சிவபெருமான்

Friday, January 7, 2011
சிவலிங்கம், சிவனடியார் என்னும் இரு திருமேனிகளையும் ஆதாரமாகக் கொண்டு, சிவபெருமான் உயிர்களின் புறப்பூசையினையும் அகப்பூசையினையும் ஏற்று உயிர்களுக்கு அருள் செய்வான்.
இவ்விரு பூசைகளுள் அகப்பூசையினைப் பரிபூரண பூசையாக ஏற்று; உயிர்களின் அகத்தே முன் நின்று அருள் செய்வான். இவ்வாறு, சிவபெருமானை வழிபட வேண்டும்.

இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று
மாபரன் பூசைகொண்டு மன்உணிர்க்கு அருளை வைப்பன்;
நீ, பரன்தன்னை நெஞ்சில் நினைவையேல், நிறைந்த பூசை
ஆய், பரம்பொருளை நாளும் அர்ச்சி; நீ அன்பு செய்தே"


அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும் யாவை?

அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-
நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.

அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை' எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.

இதனால் பெறும் பயன் வருமாறு :-

கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.

இதற்குப் பிரமாணம் :-

சிவஞானசித்தியார் (300) மற்றும் (301).


சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளில் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவுமுறை எத்தகையதாக இருக்கும்?

சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை, ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ளது போன்றது. கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. யோக நெறியில், தோழனுக்கும் தோழனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவுமுறை போன்றது. இந்நெறியில் உள்ள உறவு முறை நாயகனுக்கும் நாயகிக்கும் உள்ளது போன்றதென சிலர் கூறுகிறார்கள்.
இந்நால்வகை நெறிகளில் உள்ள உறவுமுறை பற்றிய உண்மையைச் சிவஞானசித்தியாரில்,

“சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம்,
தாதமார்க்கம் என்றும் சங்கரனை அடையும்
நன்மார்க்கம் நால், அவைதாம் ஞான யோக
நற்கிரியா சரியை என நவிற்றுவதும் செய்வர்"

என்று அருணந்திசிவம் தெளிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment