மூச்சுப் பயிற்சி

Wednesday, March 17, 2010
ஆயுளை நீடிக்கும் மூச்சுப் பயிற்சி
சுவாசப் பயிற்சியின் பலன்கள் எவை எவையென திருமூலர் கூறியுள்ளவற்றை இரு திருமந்திரப் பாடல்களின் வழியே கண்டோம். இனி மேலும் இரு பாடல்களைக் காணலாம்.

“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்

உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.’

-திருமந்திரம்- பாடல் எண்: 568.

உடலில் உயிர் இருக்கும் வரையில் சுவாசம் என்பதும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டேயிருக்கும். இதையே மாற்றிக் கூறுவதானால் சுவாசம் நடைபெறும் வரையில்தான் உயிர் உடலில் தங்கியிருக்கும். சுவாசம் நின்று போனால் உயிர் உடலை விட்டுப் பிரிந்து போகும். ஒரு மனிதன் உணவின்றி, நீரின்றி சில காலம் உயிர்வாழ முடியும். ஆனால் காற்று (பிராண வாயு) இல்லாது போனால் எட்டு நிமிடங்களுக்குமேல் உயிர்வாழ முடியாது. எனவேதான் உயிரை இயங்க வைக்கும் வாயுவை பிராண வாயு என்கிறோம். உயிர் பிரிந்துவிட்டால் “பிராணனை விட்டு விட்டான்’ என்று கூறுகிறோம்.

சுவாசத்தில் இரு பகுதிகள் உண்டு. காற்றை உள்ளே இழுப்பது (உள் சுவாசம்- ஒய்ள்ல்ண்ழ்ற்ஹற்ண்ர்ய்), காற்றை வெளியே விடுவது (வெளி சுவாசம்- ஊஷ்ல்ண்ழ்ஹற்ண்ர்ய்). காற்று உள்ளே சென்று வெளியே வரும் இந்தச் செயல் ஒரு அனிச்சை செயலாகும். நம்மை அறியாமலேயே நமக்குத் தெரியாமலேகூட இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது பாடலின் முதல் வரியைப் பாருங்கள்.

“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை.’

புறப்பட்டு (வெளியே சென்று- வெளிசுவாசம்), புக்கு (உள்ளே புகுந்து- உள் சுவாசம்), திரிகின்ற வாயுவை (சுவாசக் காற்றை)- இந்த வரியில் வருகின்ற “திரிகின்ற’ என்ற சொல்லில் ஆழமான அர்த்தங்கள் உள்ளன. எந்தவிதமான குறிக் கோளோ இலக்கோ நெறிமுறையோ இல்லாது இயங்குவதையே “திரிதல்’ என்கிறோம். “அவன் சும்மா ஊரைச் சுற்றித் திரிகிறான்’ என்று சொல்வதில்லையா?

மூச்சுப் பயிற்சி இல்லாதவர்களின் சுவாசமும் இவ்வாறே எந்தவிதமான இலக்கோ குறிக்கோளோ இன்றி, உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக வீணே “திரிந்து’ கொண்டிருக்கிறது.

“திரிதல்’ என்ற சொல்லுக்கு “தனது இயல்பு நிலையில் இருந்து மாறுபடுதல்’, “கெட்டுப் போதல்’, “வீணாகிப் போதல்’ போன்ற அர்த்தங் களும் உண்டு. “பால் திரிந்து போச்சு’ என்று கூறுகிறோம் அல்லவா? அந்த அர்த்தத்தின் அடிப் படையில் பார்த்தால், எவ்வித குறிக்கோளும் நெறி முறையும் இன்றி உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருக்கும் சுவாசம் தனது இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட அல்லது வீணாகிப் போன சுவாசமே ஆகும். (திரிந்த சுவாசம்).

அப்படியானால் “சுவாசம்’ என்பதன் இயல்பு நிலை என்ன? அதன் குறிக்கோள் அல்லது இலக்கு என்னவாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர் சுவாசத்தின்போது உடலின் உள்ளே என்ன நிகழுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

* உடலின் ஒவ்வொரு “செல்’லும் நலமாக இயங்க ஆக்சிஜன் எனும் பிராண வாயு அவசியம் தேவை.

* செல்கள் இயங்கும்போது பலவிதமான கழிவுப் பொருட்கள் உருவாகின்றன. இவற்றுள் மிக முக்கியமான கழிவுப் பொருள் கரியமில வாயுவாகும். (கார்பன்-டை-ஆக்ஸைடு).

*் உள்சுவாசத்தின்போது வெளியிலுள்ள- காற்றிலுள்ள பிராணவாயு நுரையீரல்களால் உறிஞ்சப்பட்டு ரத்தத்தோடு கலக்கிறது.

*் வெளிசுவாசத்தின்போது ரத்தத்தில் தேங்கி நிற்கும் கரியமில வாயு பிரிந்து வெளியேறுகிறது.

ஆக, சுவாசம் என்பதன் இலக்கு பிராண வாயுவை உடலுக்குள் கொண்டு வருவதும், உடலிலுள்ள கழிவுப் பொருளான கரியமில வாயுவை வெளியே அனுப்புவதுமே ஆகும். இந்தச் செயல் அனைவரது உடலிலும் இடையறாது நடந்து கொண்டுதானே இருக்கிறது? பின் ஏன் திருமூலர் “திரிதல்’ என்ற சொல்லை உபயோகப்படுத்தி யிருக்கிறார்?

நாம் உள்ளே இழுக்கும் காற்றிலுள்ள ஒரு சிறிய பகுதி பிராணவாயு மட்டுமே நுரையீரல்களால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது. நுரையீரல்களில் தங்கியிருக்கும் கரியமில வாயுவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே வெளிமூச்சின் வழியே வெளியேறுகிறது. எனவே செல்களுக்குத் தேவையான பிராணவாயு சரிவரக் கிடைப்பதில்லை. செல்களில் தேங்கி நிற்கும் கரியமில வாயுவும் முழுமையாக வெளியேற்றப்படுவதில்லை.

இதனால் என்ன நிகழும்? செல்கள் தனது முழுமையான திறனுடன் இயங்க இயலாது. பழுதடைந்த செல்கள் தம்மை சரிவர புதுப்பித்துக் கொள்ள முடியாது. இறந்துபோன செல்களுக்குப் பதிலாக புதிய செல்கள் உருவாவதில் சுணக்கம் ஏற்படுகிறது. இவை அனைத்தும் சேரும்போது பலவிதமான நோய்கள் உருவாகின்றன. முதுமை, தோல்களில் சுருக்கம், கண்களில் காட்டராக்ட் என்ற திரை ஆகியவை தோன்றுகின்றன. கேசத்தி லும் நரை விழத் துவங்குகிறது. இறுதியாக மரணம் வந்து தழுவிக் கொள்கிறது. இந்த மூச்சை நெறிப் படுத்தினால் என்ன நிகழும்? பாடலின் அடுத்த வரிகளைப் பாருங்கள்.

“…

நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்

உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்

புறப்பட்டு போகான் புரிசடையோனே.’

மூச்சுப் பயிற்சிகளின் மூலம் மூச்சை நெறிப்படுத்தி உடலின் உள்ளே பிராணவாயுவை நிரம்பச் செய்தால் (உள்ளே நின்மலம் ஆக்கில்) உடல் இளமை பெறும். தேஜஸ் உருவாகும் (உறுப்பு சிவக்கும்). நரை விழுந்துபோன கேசம் கூட மீண்டும் கறுப்பாகும். (உரோமம் கறுக்கும்). மொத்தத்தில் முதுமைக் கோலம் மறைந்து, இளமை திரும்பும். உடல் உறுதியாகும்.

இவற்றைவிட மிக முக்கியமான பலனை நான்காவது வரியில் குறிப்பிடுகிறார் திருமூலர். “புறப்பட்டு போகான் புரிசடையோனே.’ “புரிசடை யோன்’ (அழகிய சுருண்ட கூந்தலை உடையவன்) என்பது சிவபெருமானின் அடைமொழிகளில் ஒன்று. உடலினுள் இருக்கும் சீவன் அல்லது ஆன்மா சிவனின் (இறைவனின்) அம்சமே என்பது சித்தர்களின் கூற்று. எனவேதான் இங்கே உயிரை புரிசடையோன் என குறிப்பிடுகிறார். மூச்சுப் பயிற்சிகளின் மூலம் மூச்சை நெறிப்படுத்தி னால் உடலில் தங்கியிருக்கும் சீவன் வெளியேறாது! அதாவது மரணம் இராது! மூச்சை நெறிப்படுத்தும் வித்தை என்ன என்பதை அடுத்த இதழில் காணலாம். இனி அடுத்த பாடலுக்குச் செல்லலாம்.

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்

தெளியக் குருவின் திருவருள் பெற்றால்

வளியினும் வேட்டு அளியனும் ஆமே.’

-திருமந்திரம் - பாடல் எண்: 562.

தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளைச் செய்து வருபவர்களுக்கு முதுமை மறையும். உடல் காற்றைவிட லேசாகும் என்பதே இப்பாடலின் சுருக்கமான கருத்தாகும். இதை சற்றே விரிவாகக் காணலாம்.

“வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்’

“வளி’ என்பது காற்றுக்கு மற்றொரு பெயர். இந்தக் காற்றை உள்வாங்கி, வசப்படுத்தி (வயத்தில்) உடலில் தங்குமாறு செய்தால் (அடக்கில்), உடல் பளிங்குபோல் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.

வயது கூடுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒவ்வொரு வருடமும் ஒரு வயது கூடிக் கொண்டேதான் போகும். காலம் என்பது நில்லாதது. மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக்குக்கூட வருடங்கள் செல்லச் செல்ல வயது கூடிக் கொண்டேதான் போகும். ஆனால் அவர்களது வயது ஏறினாலும் உடலில் முதுமையின் சின்னங்கள் (திரை, நரை போன்றவை) தோன்றாது. உடல் இளமையாகவே இருக்கும். இதை ஒரு அழகான உவமை மூலம் விளக்குகிறார் திருமூலர்.

“பழுக்கினும் பிஞ்சாம்.’

மிகவும் வயதானவர்களை “அவர் ஒரு பழுத்த பழம்’ என்று சொல்வதுண்டு. அதே உவமையை இங்கு பயன்படுத்துகிறார். வயதால் பழுத்திருந்தாலும் உருவத்தால் பிஞ்சாகவே இருப்பர்.

மூன்றாவது அடியில் “தெளியக் குருவின் திருவருள் பெற்றால்’ என குருவின் அவசியத்தை வலியுறுத்துகிறது. எந்தக் கலைக்கும் ஒரு ஆசான் தேவை. மூச்சுப் பயிற்சிக்கு நிச்சயமாக ஒரு நல்ல குருவின் மேற்பார்வை அவசியம். ஒரு குருவின் துணையோடு மூச்சுப் பயிற்சியைக் கற்றுக் கொண்டு, அவரது அருளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா? பாடலின் நான்காவது வரியைப் பாருங்கள்.

“வளியினும் வேட்டு அளியனும் ஆமே.’

இந்த கடைசி வரிக்கு இருவிதமான பாட பேதங்கள் உள்ளன. பாடபேதத்திற்கு ஏற்ப பொருளும் மாறுபடுகிறது. நாம் எடுத்துக்கொண்ட பாடபேதத்தின் பொருள்- தொடர்ந்து மூச்சுப் பயிற்சியைச் செய்துவருபவர்களுக்கு உடல் காற்றைவிட லேசானதாகும். அவனால் காற்றிலும் சஞ்சரிக்க இயலும் என்பதாகும். (வேட்டு= விரும்பும்போது, வளியினும்= காற்றை விடவும், அளி= மென்மையான).

மற்றொரு பாட பேதத்தையும் காண்போம்.

“வளியனும் வெட்ட வெளியனும் ஆமே.’

“வளி’ என்பது காற்று. உயிர் வாழ்வது என்பது காற்றை அடிப்படையாகக் கொண்டது. காற்று இல்லையேல் உயிர் (சீவன்) உடலை விட்டுப் பிரிந்து போய்விடும். எனவேதான் அந்த சீவனை “வளியன்’ என்கிறார் திருமூலர். இது ஜீவாத்மாவைக் குறிக்கிறது.

“வெட்ட வெளி’ என்பது எல்லை யில்லாத- ஒன்றுமில்லாத- சூன்யமான என்பன போன்ற பல அர்த்தங்களைத் தரும் ஒரு சொல்லாகும். எல்லையற்ற பிரபஞ்சத்தையும், அந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நிற்கும் பிரபஞ்ச சக்தியையும் குறிக்கவே இங்கே “வெட்ட வெளி’ என்ற சொல்லை திருமூலர் பயன்படுத்தியுள்ளார். இது பரமாத்மாவைக் குறிக் கிறது.

குருவின் அருளோடு தொடர்ந்து மூச்சுப் பயிற்சி களைச் செய்து மூச்சை தன்வசப்படுத்த முடிந்த ஜீவாத்மா, பரமாத்மாவின் நிலையை எட்ட முடியும். ஜீவாத்மா என்பது அதிர்வுகள் குறைந்த ஒரு சக்தி நிலை. பரமாத்மா என்பது உயர் அதிர்வு சக்தி நிலை. தொடர்ந்த மூச்சுப் பயிற்சிகளால் உடலில் அதிக அளவில் பிராண வாயு செல்களில் தங்கும். ஒவ்வொரு செல்லும் தமது முழுத் திறமையோடு செயல்படத் துவங்கும். நாடிகளில் சக்தி தங்கு தடையின்றி பாயும். குண்டலினி எழும்பும். சக்கரங்களும் ஒவ்வொன் றாகத் திறந்து கொள்ளும். இறுதியாக சகஸ்ராரச் சக்கரம் திறந்து கொள்ளும்போது ஜீவாத்மா பரமாத்மாவோடு ஒன்றிய நிலை உருவாகும். மனிதனும் கடவுளாகலாம் என்ற அரிய சூட்சுமத்தையே இப்பாடலின் கடைசி வரியில் திருமூலர் மறைமுகமாகக் கூறியுள்ளார்.

அட்டமா சித்திகளில் ஒன்று “லகிமா சித்தி.’ இந்த லகிமா சித்தியைப் பெற்ற சித்தர்களால் தாம் விரும்பிய மாத்திரத்தில் தமது உடலைக் காற்றை விட லேசாக்கிக் கொள்ள முடியும். தரையில் கால்படாமல் மிதக்க முடியும். நீரின் மேல் நடக்க முடியும். காற்றில் பறந்து செல்லவும் முடியும். இப்பாடலின் கடைசி அடிக்கு, முதலாவது பாட பேதத்தை எடுத்துக் கொண்டால் “லகிமா சித்தி’ குறித்து திருமூலர் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம். இரண்டாவது பாட பேதத்தை எடுத்துக் கொண்டால் “மனிதனும் கடவுளாகலாம்’ என்ற சூட்சுமத்தை திருமூலர் விளக்குவதாகக் கொள்ளலாம். இரண்டுமே பொருத்தமுடைய விளக்கங்களாகவே தோன்றுகின்றன.

No comments:

Post a Comment