யோகம் பலவகை --- 1

Saturday, January 30, 2010
யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். பிரிந்த ஒன்று மீண்டும் அத்துடன் இணைவது யோகம் என்கிறோம். யோக் எனும் சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் யோகம். பரமாத்ம சொரூபத்தில் இருந்து பிரிந்து ஜீவாத்மாவாக இப்பிறவியை எடுத்த நாம் மீண்டும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை யோகம் என கூறலாம்.

யோகம் என்றவுடன் ஒரே ஒரு யோக முறைதான் இருப்பதாக நினைக்கவேண்டாம். யோகம் பலவகையாக இருக்கிறது. யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பகவான் ஸ்ரீகிரிஷ்ணர் பகவத் கீதையில் ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் பக்தியோகத்தை பற்றி விளக்குகிறார்.

நமது ஆன்மீக நூல்களில் ஒரே நேரத்தில் மூன்று யோகமுறையை கையாண்ட தன்மை பகவத் கீதை பெறுகிறது. பகவத் கீதையில் எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் முக்கியமானது யோக விளக்கம் எனலாம்.

தன்னில் மனிதன் ஐக்கியமாகிவிட இறைவன் உபதேசித்த வழி யோக மார்க்கம். இறைவனை அடைய எத்தனையோ வழிகள் உண்டு. அதில் யோகமும் ஒருவழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.

பக்தி யோகம் : இறைவனை பக்தி செய்வதை காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இரண்டர கலப்பது பக்தி யோகம். பக்த மீரா, புரந்தர தாசர்,திரு ஞானசம்பந்தர் போன்றவர்கள் பக்தி யோகம் செய்தவர்கள்.

கர்ம யோகம் : கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளுதல். அப்பர், சிவனடியாருக்கு சேவை செய்த நாயன்மார்கள்.

ஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.

ஹதயோகம் : பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடன்னும் பராமரிப்பது ஹதயோகம். சீரடி சாய்பாபா மற்றும் ஏனைய யோகிகள்.

மேற்கண்ட யோக முறைகளில் எந்த யோகமுறை சிறந்தது என கேட்டால் அவரவர் வாழ்வியல் சூழலுக்கும், தன்மைக்கும் ஏற்ப யோகமுறையை பின்பற்றவேண்டும்.

யோகத்தில் முக்கியமான இந்த ஐந்து யோக முறைகளும் பஞ்சபூதத்தின் வடிவங்களாக இருக்கிறது. ஆகயத்தின் தன்மையை ஞான யோகமும், நீரின் தன்மையை கர்ம யோகமும், காற்றின் தன்மையை ஜபயோகமும், அக்னியின் தன்மையை பக்தியோகமும், மண்ணின் தன்மையை ஹத யோகம் கூறிப்பிடுகிறது.இவ்வாறு யோக முறைகள் பஞ்சபூதத்தின் தன்மையை கூறுவதால் ஏதாவது ஒரு பூதத்தின் தன்மை இல்லை என்றாலும் பிரபஞ்ச இயக்கம் செயல்படாது. அது போல அனைத்து யோக முறையும் இன்றியமையாதது.

பிற யோக முறைகளை விளக்க அனேக நூல்கள் மற்றும் மஹான்கள் இருக்கிறார்காள். ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும். உடல் நிலையை பராமரிப்பது. நோயின்றி இருப்பது என பல விஷயங்கள் நமக்கு தேவையான விழிப்புணர்வு இல்லை எனலாம். கர்ம வினை என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நோய்வருவதற்கு முன்வினை கர்மம் காரணம் என்கிறார்கள். வினை எவ்வாறு இருந்தாலும் சிறப்பான நிலையில் ஹதயோகம் பயிற்சி செய்து வந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் பலம் ஏற்படும்.

No comments:

Post a Comment