தியானமும் திருமந்திரமும்

Friday, September 24, 2010
அவையாவன தன்னைக் கட்டுப்படுத்தல், பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் பேணுதல், உலகெலாம் காக்கும் மகாசத்தியாகிய பரம்பொருளைப் போற்றுதல் என்பனவாகும். இக்கடமைகளால் மனிதஉயிர்கள் அடையும் பயன்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்க்கைத் தத்துவங்களாகும். இந்தவகையில் பரம் பொருளைப் போற்றித் தியானிக்கும் மரபை திருமூலர் தனது மந்திரத்தில் தியானம் என்னும் கருப்பொருளில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவமாக மாட்டார்
தெளிவு அறியாதார் தீரார் பிறப்பே.


தெளிவு என்பது எல்லாம் அவன்செயல் என்று உணரும் மெய்ஞ்ஞானத் தெளிவு ஆகும். மனத்தெளிவு உண்டாகும்போதுதான் ஒவ்வொரு ஆன்மாவும் இறைசக்தியைச் சிந்திக்கத் தொடங்குவதில் ஈடுபடத் தொடங்குகிறது. அப்போது ஒரு ஆன்மாவால் சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம், ஞானமார்க்கம் என்று பல வழிகளைக் கடைப்பிடிக்க முடியும். இதனால் ஒவ்வொரு உயிர்களும் அடையும் சிறப்பை சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்ற உயர்நத தத்துவங்கள் கூறுகின்றன. இவை அனைத்தையும் பெறுவதற்கு ஆன்மாவானது மனக்குவிவுடன் பரம்பொருளுடன் ஒன்றியிருத்தலே முதன்மையாகும்.

சித்தம் யாவையும் சிந்தித் திருந்திடும்
அர்த்தம் உணர்வது ஆகும் அருளாலே
எத்தும் யாவையும் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத்தே அமர்ந்தானே.

சிவத் தியானத்தின் மூலம் தருகின்ற பேறுகளை ஒரு ஆன்மா அடைகின்றபோது உலகத் துயரங்களில் இருந்துவிடுபட்டு பற்றுக்களும் அறவே அற்றுப் போகின்றன.

மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்தன் இறையடி தானே.

என்பதை ஒவ்வொரு ஆன்மாக்களும் பற்றி நின்றால் உலக இச்சைகளில் உள்ள பற்றுக்கள் அறவே நீங்கிய ஒரு பற்றற்ற தெளிவு நிலை ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் உண்டாகும். தியானத்தில் ஈடுபடும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் திருமூலரின் உபதேசக் கருத்துக்கள் அடங்கிய பாடல்வரிகள் நினைவில் இருத்தல் வேண்டும்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணோமே
சென்றே புகுங்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைத்து உய்மினே!

சிவ சிவ என்பதை ஒரு மந்திரமாகவும், அதனை ஒரு தியானப் பொருளாகவும் ஆன்மாக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ எனச் சிவகதி தானே.

ஆன்மாக்கள் பரமன்மீது மனத்தைக் குவித்துத் தியானிக்கும்போது சிவ சிவ மந்திரத்தை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் எனக் கீழு்வரும் பாடல் விளக்குகின்றது.

நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
சிவ என்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்ற
பாவமது தீரும், பரிசும் தற்றால்
அவமதி தீரும் அறும்பிறப் பன்றோ!

ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் சிவனைத் தவிர வேறு வேறு தெய்வங்கள் இருந்தால் அவற்றிற்குரிய மந்திரங்களை ஒரு குருவின் உதவிமூலம் அறிந்து தியானம் செய்தல் வேண்டும். இஷ்ட தெய்வ தியானங்களுக்கு மந்திரங்கள், தியானங்கள், பிஜாட்சரங்கள் தனித்தனியே கூறப்படுகின்றன. ஒவ்வொரு ஜீவன்களுக்கும் இஸ்ட தெய்வங்கள் வேறாக இருப்பினும் சிவனை ஓம் நமசிவாய என்று ஓதியும் ஓம் சக்தி ஓம் என்று ஓதியும் உயர்ந்த தியான சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம்.

அகஸ்தியர் பூரண சூத்திரம், மற்றும் சித்தர் நூல்களில் தியான மந்திரங்கள் பல கூறப்படுகின்றன.

தரிசிக்கத் தியானம் ஒன்று சொல்லக் கேளாய்
சிவாய நம ஓம் கலீம் என்று சேவி.

என்று சிவத்தியானம் கூறுகின்றது.

அம் உம் ஓம் ஸ்றிம் ஈம் சம் வம்
சரவணபவ தேவா ஆறுமுகவா சிவசுப்ரமணியா நம.

என்பது முருகன் தியானமாகும்.

என சுப்ரமணியர் தியானம் கூறுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு தியான மந்திரங்கள் வேதாகமங்களில் கூறப்பட்டுள்ளன.

இவற்றை எல்லாம் குரு உபதேசத்தால் பெற்று அனைத்து ஆன்மாக்களும் தங்கள் பிறவிப் பெருங்கடலை நீந்துவோமாக.

No comments:

Post a Comment