சிவபெருமான்

Sunday, January 9, 2011
முத்தியைப் பெற்றுவிட
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சிவபுண்ணிய நெறிகளில் உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு ஒழுகி வருபவர்களின் மும்மல அழுக்கை நீக்கி அவர்களை ஞானசாகரத்தில் மூழ்குவித்துச் சிவானந்தம் மேலிடச் செய்து மேல் வரும் பிறப்பை ஒழித்து இறைவன் முத்தியைத் தந்தருள்வான் என்று சிவாகமங்கள் ஆகிய சித்தாந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.எனவே சிவாகம நெறியின் படி நடப்பவர்கள் இப்பிறப்பிலேயே முத்தியைப் பெறலாம் என்பது தெளிவு.

சரியை முதலிய நெறிகளில் நின்று எவ்வாறு ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்திகிட்டும்?

சரியையில் சரியை, சரியையில் கிரியை முதலிய பதினாறு வகைகளில், ஞானத்தில் சரியை ஞானத்தில் கிரியை முதலிய நான்கு வழிகளில் நின்று ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்தி கிட்டும்.
அந் நான்கு வழிகள் வருமாறு :-

‘ஞானத்தில் சரியை' என்பது, திருமுறைகள் மற்றும் சைவசித்தாந்தப் பொருள்களைப்பற்றித் தக்கவர்களிடம் ‘கேட்டல்' ஆகும்.

‘ஞானத்தில் கிரியை' என்பது, அவற்றைக் காரண காரிய இயைபுபடுத்தி எடுத்துக்காட்டுக்களையும் கருத்தில் கொண்டு ‘சிந்தித்தல்' ஆகும்.

‘ஞானத்தில் யோகம்' என்பது அவற்றைச் சந்தேகமோ விபரீதமோ இன்றித் தெளிதல் ஆகும்.

‘ஞானத்தில் ஞானம்' என்பது, அவ்வாறு தெளிவடைந்த பிறகு, சிவபெருமானின் திருவருளையன்றி நமக்கு எந்தவிதச் செயலும் இல்லை; அறிவும் இல்லை; என்று நினைந்த ‘சிவபெருமானையே சதாகாலமும் நினைந்திருத்தல்' ஆகும். இதனை ‘நிட்டை கூடுதல்' என்று சாத்திரங்கள் பேசும்.

சாத்திரங்களைக் கற்றலும், பதி, பசு, பாச உண்மைகளை ஆராய்தலும் பர ஞானம் எனப்படும். சரியை முதலிய நான்கனுள் ஈற்றில் உள்ள ஞானத்தை இருவகையாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒன்று அபரஞானம்; மற்றொன்று பரஞானம்.

அபர ஞானம், பரஞானத்தைக் கூடுவிக்கும்; சாத்திரங்களைக் கற்பதோடு அமையக் கூடாது; சரியை, கிரியை, யோகங்களுக்கு அங்கமாகத்தான் சாத்திரங்களை ஓத வேண்டும். சரியை, கிரியை, யோகங்களின் மூலமும் சாத்திர ஞானத்தின் மூலமும் நாம் இறைவனிடத்து, பத்தியை (அன்பை) மிகுவித்துக் கொள்ள வேண்டும். அன்பின் முதிர்வில் இறைவன் குருநாதனாக வந்து ‘பரஞானம்' ஆகிய வியாபக உணர்வை நமக்கு உணர்த்துவான். வியாபக உணர்வின் மூலந்தான், இறைவனோடு இரண்டறக் கலந்து, பேரின்பத்தை அனுபவிக்க முடியும். எனவே பரஞானத்திற்கு பத்தி மிகவும் இன்றியமையாதது என்பதை நாம் நன்றாக உணரவேண்டும்.

இந்நால்வழிகளும் உயிர்கள் முத்தி பெறும்பொருட்டே உள்ளமையால் சைவசித்தாந்த சாத்திரங்களைக் கற்க வேண்டுவது இன்றியமையாததாகும்.

இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,

“கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
கிளத்தல் என ஈர் இரண்டாம்; கிளக்கின் ஞானம்
வீட்டை அடைந்திடுவர்" (276)

என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.
‘ஞானம் கிளக்கின்' என்பது ஞானத்தில் சரியை என விரித்துக் சுறுமிடத்து என்பது பொருள். ‘நிட்டை கிளத்தல்' என்பது, ‘நிட்டை கூடுதல்' ஆகும்.

No comments:

Post a Comment