யோக வழி 2011

Sunday, January 9, 2011
யோகா என்றால் பலருக்கு புரிந்தது யோகாசனங்கள் தான். உடலை நீட்டி, வளைத்து செய்யும் ஆசனங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் யோகா வெறும் உடற்பயிற்சி ஆசனங்கள் மட்டுமல்ல. ஆசனங்கள் பிராணயாமம் இவை யோகாவின் ஒரு சில அங்கங்கள். உண்மையில் யோகா, ஏட்டுத் தத்துவத்தை விட நடைமுறையில் மனதுக்கும், உடலுக்கும் மருந்தாகும் வழிகளை கூறுகிறது. உடல், மன, இவற்றின் முழு ஆரோக்கியமே யோகாவின் லட்சியம். தவிர ஆன்மீகத்தையும் யோகா போதிக்கிறது.
வடமொழியில் யோகா என்றால் “சங்கமம்” – இறைவனுடன் இணைவது என்று அர்த்தம்.
யோகா ஒரு வாழும் வழி, புலனேந்திரியங்களை கட்டுப்படுத்தி, விருப்பு, வெறுப்பில்லாமல், பற்றன்றி, வாழும் முறைகளை யோகா கற்றுக் கொடுக்கிறது. நாலுவகை நிலைகளை சொல்கிறது. அவை:-
தர்மம்
பிறருக்கும், தனக்கும் செய்ய வேண்டிய கடமைகள், மிதமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தால் அதுவே சிறந்த தர்மமாகும்.
அர்த்தா
சம்சார வாழ்க்கை, சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவது. செல்வத்தை சேர்த்து வைப்பது மட்டுமின்றி அதை சரியாக பயன்படுத்துவது.
காமம்
உடலும், உள்ளமும் ஆரோக்கிய நிலையில் இருக்கும் போது வாழ்வின் இன்பங்களை, நேர்மையான முறையில் அனுபவிப்பது.
மோட்சம்
இந்த பிறவியின் சிற்றின்பங்களிலிருந்து விடுபட்டு, பேரின்பமான மோட்ச நிலையை அடைவது.
ஆசனங்களை போதிக்கும் “ஹதயோகம்” மட்டுமின்றி, இறைவனை அடைய நாலு வழிகளையும் யோகா வலியுறுத்துகிறது. அவை.
1. ஞானயோகம்
அடிப்படையில் இந்த யோகம் ஒரு தியானப்பயிற்சி முழுமனதையும் ‘குவித்து’ ஒரு நிலையில் கொண்டு வரும் பயிற்சி ஜபம், தியானமாகும். அறிவு, ஞானம் இவற்றை நாடி ஆன்மீகம் பற்றி தெரிந்து கொண்டு, சுய முன்னேற்றமடைவது ஞானயோகம் இது இறைவனை அடையும் வழிகளில் ஒன்று.
2. பக்தி யோகம்
இறைவனை தவறாது வழிபடுதல், அவன் புகழை அனுதினமும் பாடுதல்,
இறைவனை அன்புடன் நேசித்தல் இவை பக்தியோகத்தின் சாரம். எல்லாவித ஜனங்களுக்கும் ஏற்ற வழிமுறை கடவுள் பக்தி, நம்பிக்கை இவையாகும்.
3. கர்ம யோகம்
பற்றின்றி பணி செய்தல் கர்மயோகமாகும். உழைக்க வேண்டும். வேலை
செய்ய வேண்டும். செயல்பாடுகள் செவ்வனே இருக்க வேண்டும். செய்யும் தொழிலில் ஈடுபாடு செலுத்தி திறமையாக செய்ய வேண்டும். அதே சமயம் பிரதி பலனை எதிர்பாராமல் பணியாற்ற வேண்டும். தனக்கு விதிக்கப்பட்ட பணிகளை விரும்பி செய்பவர், இறைவனை அடைவார்கள், பற்றின்றி செய்பவர்கள் கர்மயோகிகள்.
4. ராஜ யோகம்
உடல், மனதின் யோகா யோகாசனங்களை விவரிக்கும் “ஹதயோம்”
ராஜயோகத்தின் ஒரு அம்சமாகும். ராஜ யோகம் எட்டு ‘கிளைகள்’ உடையது. அதனால் ‘அஷ்டாங்க யோகம்’ எனப்படும். யமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரதியாஹாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி என்று எட்டு நியதிகள் ராஜயோகத்தில் சொல்லப்படுகின்றன. இந்த எட்டு அம்சங்களில் சொல்லப்படுபவை அற்புதமான அறிவுரைகள், அஹிம்சை, உண்மை, திருடாமை, பிரம்மசரியம், பேராசையின்மை, உடல் மன சுத்தம், திருப்தி, எளிய வாழ்க்கை, சுயஞானம், இறை நெறி போன்றவை போதிக்கப்படுகின்றன.
பகவத் கீதையில் யோகா கீழ்க்கணடவாறு வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
1. வெற்றியிலும், தோல்வியிலும், சமநிலை நோக்குடன் இருப்பது யோகா.
2. யோகா என்பது திறமையும், லாவகமும்.
3. விவரிக்க முடியாத ஆனந்தத்தை கொடுப்பது யோகா.
4. அமைதி, சாந்தம் இவை தான் யோகா.
5. வேதனையை அழிப்பது யோகா.
யோகா ஒரு முழுமையான கல்வி முறை. பரமசிவனால்
ஆரம்பிக்கப்பட்டதால் யோகாவின் ‘பரமகுரு’வாக அவர் கருதப்படுகிறார். பல விதங்களானது யோகா. பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம், ராஜயோகம், தியான யோகம், அஷ்டாங்க யோகம், ஹதயோகம், குண்டலினி யோகம், தாந்தீரிய யோகம், நாதயோகம், கிரியாயோகம், லய யோகம், ஜடயோகம் இத்யாதி யோகங்கள் உள்ளன.
பதஞ்சலி முனிவர் யோகக் கலைகளை தொகுத்து ‘யோக சூத்திரங்கள்’ என்று வடிவமைத்தார். அஷ்டாங்க யோகா (எட்டு வகை யோகங்கள்) பதஞ்சலி முனிவரால் ஒழுங்குபடுத்தப்பட்ட லட்சியங்களும், வழிமுறைகளும், யோகாவின் கொள்கைகளாக கருதப்படுகின்றன.

No comments:

Post a Comment