திருமூலர்

Wednesday, October 27, 2010
திருமூலர்

திருமூலர் வரலாறு செந்தமிழ்ச் சிவாகமம்: `சிவபூமி` எனப் போற்றப் பெறுஞ் சிறப்புவாய்ந்த நம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாகத் திகழ்வது; சைவ சமயமாகும். உலகமக்கள் உள்ளத்திலே தெய்வம் உண்டு என்னும் தெளிவினை நல்கி அன்பு நெறியில் ஒழுகப்பணித்து அறிவு நெறியை வளர்ப்பன தெய்வநெறிச் சிவம் பெருக்கும் சைவ சமய அருளாசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளாகும். திருமுறைப் பனுவலாகிய அருள் நூல்களுள் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது, தமிழ் மூவாயி ரமாகிய திருமந்திரமாகும். திருமந்திரமாலை என்னும் இத்திருமுறை, சைவசித்தாந்த சாத்திரமாகவும் இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திர மாகவும் விளங்குந் தனிச் சிறப்புடையது; வேத நெறியாகிய உலகியலொழுக்கத்தையும் மிகு சைவத் துறையாகிய சிவாகமவுண்மைகளையும் இனிய தமிழால் விரித்து விளக்குவது. உலக மக்கள் எல்லோரும் பொதுவாக மேற்கொள்ளுதற்குரிய நல் வாழ்க்கை முறையினையும் சிவநெறிச் செல்வர்களாற் சிறப்பாக மேற் கொள்ளத்தக்க ஞானயோக நுண்பொருள்களையும் ஒருங்கே விளக்குவதாய்ச் சைவசித்தாந்த மெய்ந்நூற் பொருளை அறிவுறுத்தும் செந்தமிழ்ச் சிவாகமமாகத் திகழ்வது இத்திருமந்திரமேயாகும்.
திருத்தொண்டர் திருவந்தாதியில்: திருமந்திர மாலையாகிய இத்திருவருட் பனுவலை அருளிச் செய்தவர், இறைவனருளால் எண்வகைச் சித்திகளும் பெற்றுச் சிவமே பெறுந்திருவினராய் எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராய்ப் பன்னெடுங்காலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து `நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்` என்னும் நல்ல குறிக்கோளுடைய ராய்த் தாமுணர்ந்த ஞானப்பொருளைத் தண்ணார் தமிழால் உலகத்தார்க்கு வழங்கியருளிய திருமூல நாயனாராவர். இவ்வாசிரியரை.
“நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`
-தி.7 ப.35 பா.5
என நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். செந்தமிழ் நாட்டின் சிறந்த சிவயோகியாய் முக்காலமுணர்ந்த அறிவராகிய திருமூலநாயனாரது வரலாறு, திருத்தொண்டத் தொகையின் வகையாகிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியிற் சுருக்கமாகவும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தில் விரிவாகவும் விளக்கப் பெற்றுள்ளது. நம்பியாண்டார் நம்பிகள் தாம் இயற்றிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியில்,
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டெ னுச்சி
அடிமன்ன வைத்த பிரான்
மூல னாகிய அங்கணனே. -தி.11 ப.33 பா.36 எனவரும் திருப்பாடலில் திருமூல நாயனாரது வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார். “நற்குடிகள் நிலைபெற்று வாழும் சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப்போனாகிய இடையனது உடம்பிற் புகுந்து, சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனை யணிந்த சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறியவண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது தலையிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெரியோன் திருமூலன் என்னும் பெயரையுடைய அருளாளனாவன்“ என்பது இத் திருப்பாடலின் பொருளாகும். சிவயோகியராகிய சித்தர் புகுந்திருந்த உடம்பு சாத்தனூரில் ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் இடைய னுடைய உடம்பு என்பதும், இறைவன் அருள்வழி அவ்வுடம்பிற் புகுந்த சிவயோகியார் ஞான நிறைவுடைய முழுத் தமிழின்படியும் வேதத்தின் சொற்படியும் பிறைமுடிப் பெருமானாகிய சிவபெரு மானைப் பரவிப் போற்றிச் சிவாகம வேதப் பொருளைச் செந்தமிழால் அருளிச் செய் தார் என்பதும் இத் திருவந்தாதியால் இனிது புலனாதல் காணலாம்.
திருத்தொண்டர் புராணத்தில்: அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள், திருத் தொண்டத் தொகையின் விரியாகத் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்திலே திருமூல நாயனாரது வரலாற்றினை இருபத்தெட்டுப் பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார்.
தென்னாடு வருகை: திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் முதற் பெருங் காவல் பூண்டவர் திருநந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத் தலங்களைப் பணிந்து காஞ்சி நகரையடைந்தார். அங்குத் திருவேகம் பத்தில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சிப் போற்றினார். கல்வியிற் கரையிலாத காஞ்சி நகரில் வாழும் சிவயோகியர்களாகிய தவமுனிவர் பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதி கையை யடைந்து திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை வழிபட்டுப் போற்றினார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும் பற்றப் புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப் பெருமானைப் போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய் யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால் தில்லைப் பதியில் சிலகாலம் தங்கியிருந்தார்.
சாத்தனூரில்: தில்லைத் திருநடங்கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்தார். உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து மன்னுயிர்க்கு அருள் புரியுந் திருத்தலமாகிய திருவாவடுதுறையை அணுகித் திருக்கோயிலை வலம் வந்து வழித்துணை மருந்தாகிய மாசிலா மணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார். அந்நிலையிலே அத் தலத்தை விட்டு நீங்காததொரு கருத்து அவருள்ளத்தே தோன்றியது. அதனால் அத்தலத்திலே தங்கியிருந்தார். ஆவடுதுறையீசர்பால் ஆராத காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அரிதின் நீங்கிச் செல்லத் தொடங்கினார். அவர் செல்லும் வழியிற் காவிரிக் கரையிலுள்ள சோலையிலே மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் கதறி யழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்குங் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பான் அவ் விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்குந் தொழிலில் ஈடு பட்டவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்துகொள்ள உயிர்நீங்க அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்து வெற்றுடலாய்க் கிடந்தான். அவனது உயிர்பிரியவே அவனால் அன்புடன் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி நெருங்கிநின்று மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.
திருமூலராதல்: ஆக்களின் பெருந்துயரத்தைச் சிவயோகியார் கண்டார். அருளாளராகிய அவருள்ளத்திலே `பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும்` என்னும் எண்ணம் இறைவன் திருவருளால் தோன்றியது, `இந்த ஆயன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா“ எனத் தெளிந்த சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார். அவர் ஆயனுடம்புடன் எழுதலும், சுற்றி நின்ற பசுக்கள் யாவும் தம் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளியோடித் தாம் விரும்பிய இடங்களிற் சென்று புல்லை மேய்ந்தன. அதுகண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள் விரும்பிப் புல்மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் துறையில் இறங்கி நல்நீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத்தருளினார்.
ஊரவர் உண்மை உணர்தல்: அந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையை யணுக, மாலைப் பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. அவை செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனித்து நின்றார். அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய மனைவி “என் கணவர் பொழுது சென்றும் வரவில்லையே, அவர்க்கு என்ன நேர்ந்ததோ“ என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு வழியெதிரே செல்பவள் திருமூலராகிய சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது உடம்பிற்றோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். `இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்` என எண்ணினாள்; அவரைத் தளர்ச்சியின்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடு தற்கு நெருங்கினாள். அதுகண்ட திருமூலராகிய சிவயோகியார் அவர் தம்மைத் தீண்டாதபடி தடுத்து நிறுத்தினார். நெருங்கிய சுற்றத்தார் எவருமின்றித் தனியளாகிய அவள் திருமூலரது தொடர்பற்ற தனி நிலையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். “நும்பால் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்குப் பெருந்துன்பத்தைச் செய்துவிட்டீர்“ என்று புலம்பி வாட்ட முற்றாள். நிறைதவச் செல்வராகிய திருமூலர் அவளைப்பார்த்து, “நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை` என்று சொல்லிவிட்டு அவ்வூரிலுள்ள பொது மடத்திற் புகுந்து சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார். தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ணுற்ற மூலன் மனைவி, அது பற்றி யாரிடமும் சொல்லாமலும் தவநிலையினராகிய அவர்பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்றாள். பொழுது விடிந்தபின் அவ்வூரிலுள்ள நல்லோரை யடைந்து தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை அணுகி அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். `இது பித்தினால் விளைந்த மயக்கம் அன்று; சித்த விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவே களைந்து தெளிவுபெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்திருக்கின்றார். இந்நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும்` எனத் தெளிந்தார்கள். `இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஓருங்கே அறியவல்ல முற்றுணர்வுடைய முனிவராக விளங்குகின்றார். எனவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்` என மூலனுடைய மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்டு அவள் அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளுக்குத் தேறுதல்கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
திருவாவடுதுறையில் சிவயோகம்: சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர். யோகுகலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார். `சிவபெருமான் உயிர்கள் பால்வைத்த பெருங்கருணை யினாலே அருளிச் செய்த சிவாகமங்களின் அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார்` என்ற உண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார், அவர்களெல்லோரும் தம்மை விட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்; அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத் திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார். திருமந்திரம் அருளிச் செய்தல் இங்ஙனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார். ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில், ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள், நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச் சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.-தி.10 பாயி. பா.2 என்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமானது திரு வருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாதுறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனி திருந்தார். திருமூலர் அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ் கின்றது` எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற் றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார். திருமூலரது முன்னை நிலை: இங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த முனிவர்பிரான் திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறையோகிகளுள் ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது மூலனால் மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால் தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து, திருமூலர் என்னும் பெயர் பெற்றுத் திருமந்திர மாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும் நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழா ரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர் மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு புலனாகும். நந்தி தேவர் பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர், தம்முன்னை நிலையில் அவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை அறிந்து கொள்ளுதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால், அவரது வரலாறு கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம், முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுள்ளது. திருமந்திரத்தில் அகச்சான்று – நந்திதேவர் அருள்: திருமூலராகிய சிவயோகியார் திருக்கயிலையில் நந்திதேவர் பால் ஞான நூற் பொருள்களை ஓதியுணர்ந்த நான்மறை யோகிகளுள் ஒருவர் என்பது, நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே. -தி.10 பா.6 எனவரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.


"நம்பியிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.

திருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டாம சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.

தில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்து, உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருவாவாடு துறையை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத்திருப்பதியினை விட்டு நீங்காதொரு கருத்தும் தம் உள்ளத்தே தோன்ற அங்கே தங்கியிருந்தார். ஆவடுதுறையிறைவரை வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் விடம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனமாகி வருந்தின.

மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் 'இப்பசுக்கள் உற்ற துயரத்தினை நீக்குதல் வேண்டும்' என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது. 'இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா' எனத் திருவுளத்தெண்ணிய தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலானதோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப்பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். எழுதலும் பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களைப்பினாலே வாலெடுத்து துள்ளிக்கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன. திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.


சூரியன் மேற்றிசையை அணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைவனவாயின. அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின்சென்ற சிவயோகியார். பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனியே நிற்பாராயினர்.

அந்நிலையில், மூலனுடைய மானமிகு மனையறக் கிழத்தியாகிய நங்கை, 'என் கணவர் பொழுது சென்ற பின்னரும் வரத் தாழ்ந்தனரே அவர்க்கு என்ன நேர்ந்ததோ' என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தையடைந்தாள். தன் கணவது உடம்பிற் தோன்றிய உள்ளுணர்வு மாற்றத்தைக் கண்டு 'இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்' என்று எண்ணி அவரைத் தளர்வின்றி இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடுவதற்கு நெருங்கினாள். திருமூலராகிய சிவயோகியார், அவள் தம்மைத் தீண்டவொண்ணாதவாறு தடுத்து நிறுத்தினார். தன் கணவனையன்றி மக்கள் முதலிய நெருங்கிய சுற்றத்தார் ஒருவருமின்றித் தனியாளாகிய அவள், அவரது தொடர்பற்ற நிலைகண்டு அஞ்சி மனங் கலங்கினாள். 'உமது அன்புடைய மனைவியாகிய எளியோனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்கு எத்தகைய பெருந் துன்பத்தைச் செய்து விட்டீர்' என்று கூறிப்புலம்பி வாட்டமுற்றாள். அந்நிலையில் நிறைதவச்செல்வராகிய திருமூலர், அவளை நோக்கி 'நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவேதும் இல்லை' எனக் கூறிவிட்டு, அவ்வூரில் அருந்தவர் பலரும் தங்கியிருந்தற்கென அமைந்துள்ள பொதுமடத்திற் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்திருந்தார்.

தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ட மூலன் மனைவி, அது பற்றி யாரிடத்தும் சொல்லாமலும், தவ நிலையினராகிய அவர் பால் அணையாமலும் அன்றிரவு முழுவதும் உறங்காதவராய்த் துயருற்றாள். பொழுது விடிந்ததும் தன் கணவர் நிலையை அவ்வூரிலுள்ள நல்லோரிடம் எடுத்துரைத்தாள். அதுகேட்ட சான்றோர், திருமூலரை அணுகி அவரது நிலைமையை நாடி, 'இது பித்தினால் விளைந்த மயக்கமன்று' பேய் பிடித்தல் முதலாகப் பிறிதொரு சார்பால் உளதாகியதும் அன்று; சித்த விகாரக் கலக்கங்களையெல்லாம் அறவே களைந்து தெளிவு பெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்து உடையவராய் இவர் அமைந்துள்ளார். இந்நிலைமை யாவராலும் அளந்தற்கரியதாம்' எனத் தெளிந்தனர். "இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஒருங்கே அறியவல்ல முற்றுணர்வுடையவராக விளங்குகின்றார். ஆகவே முன்னை நிலைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய வாழ்வில் ஈடுபடுவார் அல்லர்' என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்ட அவள், 'அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளைத் தேற்றி அவளது மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

சாத்தனூரில் பொதுமடத்தில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர், யோகம் கலைந்து எழுந்து முதல் நாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தம் உடம்பினைச் சேமமாக வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு அதனைக் காணாதவராகி, அதுமறைந்த செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார். பிறைமுடிக்கண்ணிப் பெருமானாகிய இறைவன், உயிர்களிடம் வைத்த பெருங்கருணையாலே அருளிய சிவாகமங்களின் அரும் பொருள்களை இந்நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்றிறத்தால் சிவயோகியாரது முந்தைய உடம்பினை மறைப்பித்தருளினார். இம்மெய்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளியவுணர்ந்தார். அந்நிலையில் தம்மைப் பின் தொடர்ந்து வந்த ஆயர்குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதை அவர்கட்கு விளங்க அறிவுறுத்தருளினார்; அவர்கள் எல்லாரும் தம்மைவிட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விட்டத்தை விட்டகன்று திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார். அத்திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் அம்மையப்பராகிய இறைவரை வணங்கி அத்திருக்கோயிலின் மேற்கில் மதிற்புறத்தேயுள்ள அரச மரத்தின்கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்து அமர்ந்து, உள்ளக் கமலத்தில் வீற்றிருந்தருளும் அரும்பொருளாகிய சிவபுரம் பொருளோடு இரண்டறக்கூடி ஒன்றியிருந்தார்.

இங்கனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலநாயனார் ஊனோடு தொடர்ந்த இப்பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து விளங்கும் நல்ல திருமந்திரமாலையாகிய நூலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே

என்னும் திருப்பாடலைத் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்கள் அருளிச் செய்தார். தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரத் திருமுறையினை நிறைவுசெய்து சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலை அடைந்து அம்முதல்வனுடைய திருவடி நீழலில் என்றும் பிரியா துறையும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்று இனிதிருந்தார்.

No comments:

Post a Comment