வழிபாடு

Friday, January 7, 2011
வழிபாடு

ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வவடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான்.
இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார்,

‘‘மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்
சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்
மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே"(114)

என்று தெளிவுபடுத்தியுள்ளது.
‘இச்சித்த தெய்வம்' என்பது வழிபடுவதற்குத் தேர்ந்து எடுத்துக்கொண்ட வடிவம் என்பதாகும். ‘செயல் அறம்' என்பது, (122) ஆம் தடைக்குள்ள விடையில் கூறியுள்ள பதினாறு சைவ ஒழுக்கங்கள் ஆகும்.


மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சிவலிங்க வடிவத்தையும் மட்டுமே, வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?

இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான். இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்; அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை வழங்க முடியாது. எனவே மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சதாசிவ வடிவத்தையும் மட்டுமே வழிபட வேண்டும் என்பது தெளிவாகிறது.
இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“யாதொரு தெய்வம் கொண்டிர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும்; பிறக்கும்; மேல்வினையும் செய்யும்;
ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே"(115)

என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.
இன்னும், அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க, அவற்றால், இயலாது. இதற்கு, “அத்தெய்வம் அத்தனைக் காண்" என்னும் பிரமாணம் தெளிவாக உள்ளது.


அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி நடந்துகொண்டால் போதாதா? இறைவழிபாடு வேறு செய்ய வேண்டுமா?

அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகள் அனைத்தும் இறைவனால் வேதாகமங்களில் கூறப்பட்டவையே ஆகும். அவ்விதிகளின்படி ஒழுகுபவர்களுக்கு உள்ள பயன்களை இறைவனே வழங்க வேண்டியுள்ளது. அறச் செயல்களில் சிறந்தது, இறைவன் கருணையை நினைந்து அவனை வழிபடுவதே ஆகும். எனவே, இறைவன் திருவருளை மறந்துவிட்டுச் செய்யும் அறச்செயல்கள் அனைத்தும் பயனற்றவையே ஆகும். அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி ஒழுகுவதோடு, இறைவழிபாடு செய்வதும் இன்றியமையாதது என்பது இதனால் பெறப்பட்டது.
இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,
மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்
வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே"

என்று அருளிச் செய்துள்ளார்.

No comments:

Post a Comment