வழிபடும் முறை

Monday, March 1, 2010
உலக உயிர்களில் மனிதன் மட்டுமே அனுபவத்தை பதிவு செய்து கொள்ளும் அற்புத சக்தியை பெற்றுள்ளான். எனவே தான், இம்மனித தேகமே அருளனுபவம் பெற்று உயர்வு அடை உயரிய படைப்பாக ஞானிகளால் கூறப்பட்டுள்ளது.

அப்பேர்ப்பட்ட உயர்ந்த அனுபவத்தை மனிதன் உலகியல் வாழ்விலிருந்து, பெற்றுக் கொள்கிறான். ஒருவர் தனக்கு வந்த அனுபவத்தை எந்த அளவு தனது மனதில் பதிவு செய்து கொள்கிறாரோ அந்த அளவில் அவர் ஞான நிலையை அடைந்துள்ளார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இயலும்.

அப்படி என்றால் அந்த அனுபவம் மனிதனுக்கு இருவகையில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்று, இல்லற பந்தத்தில் சிக்குண்டு, உலகியல் ஈடுபாடுகளில் அதிகமாக மனதை செலுத்தி மிகவும் அல்லல்பட்டு அதனால் வரும் அனுபவம்; இந்த நிலை அனுபவம் உலகியலில் மனிதனாய் பிறந்தவர் அனைவருக்கும் பொதுநிலை.

மற்றொரு அனுபவம் என்பது, உலகியலில் பிறர்படும் இன்னல்களை உற்று கவனித்து அந்த இன்னல் அவர்களுக்கு எதனால் வருகிறது என்பதை சிந்தித்து தெளிந்து, அந்த அனுபவங்களை மனதில் பதிவு செய்து கொள்வது. இதுவே உயர்ந்த நிலை அனுபவம். இந்த நிலை அனுபவம் மனிதனுக்கு வரவேண்டுமானால் மனிதன் “நிதானத்துடனும்” பொறுமையுடனும் உலகியல் நிகழ்வுகளை கவனிக்க வேண்டும்.

இந்த அனுபவ நிலைகளை, தன்னுள் பதிவு செய்து, பிறருக்கும் பயன்படும் வகையில் எடுத்துரைப்பவர் தத்துவ அறிஞர்களாக விளங்குபவர்கள். மேலும், தான்பெற்ற அனுபவங்கள் அனைத்தும், இந்த உலக மக்கள் தெரிந்து கொண்டு, அவர்களும் நல்ல நலமான வாழ்வு வாழ வழிகாட்டுபவர் இவர்களே ஞானிகள் என்று போற்றப்படுவர்கள்.

உற்ற நோய் நீக்கி உறா அமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

- குறள் - 442.


இக்குறளின் பொருள்: வந்த துன்பத்தை நீக்கி, இனி துன்பம் வராதபடி முன்னராக அறிந்து காக்க வல்ல தன்மை உடையவரைப் போற்றி நட்பு கொள்ள வேண்டும் என்பது இதன்படி நன்கு அனுபவம் பெற்று, உலகியல் வாழ்வில் அதிக இச்சை இல்லாத ஞானிகளை நட்புக் கொண்டால் நாம் துன்பங்களை எதிர்க்கொண்டு வென்று நலமாய் வாழலாம். அப்படி உயர்ந்த அருங்குணங்களைப் பெற்ற ஞானிகளாக, திருமூலர், திருவள்ளுவர், ஔவையார், வள்ளலார் போன்ற பற்றற்ற ஞானிகளை நட்புக் கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் இயற்றிய நூல்களை படித்து அதன்படி வாழப்பழகுதல் வேண்டும். அப்படி வாழப் பழகும்பொழுது நாம் அவர்களை நட்புக் கொள்ள இயலும்.

அப்படி ஞானிகளை நட்புக் கொண்டால், இந்த உலகியல் வாழ்வில் வரும் துன்பங்களை முன்னராகவே தெரிந்து கொண்டு அந்த துன்பங்களிலிருந்து நம்மை நாம் விடுவித்து வாழ்ந்து நாம் அருள்நிறை அனுபவங்களைப் பெற இயலும் என்பதே உண்மை நிலை. ஞானிகளை நட்புக் கொள்ளும் போது இயற்கையாகவே அதே கொள்கையில் வாழும் பல நல்லவரின் தொடர்பு நமக்கு ஏற்படுவது இயல்பு. அப்படி நல்ல நெறிகளை ஏறறு வாழும் அன்பர்களின் உறவுகளால் நாம் மென்மேலும் உயர்வடைய இயலும்.

மனம் தூய்மை செய்வினை தூய்மைஇரண்டும்
இனம் தூய்மை தூவா வரும்.
- குறள் – 455.


ஒருவர் நல்லவனாக போற்றப்படுவதற்குக் காரணம் அவரது மனதின் தூய்மையும், செய்யும் செயலின் தூய்மையுமாகும். இது அவர் சேர்ந்த இனத்தை சார்ந்தே அமையும். இங்கு இனம் என்பது சாதிகளைப் பற்றி குறிப்பிடப்படுவது இல்லை. நல்ல நெறிகளைச் சார்ந்து வாழ்பவர் நல்ல இனத்தை சார்ந்தவர். தீயநெறிகளைப் பின்பற்றி வாழ்பவர் தீய இனத்தைச் சார்ந்தவர் ஆவர்.

