வேதம்

Monday, March 1, 2010
பாரத நாட்டில் வாழும் மக்கள் கடவுள் பதத்தை
அடையும் வண்ணம், நூல்கள் மஹான்களால் அநுபவ வாயிலாய்
எழுதப்பட்டன. நூல்கள் எழுதுவதற்கு முன்பே,
ஞானமார்க்கத்தின் இரகசியங்களை வாயினால்
ஒருவருக்கொருவர் சொல்லி வந்தார்கள். பின்பு பீஜங்களை
ஏற்படுதிய பிறகு, ஓலையில் அந்த எழுத்துக்களைக்கொண்டு
தாங்கள் அநுபவித்த மகத்தான இரகசியப் பொருளைப்
போதிக்கவேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து,
ஜீவர்களிடத்தில் வைத்திருந்த கருணையினாலேயே
உபதேசித்து வந்தார்கள். அவ்விதமாக வெளிப்பட்ட நூலே
வேதமாகும்.

இதுவே முதல் நூலாக விளங்குகிறது. இவ்வேதத்தை
அறிந்தனுபவித்த ஞானிகளும் பெரியோர்களும் இதன்
மூலமாகக் கிடைத்த அனுபவத்தினால் சார்பு நூல்களை
இயற்றினார்கள். வேதசாரம் ஞானிகளால் ஆறு உப
அங்கங்களாகப் பிரிக்கப்பட்டன. அவைகளில்,
முதலாவதாகிய சிக்ஷை என்னும் அங்கத்தைத் தழுவியே
வேதங்கள் அனுசரிக்கப்பட்டு வந்தன. கடவுளைக் காண வழி
இரண்டென வகுத்து, அவை சுரம், சரமென உணர்த்தி,
அவைகளை நாதத்தின் மூலமாகவும், பிராணாபான
வயுக்களின் மூலமகவுமே அடையமுடியுமென்று உணர்த்திப்
பாக்களைப் பாடிவைத்தார்கள்.

அது போலவே, ஓங்கார சொரூபமாகிய நம் நாட்டின்
(இந்தியாவின் மேல் ஓம்மைப் பொருத்திப் பார்க்கவும்)
வடபுலத்தில் உறைந்த ஞானிகளால் சத்தி அம்சமாகிய
சமஸ்கிருதமென்னும் மொழியானது பரவித்தைக்கு மட்டும்
உபயோகப்படுத்தப்பட்டு வந்த்தது. ஆனால் அந்த மொழி
பேசுவதற்கு உபயோகப்படவில்லை என்பதால்,
அம்மொழியினின்றும் இந்தி,மராட்டி,குஜராத்தி முதலிய
வடபுலத்து மொழிகளை உண்டாக்கிக்கொண்டு, ஞான
கர்மாவாகிய ஆத்ம வித்தைக்குச் சமஸ்கிருதத்தையே
தாய்மொழியாக்கிக் கொண்டார்கள். இப்படியிருக்க,
தென்புலத்தில், சிவமொழியான தமிழ் ஓங்காரபீஜமாகத்
தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதில் அனேக மேதாவிகள்
பிறந்து உலகுக்குத் தாங்கள் அநுபவித்த ஆனந்தமாகிய
இரகசியத்தை வழிநூலாக்கி வழங்கினார்கள்.

தமிழை ஆதாரமாகக் கொண்டு பீஜத்தைத்
தமிழிலிருந்தும் சப்தத்தை சமஸ்கிருதத்திலிருந்தும்
எடுத்துக்கொண்டு ஒன்றாய்க் கூட்டிக் கிரந்தம் என்னும்
மொழியை உண்டாக்கினார்கள். தமிழையே ஆதாரமாகக்
கொண்டு தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தியிருக்கும்
ஞானிகளின் போக்குகளை, நாம் அநுபவித்துத்தான்
உணரமுடியுமே தவிர, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப்
படித்து மட்டுமே முடிவுக்கு வருவது நன்றன்று. அதனால்,
ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து விடுவதினால்
ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே
எதிர்பார்க்கும் மற்றவர்கள்
கதி(மூச்சோட்டம்)யினாலேற்படும் குற்றத்தையும் அடைவர்.

