நாட்டுப்புற மருத்துவம்

Tuesday, November 23, 2010
நாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள்


நாட்டுப்புற ஆய்வாளர்கள் பலர் நாட்டுப்புற மருத்துவ வகைகளை அவரவர் வாழும் நாட்டில் வழங்கும் சூழல்களுக்கேற்பப் பலவாறு பகுத்துக் காண்பர். டான்யாடர் (Don yoder) நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்.


1. மந்திர சமய மருத்துவம் (Magico Religious Medicine)


(i). கடவுளின் சீற்றத்தால் ஏற்படும் நோய்கள்.
(ii). கெட்ட ஆவிகளால் ( Evil Spirit ) ஏற்படும் நோய்கள்.


(iii). சூன்யம் (Witch Craft ) முதலியவற்றால் ஏற்படும் நோய்கள்.
(iv). கண்ணேறு படுவதால் (Evil Eye ) ஏற்படும் நோய்கள்.
(v). மரபுத் தளைகளை மீறுவதால் (Break of Taboos) ஏற்படும் நோய்கள்.


2. இயற்கை நாட்டுப்புற மருத்துவம் (Natural Folk Medicine)


(i). மனிதர்களுக்கான மருத்துவம்.
(ii). பிராணிகளுக்கான மருத்துவம்.


தே. ஞானசேகரன் நாட்டுப்புற மருத்துவத்தை மூன்று நிலைகளில் அடக்குகிறார்.


1. மருந்து முறை சார்ந்த ராஜவைத்தியம்.
2. மந்திர முறை சார்ந்த பூதவைத்தியம்.
3. நெருப்பு முறை சார்ந்த ராட்சச வைத்தியம்.


சு. சண்முகம் சுந்தரம் நாட்டுப்புற இயல் என்னும் தமது நூலில் நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வரும் ஐந்து வகைகளாகப் பகுத்துள்ளார்.


1. இயற்கை மருத்துவம் (வயிற்றுப்பூச்சிகள் அழிய வேப்பிலைக் கொழுந்தை அரைத்து சாப்பிடுதல்
போன்றவை).

2. மத / மாந்திரீக மருத்துவம் (மந்திரித்தல,. கண்ணேறு கழித்தல், சுற்றிப் போடுதல்).

3. நம்பிக்கை மருத்துவம் ( எமனுக்கு பயந்து காது குத்துவது, கை, கால் சுளுக்குகளுக்கு இரட்டையர்
நீவுதல் போன்றவை).

4. திட்ட மருத்துவம் (உணவு செரிக்க வெற்றிலை போடுதல் போன்றவை).

5. முரட்டு மருத்துவம் (நாய் கடித்தால் கடிபட்ட இடத்தைச் செருப்பால் அடித்தல்).


ஆறு. இராமநாதன் நாட்டுப்புற மருத்துவத்தை நம்பிக்கை மருத்துவம், இயற்கை அல்லது மூலிகை மருத்துவம் என இரண்டாவது வகைப்படுத்துகிறார்.


நாட்டுப்புற மக்கள் நோய் தோன்றுவதற்கான காரணங்களாகப் பின் வருவனவற்றை நம்புகின்றனர்.


1. தெய்வங்களின் கோபம்.
2. பேயின் செயல்.
3. வைப்பு / பில்லிசூனியம் / வசிய மருந்து.

4. முற்பிறப்புப் பாவங்கள்.
5. கண்ணேறு.
6. உடலில் ஏற்படும் சூடு / குளிர்ச்சி.
7. கவனக் குறைவு.


இந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே மருத்துவ முறைகள் அமைகின்றன. முதல் ஜந்தும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதால் அதற்கான மருத்துவமும் மந்திரச் சடங்குகள் வாயிலாகவே செய்யப்படுகின்றன. எனவே இவற்றை நாம் நம்பிக்கை மருத்துவம் எனச் சுட்டலாம். இத்தைகய நம்பிக்கை மருத்துவ முறைகள் உளவியல் தொடர்புடைய சில நோய்களைத் தீர்க்க உதவுகின்றன.


மேற்கூறப்பட்டவற்றுள் இறுதி இரண்டு (6,7) காரணங்களால் தோன்றும் நோய்களைக் குணப்படுத்த மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய மருத்துவத்தை இயற்கை அல்லது மூலிகை மருத்துவம் என்று சுட்டலாம்.


க. வேங்கடேசன் தமது ஆய்வு நோக்கில் நாட்டுப்புற மருத்துவம் என்னும் நூலில் நாட்டுப்புற வழக்காறுகளின் அடிப்டையில் வரையறுத்துள்ள நாட்டுப்புற மருத்துவ வகைகளாவன.


1. நாட்டுப்புறப் பாடல்கள் கூறும் மருந்து முறைகள்.
2. நம்பிக்கைகள் கூறும் மருந்து முறைகள்.
3. பழமொழிகள் கூறும் மருந்துமுறைகள்.
4. பழக்கவழக்கங்கள் கூறும் மருந்து முறைகள்.
5. சிடுகா மருந்துமுறைகள்.


இவற்றில் சிடுகா மருந்து என்பது பாட்டி வைத்தியம், கைமுறை வைத்தியம், வீட்டு வைத்தியம் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றது இவற்றை எழுதப்படாத மருந்தியல் முறைகள் எனலாம்.


ந. சந்திரன் தமது நாட்டு மருத்துவம் என்னும் நூலில் மருத்துவத்துக்கு உட்படுத்தப் படுபவர்களின் அடிப்படையில் ஐந்து வகைகளைக் குறிப்பிடுகிறார்.


1. மகளிர் மருத்துவம்.
2. ஆடவர் மருத்துவம்.
3. குழந்தையர் மருத்துவம்.

4. பொது மருத்துவம்.
5. கால்நடை மருத்துவம்.

No comments:

Post a Comment