திருமுறைகள்

Friday, October 29, 2010
நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் (திருநாவுக்கரசர் பதிகங்கள்)


இத்திருமுறைகள் மூன்றையும் பாடியவர் திருநாவுக்கரசர். இவர் பாடியவை 4900 பதிகங்கள் என்பர். கிடைத்தவை 312 (3066 பாடல்கள்). இவர் பல்லவ மன்னர்கள் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர். இவர்காலம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் இறுதியும் 7ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியும் ஆகும். திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாளர் குடியில் தோன்றியவர் இவர். ‘மருள்நீக்கியார்’ என்பது இவரது இயற்பெயர். இவர் பெற்றோர்கள் புகழனார், மாதினியார்; தமக்கையார் திலகவதியார். இளம் வயதில் பெற்றோரை இழந்து திருப்பாதிரிப் புலியூர் சமணப்பள்ளியில் பயின்று தருமசேனர் என்னும் பெயர் பெற்றார். தமக்கையாரின் அறிவுறுத்தலால் மீண்டும் சைவம் சார்ந்தார். மகேந்திரவர்மனைச் சைவம் சாரச் செய்தார். திருநாவுக்கரசர் என்னும் பெயர் இறைவனால் வழங்கப்பட்டது என்று பெரியபுராணம் கூறுகிறது. இவர் தமிழும் வடமொழியும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்.


நான்காம் திருமுறைப் பதிகங்கள் தாளத்துடன் கூடிய இசையோடு அமைந்தவை. திருக்குறுந்தொகை என்னும் கட்டளை யாப்பினால் பாடப்பட்டது ஐந்தாம் திருமுறை. ஆறாம் திருமுறைப் பாடல்கள் திருத்தாண்டகம் என்னும் செய்யுள் வகையிலானவை.


எல்லாம் கடவுள் செயலே என்பதை ஒரு திருத்தாண்டகப் பாட்டில் மிக அழகாகப் பாடியுள்ளார் திருநாவுக்கரசர்.


ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே

உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே

பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே

காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே

காண்பார்ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே.

(தனித்திருத்தாண்டகம், 7175)


‘நீ ஆடச் செய்தால் அதற்குத் தகுந்தபடி ஆடாதவர் யார்? நீ அடங்கச் செய்தால் அடங்காதவர் யார்? நீ ஓடச் செய்தால் ஓடாதவர் யார்? நீ உருகச் செய்தால் உருகாதவர் யார்? நீ பாடச் செய்தால் பாடாதவர் யார்? நீ பணியச் செய்தால் பணியாதவர் யார்? நீ காணச் செய்தால் காணாதவர் யார்? நீ காட்டாவிட்டால் காணவல்லார் யார்?’ என்பது இப்பாடலின் பொருள். இப்பாடலின் வாயிலாக இவ்வுலகின் ஒவ்வோர் இயக்கமும் செயலும் இறைவனாகிய சிவனின் செயலே என்பதை மிக நயமாக எடுத்துரைக்கிறார் திருநாவுக்கரசர். மேலும் இறைவனின் பெருமையை,


விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

(612)


என மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறார். இவரது பாடல்கள் பக்தி உருக்கம் மிகுந்தவை. மிகப்பெரிய தத்துவ ஞானியாக விளங்கிய திருநாவுக்கரசர், கையால் தொண்டு செய்வதையே பக்தி வாழ்வாகக் கொண்டிருந்தார். அதனால் கையில் உழவாரம் என்னும் களைக்கொட்டுக் கருவியை ஏந்திக் கோயில்களுக்குச் சென்று, அங்கங்கே தரையில் கிடந்த புல்லையும், முள்ளையும் கொத்திக் கல் முதலியவற்றையும் அப்புறப்படுத்தித் தூய்மை செய்வதையே பெரும் பேறு எனக் கொண்டிருந்தார். சமணக் கொள்கைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டின் தாக்கம் அவரது பாடல்களில் புலப்படுகின்றது. நிலையாமை பற்றிய கருத்துகள், உலக இன்ப வாழ்க்கை விருப்பை வெறுக்கும் கருத்துகள் திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்படுகின்றன. சமண சமய நூல்களிலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் காணப்படுவன இவை. சமணத்தின் வாழ்க்கை நோக்கும் சைவத்தின் பக்திநெறியும் அப்பர் பாடல்களில் பிணைந்து காணப்படுகின்றன. சமண வாழ்க்கை நோக்குடையாரைச் சைவத்திற்கு ஈர்க்க இவர் பாடல்கள் உதவின எனலாம். இதனாலேயே 'தேவாரம்' என்ற பெயர் இவருடைய பாடல்களுக்கே முதலில் வழங்கியது எனலாம்.


அப்பர் அகத்திணை மரபில் வந்த நாயக-நாயகி பாவத்திலும் பாடியுள்ளார். இதனை 'மதுரபாவம்' என்பர். 'திருப்பழனப் பதிகங்கள்' இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.


முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்;....
தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்;
தலைப்பட்டாள் நங்கை தன் தலைவன்தாளே.

(அப்பர் தேவாரம்,திருத்தாண்டம்,திருவாரூர்,7)


என்ற அடிகள் இறைக்காமத்தை உணர்த்துவன.


இவரும் தலங்களின் இயற்கை எழிலைப் போற்றுகிறார். திருப்பழனம், திருவாரூர், திருவொற்றியூர் முதலான தலங்களின் இயற்கையழகைச் சித்திரிக்கும் விதம் சிறப்புடையது. இவர் பாடிய 'நமச்சிவாயத் திருப்பதிகம்' சைவர்களின் நாள்வழிபாட்டில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment