திருமுறைகள்

Friday, October 29, 2010
ஏழாம் திருமுறை (சுந்தரர் பதிகங்கள்)


சுந்தரர் அருளிய பக்திப் பாடல்கள் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டன. இவர் எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவராகக் கருதப்படுகின்றார். இவர் பாடிய பாடல்கள் திருப்பாட்டு என்றும் அழைக்கப்படுகின்றன. திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் தோன்றியவர் சுந்தரர். நம்பி ஆரூரர் என்பது இவரது இயற்பெயர். சடையனார், இசைஞானியார் இவரது பெற்றோர்கள். கி. பி 8 ஆம் நூற்றாண்டில் இராசசிம்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவர். சேரமான் பெருமாளின் தோழராக இருந்தவர். இவர் 38000 பாடல்கள் பாடினார் என்பர். இப்பொழுது கிடைப்பவை 1026 பாடல்கள் (100 பதிகங்கள்).


சுந்தரருக்கு இரு மனைவியர், ஒருவர் பரவையார், மற்றொருவர் சங்கிலியார். உலக வாழ்க்கையில் பெறும் இன்பங்களையும் பெற்று மகிழ்ந்து, சிவனடியாராகப் பதிகங்கள் பல பாடி வாழ்ந்தவர். செல்வர்களை நாடிச் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடும் புலவர்களைக் கண்டித்துப் பாடியுள்ளார். ‘சிவனுடைய கோயிலைப் பாடுங்கள், இப்பிறப்புக்குரிய உணவும், உடையும் கிடைக்கும், இடர் நீங்கி வாழலாம், மறுமையில் சிவசக்தி கிடைக்கும்’ என்று குறிப்பிடுகிறார்.


குற்றம் செய்யினும் மன்னித்துச் சிவபெருமான் அருள் செய்வான்’ எனத் தாம் கொண்ட நம்பிக்கையை,


குற்றம் செய்யினும் குணம்எனக் கருதும்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.

(தேவாரம், 7786)


என்று வெளிப்படுத்துகிறார்


சைவப் பெருமக்கள் போற்றித் துதிக்கும் பல அரிய பாடல்களைப் பாடிய பெருமை சுந்தரருக்கு உண்டு. கலய நல்லூர் முதலான தலங்களின் இயற்கை அழகைப் பாடியுள்ளார். இவர் அகத்திணை மரபில் பாடியுள்ள பாடல்கள் சுவைமிக்கன. திருக்குறள், நாலடியார், பழமொழி முதலான அறநூல்களில் காணப்படும் கருத்துகள் சுந்தரர் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இவர் பாடிய 'திருத்தொண்டத் தொகை' சைவ அடியார்களின் வரலாற்றுச் சுருக்கமாக உள்ளது. நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் இப்பதிகத்தை மூலமாகக் கொண்டு அடியார் வரலாற்றைப் பாடியுள்ளனர்.

No comments:

Post a Comment