குருவின் துணை

Wednesday, March 17, 2010
நாம் பிறந்தது முதல் இறப்பது வரையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்கிறோம். பல விஷயங்களைப் பிறர் சொல்லிக் கொடுக்கக் கற்றுக்கொள்கிறோம். சிலவற்றை பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்கி றோம். இவை தவிர சிலவற்றை இயற்கையை உற்று நோக்கியும்கூட கற்றுக்கொள்கிறோம். புதிதாக ஒன்றைக் கற்றுத்தரும் ஒவ்வொருவருமே நமக்கு ஒரு குருதான்!

கல்விக்கு குருவின் துணை மிக அவசியம். அதைவிடவும் ஞானத் தேடலில்- ஞானம் தேடிய பயணத்தில் ஒரு குரு மிக மிக அவசியம். பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொள்ள ஒரு குரு கட்டாயமாகத் தேவை. இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல் வலியுறுத்துகிறது.

“ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள

வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை

கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படும் தானே.’

(திருமந்திரம்)

“மனம்’ என்பதை “ஆரியன்’ என்ற சொல்லால் திருமூலர் குறிப்பிடுகிறார். இந்த மனமானது மிக நல்லதாம். இந்த மனதிடம் இரண்டு குதிரைகள் உள்ளதாம். முதல் பாடலில் ஒரு குதிரை உண்டு எனக் கூறிய திருமூலர் அடுத்த பாடலிலேயே இரண்டு குதிரைகள் உள்ளதாகக் கூறுகிறாரே, இது என்ன முரண்பாடு என்ற கேள்வி எழுகிற தல்லவா? இங்கேதான் மூச்சு குறித்த அடுத்த சூட்சும ரகசியம் பொதிந்து கிடக்கிறது.

முதல் பாடலில் “குதிரை’ என்பது மூச்சு அல்லது பிராணனைக் குறிக்கிறது. இந்தப் பாடலில் அது நமது இடது நாசி, வலது நாசி ஆகிய இரண்டையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம். இதுவே இரண்டு குதிரைகள். அல்லது இடது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை ஒரு குதிரை எனவும், வலது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை மற்றொரு குதிரை எனவும் பொருள் கொள்ளலாம்.

பிராணன் என்பது ஒன்றுதானே? வலது நாசியில் செல்லும் மூச்சுக்கும், இடது நாசியில் செல்லும் மூச்சுக்கும் வித்தியாசம் இருக்க முடியுமா என்ற கேள்வி உங்கள் மனதில் இப்போது எழுந்திருக்கும். ஆம்; இரண்டு நாசிகளிலும் செல்லும் மூச்சுக் காற்றுக்கு தனித்தனித் தன்மைகளும், செயல்பாடுகளும் உள்ளன. எனவேதான் திருமூலர் அதைப் பாகுபடுத்திக் காட்ட இரண்டு குதிரைகள் என்றார்.

நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும்.

ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர் கள் கணித்து வைத்துள்ளனர்.

நேரம் நாசி

காலை 6-8 மணி வரை வலது நாசி

காலை 8-10 மணி வரை இடது நாசி

காலை 10-12 மணி வரை வலது நாசி

மதியம் 12-2 மணி வரை இடது நாசி

மதியம் 2-4 மணி வரை வலது நாசி

மாலை 4-6 மணி வரை இடது நாசி

மாலை 6-8 மணி வரை வலது நாசி

இரவு 8-10 மணி வரை இடது நாசி

இரவு 10-12 மணி வரை வலது நாசி

இரவு 12-2 மணி வரை இடது நாசி

இரவு 2-4 மணி வரை வலது நாசி

அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி


வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக் கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.

வலது நாசிக் காற்று (சூரிய கலை)

* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.

* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.

* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.

* உடலின் வலிமை அதிகரிக்கும்.

* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.

* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.

* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.

* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.

* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.

* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.

* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால் இவற்றை அடக்கும் சூட்சுமம் எவருக்கும் தெரிவதில்லை என்பதையே இந்தப் பாடலின் இரண்டாவது வரி தெரிவிக்கிறது.

“வீசிப்பிடிக்கும் விரகு (உபாயம், வழிமுறை) அறிவார் இல்லை.’

இந்த சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டு, பிராணன் எனும் குதிரைகளை வசப்படுத்த ஒரு குருவின் துணை வேண்டும். அந்த குருவும் நுண்ணறிவு படைத்தவராக, அந்தக் கலையில் முழுமை பெற்றவராக இருத்தல் வேண்டும். இந்தக் கருத்தே கடைசி இரு வரிகளில் வெளிப் படுகிறது.

“கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.’

இதில் “அருள் பெற்றால்’ என்ற சொற்களிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. குருவிடம் சென்று கற்றுக்கொள்வது வேறு; அவரது அருளைப் பெறுவதென்பது வேறு

No comments:

Post a Comment