் என்ற இலக்கண நூலுக்குப்
பெருந்தேவனாரால் உரை எழுதப்பட்டது. பெருந்தேவனார் என்ற
பெயரில் தமிழ்நாட்டில் பெரும் புலவர்கள் பலர் இருந்துள்ளனர்.
குறிப்பிடத் தக்கவர் மூவர். முதலாமவர் சங்கப்புலவர்களுள் ஒருவர்.
மற்றொருவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். மூன்றாமவர்
வீரசோழிய உரை எழுதியவர்.
பெருந்தேவனார் சமயமும் காலமும்

தம் ஆசிரியரிடம் கற்றனவாயும், நேரே ஆராய்ந்தனவாயும்
உள்ள பௌத்த சமயம் தொடர்பான பல பாடல்களைக்
குறிப்பிடுகிறார். இவரது ஆசிரியரான புத்தமித்திரரைப் போலவே
இவரும் பௌத்த சமயத்தினர் எனக் கூறப்பட்டாலும், இவர்
சைவர் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. உதாரணமாக இவருடைய
பெயரே இவர் சைவர் எனக் காட்டும். பெருந் - தேவனார் என்பது
‘மகாதேவர்’ என்ற பெயரின் மொழி பெயர்ப்பாகும். இது
சிவபெருமானின் பெயராகும். பொதுவாக இலக்கண, இலக்கிய
உரைகளில் உரையாசிரியர் எவரும் திருமுறைகளைக்
குறிப்பிடுவதில்லை. இவர் இரு திருமுறைப் பாடல்களைக்
குறிப்பிடுகிறார்.

ழ, ள, ற, ச, என்ற எழுத்துகளைச் சில இடங்களில் மக்கள்
பிழையாக உச்சரிக்கின்றார்கள் எனக் கூறும் போது அறிவில்லாதார்
தமிழைப் பிழைக்க வழங்குவார் என்கிறார் இவ்வாசிரியர். முதலாம்
இராசேந்திரனுடைய மெய்க்கீர்த்தி வரிகளையும் இவர் தம்முடைய
நூலில் கையாண்டுள்ளார்.

வீரராசேந்திரன் காலத்துக்குப் பிற்பட்ட (கி.பி. 1063 - 70) நூல்
எதையும் மேற்கோளாகக் காட்டாததால், இவர் இச்சோழன் காலத்தை
அடுத்து வாழ்ந்தவர் என்பதை உணரலாம்.

திருக்கோவையார் உரை

திருக்கோவையார் உரை தஞ்சை சரசுவதி மகால் நூலக
வெளியீடாக 1951 இல் வெளிவந்தது. உரையாசிரியர் பெயர்
தெரியவில்லை. அவர் சைவர், தில்லையைக் குறிப்பிடும் இடங்களில்
தெற்குத் திருப்பதி, திருச்சிற்றம்பலம் என்கிறார். பல சமயங்களில்
நேரே பொருள் விளங்கும் பதவுரையாகவும், சில இடங்களில் தனியாக
விசேட உரையாகவும் எழுதுகிறார். இவர் மேற்கோள் காட்டியது
தொல்காப்பியம் ஒன்றே ஆகும். இவ்வுரையானது பேராசிரியர் உரை
போன்று பெருஞ்சிறப்புடையது அல்ல. இருப்பினும் சிற்சில நயங்களை
அது பெற்றுள்ளது.

புறநானூற்று உரை

இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு உரை புறநானூற்று
உரையாகும். இதன் ஆசிரியர் பெயரும் வரலாறும் தெரியவில்லை.
இவரது உரைநடையின் அமைதி, உரை நயம், இலக்கணம் கூறும்
திறம் போன்றவை இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர்,
அடியார்க்கு நல்லார் போன்றோருடன் ஒப்பக் கருதும்
அறிவுடையவராக இவரைப் புலப்படுத்துகின்றன.

இவரது உரை எளிய, நயம் மிக்க பொழிப்புரை. மூலத்திலுள்ள
ஒவ்வொரு சொல்லையும் விடாது தெளிவாக விளக்கித் தொடர்புபடுத்தி
உரை எழுதுகிறார். இவர் காலத்தில் அணியிலக்கணம் பெரிதும்
ஆட்சிக்கு வரவில்லை. ஏனென்றால் சில அணிகளையே இவர்
கூறுகின்றார். சிலவற்றின் பெயரைச் சொல்லவில்லை.

செய்யுளில் சொற்கள் அமைந்தவாறே இவர் பொருளைக்
கூறிச் செல்கிறார். இதுவே இவ்வுரையின் சிறப்பு எனலாம். உரை
எளிமையானது; வட சொல்லாட்சி மிகவும் குறைவு.

மேற்கோளாக இவர் எடுத்துக்காட்டும் நூல்கள்
தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, தமிழ்நெறி
விளக்கம், பெரும்பாணாற்றுப்படை, குறுந்தொகை, கலித்தொகை,
சிந்தாமணி போன்றவையாகும். நூற்பெயரைச் சொல்வது இவர்
வழக்கமன்று. நாலடியார், திருக்குறள் வரிகளைத் தம்
உரைநடையாகவே எழுதிச் செல்கிறார்.
Read more ...

சைவ இலக்கியங்கள் - 4

Monday, August 1, 2011
இலக்கிய வரலாற்றில் 12ஆம் நூற்றாண்டு ஒரு பொற்காலம்
என்பார் மு. அருணாசலம். மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு எல்லாத்
துறைகளிலும் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
சோழ நாட்டிலும், தமிழ் நாட்டிலும் பொதுவாக இக்காலப் பகுதியில்
போர் இல்லாமையால் தமிழ் மொழிக்கு இது ஒரு பொற்காலம்.
முதல் குலோத்துங்கனோடு (கி.பி. 1070 - 1120) தொடங்கி,
மூன்றாம் குலோத்துங்கனோடு (கி.பி. 1178 - 1218) முடிவடையும்
இக்காலப் பகுதியில் நான்கு மன்னர்கள் ஆட்சி செய்தனர். இந்
நூற்றாண்டில் விரிவான பெரிய காவியம் எழவில்லை என்ற
குறையைப் போக்குவது பெரியபுராணம் ஆகும். எக்காலத்திலும்,
எந்நாட்டிலும் இல்லாத ஓர் அரிய பக்தி நூல் இதுவாகும்.
வைணவத்தைப் பொறுத்தவரை வைணவரின் தினசரி ஒழுக்கத்தையும்
ஆலய வழிபாட்டு முறைகளையும் இராமானுசர் ஒழுங்குபடுத்தினார்.
அது தவிர நாலாயிரத்திலிருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து
எல்லா வைணவர்களும் தவறாமல் ஓதவேண்டும் என்று நியமித்தார்.
சமண இலக்கியத்தில் பிற நூற்றாண்டுகளைப் போல வளர்ச்சி
இல்லை. வீரசோழிய உரை தவிர பௌத்தத்தில் இலக்கியம் என்ற
பேச்சுக்கே இடமில்லை. இக்காலப்பிரிவின் முற்பகுதியில் தோன்றிய
இலக்கியங்கள் பற்றி இப்பாடத்தில் விளக்கப்படுகின்றது. இந்
நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 1151 - 1200) தோன்றிய
இலக்கியங்கள் பற்றி ’12 ஆம் நூற்றாண்டு - பிற்பகுதி’ என்ற
தலைப்பில், அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

இலக்கியம், இலக்கணம்

12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இலக்கியங்களாகக் கலிங்கத்துப் பரணி, பெரியபுராணம் போன்றவற்றையும் இலக்கணம்
என்ற நிலையில் தண்டியலங்காரம் என்பதையும் கூறலாம்.

இலக்கியம் - கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி (கி.பி. 1112) இக்காலப் பகுதியில்
தோன்றிய குறிப்பிடத்தக்க இலக்கியங்களில் ஒன்றாகும். இதனை
இயற்றியவர் செயங்கொண்டார். இவர் தீபங்குடியைச் சேர்ந்தவர்.
முதல் குலோத்துங்கசோழனால் (கி.பி. 1070 - 1120) போற்றப்
பெற்றவர். இவர் செய்த நூலுள் சிவ வழிபாட்டையே கூறுகின்றார்.
அமைப்பு

இது கடவுள் வாழ்த்துத் தொடங்கி 13 பகுதிகளை உடையது.
பரணி ஒரு போர்க்காவியம். இதில் போரின் வருணனை, பாலை
நில வருணனை, பேய்கள், அவற்றின் செயல்கள் பற்றிய வருணனை
போன்றவை காணப்படுகின்றன.
பல்வேறு சுவைகள்

போரில் வீரர் மாய்வதின் மூலமாக, வீரத்தையும்
அச்சத்தையும் பெருமிதத்தையும் உருத்திரச் சுவையையும்
காட்டலாம். ஆனால் அதே காட்சியை, மாய்ந்த வீரருடைய
பெண்டிர் கண்டு அரற்றும் போது அது சோக நிலையின்
உச்சத்தை எட்டுகிறது. இதையும் நூலாசிரியர் எடுத்துக் கூறுகிறார்.
இவை தவிர நகைச்சுவை, பக்திச்சுவை, அச்சச்சுவை, வீரச்சுவை,
அவலச்சுவை போன்ற பல சுவைகளைக் காணலாம்.
சமணர் இயல்புகள்

சமணர் உயிர்க்கொலை செய்யாதவர்கள், இரவு
உண்ணாதவர்கள், துகிலால் வடித்துக் குடிப்பவர்கள், இந்த
இயல்புகளை ஆசிரியர் சமணப் பேய்க்கு ஏற்றிக் காட்டுகிறார்.
இப்பாடல் நகைச்சுவையை முன் வைப்பதுடன் ஆசிரியர் சமணர்
அல்லர் என்பதையும் நிரூபிக்கின்றது.
பிற பரணிகள்

பரணியில் போர்க்களத்தைக் காளி பேய்களுக்குக் காட்டுவதாக மரபு. ஆனால் ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி இதிலிருந்து மாறுபட்டு, சிவபெருமான்
உமாதேவிக்குக் காட்டியதாகப் பாடப்பட்ட பரணியாகும். இதற்குப்பின்
வந்தவை அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப்
பரணி, சூரன்வதைப் பரணி போன்றவையாகும்.

கலிங்கத்துப் பரணிக்கு முன்பே கொப்பத்துப் பரணி,
கூடல சங்கமத்துப் பரணி என்ற இரு பரணிகள் இருந்தாலும்
அவை தற்போது கிடைக்கவில்லை.

பெரியபுராணம்

இக்காலத்திய மற்றொரு குறிப்பிடத்தக்க இலக்கியம்
பெரியபுராணம் ஆகும். இது, சேக்கிழாரால் இயற்றப்பட்டது.
நம்பியாண்டார் நம்பி தேவாரப் பதிகங்களைத் தொகுத்தமை
பற்றி 11 ஆம் நூற்றாண்டுப் பாடப்பகுதியில் விளக்கப் பட்டது.
12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருத்தொண்டர் புராணம்
எனப்படும் பெரியபுராணம் இயற்றப்பட்டது.

தில்லையம்பலத்தில் இறைவன் ‘உலகெலாம்’ என்று
அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழார் ‘உலகெலாம் உணர்ந்து
ஓதற்கரியவன்’ என்று நடராசப் பெருமான் துதியாகத் தொடங்கி
இந்த நூலைப் பாடினார். அதனுடைய பக்திச் சுவை காரணமாக,
தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற நூல்களுக்கு
இணையாக மதித்து, 12 திருமுறைகளுள் ஒன்றாக -
பன்னிரண்டாம் திருமுறையாக - இதனைப் போற்றுவர்.
காட்சிகள்

இந்நூல், சுந்தரர் கயிலையிலிருந்து இவ்வுலகத்துக்கு வந்து
சேரும் காட்சியுடன் தொடங்குகிறது. பெரியபுராணக் கதையின்
காட்சிகளை, கருங்கல்லில் சிற்பங்களாக இன்றும் தாராசுரம்
ஐராவதேசுவரர் கோயிலில் (தஞ்சாவூர் மாவட்டம், குடந்தை
அருகே) காண முடிகின்றது. மிகச் சிறிய சிற்பங்களாக அழகிய
வேலைப் பாடுகளுடன் அவை காணப்படுகின்றன.
சிவனடியார்களின் தொண்டு நெறி

பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் சிவனடியார்கள் தொண்டு
நெறியில் நின்றனர். இறைவனிடம் தாம் கொண்டிருந்த ஆழமான
பற்றை வெளிப்படுத்தினர். தொண்டிலும் ஒரு குறிக்கோள்.
குறிக்கோளுக்குச் சோதனை, தடை வரும் போது உயிரை மாய்த்துக்
கொள்ளவும் தயங்காதவர்கள். இவர்கள் பல்வேறு இடங்களையும்
குலங்களையும் சேர்ந்தவர்கள்.
செய்திகள்

வரலாற்றியல், நாட்டியல்பு, சமயவியல், சமயத்தத்துவம், பக்திச்
சுவை, இறையுணர்வு, அருள் போன்ற அனைத்து வகையான
செய்திகளும் இக்காப்பியத்தில் விரித்துக் கூறப்பட்டு உள்ளன.

