யோக வழி 2011

Sunday, January 2, 2011
கோயிலில் சிவன், சக்தி, விநாயகர், சுப்ரமணியம் வைத்திருப்பதற்கு விளக்கம் என்ன?


நமது ஜீவனை குருவின் அருளாலும் பயிற்சியாலும் சிவனாக்க வேண்டும். குருவின் தீட்சையால் நெற்றிக்கண் திறந்து ஜோதி தரிசனம் கிடைக்கும். சக்தி என்ற மனம் அறிவு என்ற சிவனோடு சேரும் போது மாயசக்தி மறைந்து, கிரியா சக்தியாக மாறி, ஜீவசக்தி கூடி ஞான ஒளியாக நம்மில் பிரகாசிக்கிறது. உண்மையான பக்தர்களுக்கு இது கிடைக்கும்.


விநாயகர் என்பது உடல் கூறைக் குறிக்கும். முருகன் என்றால் மும்மலத்தை வென்றவன். மும்மலத்தை வென்றபின தான் சுப்ரமணியமாக இருப்பார். சுப்ரமணியம் என்றால் குருவின் தயவால் சற்குருவை அறிந்து உணர்ந்து தனக்குள்ளே கோயில் அமைத்து அவரை வழிபடுவதாகும். சற்குருதான் பிரம்மம். சுத்த பிரம்மத்தை உணர்ந்தவரே சுப்ரமணியம்.


புராணம் என்ன சொல்கிறது?


வேதங்கள் சொன்ன நல்ல கருத்துக்களை கதையாக சித்தரித்து மக்களுக்குப் பக்தியையும், ஞானத்தையும் புரிய வைக்கிறது.


கோயிலில் ஞானிகள் இருப்பார்களா?


ஞானிகள் மக்கள் நடமாடும் இடங்களிலெல்லாம் இருப்பார்கள். அவர்கள் பிச்சைக்காரர் வேஷத்திலும் இருக்கலாம், குடும்பஸ்தர்களாகவும் இருக்கலாம். எமது அனுபவ‌த்தில் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். கோயில் உள்ள இடங்களில் நல்ல மனிதர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.


ஏன் தமிழ்நாட்டில் சிறப்பான கோயில்கள் இருந்தும் பக்தி முறையாக வளரவில்லை?


பொதுவாக கலியுகமான தற்காலத்தில் இறைவனைப் பிடிப்பது வெகுசுலபம். ஆனால் இறைவனை மறக்கடிக்க மாயை ஏகப்பட்ட காட்சிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறது. இதனால் உண்மையைக் கூறவரும் குருமார்களை மக்கள் மதிப்பதில்லை. உதாரணமாக நல்ல புத்தகத்திலுள்ள கருத்துக்களை நமது மூளையில் பதிய வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, புத்தக அட்டைப்படத்தை அல்ல. ஒரு குழந்தைக்கு படம் பார்த்து படிக்க வைப்பதற்குக் காரணம் அந்தப்படத்திலுள்ள பொருள் இன்னது என்று தெரிவதற்காகத்தான். ஆனால் அந்தப்படத்திலுள்ள பொருளை சாப்பிட முடியாது. பொருளை கடையில் வாங்குவதற்கு மனதிற்கொரு பயிற்சியாகும்.


இதைபோன்றுதான் இறைவனை அடைய ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பயிற்சி சிலை விளக்கமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இதை உணர்ந்து புரிந்து இந்தப் பிறவியில் முயற்சிப்பவர்களுக்கு சரியான வாய்ப்பளிக்கும் பள்ளியாக விளங்குவதே கோயில்.

1 comment:

  1. உம் முயற்சி வாழ்க குருநாதா சரணம் சரணம் சிவசித்தா போற்றி போற்றி

    ReplyDelete