எனவே, நாம் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட அன்பர்களுடன் பழகினால் நாம் நல்லினத்தை சார்ந்து நலம் பெறலாம். உலகில் இதுவரை தோன்றிய அமைப்புகள் அனைத்தும் சாதி, சமய அடிப்படையில் அமைந்ததால் ஒருவர் எவ்வளவு தான் நல்லவராய் இருந்தாலும், சாதி, மத, சமய அடிப்படையில் சிக்குண்டு பல சூழ்நிலைகளில் தவறுகளைச் செய்து வருகின்றனர். ஆனால், எந்தவித சமய கோட்பாடுகளிலும், உடன்படாத “சுத்த சன்மார்க்க நெறி” ஒன்று தான் நாம் இன்றைக்கு உலகில் காணும் நல்லினமாகும். எனவே வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறி என்பது, இதுவரை உலகில் தோன்றிய ஞானிகள் அனைவரும் அவ்வப்பொழுது தந்த நல்லநெறிகளை எல்லாம் உட்கொண்ட பொதுநெறியாகும். இந்த உலகியல் பொதுநெறியில் மட்டுமே, ஆன்ம நேயம், ஜீவகாருண்யம், தியானம், தவம், உயிர்நலப்பணி, பக்தி என்ற அனைத்து நிலைகளும் ஒருங்கே கூறப்பட்டுள்ளது.




வழிபடும் முறை (சாதனஇயல்)

இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும்.
இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அ•தாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும்.

கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது அஞ்செழுத்து மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் படனம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும்.

யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது. அதாவது வழிபடு தெய்வத்தின் வடிவத்தை மனத்தில் வைத்து தியானிப்பது. அந்தரியாக பூசை செய்வது, அஞ்செழுத்து மந்திரத்தை உள்ளத்தால் அக்குமாலை கொண்டு எண்ணுவது முதலியன மனத்தினால் செய்யும் வழிபாடு ஆகும்.

இம்மூவகை வழிபாடுகளையும் தவறாமல் செய்து வந்தல், இறைவன் நமக்கு ஞானத்தை உணர்த்துவான். அவ்வாறு உணர்த்தும்போது, சீவன்முத்தர்களை அதிட்டித்து நின்றோ, குருநாதனாக வந்தோ, மானுடச் சட்டை போத்தியோ வந்து உணர்த்துவான். எனவே, குருபீடத்தில் அமர்ந்துள்ள ஞானிகளை வழிபடுவது ஞானநெறியில் செய்யும் வழிபாடாகும்.

மனம், வாக்கு, காயங்களால் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மனிதப் பிறவி நமக்கு வழங்கப்பட்டது. இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“மானுடப்பிறவி தானும் வகுத்தது மனம் வாக்குக் காயம்
ஆன இடத்து ஐந்து ஆகும் அரன்பணிக் காக அன்றோ" (182)

என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார்.

தெய்வ வழிபாடு என்பது யாது?

ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வவடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான்.
இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார்,

‘‘மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்
சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்
மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே"(114)

என்று தெளிவுபடுத்தியுள்ளது.
‘இச்சித்த தெய்வம்' என்பது வழிபடுவதற்குத் தேர்ந்து எடுத்துக்கொண்ட வடிவம் என்பதாகும். ‘செயல் அறம்' என்பது, (122) ஆம் தடைக்குள்ள விடையில் கூறியுள்ள பதினாறு சைவ ஒழுக்கங்கள் ஆகும்.


மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சிவலிங்க வடிவத்தையும் மட்டுமே, வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?

இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான். இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்; அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை வழங்க முடியாது. எனவே மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சதாசிவ வடிவத்தையும் மட்டுமே வழிபட வேண்டும் என்பது தெளிவாகிறது.
இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“யாதொரு தெய்வம் கொண்டிர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும்; பிறக்கும்; மேல்வினையும் செய்யும்;
ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே"(115)

என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.
இன்னும், அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க, அவற்றால், இயலாது. இதற்கு, “அத்தெய்வம் அத்தனைக் காண்" என்னும் பிரமாணம் தெளிவாக உள்ளது.


அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி நடந்துகொண்டால் போதாதா? இறைவழிபாடு வேறு செய்ய வேண்டுமா?

அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகள் அனைத்தும் இறைவனால் வேதாகமங்களில் கூறப்பட்டவையே ஆகும். அவ்விதிகளின்படி ஒழுகுபவர்களுக்கு உள்ள பயன்களை இறைவனே வழங்க வேண்டியுள்ளது. அறச் செயல்களில் சிறந்தது, இறைவன் கருணையை நினைந்து அவனை வழிபடுவதே ஆகும். எனவே, இறைவன் திருவருளை மறந்துவிட்டுச் செய்யும் அறச்செயல்கள் அனைத்தும் பயனற்றவையே ஆகும். அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி ஒழுகுவதோடு, இறைவழிபாடு செய்வதும் இன்றியமையாதது என்பது இதனால் பெறப்பட்டது.
இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,
மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்
வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே"

என்று அருளிச் செய்துள்ளார்.

சிவபெருமானை எவ்வாறு வழிபட வேண்டும்?

சிவலிங்கம், சிவனடியார் என்னும் இரு திருமேனிகளையும் ஆதாரமாகக் கொண்டு, சிவபெருமான் உயிர்களின் புறப்பூசையினையும் அகப்பூசையினையும் ஏற்று உயிர்களுக்கு அருள் செய்வான்.
இவ்விரு பூசைகளுள் அகப்பூசையினைப் பரிபூரண பூசையாக ஏற்று; உயிர்களின் அகத்தே முன் நின்று அருள் செய்வான். இவ்வாறு, சிவபெருமானை வழிபட வேண்டும்.

இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று
மாபரன் பூசைகொண்டு மன்உணிர்க்கு அருளை வைப்பன்;
நீ, பரன்தன்னை நெஞ்சில் நினைவையேல், நிறைந்த பூசை
ஆய், பரம்பொருளை நாளும் அர்ச்சி; நீ அன்பு செய்தே"


அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும் யாவை?

அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-
நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.

அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை' எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.

இதனால் பெறும் பயன் வருமாறு :-

கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.

இதற்குப் பிரமாணம் :-

சிவஞானசித்தியார் (300) மற்றும் (301).


சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளில் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவுமுறை எத்தகையதாக இருக்கும்?

சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை, ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ளது போன்றது. கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. யோக நெறியில், தோழனுக்கும் தோழனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவுமுறை போன்றது. இந்நெறியில் உள்ள உறவு முறை நாயகனுக்கும் நாயகிக்கும் உள்ளது போன்றதென சிலர் கூறுகிறார்கள்.
இந்நால்வகை நெறிகளில் உள்ள உறவுமுறை பற்றிய உண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம்,
தாதமார்க்கம் என்றும் சங்கரனை அடையும்
நன்மார்க்கம் நால், அவைதாம் ஞான யோக
நற்கிரியா சரியை என நவிற்றுவதும் செய்வர்"

என்று அருணந்திசிவம் தெளிவுறுத்தியுள்ளார்.

சரியை நெறியாகிய உடலால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

உடலால் செய்யும் வழிபாடு வருமாறு :-
1. திருக்கோயில்களில் உள்ளும் புறமும் பெருக்கித் துப்புரவு செய்தல்

2. திருக்கோயிலில் உள்ள தரையைச் சுத்தமான பசுவின் சாணம் கொண்டு மெழுகுதல்.

3. அதிகாலையில் எழுந்து, குளித்து, வண்டுகள் மொய்வதற்கு முன், கைநகம் படாமல் மலர்களை கொய்து திருக்கோயிலில் கொடுத்தல்.

4. பூமாலை தொடுக்கத் தெரியுமானால், இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டிற் கட்டுமாலை முதலிய பூமாலைகளைத் தொடுத்துத் திருக்கோயிலில் சேர்ப்பித்தல்.

5. பன்னிரு திருமுறைப் பாடல்களை வாயினால் பத்தி பரவசத்துடன் பாடுதல்.

6. பசுவின் நெய், எள் எண்ணெய் முதலியவற்றால் தீபம் ஏற்றுதல்.

7. மலர்தரும் மரங்களை கொண்ட திருநந்தவனம் அமைத்தல்.

8. சிவவேடப் பொலிவு உடையவரைச் சிவனாகவே நினைந்து வழிபடுதல். இதற்குப் பிரமாணம், சிவஞானசித்தியார் (271) ஆகும்.


கிரியைநெறி ஆகிய மனமும் உடலும் கொண்டு செய்யும் வழிபாட்டில் (பெரும்பாலும் வாயினால் செய்வது) என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

இ•து, ஏறத்தாழ நமது இல்லங்களில் செய்யும் வழிபாடு ஆகும். வீட்டிலுள்ளவர்களது உதவியோடு வேண்டிய உபகரணங்களை அமைத்துக்கொண்டு, வழிபடு தெய்வத்தை (உபாசன மூர்த்தம்) வீட்டில் நிறுவி வழிபடுவது. அப்போது திருமுறைகளைக் கலந்த அன்பாகிக் கசிந்துருகிப் பாடவேண்டும்.
வீட்டில் என்னென்ன முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை சிவஞான சித்தியாரில் (272) அருணந்திசிவம் அழகுற அருளிச்செய்துள்ளார்.


யோகநெறி ஆகிய மனத்தினால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?

இது சிவயோகம் ஆகும். பொறி புலன்களை ஒடுக்கி, சுவாசத்தை ஒருவழிப்படுத்தி, ஏறத்தாழ அகப்பூசை செய்யும் முறையில் சிவபெருமானோடு ஒன்றிய உணர்வோடு மனத்தைப் பழக்குவதே, யோக நெறியில் செய்யும் பணியாகும். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியார் - (272)

ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந்நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment