பெரிய ஞானக்கோவை

Saturday, May 19, 2012

1. சிவவாக்கியர் பாடல்

     சித்தர்  இலக்கியத்தில்  சிவவாக்கியர்  பாடலுக்குத்  தனி  மரியாதை
தரப்படுவதுண்டு,  காரணம்,   இவர்   பாடல்களில்   வழக்கமான   சித்தர்
கருத்துக்கான  யோகம்,  குண்டலினி,  நிலையாமை.  வாசி கருத்துக்களுடன்
புரட்சிகரமான  கருத்துக்களையும்  கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும்
கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில்
நாத்திகராக  இருந்து  ஆத்திகராக  மாறினார்  என்பதை  இவரின்  பாடல்
கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி  இவர் முதலில் நாத்திகராக
இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக
மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.

     சிவவாக்கியரின்  பாடல்களும்  திருமழிசை  ஆழ்வார்   பாடல்களும்
சந்தத்தில்  மட்டுமே  ஓரளவு  ஒத்துப்  போவதாலும் இவர் பாடல் சாயலில்
ஏனைய சித்தர்

பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

 விக்கிரக ஆராதனை

     சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப்
படுகின்றது.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

     சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த
உணவின்  ருசியை  உணர்ந்து  கொள்ளாதது  போலவே மனக்கோயிலினுள்
இறைவன்  இருப்பதை  அறியாமல்  வெறும் கல்லை  நட்டு வைத்து தெய்வ
மென்று  பெயரிட்டு  பூக்களாலும்  மந்திரங்களாலும்   வழிபாடு   செய்வது
அறியாமையே யாகும் என்கிறார்.
“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”

     நட்டு  வைத்த கல்லை  தெய்வம் என்று  நினைத்து அக்கல்லின் மேல்
மலர்களைச்  சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண
என்று ஏதோ மந்திரங்களையும்  சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன
பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட  மூடர்களே, கடவுள் என்பவர்
தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில்
நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?

  அடுப்பில் வைத்துச்  சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும்
அகப்பையும்   அதில்   சமைக்கும்  உணவின்  ருசியை   அறியாதது
போலவே நீர் செய்யும் புற  வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற
மாட்டார்.  இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை
கல்லில்  காண  முடியும்   என்று   சொல்லுவது  வெறும்  பிதற்றலே
என்கிறார்.

 

No comments:

Post a Comment