பஞ்சகவ்வியம்

Monday, July 18, 2011
பஞ்சகவ்வியம்

பஞ்சகவ்வியம் செய்யவேண்டும். அது செய்யும் முறையாவது, ஈசுவரனுடைய கிழக்குப் பாகத்திலாவது அல்லது ஈசானபாகத்திலாவது ஒன்று அல்லது இரண்டு கைமுழ அளவு நான்கு முக்குச்சதுரமாகக்¢ கோமயத்தால் மெழுகி, கிழக்குநுனியாகவும் வடக்குநுனியாகவும் நான்கு நூல்களால் தனித்தனி ஒரு சாணளவுள்ள ஒன்பது கோஷ்டங்களைக்கீறி, ஒவ்வொரு கோஷ்டத்திலும், குருணியாவது, அதற்குப் பாதி அளவுள்ள நெல்லையாவது, அதனினும் பாதி அளவுள்ள அரிசியையாவது, அல்லது தருப்பையையாவது பரப்பி, வடக்கு முகமாக இருந்துகொண்ட நான்கு திக்கிலும் வடக்கு நுனியாகவும் கிழக்கு நுனியாகவுமுள்ள ஐந்து தருப்பைகளைப் பரப்பி,

நான்கு பக்கங்களிலும் புஷ்பங்களால் அலங்காரஞ்செய்து,

சிவதத்துவாய நம:,
சதாசிவதத்துவாய நம:,
வித்தியாதத்துவாய நம:,
புருஷதத்துவாய நம:,
காலதத்துவாய நம:,
பிருதிவி தத்துவாய நம:,
ஜல தத்துவாய நம:,
வாயு தத்துவாய நம:,
பிரகிருதி தத்துவாய நம:


என்று சொல்லிக்கொண்டு, நடு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, ஆக்கினேயம், நிருதம், மாருதம், ஈசானம் என்னும் ஒன்பது கோஷ்டங்களைப் பூசித்து, சுவர்ணபாத்திரம், வெண்கலபாத்திரம், அல்லது உடையாததாயும் கருப்பு நிறமில்லாததாயுமுள்ள மண் பாத்திரங்களையாவது சுத்தஞ் செய்து

ஒன்பது கோஷ்டங்களிலும் வைத்து,

சுப்பிரதிஷ்டபாத்திராய நம:,
சுசாந்தபாத்திராய நம:,
தேஜோமயபாத்திராய நம:,
ரத்தினோதகபாத்திராய நம:,
அமிருதபாத்திராய நம:,
வியக்தபாத்திராய நம:,
சூரியபாத்திராய நம:,
சம்யுக்தபாத்திராய நம:,
அவ்வியக்தபாத்திராய நம:


என்று சொல்லிக்கொண்டு, மேலே கூறியவாறு கோஷ்ட முறையாகப் பாத்திரங்களைப் பூசித்து, தாம்பிரவர்ணமான பசுவின் பாலை மூன்று உழக்கு அளவு நடுப்பாத்திரத்திலும், வெண்மைவர்ணமான பசுவின் தயிரை இரண்டு உழக்கு அளவு கிழக்குப் பாத்திரத்திலும், கபிலவர்ணமான பசுவின் நெய்யை ஒரு உழக்கு அளவு தெற்குப் பாத்திரத்திலும், கருப்புவர்ணமான பசுவின் நீரை இரு அஞ்சலிகள் கொள்ளும் அளவு வடக்கு பாத்திரத்திலும், கருப்புவர்ணமான பசுவின் சாணத்தை ஒரு உழக்கு அளவு எடுத்து ஐந்து உழக்கு நீர் சேர்த்து ஆடையினால் சுத்தி செய்து மேற்குப் பாத்திரத்திலும், விளாம்பழ அளவாவது அல்லது அதற்க் பாதி அளவாவது, அல்லது அதனினும் பாதி அளவாவது, அரிசி, நெல்லிக்கனி, மஞ்சளென்னுமிவைகளையரைத்து எடுத்து ஆக்கினேயம், நிருதம், வாயு என்னுமிந்த மூலைகளிலுள்ள பாத்திரங்களிலும், முப்பத்தாறு, அல்லது இருபத்தைந்து, அல்லது பன்னிரண்டு தருப்பைகளைச் சேர்த்து நீரில் போட்டு, முப்பத்தாறு முதலாகக் கூறப்பட்ட அளவில் பாதியாகிய வேறு தருப்பைகளால் செய்யப்பட்டதாயும், பிரதக்ஷிணமாக வாயுதிக்கில் நின்று சுற்றப்பட்டதாயும், ஒரு கையளவாகவாவது, அல்லது ஒரு ஒட்டையளவாகவாவது உள்ளதாயும், இரண்டங்குல அளவுள்ள முடிச்சுடனும், நான்கு அங்குல அளவுள்ள நுனியுடனும் கூடின கூர்ச்சத்தைச் செய்து, அதை ஒரு மரக்கால் அளவுள்ளதும், சந்தனம், அறுகு என்னுமிவற்றுடன் கூடினதுமான நீரில் போட்டுக் குசோதகஞ் செய்து, ஈசானகோண பாத்திரத்தில் இருதயமந்திரத்தால் அந்த நீரை விட்டு, பால்முதல் கோமயம் ஈறாகவுள்ள பஞ்சகவ்வியங்களை முறையே ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒருமுறை ஈசானாதி மந்திரங்களாலும், அரிசிமாவை இருதயமந்திரங்களாலும், நெல்லிமாவை சிரோமந்திரத்தாலும், மஞ்சளைக்கவச மந்திரத்தாலும், குசோதகத்தை ஆறுமுறை ஆவர்த்தி செய்த பஞ்சப் பிரம்மமந்திரத்தாலும் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

அதன்பின்னர், கோமயத்தைக் கோசலத்திலும், அவ்விரடனையும் நெய்யிலும், அம்மூன்றனையும் தயிரிலும், அந்நான்கினையும் பாலிலும் இருதயமந்திரத்தால் சேர்த்து, அதிலேயே குசோதகத்தையும் மூலமந்திரத்தால் சேர்க்கவேண்டும். பின்னர் பஞ்சப்பிரம மந்திரம் ஷடங்கமந்திரங்களால் அபிமந்திரணஞ் செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணமமும், கவசமந்திரத்தால் அவகுண்டனமுஞ் செய்து, தேனுமுத்திரை காட்டி, கந்தம் புஷ்பங்களால் பூசித்து, அஸ்திரமந்திரத்தால் தூபதீபங்காட்டி, மூலமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்ய வேண்டும்.

பஞ்சகவ்வியமுறை முடிந்தது.

No comments:

Post a Comment