நான்கு சிவராத்திரிகள்

Friday, March 12, 2010
முத்தொழில் செய்யும் மூன்று கடவுள்களுள், சிவனது பொறுப்பில் வருவது இறப்பு போன்ற உறக்கம். அதே போல் உயிர்களை விழிக்கச் செய்யும் நேரம் பிரமனது தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும் நேரம். உயிர்கள் தத்தம் கடமைகளையும், செயல்களையும் செய்யும் நேரம், காக்கும் தெய்வமான விஷ்ணுவின் நேரம்.

இதன் அடிப்படையில்தான் நாளைப் பகுத்துள்ளனர் பெரியோர். விடிகாலை 4 மணி முதல் 8 மணி வரை (1 மணி = 1 ஓரை = 2 1/2 நாழிகைகள்) உள்ள நேரம் நான்முகப் பிரமன் செயலாற்றும் நேரம். அந்நேரத்தில் செய்யும் நியமங்கள் சத்துவத்தை அதிகப்படுத்துவன. அந்நேரத்தில் உட்கொள்ளும் உணவு சுறுசுறுப்புக்கும், உடல், மன வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும்.

காலை 8 மணி முதல் முன்மாலை 4 மணி வரை விஷ்ணுவின் நேரம். இந்த நேரத்தில் உடலும், உள்ளமும் நன்கு உழைத்து, செயலாற்ற ஒத்துழைக்கும்.

மாலை 4 முதல் இரவு 8 மணி வரை மீண்டும் பிரமனின் நேரம். பிரமன் தொழிலாக, மீண்டும் உடல் மற்றும் மனதின் புத்துணர்வுக்கு ஓய்வும், உணவும் உடலில் ஒட்டும் நேரம் இது.

இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வதுதான் நல்லது. அதன் பிறகு, இரவு 8 மணி முதல், காலை 4 மணி வரை சிவனது நேரம். செயல்பாடுகள் நின்று, இறப்பு போன்ற தூக்கத்தில் அமிழும் நேரம் அது.

நம் உடலுறுப்புகளின் செயல்பாடும் இப்படியே மூன்று தெய்வங்களது செயல்பாட்டினை ஒட்டியே அமைவதால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மூன்று தெய்வங்களின் அம்சமும் உள்ளன. ஒவ்வொரு மனிதனும் மூன்று தெய்வங்களின் அருளால் ஒவ்வொரு நாளும் மூன்று நிலைகளில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மூன்று தெய்வங்களும் அவன் உடல், மன நிலைகளை மேற்பார்வை பார்க்கும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றுள், அழித்தல் கடவுளான சிவனது நேரம் இரவாக இருக்கவே ஒவ்வொரு இரவும் சிவராத்திரிதான். அழித்தல் என்று எல்லாவற்றையும் ஒடுக்கி விடுவது போன்ற இந்தத் தொழிலின் முக்கிய அம்சம், அழித்தல் மட்டும் அல்ல. அழித்தல் போன்ற உறங்கும் நிலையிலும், நம் உள் மனம் விழித்திருக்கிறது. நாம் அறியாத நிலையில் உள்ளே சலனங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கே தான் மஹா சிவராத்திரியின் முக்கியத்துவம் வருகிறது. அது என்ன என்று பார்ப்பதற்குமுன், மற்ற மூன்று சிவராத்திரிகளைப் பார்ப்போம்.

இரண்டாவது சிவராத்திரி
மாத சிவராத்திரி எனப்படுவது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்தசியில் வருவது. இதுவும் ஒருவித அழித்தலைக் குறிப்பது. பௌர்ணமியில் ஒளிர்ந்த சந்திரன், தேய்ந்து முழுவதும் மறைவதற்குமுன் வரும் ராத்திரி மாத சிவராத்திரி ஆகும்.

மூன்றாவது சிவராத்திரி
வருடம்தோறும் மாசி மாதம் தேய்பிறையில் முதல் 13 நாட்களும் அனுஷ்டிக்கப்படுவது.

அது முடிந்த 14-ஆம் நாள் வரும் மகா சிவராத்திரி, 4-ஆவது சிவராத்திரி ஆகும்.

No comments:

Post a Comment