தொடாத துறையே இல்லை. என்று கூறும் அளவிற்குச்
சேக்கிழார் அனைத்துக் துறைகளையும் பெரியபுராணத்தில்
கையாண்டுள்ளார்.

திருஉந்தியார்

இக்காலத்தில் தோன்றிய மற்றொரு சைவ இலக்கியம்
திருவுந்தியார் ஆகும். சாத்திர நூல்கள் 14 ஆகும்.

அவற்றைக் கீழ்வரும் பாடல் பட்டியல் இடுகிறது. :


உந்தி களிறே உயர்போதம் சித்தியார்
பிந் திருபா உண்மை பிரகாசம் - வந்த அருட்
பண்பு வினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மை நெறி சங்கற்பம் உற்று

(வாழ்வியல் நெறிமுறைகளைக் கூறும் நூல்கள் சாத்திரங்கள்
என்றும். இறைவன் புகழைப் போற்றுபவை தோத்திரங்கள் என்றும் அழைக்கப் பெறும்). பன்னிரு திருமுறைகளின் கருத்தை, திருவுந்தியார் குறிப்பதாக அறிஞர் கூறுவர்.

சிவபெருமானின் இயல்பைக் கூறும் பாடல் இதோ:

சொல்லும் பொருளும் சொல்லா தனவும், அங்கு
அல்லனாய் ஆனான் என்று - உந்தீபற
அம்பிகை பாகன் என்று உந்தீபற

(திருவுந்தியார், 21)

(நமது அறிவுக்கு எட்டிய பொருள்களைச் சொற்களால்
அளவுபடுத்திக் கூறுகிறோம். அவ்வாறு கூறும் பொருள்கள்
அனைத்தும் நம்மால் சுட்டி அறியப்படுபவை. நமது கற்பனைக்கும்
எட்டாத முயலின் கொம்பு, ஆகாயத்தாமரை போன்று நமது
சொற்களில் அடங்காத பொருள்கள் இப்பொருள்கள் ஆகும்.
இவ்விரு வகைப் பொருள்களையும் போல் அல்லாமல், நமது
மனத்துக்கும், சொல்லுக்கும் எட்டாத நிலையில் இறைவன் நிற்கிறான்.
என்றாலும் நாம் அவனை உணரும் பொருட்டு ‘அருள்’ ஆகிய
அம்மையோடு கூடிய அம்மையப்பராய் இருக்கிறான்).

‘உந்தீபற’ என்பது இறைவனது புகழைப் போற்றிப் பரவும்
முறையில் மகளிர் இருவர் கூடி விளையாடும் விளையாட்டு
வகைகளில் ஒன்றாகும். (உந்தி - குதித்து பற - வேகமாக
மேலே எழுதல்) ‘உந்தீபற’ என்னும் இச்சொல் பாடல் ஒன்றில்
இரண்டு வீதம் 45 பாடல்களில் 90 இடங்களில் வருவதைக்
காணலாம்.

தண்டியலங்காரம்

12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலக்கண நூல்களும்,
உரை நூல்களும் தோன்றியுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில்
இலக்கண நூல்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.
தண்டியாசிரியர் இன்றும் தமிழ் மக்கள் போற்றி வருகின்ற
தண்டியலங்காரம் என்ற நூலைச் செய்துள்ளார்.
அணியிலக்கணம்

‘அலங்காரம்’ என்பது வடமொழிச் சொல். தமிழில் ‘அழகு’
என்ற பொருளில் இச்சொல் வழங்கப்படுகிறது. பாட்டில் காணப்படும்
அழகை அணி என்கிறோம். இலக்கணங்கள் அணி, அலங்காரம்
என்ற இரு சொற்களையும் ஒரே பொருளில் வழங்கும்.
தண்டியலங்காரம் அணியிலக்கண நூல். பொதுவணியியல்,
பொருளணியியல், சொல்லணியியல் என்ற மூன்று இயல்களையும்,
125 நூற்பாக்களையும் உடையது. இன்று கிடைக்கும் அணி பற்றிய
இலக்கண நூல்களில் தண்டியலங்காரமே பழமையானது.
ஆசிரியர் சிறப்பும் புலமையும்

இந்நூலாசிரியர் கவிச்சுவை தேர்வதில் ரசிகத்தன்மையுடையவர்.
எடுத்துக்காட்டாக, இவர் வினையின் விபரீதப் பயனைச் சுவைபட
ஒப்பிட்டுக் காட்டுவதைப் பார்க்கலாம்.

தலையிழந்தான் எவ்வுயிரும் தந்தான், பிதாவைக்
கொலை புரிந்தான் குற்றம் கடிந்தான் ; - உலகி்ல்
தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேல் தப்பாம்
வினையும் விபரீத மாம்

- (தண்டியலங்காரம், சுப்பிரமணிய தேசிகர் உரை, பொருளணியியல், 111 )

(எல்லா உயிர்களையும் படைத்த பிரமன் தன் தலையை
இழந்தான். தந்தையைக் கொன்ற சண்டீசன் குற்றம் நீங்கினான்.
உலகத்தில் ஒப்பற்ற மேன்மையைக் கொண்டு உயர்ந்துள்ளோர்
நினைத்தால் நல்வினை தீவினைகளின் பயனும் மாறுபடும்
என்பது இதன் பொருளாகும்).

இதன் மூலமாக நல்வினைப் பயன் தீதாகவும், தீவினைப்
பயன் நன்மையாகவும் முடிகிறது என்பது தெரிகிறது.

காவிய தரிசனம் என்னும் வடமொழியின் மொழி பெயர்ப்பே
தண்டியலங்காரம். இந்நூலாசிரியர் வடமொழி, தென்மொழிகளில்
மிக வல்லுநர். தமிழ் மொழியில் இவர் திறமுடையவர் என்பதை
யாரும் மறுக்க இயலாது. முதல் பகுதியாகிய பொதுவணியியலில்
ஆசிரியர் நாமகளை வணங்கிச் செய்யுள் வகையையும், இரண்டாம்
பகுதியாகிய பொருளணியியலில் 35 செய்யுள் அணிகளைக்
குறிப்பிடுகிறார். இதுவே இந்நூலின் சிறப்பான பகுதியாகும்.
சொல்லணியியலில் 35 நூற்பாக்கள் உள்ளன.
சிவனைத் தொழுதலின் பயன்

தில்லையைப் போற்றுகின்ற பாடல்கள் கூட இதில் அதிகமாகக்
காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றை இங்கே காண்போம்.

காலை மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்
மேலை வினையெல்லாம் கீழவாம் - கோலக்
கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
பெருமானைச்சிற்றம்பலத்து

(தண்டி. பொருளணியல், 171)

அழகு பொருந்திய கரிய யானைத் தோலையும்,
வெண்மையான திருநீற்றையும், சிவந்த திருமேனியையும், பசிய
கொன்றை மாலையையும் உடையவன் சிவபெருமான். அந்தச்
சிவபெருமானைச் சிதம்பரத்தில் காலையிலும் மாலையிலும்
கைகளைக் கூப்பித் திருவடிகளைத் தொழுதால் ஊழ்வினையெல்லாம்
குறைந்து நீங்கிவிடும் என்பது இதன் பொருளாகும்.
Read more ...

பிரபந்தங்களும் சித்தர்பாடல்களும்

Monday, August 1, 2011
பிரபந்தங்களும் சித்தர்பாடல்களும்
பதினான்காம் நூற்றாண்டில், பிரபந்த வகை நூல்கள் சிலவும்,
பிறவகை நூல்களும் எழுதப்பட்டன.

பிரபந்தங்கள்

கோவை, மாலை போன்ற பிரபந்த நூல்கள் இக்காலக்
கட்டத்தில் தோன்றின.
கருமாணிக்கன்கோவை

இந்தப் பிரபந்தம் இக்காலப் பகுதியில் தோன்றியது. கப்பலூரில்
வாழ்ந்த கருமாணிக்கன் என்ற யாதவகுல வள்ளல் மீது இக்கோவை
பாடப்பட்டது. காலத்தால் பழமையான நூல்களுள் இதுவும் ஒன்றாகும்.
நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. இக்கோவை 400 பாடல்களைக்
கொண்டது. ஆசிரியர்திருமால் பக்தியுடையவர்என்பதை, பாடலின்
அடிகள் உணர்த்துகின்றன. திருக்கோவலூரில் இருந்த வைணவ
ஆசாரியார் ஒருவரைக் கருமாணிக்கன் கப்பலூருக்கு அழைத்துச்
சென்று சிறப்புச் செய்தான் என்னும் செய்தியை இந்நூல்
தெரிவிக்கின்றது.
மதுரைக்கோவை

இது, இக்காலப் பகுதியில் தோன்றிய மற்றொரு கோவையாகும்.
இதனை இயற்றியவர் சங்கரநாராயணர் என்பவர். கோவைப்
பிரபந்த வரிசையில் பாண்டிக்கோவை, திருக்கோவையார்,
குலோத்துங்கசோழன் கோவை, தஞ்சைவாணன் கோவை,
அம்பிகாபதிக்கோவை, நாலாயிரக்கோவை போன்ற பல கோவை
நூல்கள் உள்ளன. இவ்வரிசையில் மிகவும் பழமையான கோவைகளில்
மதுரைக்கோவை ஒன்றாகும். இதன் செய்யுள் தொகை 403 ஆகும்.
இந்நூல் மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கேசப் பெருமானைப்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. திருவிளையாடற்புராண
சரிதங்கள் பலவற்றை ஆசிரியர் இக்கோவையுள் சுட்டிக்
காட்டியுள்ளார். 25 வரலாறுகள் இதில் கூறப்பட்டுள்ளன. இலக்கண
விளக்கவுரை மேற்கோள் அமைப்பை ஆராயும்போது, ஆசிரியர்
பண்டைய நூல்கள் என்று தாம் கருதியவற்றை மட்டுமே
பயன்படுத்துகிறார் எனப் புலப்படுகிறது.
பல்சந்த மாலை

பல்சந்த மாலை என்பது 96 வகை பிரபந்தங்களுள் ஒன்று.
இப்போது இந்நூல் கிடைக்கவில்லை. இந்நூலில் 8 பாடல்கள்
உள்ளன. வேறு எங்கும் இதன் பாடல்கள் சொல்லப் பெறவும்
இல்லை. கிடைக்கின்ற பாடல்கள் கட்டளைக் கலித்துறையில்
அமைந்தவையாகும். இவை கலித்துறையாக உள்ளதாலும்,
அகப்பொருளையே கொண்டுள்ளதாலும் கோவை போன்ற நூலோ
என்ற ஐயம் உண்டாகிறது.

சித்தர்பாடல்கள்

சித்தர்களின் பங்களிப்பு முந்தைய நூற்றாண்டுகளில்
ஆங்காங்கே இருந்துள்ளது. சித்தர் பாடல்கள், அவர்களின்
வரலாறு பற்றித் தனியாகப் படிக்கவுள்ளோம் (15ஆம் நூற்றாண்டு
- பாடப்பகுதி). இக்காலப் பகுதியில் தோன்றிய சித்தர்கள் பற்றி
இங்குக் காண்போம்.
சிவவாக்கியர்பாடல்கள்

சிவவாக்கியர் தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களுள் ஒருவர்.
பதினெண் சித்தர்ஞானக்கோவை என்ற தொகுப்பு இவருடைய
பாடல்களையே முதலாவதாகக் கொண்டுள்ளது. இவரது பாடல்
தொகுப்பில் கடைசியாக உள்ள பாடல்,

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே...

என்று தொடங்கும். இப்பாடல் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த
பாடல் எனலாம். சிவவாக்கியர் பாடல்களில் குலாமர் என்ற சொல்
காணப்படுகிறது. குலாம் இடுபவர் குலாமர். குலாம் இடுதல்,
அடிமைத்தொழில் புரிதல், அடிமையாயிருத்தல் போன்றவை போலிச்
சடங்குகளுக்கு அடிமையாயிருத்தலையே குறிக்கின்றன. தமிழ்நாட்டில்
முகமதியர் ஆதிக்கம் ஏற்பட்ட காலத்தில் அவர்களுடைய சொற்கள்
பல தமிழில் புகுந்தன. அவ்வாறு புகுந்த சொற்களில் இதுவும் ஒன்று.
குலாமர் என்ற சொல் வரும் பாடலைக் கேளுங்கள் :

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே

(பாடல் 35)

பட்டினத்தார்பாடல்கள்

பட்டினத்தார் என்று கூறும் போது தமிழறிஞர்கள் பட்டினத்தார்
இருவரைக் கூறுவர். முதல் பட்டினத்தார், நம்பியாண்டார்நம்பியால்
குறிப்பிடப்பட்டவர். நம்பியின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இறுதி.
பட்டினத்தார் பாடிய பாடல்களில் ஐந்து பிரபந்தங்கள் பதினோராம் திருமுறையுள் தொகுக்கப் பெற்றுள்ளன. இந்தப் பட்டினத்தார்
10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்.

மேற்கண்ட பிரபந்தங்கள் அல்லாமல், பட்டினத்தடிகள் பெயரால்
பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு என்ற ஒரு பாடல்
தொகுதி வழக்கத்தில் உள்ளது. இவற்றைப் பாடியவர் முன்கூறிய
பட்டினத்தார் அல்லர்என்றும், இவை பட்டினத்தார்என்ற பெயரோடு
சில நூற்றாண்டுகளின் பின்பு வாழ்ந்த மற்றொரு பட்டினத்தார்
பாடியவை என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இக்காலப் பகுதிக்கு
நாம் எடுத்துக் கொள்வது இரண்டாம் பட்டினத்தாரே. (ஒளவையாரைப்
பற்றிப் படிக்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளவையாரைப் பற்றி
முந்தைய பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம்).

தமிழ்நாட்டில் பிச்சையெடுப்போர்கூட, சில பக்தருடைய
அருட்பாசுரங்களைப் பாடிப் பிச்சை எடுத்து வருகின்றனர்.
அவர்களில் பட்டினத்தார் பாடலைப் பாடுவோர் உளர். மற்ற
சித்தர்களைப்போல இவருடைய பாடல்களிலும் உலக
வாழ்க்கையின் நிலையாமை, அடியவர் சிறப்பு, பக்தியின் சாதனை,
அருளின் அனுபவம், போலிக் கிரியைகளைப் பழித்தல், உண்மை
அன்பின் உயர்வு முதலியவை மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாடலும் சிறப்புடையது என்றாலும், தில்லை, காளத்தி
பற்றிய பாடல்கள் மிகவும் சுவையுடையவையாகும். உள்ளத்தில்
இறைவன் உறைகின்ற முறையை உணர்ந்த பெருமிதம்
பாடல்கள்தோறும் காணப்படுகிறது.
பத்திரகிரியார்பாடல்கள்

பத்திரகிரியார் என்பவர்இக்காலப் பகுதியில் பேசப்படும்
மற்றொரு சித்தர். இவருடைய வரலாறு பட்டினத்தார்(இதற்கு முன்பு
விளக்கப்பட்ட இரண்டாவது பட்டினத்தார்) வரலாற்றோடு
தொடர்புடையது. பத்திரகிரியாரின் பெயரை முதன்முதலாகக்
கண்ணுடைய வள்ளல் குறிப்பிட்டுப்பாடுகின்றார்.

பட்டினத்துப்பிள்ளையினைப் பத்ரகிரி யைப்பரவி
விட்டு விட மாட்டார்வெறுவீணர்

(ஒழிவிலொடுக்கம், 167)

235 கண்ணிகள் கொண்ட சிறு நூலை இவர்பாடியுள்ளார்.
இவர்தம் பாடல் கருத்தையும் சொற்களையும் தத்துவப் பிரகாசத்திலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார். இந்நூலில் 178-ஆம்
பாடலைக் கேளுங்கள் :

எவரெவர்கள் எப்படிக் கண்டு எந்தப்படி நினைத்தார்
அவரவர்க்குத் தான் அப்படி ஆவதுவும் எக்காலம்

இக்கருத்தும் சொற்களும் தத்துவப்பிரகாசம் 137ஆம் பாடலில்
பூசையை முடித்தவிடத்து வேண்டுகோளாகக் கூறும் இடத்தில்
காணப்படுகின்றன.

தேவனே எவரெவர்எப்படிச் சிந்தித்தார்
சிந்தித்த இடத்து அந்த வடிவு ஆகை திடமே

(ஆகை = ஆதல்)
Read more ...

சைவ இலக்கியங்கள் - 2

Monday, August 1, 2011
5.2 இலக்கணமும், உரைகளும்

பதினான்காம் நூற்றாண்டில், சில இலக்கண நூல்களும்
சிறப்புடைய சில உரைகளும் தோன்றின.

5.2.1 இலக்கணம்

இக்காலப் பகுதியில் சிறப்புடைய எந்த இலக்கண நூலும்
எழவில்லை எனலாம். இருப்பினும் இக்காலத்தில் தோன்றிய சில
நூல்கள் பற்றி இங்குக் காணலாம்.
களவியற்காரிகை

இக்காலப் பகுதியில் தோன்றியது. களவியல் என்பது
இறையனார் களவியல் என வழங்கப்படுகின்ற இறையனார்
அகப்பொருள் நூலாகும். அகப்பொருள் இலக்கணம் இல்லையே
எனக் கவலையுற்ற பாண்டிய மன்னனுக்காக மதுரை சோமசுந்தரக்
கடவுள் அறுபது அகப்பொருள் சூத்திரங்களைச் செப்பேட்டில்
எழுதித் தந்ததாக அந்நூல் உரையும், திருவிளையாடல் புராணமும்
கூறும். இக்களவியல், நூற்பாவால் ஆன 60 சூத்திரங்களைக்
கொண்டது. இந்த 60 சூத்திரங்களுக்கு நேராக 60 கட்டளைக்
கலித்துறையால் அக்களவியலைத் தழுவி, மற்றோர் அகப்பொருள்
இலக்கண நூல் எழுதப்பட்டுள்ளது. அதுவே களவியற்காரிகை
எனப்படும். இதற்குச் சிறப்பான உரை உண்டு. இந்நூலுக்கு ஆசிரியர்
பெயரும், நூற்பெயரும் தெரியவில்லை. மரபினையொட்டியே
இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நவநீதப்பாட்டியல்

இந்நூலை இயற்றியவர் நவநீத நாடர். 13-16 நூற்றாண்டு
களிடையே பல பாட்டியல் நூல்கள் தோன்றின. அவற்றுள்
இதுவும் ஒன்றாகும். பாட்டியல் என்பது பாட்டினால்ஆன நூல்களுக்கு
அமைய வேண்டிய இலக்கணங்களைத் தொகுத்துக் கூறும்.
கலித்துறையாப்பால் ஆனதால் இந்நூல், கலித்துறைப்பாட்டியல்
எனப்படும். இது பொருத்தவியல், செய்யுள், மொழி இயல், பொது
மொழி இயல் என்ற மூன்று பிரிவுகளை உடையது. 108
கலித்துறைகளை உடையது. இதனுள் சொல்லப்பட்ட பிரபந்தங்களின்
தொகை 63 ஆகும்.
உரிச்சொல் நிகண்டு

இந்நூல் காங்கேயரால் இயற்றப்பட்டதாகும். இதன் காலம்
திட்டவட்டமாகத் தெரியவில்லை. தமிழில் தோன்றிய ஆதி
நிகண்டுகள், திவாகரமும், பிங்கலந்தையும் ஆகும். பின்னால் வந்த
நிகண்டு நூல்களில் உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு,
நிகண்டு சூடாமணி போன்றவை காலத்தால் பழமையானவையும்
சிறப்பானவையும் ஆகும்.

5.2.2 உரைகள்

இக்காலப்பகுதியில் உரையாசிரியர்கள் என்ற நிலையில்
குறிப்பிடத்தக்கவர்களாக மயிலைநாதர், நச்சினார்க்கினியர்
போன்றோரைக் கூறலாம்.
மயிலைநாதர்

மயிலைநாதர் நன்னூலின் பழைய உரையாசிரியர் ஆவார்.
சமயத்தால் சமணர். இவர் நன்னூல் உரையில் தொல்காப்பிய இளம்பூரணர்உரை, அவிநய உரை, யாப்பருங்கலக் காரிகை
போன்றவற்றை எடுத்துக்காட்டியுள்ளதால் இவர், இவ்வாசிரியர்களின்
காலத்துக்குப் பிற்பட்டவர் எனலாம். இவ்வுரையாசிரியர் சுவைபட
எழுதுவார். எதுகை, மோனைத் தொடை நயம்பட எழுதுவார்.
பண்டைய ஆசிரியர்களை நயம்படப் போற்றுவார். இவர் உரையானது
உரை இலக்கணம் முழுமையும் பொருந்தியது. நன்னூல் பாயிரச்
சூத்திரங்கள் 52 ஆகும். இவை பவணந்தி செய்தனவல்ல என்பதை
இவர் உரை மூலம் அறிய முடிகிறது.
நச்சினார்க்கினியர்

இக்காலத்தில் தோன்றிய மற்றோர் உரையாசிரியர்
நச்சினார்க்கினியர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சீவக
சிந்தாமணி, கலித்தொகை போன்ற நூல்களுக்கு உரை
எழுதியுள்ளார். நச்சினார்க்கினியர் என்பது சிவபெருமானின்
பெயராகும். பத்துப்பாட்டுள் மதுரைக்காஞ்சியில் சில இடங்களில்
(வரிகள் 365, 522) இவர் எழுதிய உரை நுட்பங்கள் இவர்
மதுரைக்குரியவர் எனப்புலப்படுத்தும். தொல்காப்பியம் முழுமைக்கும்
உரை செய்தவர்கள் இவரும் இளம்பூரணருமே. சங்க நூல்கள்
அனைத்திலிருந்தும் இவர் மேற்கோள் காட்டுகின்றார். வடமொழி
வழக்கு, உலக வழக்கு, சாதி சமய வழக்கு ஆகியன இவருடைய
உரையுள் நிரம்பியுள்ளன. வடமொழி நூல்கள் பலவற்றை எடுத்துக்
கூறுகிறார்.
Read more ...

சைவ இலக்கியங்கள் - 1

Monday, August 1, 2011
பதின்மூன்றாம் நூற்றாண்டிலும், பதினான்காம் நூற்றாண்டின்
தொடக்கத்திலும் சோழப்பேரரசும், பாண்டிய அரசும் அழிந்தன.
அதனால் குறுநில மன்னர்கள் ஆட்சி ஏற்பட்டது. இக்காலப்
பகுதியில் தமிழகத்தில் வலிமையான அரசு எதுவும் இல்லை.
குழப்பம், போர், கொந்தளிப்பு இல்லாத நிலை. சமய நூல்கள்
பெருகின. உலகியல் துறையில் மக்கள் மனம் ஒடுங்கியிருக்க
வேண்டிய நிலை காரணமாக ஆன்மிகத் துறையில் அவர்கள்
உள்ளம் விரிவு காண முயன்றது. ஞான மார்க்கத்தில் இக்காலத்தில்
நூல்கள் பெருகியது போல வேறு எந்தக் காலத்திலும் பரவவில்லை.

முகமதிய நாகரிக மோதல், மக்கள் மனத்தில் புரட்சியை
உண்டாக்கியது. புனிதம், நாகரிகம், தெய்வீகம் அனைத்தும்
இவர்களால் பாதிக்கப்பட்ட போது மக்கள் மனத்தில் கொந்தளிப்பு
ஏற்பட்டது. இதன் காரணமாக முன்னைவிட அதிகமான
சமயப்பற்றும், தெய்வ பக்தியும் ஏற்பட்டு, சமய இலக்கியம் தோன்ற
வழிகோலியது. மக்கள் மனத்தில் இக்கொந்தளிப்பு நிலைத்து,
எவ்வித முடிவும் காணாமல் தத்தளிப்பு நிலவியது.

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பல
பெரியோர்களால் புதிய ஞான மரபுகள் எழுந்தன. சிற்றம்பல
நாடிகள் வாயிலாக ஞானாசிரியர் பல பிரிவுகளாகப் பிரிந்தனர்.
சீகாழிக் கண்ணுடைய வள்ளல் ஆதீனம் இக்காலத்தில் தோன்றியது.
திருவாவடுதுறை ஆதீனம், காஞ்சி ஞானப்பிரகாசர் ஆதீனம்,
தருமபுரம் ஆதீனம், துழாவூர்மடம், செப்பறை மடம் முதலியவை
பிற்காலத்தில் தோன்றக் காரணமாயிருந்த பெரியோர்பலர்
இக்காலத்தில் தோன்றினர்.

இக்காலக்கட்டத்தில் சைவ இலக்கியங்கள் அதிக
எண்ணிக்கையில் தோன்றின. இக்காலப்பிரிவில் வெளிவந்த சைவ
இலக்கியங்களைச் சமய நூல்கள் என்றும் சாத்திர நூல்கள் (தத்துவ
நூல்கள்) என்றும் பிரிக்கலாம். வில்லிபுத்தூரார் மற்றும்
இரட்டைப்புலவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கவை.

சைவ இலக்கியப் படைப்பாளர்கள்

இக்காலக்கட்டத்தில், சைவ இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள்
பலர். அவர்களுள் உமாபதி சிவாச்சாரியார், சிற்றம்பல நாடிகள்,
தத்துவப் பிரகாசர், சம்பந்த முனிவர் ஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்கள்.
உமாபதி சிவாச்சாரியார்

இவர் சைவசித்தாந்த ஆசிரியர் நால்வரில் கடைசியாக
வந்தவர். உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம், திருவருட்பயன்
உட்படப் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பிற
நூல்கள் வினா வெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி,
நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப
நிராகரணம், திருமுறைத்திரட்டு, கோயிற்புராணம்,
திருமுறைகண்ட புராணம், திருத்தொண்டர் புராணசாரம்,
சேக்கிழார் புராணம் போன்றவையாகும்.