வேதாந்த விசாரணை என்பதைச் சத்திர விசாரணையோடு
நிறுத்திக்கொள்ளுகிறார்களே தவிர தம் உற்பத்தியைப்
பற்றியும், பஞ்சபூதங்களை மானுட உடலில்
சம்பந்தப்படுத்தியிருக்கும் இரகசியங்களையும், நாதபிந்து
கலைகளின் இரகசியங்களையும், இன்னும் மற்றவைகளையும்
ஆராயாமல் விட்டு விடுகின்றனர். சாத்திரங்களைப் படித்து
அறிவதை விட, தன்னை அறியவேண்டி ஆராய்ச்சியின்
மார்க்கத்தில் சென்றால்தான் சூட்சும தத்துவங்களை
அறியமுடியும். கண்ணலே பார்க்காமல் அநுபவத்திற்குக்
கொண்டு வந்துணருவது முடியாத ஒன்று.

"தன்னை யறிந்தால் தலைவனைக் காணமுடியும்"

என்பதை அலசி ஆராயாமல் விட்டதே உண்மை ஞானம்
மறைபட்டதிற்குக் காரணம்.

அதற்கு எடுத்துக்காட்டாக, வீடுகளிலும் ஆலயங்களிலும்
(ஆன்மா லயிக்கும் இடங்களிலும்) கடவுளை வணங்கும்போதும்,
கற்பூரம், சாம்பிராணிப்புகை, தேங்காய் இம்மூன்றையும்
உபயொகப்படுத்துவது எதற்கு? கடவுளை
மகிழ்விப்பதற்காக என்று கூறி வாழ்நாளை வீணாக்கி
வருகிறோம். இவைகளுடைய தத்துவங்கள்(உண்மைகள்)
இரகசியமாக மறைக்கப்பட்டு இருக்கின்றன.
மறைக்கப்பட்டிருப்பதால்தான் வேதங்கள் மறைகள்
எனப்பட்டன.
கடவுள் தூபதீபங்களுக்கும் தேங்காய்க்கும் ஆசைப்படுபவரா?
சர்வ வியாபக மூர்த்திக்கு இச்சையுண்டா? இந்த அற்பப்
பொருள்களைக்காட்டி அவருடைய அருளைப் பெறமுடியுமா?
தேங்காய், மாயையாகிய மட்டையினால் மறைபட்டும்,
பற்றாகிய நாரினால் கட்டப்பட்டும், ஆசையாகிய
சிரட்டையினால் மூடப்பட்டும் இருக்கின்ற உண்மையாகியது
(உள்+மெய்) சிவம். அதனுள் இருக்கும் நீராகிய
சத்தியும், இரண்டும் சம்பந்தப்பட்டபின் உண்டாகிய உடலில்
ஓடும் ஜீவன் சாம்பிராணிப் புகை. பிராணண் ஒளியைப்
பிரகாசிப்பதையும், மன அசைவை நிறுத்துவதற்கும் கற்பூர
ஒளியைக் காட்டினார்கள். இவைகளை அறிந்து உணர்வதே
கல்வியின் பயன்.

இதைப்போலவே மறைக்(கப்பட்டுள்ள)கருத்துக்களை, நம்
நாட்டின் உருவமைப்பிலும், நம் சரீர அமைப்பிலும்,
தெய்வமைப்பிலும், உற்சவகிரியைகளின் அமைப்பிலும்,
தெய்வ ஆலயங்களுள்ள ஊர்ப்பெயரின் அமைப்பிலும்,
மனிதர்களின் பெயரமைப்பிலும், வீட்டுச்சுத்தி,
தேகசுத்தி, ஆகாரசுத்தி முதலிய அமைப்பிலும் ஞானிகள்
நூல்களின் சாரங்களாகத் தந்திருக்கின்றனர். இவைகளைப்
புரிந்துகொண்டால் நூல்களின் கருத்துக்கள் எளிதில்
விளங்கும்.

ஆத்மவித்தையானது உலகத்தில் சஞ்சரிக்கவும், யோகம்
என்னும் தந்திரத்தை(தன்+திறத்தை) அறியாமல்
மனங்கலங்கும் சீவப்பிறவியற்க்குப் பேருதவியாக இருக்கும்
என்னும் எண்ணத்துடன் எனக்குப் புரிந்தவரை
விளக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment