பகுத்தறிவு

Saturday, October 30, 2010
பகுத்தறிவு

பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது. அறிவு என்றாலே பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப்படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்.

கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமய மலையின் உயரம் ஏன் வெளிநாட்டான் கூற வேண்டியிருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக் கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு இந்த ஒலி பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பது மட்டும் ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கவனிக்க வேண்டும். பார்வதியுடன் பரமசிவன் பேசிய ரகசியத்தைக்கூட அறிந்து கொள்ளும் சக்தி பெற்றுள்ள நமக்கு இவ்வளவு வெளிப்படையாக இருந்துவரும் இழிவு தெரியாமற்போனது ஏன் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பொது அறிவு வளரவும் விசய ஞானம் உண்டாகவும் உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்பட வேண்டும்.

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்தினாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகு கலமாக நடந்து வருவதாக்த் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; அனேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது; கடவுளாலோ மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக் கூடாது; ஏதாவது ஒரு விசயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்ட விசயமானாலும் நடு நிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.
பகுத்தறிவாளனது நம்பிக்கை

எந்தக் காரியத்தை மனிதன் நம்புவதாக இருந்தாலும் அது அவனுடைய பஞ்சேந்திரியங்களில் ஒன்றுக்கோ திரிகரணங்களில் ஒன்றுக்கோ புலப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அந்தப்படி நாம் நடந்தால் அறிவு வளரும். சிந்தனை ஏற்படும். மனிதன் அறிவை மதிக்காமல் சிந்தனையை இலட்சியம் செய்யாமல் அவன் மனதில் கடவுள், மதம், சாத்திரம் என்பவைகளின் பெயரால் மடைமையைப் புகுத்திவிட்டனர்.
பகுத்தறிவாளனது சிந்தனை

பகுத்தறிவு கொண்டு பார்க்கும்போது எந்தப் பற்றும் அற்ற நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும். பகுத்தறிவுக் காரனுக்கு எந்தவிதப் பற்றும் இருக்கக் கூடாது என்றேன். ஏன்? கடவுள் பற்று உடைய ஒருவன் கடவுள் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவானேயானால் ஏற்கனவே அவற்றில் பற்றுக கொண்டவன் ஆனபடியால் எப்படி உண்மையைக் காண அவனால் முடியும்?
பெரியோர், மேன்மக்கள்

ஒருவன் எப்படிப்பட்டமனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுபவனாயினும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும், தர்க்கிக்கப்படவும் தக்கதேயாகும்.

நம் மக்களுக்கு இன்று வெகுவாகத் தேவைப்படுவது அறிவுதான். சில துறைகளிலே மனிதன் செலுத்துகிற அறிவைச் சில துறைகளில் கண்டிப்பாய்ச் செலுத்த மறுக்கிறான். சாணியைக் கொண்டு போய் வைத்து இது ஒரு அருமையான உணவாகும் என்று சொல்லிச் சாப்பிடச் சொன்னால் யாராவது சாப்பிடுவார்களா? பார்த்தவுடனேயே இது சாணி அசிங்கம் என்று சொல்லிவிடுவார்களே! ஆனால் அதே சாணியைக் கொழுக்கட்டை பிடித்து இது சாமி என்று சொன்னால் தலையில் குட்டுப் போட்டுக் கொண்டு விழுந்து கும்பிடுகிறார்கள். .. ஏனென்றால் கடவுள் சங்கதி என்று சொன்னால் நம் மக்கள் அதைப் பற்றிச் சிந்திக்காமல் குருட்டுத்தனமாய் நம்ப வேண்டும். அது விசயத்தில் அறிவைச் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை. இந்த முட்டாள் தனம் அதாவது அறிவுக்குப் பூரணச் சுதந்திர மற்ற அடிமைத் தன்மை ஒழிந்து பகுத்தறிவு வளர வேண்டும்.

நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயத்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர மூட நம்பிக்கைக் கடவுளைவிடக் குருட்டுப் பழக்க மதத்தைவிடச் சீர்திருத்தக் கடவுளும் பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய்ச் சாதித்துவிடப் போவதில்லை.

இராட்சதன் (இரண்ணியாட்சன்) பூமியை எப்படிச் சுருட்டினான்? பூமிதான் பந்துபோல இருக்கிறதே? அவன் அதை உருட்டுவதானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே ஒழிய்ச் சுருட்ட முடியாது… சுருட்டினானே அவன் சுருட்டும் போது தான் எங்கே இருந்து கொண்டு சுருட்டினான்?… அவன் சமுத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டான் என்கிறாயே அந்தச் சமுத்திரம் எதன்மேல் இருந்தது? பூமியின் மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டோ அல்லது பறந்து கொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே அது ஒழுகிப் போயிருக்காதா? அப்போது அடியில் ஒளிந்து கொண்டிருப்பவன் தொப்பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம்; இது வேறு உலகமா?
புத்தரின் பகுத்தறிவுப் புரட்சி

ஏதோ 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தன் என்ற ஒருவர் தோன்றி இப்போது நாங்கள் எப்படி அறிவுப் பிரசாரம் செய்கின்றோமோ அது போல் அந்தக் காலத்தில் செய்தார். கடவுளாவது, ஆத்மாவாவது இதுகள் சுத்தப் புரட்டு; எதனையும் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்துப் புத்திக்கு எது சரி என்று படுகின்றதோ அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமேயொழிய கடவுள் சொன்னார், முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே. வெகுகாலத்துக்கு முன் ஏற்பட்ட கருத்தாயிற்றே, வெகு காலமாகப் பின்பற்றி வரும் கருத்தாயிற்றே, என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே. எதையும் அறிவு கொண்டு அலசிப்பார். எது உனது புத்திக்குச் சரியென்று படுகிறதோ அதனை ஏற்றுக்கொள் என்றார்.

No comments:

Post a Comment