சிவப்பிரகாசம், சிவஞானபோதத்தின் சார்பு நூலாகும்.
(சிவஞானபோதம் பற்றிக் கடந்த பாடப்பகுதியில் விரிவாகப்
படித்தோம்). இதன் பாயிரத்துள் ஆசிரியர், ஆசாரியார் மரபு, சைவ
நூல்களின் இயல்பு, தீக்கை வகைகள் ஆகியவை பற்றிக்
கூறியுள்ளார்.சிவஞானபோதத்தின் பன்னிரு சூத்திரங்களையொட்டியே
இந்நூல் பாடல்களைப் பாகுபடுத்திக் கூறுவர்.

திருவருட்பயன், திருக்குறள் போன்ற அமைப்பு உடையது.
பத்து அதிகாரங்கள்; ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்து குறள்;
பாடல்கள் அழகாக எளிமையாக உள்ளன. இதன் தலைப்புகள்
எளிமையாக உள்ளன. சித்தாந்த சாத்திரம் கற்கப் புகுவோர் முதலில்
பயில்வது இந்நூலேயாகும்.
சிற்றம்பல நாடிகள்

இவர் துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன்முறுவல்
முதலிய ஐந்து நூல்களை இயற்றியுள்ளார்.

துகளறு போதம் இவர் இயற்றிய நூல்களுள் முக்கியமானது.
மெய்கண்டசாத்திரம் 14 எனக் கணக்கிட்டுக் காட்டும் ‘உந்திகளிறு’
என்ற வெண்பாவில் இந்நூலின் பெயர் காணப்படவில்லை. ஆனால்
பல ஏட்டுப்பிரதிகளில், இப்பாடலில் வரும் உண்மைநெறி விளக்கம்
என்ற பெயர் இல்லாமல் துகளறு போதத்தைச் சேர்த்து 14 எனக்
கணக்கிடப்பட்டுள்ளது. இந்நூல் திராவிட மாபாடியம் செய்த
சிவஞான சுவாமிகள் போன்ற சிறந்த சாத்திர உரையாசிரியர்களால்
எடுத்தாளப்பெற்ற பெருமையுடையது. காப்புச் செய்யுளும், 100
வெண்பாக்களும், இறுதியில் நூற்பொருள் கூறும் இரு பிற்கால
வெண்பாக்களும் உடையது. முக்தி நெறிக்குரிய மார்க்கம், தசகாரியம்
(பத்து படிகள்) என்பது சைவ சாத்திர மரபு. தச காரியங்களை
முப்பது நிலைகளாகச் சில சாத்திரங்கள் கூறும். இவ்வாறு கூறும்
முதல் சாத்திரம் துகளறு போதம் ஆகும்.

சிற்றம்பல நாடிகளின் நேர்மாணாக்கர் நால்வர். அவர்களுள்
தத்துவநாதர், தத்துவப் பிரகாசர் என்போர் நூல் எழுதினார்கள்
(தத்துவநாதர் - உண்மைநெறி விளக்கம் என்ற நூலையும்,
தத்துவப் பிரகாசர் - தத்துவப் பிரகாசம் என்ற நூலையும்
எழுதினர்). மற்ற இருவர் சம்பந்த முனிவர், ஞானப்பிரகாச முனிவர்
என்போர் ஆவர். சம்பந்த முனிவரும் அவர் வழியில் வந்தவரும்
நூல் எழுதியுள்ளனர். ஞானப்பிரகாசரும் அவரது பரம்பரையினரும்
நூல் எழுதவில்லை. சிற்றம்பல நாடிகளின் மாணக்கர்களுடைய
பணிகளை இங்கே காணலாம்.
தத்துவ நாதர்

சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் பதின்மூன்றாவதாக
எண்ணப்படுவது உண்மைநெறி விளக்கம். இதன் ஆசிரியர் சீகாழித்
தத்துவநாதர். இந்த நூலை உமாபதி சிவம் செய்தார் என்ற கருத்தும்
அறிஞர்களிடையே உண்டு. இந்நூல் ஆறு அரிய பாடல்களை
உடையது. அந்த ஆறு பாடல்களும் தசகாரியம் கூறும். இந்நூலுக்குப்
பல உரைகள் உள்ளன. இந்நூலாசிரியர் தத்துவநாதர், அருணந்தி
சிவாசாரியார் பாடிய இருபா இருபஃதுக்குச் சிறப்பான உரை
எழுதியுள்ளார். இந்த உரை, மெய்கண்ட சாத்திர நூல்களுக்கு
எழுதப்பட்ட உரைகள் அனைத்திலும் காலத்தால் மிகப்
பழமையானது.
தத்துவப் பிரகாசர்

தத்துவப் பிரகாசர் எழுதிய நூல் தத்துவப்பிரகாசம்.
(தத்துவப்பிரகாசர் என்ற பெயரில் 14-16 ஆம் நூற்றாண்டுகளில்
பலர் இருந்தனர். அவர்களுள் சீகாழியைச் சேர்ந்தவர் இவர்.
இவ்வரிசையில் காலத்தால் முதலாமவர்). இதற்குத் தத்துவ கவிதை
என்ற பெயரும் உண்டு. சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும்
ஞானபாதம் ஒன்றையே விரித்தும், தொகுத்தும் கூறும். மற்றைய
சரியை, கிரியை, யோகம் ஆகியவை மிகச் சுருக்கமாகச்
சொல்லப்பட்டுள்ளன. இவற்றையும் தமிழால் உணர்த்த வேண்டும்
எனக் கருதி இந்நூலை இவர் செய்ததாகக் கொள்ளலாம்.
சம்பந்த முனிவர்

இவர் பாடிய நூல்களாக இக்காலத்தில் கிடைப்பவை
சிவானந்தமாலை, சிற்றம்பல நாடிகள் சாத்திரக் கொத்திலுள்ள
வெண்பா, தாலாட்டு போன்றவையாகும்.

சிவானந்த மாலை 414 வெண்பாக்களைக் கொண்டது. இது
மிகச்சிறந்த சைவ சித்தாந்த நூல். பல சமய உண்மைகளைச்
சுவையுடைய உவமைகளால் தெளிவாக விளக்குகிறது. பல
பாடல்களில் ஞானசம்பந்தரைப் போற்றுகிறார் ஆசிரியர்.
இலக்கியச்சுவை ததும்பும் பல பாடல்கள் இந்நூலுள் உள்ளன.

இவர்களைத் தவிர, சம்பந்த சரணாலயர், சிவாலய முனிவர்,
அருள் நமச்சிவாய தேசிகர், சித்தர் சிவப்பிரகாசர், நமச்சிவாய
தேசிகர் போன்றோர் உள்ளிட்ட பலர் இக்காலப் பகுதியில் சிறந்த
இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளனர்.




கச்சியப்பரின் படைப்பு

கந்தபுராணம் கச்சியப்ப சிவாசாரியாரால் இயற்றப்பட்டது.
இவருடைய காலம் தெளிவில்லாததாக உள்ளது. பலர் பல்வேறு
கருத்துகளைக் கூறினாலும் பொதுவாக அனைவரும்
ஒப்புக்கொள்வது, கச்சியப்ப சிவாசாரியார் கி.பி. 1400க்கு முன்னால்
வாழ்ந்தார் என்பது தான்.

கந்தபுராணம் ஆறு காண்டங்களை உடையது. இதில்
முருகப் பெருமானது தோற்றமும் வீரமும், சூரபதுமன் ஆகியோர்
கொடுமையும், அவர்கள் அழிவும், முருகப் பெருமான் அருளும்,
பிறவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கந்தபுராணத்தில்
சொல்லப்படாத பொருள் எதுவும் இல்லை என்று ஒரு பழமொழி
உண்டு. இராமாயணம், பாகவதம் ஆகிய நூல்களில் வைணவ சமயத்
தத்துவங்கள் காணப்படுவது போல, சைவ சித்தாந்தத் தத்துவங்கள்
கந்தபுராணத்தில் மிகவும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

இரட்டைப்புலவர்படைப்புகள்

இக்காலப் பகுதியில் தோன்றியவர் இரட்டைப்புலவர். சோழ
நாட்டில் ஆடுதுறைக்கு அருகேயுள்ள ஆலந்துறை என்ற ஊரில்
இவர்கள் இருந்தனர். இவர்கள் அத்தை பிள்ளை, அம்மான்
(தாய்மாமன்) பிள்ளையாக இருந்தனர். ஒரு பிள்ளை
கண்ணில்லாத குருடர். மற்றொரு பிள்ளை காலில்லாத முடவர்.
குருடரின் பெயர் இளஞ்சூரியர். காலில்லாத முடவர் முதுசூரியர்.
இருவரும் சேர்ந்து ஒரே உள்ளத்தோடு செந்தமிழ்ப்பாக்கள் பாடும்
தகுதி பெற்றிருந்தனர். இருவரும் எப்போதும் சேர்ந்தே
இருந்தமையால் இருவருடைய இளமைப் பெயர்களும் மறைந்து
இரட்டைப்புலவர் என்ற பெயரே நிலைத்தது.

இவர்கள் பாடிய நூல்கள் திருஆமாத்தூர்க்கலம்பகம்,
தில்லைக்கலம்பகம், காஞ்சி ஏகாம்பரநாதர் உலா,
ஏகாம்பரநாதர் வண்ணம் என்பன. மூவர் அம்மானைப்
பாடல்கள், தியாகேசர் பஞ்சரத்தினம் என்பனவும் இவர்கள்
பாடியனவாகக் கூறுவர்.
திருஆமாத்தூர்க் கலம்பகம்

இந்நூல் 101 பாடல்களும், காப்பு விருத்தம் ஒன்றும் உடையது.
இந்நூலுள் அகத்துறைப் பாடல்களும், சந்தப்பாடல்களும் அதிகமாக
உள்ளன.
தில்லைக்கலம்பகம்

இரட்டைப்புலவர் பாடிய இரண்டாவது கலம்பகம், காப்பு
வெண்பாவும், 100 பாடல்களும் உடையது. சிதம்பரத்தில்
எழுந்தருளியுள்ள நடராசப் பெருமான் மீது பாடப்பெற்றது.
பெருமான் சிறப்பு, வழிபட்டோர், பிற தலங்கள், பஞ்சபூதத் தலங்கள்,
ஐந்து சபைகள் முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

யார் எவ்விதம் இறந்தாலும், புரியைக் (புரி - பழுதை,
வைக்கோல் தாளை முறுக்கிச் செய்த கயிறு) கட்டி இழுத்து
எறிந்தாலும் கூட, சிதம்பரத்தில் சென்று இறத்தல் நன்று என்று
கூறுகிறார்கள் இந்த இரட்டைப்புலவர்கள்.

பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலுமிப் பாழுடலம்
கொழுத்துச் செத்தாலும் மெலிந்து செத்தாலும்
கொலைப்படினும்
புழுத்துச் செத்தாலும் புதைத்தாலும் காலில் புரியைக்
கட்டி
இழுத்துச் செத்தாலும் சிதம்பரத் தேசென் றிறத்தல்
நன்றே

காஞ்சி ஏகாம்பரநாதர்உலா

இது, இரட்டைப்புலவரால் இயற்றப்பட்டது. நூலில்
தலப்பெருமை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. கயிலாயத்தில்
உமாதேவியார், சிவபெருமான் திருக்கண் புதைக்க (மறைக்க)
உலகம் இருளில் மூழ்கியது. உலகத்தைத் துன்பத்தில் ஆழ்த்திய
பாவம் தீருவதற்காகக் காஞ்சியில் சென்று தம்மைப் பூசிக்கும்படி
பிராட்டிக்குப் பெருமான் உத்தரவிட்டார். அம்மையார் காஞ்சியின்
சிறப்புகளையெல்லாம் பார்த்துக் கொண்டு வரும் செய்தி உலாவில்
விளக்கமாக உள்ளது. பின்னர் அம்மையார் பூசித்தல், கம்பை
நதியில் வெள்ளம் கண்டு பெருமான் திருவுருவை அணைக்க
இறைவன் வெளிப்படுதல், பங்குனி விழா, அலங்காரச் சிறப்பு, உலா
வருதல், பின்னர் ஏழு பருவப் பெண்களும் கண்டு விரும்புதல்
என்ற செய்திகள் கூறப்பட்டுள்ளன.

பேரிளம்பெண் என்ற பருவத்தைக் கூறும் போது
சிவபெருமானின் இயல்பை மிகவும் நன்றாக விளக்கியுள்ளனர் இந்த
இரட்டைப்புலவர்கள். காலத்தால் ஓரளவு முற்பட்ட இந்த நூல்,
பின்வந்த புலவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது.
Read more ...