கந்தர் அனுபூதி

Wednesday, September 15, 2010
இல்லையெனும் மாயையில் இட்டனை; நீ
பொல்லேன் அரையாமை பொறுத்திலையோ;
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே. [29]

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. [30]

பாழ்வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே;
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ; மயில் வாகனனே. [31]

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர்குலப் பிடி தோய்
மலையே! மலை கூறிடு வாகையனே. [32]


சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்;
மந்தாகினி தந்த வரோதயனே!
கந்தா! முருகா! கருணாகரனே! [33]

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்;
சங்க்ராம சிகாவல! ஷண்முகனே!
கங்கா நதி பால! க்ருபாகரனே! [34]

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்;
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா! சுரபூபதியே. [35]

நாதா! குமரா! நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப்
பாதா! குறமின் பத சேகரனே. [36]



கிரிவாய் விடுவிக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே ! பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே. [37]

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்பு மதோ?
கூதாள! கிராதகுலிக்கு இறைவா!
வேதாள கணம் புகழ் வேலவனே. [38]

மாவேழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ?
கோவே! குற மின்கொடி தோள் புணரும்
தேவே! சிவ சங்கர தேசிகனே. [39]

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதனோடு திரிந்தவனே. [40]



சாகாது எனையே சரணங்களிலே
காகா; நமனார் கலகம் செயுநாள்
வாகா! முருகா! மயில்வாகனனே!
யோகா! சிவஞான உபதேசிகனே! [41]

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரைசிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே. [42]

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா! முருகா! நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அனுபூதி பிறந்ததுவே. [43]

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ?
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே. [44]



கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ?
குரவா! குமரா! குலிசாயுத! குஞ்
சரவா! சிவயோக! தயாபரனே! [45]

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ;
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்;
கந்தா! கதிர்வேலவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறை நாயகனே. [46]

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ?
சீறா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே! [47]

அறிவொன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அற நின்ற பிரானலையோ?
செரிவொன்று அற வந்து இருளே சிதைய
வெறிவென்று அவரோடு உறும் வேலவனே. [48]



தன்னம் தனி நின்று அதுதான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா! நினைவார்
கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே. [49]

மதிகெட்டு அறவாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்?
நதிபுத்திர! ஞானசுகாதிப! அத்
திதி புத்திரர் வீறடு சேவகனே. [50]

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! [51]

No comments:

Post a Comment