யோகா செய்யப் போகிறேன்

Saturday, January 30, 2010
“யோகா செய்யப் போகிறேன்”, “யோக பயிற்சி கற்றுத் தருகிறார்கள்” என நாம் கூறும் ”யோகா” எனும் வாசகம் கூறும் பொருளும் , நாம் மனதில் வைத்திருக்கும் அர்த்தமும் வேறு வேறு.

யோகம் என்றால் ஒன்றிணைதல் என அர்த்தம். யோக சாஸ்திரம் மதம், கலாச்சாரம் கடந்த ஒரு மெய்ஞானம். ஒன்றிணைதல் என்றால் இரு விஷயங்கள் ஒன்று சேருதல் என கொண்டால் பரமாத்மாவுடன், ஜீவாத்மாவா என ஆத்திகர் நினைக்கலாம். மனமும் உடலும் என நாத்திகர் நினைக்கலாம். யோக சாஸ்திரம் முழுவதும் கடவுள் என்ற கோட்பாடு இல்லை. நீ, உனது, உன் உள்நிலை என மூன்று தன்மையை பற்றியே யோகசாஸ்திரம் கூறுகிறது.

பதஞ்சலி யோக சூத்திரம் எனும் யோக நூல் கடவுள் கொள்கையை கொண்டிருந்தாலும், இன்ன கடவுள் இன்ன உருவ நிலை என சொல்லாமல். இறைவன் எனும் சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறது.

யாமம்,நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. என யோக சாஸ்திரத்தில் எட்டு நிலைகள் இருக்கிறது. இதில் எட்டாவது நிலையை நீ அடைந்தால் இறைவனை காணலாம் என்றே பதஞ்சலி கூறுகிறார்.

உடலை வளைத்து செய்யும் ஆசனா எனும் அஷ்டாங்க யோகத்தின் உள்பிரிவு யோகா என தற்காலத்தில் தவறாக கூறப்படுகிறது. சில யோக பயிற்சி பள்ளிகள் வெறும் ப்ராணாயமத்தையோ, ஆசனத்தையோ சொல்லி கொடுத்துவிட்டு அதை யோகா என பிரச்சாரம் செய்கிறார்கள்.

யோகா செய்தேன் என்றால் ஆசனம் செய்தேன் என்றோ, ப்ராணாயமம் செய்தேன் என்றோ அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கிறது.

No comments:

Post a Comment