சிவபெருமான்

Sunday, January 9, 2011
சிவ பூஜையில் முதலாவதாக சிவாசன பூஜையைச் செய்ய வேண்டும்.

சிவாசனமாவது கிழங்கு, தண்டு, முடிச்சு, இதழ்கள், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றால் வகுக்கப்பட்ட தாமரைப் பூவின் வடிவையுடையதாயும், பிருதிவிதத்துவ முதல் சுத்த வித்தை முடிவாக முப்பத்திரண்டு தத்துவம் முடிவான உயரமுடையதாயும், மேலிருக்கும் சதாசிவ மூர்த்தியுடன் கூட நிவிர்த்தி கலை முதல் சாந்திகலை ஈறான தத்துவம் வரை உயரமுள்ளதாயுமிருக்கும். அதற்கு மேல் சாந்திய தீதகலை அளவாக வித்தியா தேகம் இருக்கும். அதன் சொரூபத்தை அறிதற் பொருட்டு நிவர்த்தி முதலிய கலையின் அளவும், அக்கலையிலடங்கிய தத்துவங்களின் சொரூபமும் கூறப்படுகின்றன. அவை வருமாறு:-

நிவிருத்தி கலையானது நூறு கோடி யோஜனை அளவுள்ள பிரமாண்ட ரூபமாயுள்ளது. அக்கலையில் பிருதிவிதத்துவம் ஒன்றுதானுண்டு அதற்குமேல் ஆயிரங் கோடி யோஜனையளவுள்ள பிரதிட்டாகலை இருக்கிக்கின்றது. அதில் அப்பு முதலிய நான்கு பூதங்களும், கந்தமுதலிய ஐந்து தன்மாத்திரைகளும், ஐந்து கன்மேந்திரியங்களும், ஐந்து ஞானேந்திரியங்களும், மனமும், அகங்காரமும், புத்தியும், பிரகிருதியுமாகிய இருபத்து மூன்று தத்துவங்களுண்டு. அதற்கு மேல் அயுதகோடி யோஜனை அளவுள்ள வித்தியா கலை இருக்கின்றது. அதில் புருடன், அராகம், நியதி, கலை, வித்தை, காலம், மாயை யென்னும் ஏழுதத்துவங்களுண்டு. அதற்கு மேல் லக்ஷங்கோடி யளவுள்ள சாந்தி கலை இருக்கின்றது. அதில் சுத்தவித்தை, மகேசுவரமென்றுமிரண்டு தத்துவங்களுண்டு. அதற்குமேல் பத்து லக்ஷங்கோடி அளவுள்ள சாந்திய தீதகலை இருக்கின்றது. அதில் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களுண்டு. அதற்கு மேல் அளத்தற்கு முடியாவண்ணம் சிவதத்துவமிருக்கின்றது.

நிவிர்த்தி கலை ரூபமான பிருதிவி தத்துவமானது தாமரைக் கிழங்கு அளவாக இருக்கின்றது. பிரதிட்டை வித்தையென்னும் இருகலைகளிலுமடங்கியுள்ள அப்பு முதல் காலமீறான இருபத்தொன்பது தத்துவங்கள் தாமரைத் தண்டாக இருக்கின்றன. அந்தத் தத்துவங்களிலிருக்கும் எழுபத்தைந்து புவனங்கள் முட்களாகும். அந்தப் புவனங்களிலடங்கியுள்ள உயிர்களின் ஐம்பது புத்தி தரமங்கள் தண்டிலடங்கியுள்ள நூல்களாகும். வித்தியா கலையில் காலத்திற்கு மேலிருக்கும் மாயாதத்துவம் தாமரைத் தண்டின் முடிச்சாகும். சாந்திகலையிலிருக்கும் சுத்த வித்தியா தத்துவம், இதழ், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றின் ரூபமாயிருக்குந் தாமரையாக இருக்கின்றது. சுத்த வித்தையின் மேலிருக்கும் மகேசுவர தத்துவமானது சிவனுடைய சூக்கும மூர்த்தியாயிருக்கின்றது. சாந்திய தீத கலையிலிருக்கும் சதாசிவம் சத்தி என்னும் இரண்டு தத்துவங்களும் வித்தியாதேகமாயிருக்கின்றன

No comments:

Post a Comment