சித்தர்

Tuesday, September 28, 2010
சித்தர்


பராபரத்தில் பரம், பரத்தில் சிவம், சிவத்தில் சக்தி, சக்தியிலிருந்துதான் பஞ்ச பூதம் உள்ளிட்ட அனைத்தும் தோன்றியது. இந்த சிவன் தான் சித்தன் எனவும் கூறப்படுவதுண்டு.

சித்தர் வழி தனி வழி ! யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கு அவர்களுடையது. சித்தர்களின் விடா முயற்சியும், உழைப்பும், தன்னலமற்ற பணியும் நமக்கு எப்போதும் வேண்டும் வேண்டும்.

சீவனே சிவன் என்று துணிவதே சித்தர் தம் மதம்.

சித்தர் தம்மைக் காலங்கடந்தவராகக் கூறிக் கொளல் மிகையும் அன்று. பொய்யும் அன்று.

சித்தம் என்பது புத்தி, மனம்,

சித்து புத்தியால் ஆகிற காரியம்

சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.

சித்தர்கள் 18 பேர்.

1. கும்ப முனி, 2. நந்தி முனி, 3. கோரக்கர், 4. புலிப்பாணி, 5. புகண்ட ரிஷி, 6. திருமுலர், 7. தேரையர், 8. யூகி முனி, 9. மச்சமுனி, 10. புண்ணாக்கீசர், 11. இடைக்காடர், 12. பூனைக் கண்ணன், 13. சிவவாக்யர், 14. சண்டிகேசர், 15. உரோமருஷி, 16. சட்டநாதர், 17. காலாங்கி, 18. போகர் என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது.

1. அகத்தியர், 2. போகர், 3. நந்தீசர், 4. புண்ணாக்கீசர், 5. கருவூரார், 6. சுந்தரானந்தர், 7. ஆனந்தர், 8. கொங்கணர், 9. பிரம்மமுனி, 10. உரோமமுனி, 11. வாசமுனி, 12. அமலமுனி, 13. கமலமுனி, 14. கோரக்கர், 15. சட்டைமுனி, 16. மச்சமுனி, 17. இடைக்காடர், 18. பிரம்மமுனி என்கிறது நிஜானந்த போதம்.

1. அகத்தியர், 2. போகர், 3. கோரக்கர், 4. கைலாசநாதர், 5. சட்டைமுனி, 6. திருமுலர், 7. நந்தி, 8. கூன் கண்ணன், 9. கொங்கனர், 10. மச்சமுனி, 11. வாசமுனி, 12. கூர்மமுனி, 13. கமலமுனி, 14. இடைக்காடர், 15. உரோமருஷி, 16. புண்ணாக்கீசர், 17. சுந்தரனானந்தர், 18. பிரம்மமுனி என்கிறது அபிதான சிந்தாமணி.

மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு. ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றுவதும், உறுமாறுவதும் சித்தர் சாதனையில் முக்கியமானவையாகும். சித்தர்கள் தங்கள் சாதனையை காய சாதனை (தேகத்தை மேம்படுத்துவது) என்றனர். அதன் முலம் காயசித்தி (தேகத்தை பூரணத்துவம் அடையச் செய்வது) பெறுவது அவர்கள் நோக்கம்.

ஓம் என்ற பிரணவ ஒலி உலகத்தின் முல ஒலி ஆகும். அ. உ. ம். முன்றும் சேர்ந்து ஓம் என்பர். அ. சூரியன், உ. சந்திரன், ம். அக்கினி ஒளிமயமான எஅ நாதம், உ விந்து, ம் கலை, நாத விந்து கலைகளின் தொகுப்பே ஓம் என்றும் கூறுவர். அ. கிரியா சக்தி (பிராமி), உ. இச்சா சக்தி (வைணவி), ம். ஞானசக்தி (ரௌத்ரி) என்பது சித்தர் கருத்து.

சீக்கிரமே தருமம் செய் கொஞ்சம்

திருப்பணிகளும் செய்.

என்றார் சித்தர்.

அறப்பணியும், இறைபணியும் இறந்தும் இறவாப் பெரு வாழ்வளிக்கும்.

உன்னிடம் இல்லை என்று கேட்டு நிற்கும் எளியோரிடம் இருந்தும் இல்லை என்று சொல்லாதே. நாளை வா என்று தள்ளாதே. இருந்தால் அப்போதே கொடுத்துதவு.

நலிவுற்றவரை நசித்து வாழ என்னாதே. வஞ்சனை செய்ய முயலாதே. உன்னைத் தஞ்சமென்று வந்தடைந்தவரையே கெடுப்பதற்கு துணியாதே. உன் கண்ணில் பட்டதையும், காதில் விழுந்ததையும் உண்மை என்று கொள்ளாதே.

கற்புறைப் பெண்டிர் மீது காமசிந்தை வையாதே. கட்டியவளே என்றாலும் உற்றது சொல்லாதே. பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி இடம் கொடுத்து அவர்களுடைய அலட்சியத்துக்கு உள்ளாகாதே. கொலை, களவு, பொய் விலக்கு, தன்னை வியந்து கொள்கிறவனும் வலுச் சண்டைக்கு நிற்கிறவனும் காணாமல் போவான்.

சிந்தித்தால் தெளிவு வரும். சித்தர்களது பாடல்களைப் படித்தால் சிந்தனையும், தெளிவும் சேர்ந்து வரும்.

மனிதர்களுக்கு ஐம்புலன்களால் அறியப்படும் அறிவு ஐந்தும், ஆத்மா ஒன்றுமாக ஆறறிவு. மிருகங்களுக்கு நான்கு அறிவுகளும், சீவனுமாக ஐந்து. பறவைகளுக்கு அறிவு முன்றே. மார்பினால் நகரும் பிராணிகளுக்கு இரண்டு அறிவு. தாவரங்களுக்கு அறிவு ஒன்று என்று ஆராய்ந்து பின் மனித உடலின் சிறப்பை நன்கு உணர்ந்து அதை உலகுக்கு எடுத்துக் காட்டியவர்கள் சித்தர்களே!.

ப்பொருள் வடிவும் ஓம் ஆகும்.

பதினெண் சித்தர்கள்

சதுரகிரி மலையில் வாழ்ந்த சித்தர் கூட்டம் பற்றி அகத்தியர் ஆயிரத்து இருநூறு என்ற நூல் கூறும் வரலாறு இங்கே எண்ணற்பாலது.



1. எக்கிய மா முனி என்பவர் அகத்தியருக்கு சிங்கி வித்தை கற்றுக் கொடுத்தார். அதனால் அகத்தியர் சிங்கி வித்தையில் குருமுடித்தார்.

2. சிங்கி வித்தை கருவூரார்க்கு உணர்த்தப்பட்டு அவர் சிங்கி வேதை முடித்து போகத்தில் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார்.

3. கொங்கணர் வீரம் என்கிற பாடாணத்தால் வேதை முடித்து சிவயோக நிட்டையில் பலகாலம் இருந்து மேருகிரியில் பூரணத்தில் நின்று ஒடுங்கினார்.

4. போகர் ஏமரசம் கண்டு அதனை உண்டு ஒரு கோடி காலம் சிவயோகம் இருந்து பூரணத்தில் தங்கினார்.

5. கயிலாசச் சட்டைமுனி சவுக்காரச் சுண்ணம் கண்டு வேதை பார்த்து கோடி கற்பகாலம் இருந்து சிவயோகியாய் சாலோக பதிவியை அடைந்தார்.

6. கமல முனி அண்டச்சத்து கண்டு மெழுகுபண்ணி வேதை பார்த்து மதியமிர்தமுண்டு மேருவில் தவம் பண்ணி சதகோடி யுகாந்தம் இருந்து கமல மலரில் சென்று பரவெளியில் கலந்தார்.

7. மச்ச முனி கெந்தியில் சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து சடம் அழியாமல் சிவயோகத்தில் இருந்து சிவமயமானார்.

8. திருமுலர் கௌரி சத்து எடுத்து வேதை பார்த்து செந்தூரம் செய்து கோடான கோடி காலம் பூரணமாய் நிட்டை கூடி மணி மகுட முடியில் சென்று பூரணத்தில் அடங்கினார்.

9. நந்தீசர் அயக்காந்த சத்து எடுத்து வேதைபார்த்து செந்தூரித்து பூரணத்தில் நின்று வெகு கோடி யுகாந்த காலம் இருந்து சோதியில் கலந்தார்.

10. சுந்தரானந்தர் களி உப்பு வாங்கி நீற்றி சுண்ணாம்பாக்கி நவலோக வேதை பார்த்து தன்னிலை அறிந்து பொற்கமலம் மீதேறி அனந்தகாலம் தவம் இருந்து பூரணத்தில் மகிழ்ந்தார்.

11. கோரக்கர் நவக்கிரக பூசை பண்ணி பூரணத்தில் சொக்கி கோடியுகம் நிட்டை கூடி கைலாயம் சென்று பூரணத்தில் இருந்து பரமபதம் அடைந்தார்.

12. காலாங்கி

13. புண்ணாக்கீசர்

14. வியாக்ரபாதர்

15. கூனக் கண்ணர்

16. சிவவாக்கியர்

17. இடைக்காடர்

18. சண்டிகேசர்

ஆகியோர் வாசியோகம் செய்து மௌனமாகி சோதியில் ஏழு பேரும் சிவபூசை செய்து மௌனமாகி சோதியில் கலந்தார். இதனால் பதினெண்சித்தர்கள் யாவர் என்பதும் அவர்கள் நவபாடாணங்களை வேதை செய்து குரு முடித்து காயகல்பம் உண்டு பன்னெடுங்காலம் வாழ்ந்து சோதியில் கலந்தார்.

No comments:

Post a Comment