சித்தர்கள்..

Saturday, September 25, 2010
சித்தர்கள்..



சித்தர்கள் என்றவுடனே அவர்கள் பற்றிய பிரமையும்,அதனோடு கூறி வந்துள்ள புனைகதைகளுமே நினைவுக்கு வரும். சித்தர்கள் பற்றி நாம் அறிந்ததெல்லாம்,அவர்கள் ரசவாதம் செய்வதிலே வல்லவர்கள்,சாதாரண உலோகத்தையும் தங்கமாக்கும் திறன் கொண்டவர்கள், வைத்தியமுறைகளை தமிழுக்குக் கொணர்ந்தவர்கள்,காற்றிலும் நீரிலும் நடக்கத் தெரிந்தவர்கள் என்பவையே. உண்மையில் இதையெல்லாம் ஏன் அவர்கள் செய்தார்கள், இப்படிப்பட்ட செப்பிடு வித்தைகளை செய்ததன் நோக்கம் என்னவென்று ஆராய முற்பட்டால் அவர்களுக்கென்று ஒரு அடையாளமுமின்றி மக்கள் சேவையை குறிக்கோளாகக் கொண்ட வாழ்க்கை தெரியவரும். சித்தர்கள் பற்றி அறியும் முன்னர் சித்தர்கள் என்று தமிழுக்கு அறியப்பட்டவர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக பதினென் சித்தர்கள் என்று பதினெட்டு சித்தர்களை முதன்மைப்படுத்தி பல நூல்கள் வெளிவந்தபோதும் இவ்வெண்ணிக்கை காலத்திற்குக் காலம் வேறுபடுவதாகவே உள்ளது.

சித்தருக்கான பொருளை சில சித்தர் பாடல்களிலிருந்தே கூட அறியலாம்: “ஆத்தாளை பூசித்தோன் அவனே சித்தர்” என்று கருவூராரும், “எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி ஏகாமல்/ வாசனையை யடித்தோன் சித்தன்” என்று சட்டைமுனியும், “சிந்தை தெளிந்திருப்பவர் ஆர் அவனே சித்தன்” என்று வான்மீகரும், “யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்/ யோகச் சமாதியின் உள்ளே உளரொளி / யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி /யோகச் சமாதி உகந்தவர் சித்தரே” என்று திருமூலரும் விளக்கம் தருகிறார்கள். இவற்றின் மூலமே சித்தரின் குணநலன்களை அறியலாம்.

சாதி, சமயம், உருவ வழிபாடு மறுப்பின் மூலம் சமதர்மத்தை வலியுறுத்தியவர்கள் சித்தர்கள். இயற்கை வடிவங்களான மரம்,செடி,கொடி,போன்றவைகளின் இயல்பறிந்து மனிதஉடலின் நோய்த்தடுப்பும், குணமாக்கும் விதத்தையும் அறிந்தவர்கள். நோய்த் தீர்க்கும் மருத்துவராய் மட்டுமின்றி புலனடக்கம் பற்றியும் யோகம் பற்றியும் பேசித் திரிந்ததோடல்லாமல் பின் பற்றியும் வாழ்ந்தவர்கள். மக்களின் மன இருளைப் போக்கி ஞான ஒளிபரப்பச் சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினர்.
கோள்களின் நிலை,கால மாறுபாடு, சுடர்களின் இயக்கம் பற்றியும் கூறி பல சோதிட நூல்களையும் மருத்துவ நூல்களையும் எழுதியவர்கள் சித்தர்கள்.

No comments:

Post a Comment