திருமந்திரம்

Saturday, September 25, 2010
"புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பர் தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.'

திருமந்திரம்- பாடல் எண்: 559

"புள்' என்பது பறவையைக் குறிக்கும் சொல்லாகும். "புள்ளினும் மிக்க புரவி' என்றால் பறவையைவிட வேகமாகப் பறக்கக் கூடிய குதிரை என்பது பொருள். பிராணனைக் குறிக்க குதிரை என்ற குறியீட்டை சித்தர்கள் பயன்படுத்தினர் என்பதை ஏற்கெனவே கண்டோம். ஆக, பறவையைவிட வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராண னாகிய குதிரையை நம்வசப்படுத்திக் கொண்டால் (மேற்கொண்டால்) என்னென்ன நிகழும்?

"கள் உண்ண வேண்டாம்; தானே களிதரும்.'

ஒருவித ஆனந்தமான மனநிலையை அடையவே மனிதர்கள் கள் முதலிய போதைப் பொருட்களை உண்கிறார்கள் அல்லவா? ஆனால் திருமூலரின் கூற்றுப்படி, பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் மூலமாக நமது பிராணனை நாம் வசப்படுத்திவிட்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலை உடலிலும் மனதிலும் உருவாகிவிடும்.

மூச்சுப் பயற்சியின் மூலமாக குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு நமது தலையின் மேற்பகுதி யிலுள்ள "லலான சக்கரம்' தூண்டப்பட்டால், அந்த சக்கரத்திலிருந்து உருவாகும் "அமிர்தம்' ஒரு எல்லையற்ற ஆனந்த நிலையை உருவாக்கும். இதையே "பேரானந்தம்' என்கிறார்கள். இந்த ஆனந்த நிலையும் ஒருவகையான போதையே. ஒருமுறை அனுபவித்தவர்களுக்கு அந்த நிலை யிலிருந்து வெளியில் வரவே மனம் வராது. மீண்டும் மீண்டும் அந்த ஆனந்த நிலையையே மனம் நாடும். எனவேதான் வடமொழியில் இந்த நிலையை "ஆனந்த லகரி' என்கிறார்கள்.

ஆக, பிராணனை வசப்படுத்துவதால் விளையும் முதல் பலன்- ஆனந்தமான மனநிலை உருவாகும். இது ஒரு பேரானந்த நிலை.

"துள்ளி நடப்பிக்கும், சோம்பர் தவிர்ப்பிக்கும்.'

ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைவது அவனிடத்தில் காணப் படும் சோம்பல்! பலர் பல நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டுவிடுவதற்குக் காரணமாக அமைவது மனதில் அல்லது உடலில் ஏற்படும் சோம்பல் தான்! பிராணன் எனும் குதிரையை நமது வசப்படுத்திக் கொண்டால் சோம்பல் மறையும். மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்பும் துள்ளலும் தானே ஏற்படும். வாழ்க்கை சிறக்கும்.

"உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.'

இதுவே உண்மை. அதைச் சொல்லிவிட்டோம். ஆனால் உணர்வுடையோர்க்கு மட்டுமே இந்த ரகசியம் புரியும் என்கிறார் திருமூலர். உயிரோடி ருக்கும் (மரம், செடி, கொடி, விலங்குகள் உட்பட) அனைத்துமே உணர்வு கொண்டவை தானே என்ற சந்தேகம் எழும். இந்தப் பாடலில் திருமூலர் குறிக்கும் உணர்வு என்பது "உள்ளுணர்வு' அல்லது "மெய்ஞ்ஞானம்' என்பதைக் குறிக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment