பத்தாம் திருமுறை

Friday, October 29, 2010
திருமூலர் இயற்றியது திருமந்திரம். இது திருமுறைகளுள் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. திருமூலர் பல்லவர் காலத்தைச் சார்ந்தவர். திருமூலரின் வரலாறு குறித்துப் பாயிரப் பகுதியில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பெரியபுராணத்தில் திருமூலரின் வரலாறு கூறப்பட்டுள்ளது. திருவாவடுதுறையில் யோகத்தில் பல காலம் இருந்து திருமந்திரத்தைப் பாடியதாகக் கூறுவர். சிவனையடைய யோக நெறியை மார்க்கமாகக் கொண்டவர் இவர் எனலாம்.


பாடல்களின் உள்ளடக்கம்


என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே



என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். திருமூலரைச் சித்தர்களில் ஒருவர் என்று குறிப்பிடுவதுமுண்டு. திருமூலர் 3000 பாடல்களைப் பாடியுள்ளார். பெயருக்கு ஏற்றபடி, மந்திரம்போல் சுருங்கிய சொற்களில் ஆழ்ந்த பொருள் திட்பமுடைய பாடல்களும், மறைவான நுட்பமான பொருள் உடைய பாடல்களும் திருமந்திரத்தில் உள்ளன. இந்நூலில், தத்துவக் கருத்துகள் முதல் யோகநெறி, சித்தவைத்தியம் வரையான கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.


கடவுள் தத்துவம்


கடவுளின் சிறப்பை அறிவுறுத்துமிடத்தில், 'அன்பு சிவம் என்பவை, இரண்டு பொருள் அல்ல; அன்பே சிவம் என்பதை உணர்ந்தவர் சிலரே; அவர்களே ஞானிகள்; அவர்களே கடவுள் தன்மை பெற்றவர்' என்கிறார் திருமூலர். இதனை,


அன்பு சிவம் இரண்டுஎன்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே.




சிவனின் கருணை

தீயைவிட வெப்பம் மிகுந்தவனும், தண்ணீரைவிடக் குளிர்ச்சியானவனுமாகிய சிவன் மிகவும் கருணையுடையவன். எனினும் அவன் கருணையினை எவரும் அறிந்திலர் என்று குறிப்பிடுகின்றார்.


தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன்அருள் அறிவார் இல்லை

சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.


திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய நூல் அன்று. உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்ம ஈடேற்றத்தையும், மருத்துவக் கூறுகளையும் எடுத்துரைக்கும் பொதுநூலாக அமைந்துள்ளது.


என்றும் எவரும் எடுத்தாளும் பொதுத்தன்மை வாய்ந்த அரிய கருத்துடைய பாடல்கள் பல திருமந்திரத்தில் உள்ளன.


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்




எல்லோருக்கும் நிகழும் மரணம் உணர்த்தும் நிலையாமையைப் பற்றித் திருமூலர் மிக எளிய முறையில் எடுத்துரைக்கிறார்.


ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.




எனும் இப்பாடல் தரும் செய்தி அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வு. ஒருவர் இறந்ததும், ஊரார் எல்லோரும் கூடுகிறார்கள். ஒலி எழுப்பி அழுகிறார்கள். பழைய பெயரை விட்டுவிட்டுப் பிணம் என்று புதுப் பெயர் சொல்கிறார்கள். அப்பிணத்தைச் சுடுகாட்டுக்குக் கொண்டுபோய் எரிக்கிறார்கள். பிறகு நீரில் மூழ்கிக் குளித்துவிட்டு, அந்த நினைவே இல்லாமல் மறந்துவிடுகிறார்கள் என்று யாக்கை நிலையாமையைச் சுட்டுகிறார்.


மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு 'யானை யானை' என்று அஞ்சும் குழந்தையிடம், தாய் ‘இது யானை அல்ல; மரத்தால் ஆகிய பொம்மை' என்று கூறிக் குழந்தையின் அச்சத்தை நீக்குவாள். யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை. மரம் என்று தெளிவுபெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப்போல் உலகத்தையும், உலகப்பொருள்களையும் இறைவனாகக் காண்பார்க்கு, அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வரிய உண்மையைத் திருமூலர் மிக அழகிய குறியீட்டுக் கவிதை ஒன்றின் மூலமாக விளக்குகிறார்.


மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.




எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள இத்தகு கவிதைகள் பல திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன.


இறைவனைச் சென்று அடைவதற்குரிய எளிய வழி குருவை வழிபடுதலால் கிட்டும். பிறன்மனை நோக்காத பேராண்மையை ஆடவர் பெறல் வேண்டும். காக்கை தன் இனத்தைக் கூவி அழைத்துக் கலந்து உண்பது போல் சக மனிதர்களோடு கலந்து உண்ணல் வேண்டத்தக்கது. கற்றவர்களுக்கு மட்டுமே பேரின்பம் வாய்க்கும். கேள்விச் செல்வமே மனிதர்களுக்கு உற்றதுணை - இத்தகைய பல கருத்துகளைத் திருமந்திரம் எடுத்துரைக்கிறது.

No comments:

Post a Comment