இறைவன்

Tuesday, September 28, 2010
இறைவன்

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. ஒன்று அவன்தானே என்கிறது திருமந்திரம்.இதனை மாணிக்கவாசகர்

″முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே″ - திருவெம்பாவை

என்றார். இவை சைவ மரபின் இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டை வலியுறுத்துவன.

இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி என்றால் தலைவன். எனவே ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவன். அவனைச் சிவம் எனப் போற்றுவது சைவ மரபு.

இறைவன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து(உள்பொருள்) ஆகவும் சித்து(அறிவுடையபொருள்) ஆகவும், ஆனந்தம்(இன்பமயமானபொருள்) ஆகவும் விளங்குகின்றான். ஆதலால், இறைவன் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.

இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்றும் மூன்று திருமேனிகளை எடுத்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவான்.

″கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை ″ - திருக்குறள்




தன்வயத்தனால்
தூய உடம்பினனாதல்
இயற்கை உணர்வினனாதல்
முற்றும் உணர்தல்
இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்
பேரருள் உடைமை
முடிவில் ஆற்றலுடைமை
வரம்பில் இன்பமுடைமை
ஆகிய எண்குணங்களையும் உடையவன்.

இறைவன் ஒருவனே அவனைப் பல்வேறு வடிவங்களில் வழிபடுகின்றோம். ஏனெனில் அவ்வடிவங்களில் இறைவன் எமக்கு அருள்பாலிக்கின்றான். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், விநாயகன், முருகன், இலக்குமி, துர்க்கை, சரஸ்வதி போன்றவை அனைத்தும் அத்தகைய வடிவங்களே.

″யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி யாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் ″

எனச் சிவஞானசித்தியார் கூறுவது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்துகிறது

இறைவன் உருவமற்றவன். அவனை மனத்தில் நினைத்தற்காகவும், மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவம் தாங்குவதால் உருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம்.

பல்வேறு மூர்த்திகளுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அனைத்தையும் சிவப்பரம்பொருளாகவே காணும் சிவநெறி எம்மிடையே ஆழமாக வேரூன்றியிருக்கிறது.




சம்பந்தரின் வாழ்த்து பெற்ற நாயன்மார்கள்


திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் சிவனை பாடிய தலங்கள், பாடல் பெற்ற சிவத்தலங்கள் என அழைக்கப்படுகின்றன. 274 தலங்கள் இவ்வாறு பாடல் பெற்றுள்ளன. இதில் திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் இருவரைப் பற்றி பாடியிருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுமாறன், சமண சமயத்தை பின்பற்றினார். அவரை சைவ சமயத்தை பின்பற்றச்செய்வதற்காக, அவரது மனைவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இருவரும் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரும்படி அழைத்தனர். சம்பந்தரும் மதுரை வந்தார். அவரை குலச்சிறையார் வரவேற்றார். முதலில் திருவாலவாய் கோயிலை தரிசித்த திருஞானசம்பந்தர், மங்கையர்கரசியாரையும், அவரது அமைச்சர் குலச்சிறையாரையும் சிறப்பித்து சொல்லும் வகையில் மங்கையர்க்கரசி வலவர்கோன் பாவை என்னும் பதிகத்தை பாடினார். திருஞானசம்பந்தரால் வாழ்த்தப்பட்ட இவர்கள் இருவரும் சிவனருள் பெற்று நாயன்மார் வரிசையில் இணைந்தனர். குலச்சிறை நாயனாரை சுந்தரமூர்த்தி, ஒட்டக்கூத்தர் இருவரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவராத்திரியும் பெருமாளும்


பெருமாளுக்கும் சிவராத்திரிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறது என்றால் இருக்கிறது. நரகாசுரன் கொல்லப்பட்ட தேய்பிறை சதுர்த்தசி திதியே ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணன் ஐப்பசி மாத சிவராத்திரி முழுவதும் விழித்திருந்து அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னால் நரகாசுரனைக் கொன்றார். இதில் இருந்து சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்குவோர் எடுத்த செயலில் வெற்றி பெறுவர் என்பது தெளிவாகிறது.

கோமாதா பூஜை

கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும். பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.

திருநீறில் மருந்திருக்கு


திருநீற்றின் பெருமை அளவிடற்கரியது. நீறில்லா நெற்றி பாழ் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீங்குவதற்காக திருஞான சம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். சுத்தமான திருநீறு, வாதத்தினால் உண்டாகும் 81 நோய்களையும் பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களையும், கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் போக்கும் தன்மை கொண்டது.

தானமும் பலன்களும்

ஆடை தானம் செய்தால் ஆயுள்விருத்தியும், பூமிதானம் தானம் செய்தால் பிரம்மலோக வாழ்வும், நெல்லி தானம் செய்தால் ஞானமும், தீபம் தானம் செய்தால் பதவியும் கிடைக்கும். அரிசி தானம் செய்தால் பாவம் நீங்கும், பழம், தாம்பூலம் தானம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும், கடலை தானம் தானம் செய்தால் சந்ததி பெருகும், விதை தானம் செய்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இறைவனுக்கு ஆடை

சிவனுக்கு எந்த நேரமாக இருந்தாலும் வெள்ளை பட்டு அணிவிக்க வேண்டும். ஆனால், அம்மனுக்கு காலையில் சிவப்பு பட்டும், மாலையில் நீலம் அல்லது பச்சை பட்டும், அர்த்த ஜாமத்தில் சிவப்பு அல்லது பச்சை கரையுள்ள வெள்ளை பட்டும் சார்த்த வேண்டும்.

லெட்சுமிக்கு வில்வ பூஜை

பெருமாள் கோயில்களில் தாயாருக்கு துளசியால்தான் அர்ச்சனை செய்வர். ஆனால், கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கொழுமம் கல்யாணப்பெருமாள் கோயிலில் உள்ள லட்சுமி தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்கின்றனர். இக்கோயில் அருகில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. சைவமும், வைணவமும் வேறில்லை என்ற கருத்தின்அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

பிரதான லட்சுமி

விழாக்களின் போது, திருமால் முன்னே செல்ல தாயார் பின்பு தான் செல்வர். திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோயிலில், விழாக்களின் போது, லட்சுமி தாயார் முன்னே செல்கிறார். பின்னால் தான் பெருமாள் செல்கிறார்.

No comments:

Post a Comment