திருவாசகம்

Wednesday, September 15, 2010
மாணிக்கவாசகர்.

திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.

யாத்திரைப் பத்து
(தில்லையில் அருளியது)
சிவலோகத்துக்குச் செல்ல அனைவரையும் அழைத்துக் கூறிய பகுதியாதலின், இது, 'யாத்திரைப்பத்து' எனப்பட்டது.
அனுபவ அதீதம் உரைத்தல்
துரியாதீத நிலையாகிய பேரின்ப அனுபவத்தைக் கூறுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே.

பதப்பொருள் : பூ ஆர் - மலர் நிறைந்த, சென்னி - முடியையுடைய, மன்னன் - அரசனாகிய, எம் புயங்கப் பெருமான் - பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியோமை - சிறியவர்களாகிய நம்மை, ஓவாது - இடையறாமல், உள்ளம் கலந்து - உள்ளத்தில் கலந்து, உணர்வு ஆய் - உணர்வுருவாய், உருக்கும் - உருக்குகின்ற, வெள்ளக்கருணையினால் - பெருகிய கருணையால், ஆவா என்னப்பட்டு - ஐயோ என்று இரங்கியருளப்பட்டு, அன்பு ஆய் - அன்பு உருவாய், ஆட்பட்டீர் - ஆட்பட்டவர்களே, பொய் விட்டு - நிலையில்லாத வாழ்க்கையை விட்டு, உடையான் கழல் புக - நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடைய, காலம் வந்தது - காலம் வந்துவிட்டது, போவோம் - வந்து ஒருப்படுமின் - வந்து முற்படுங்கள்.

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
தகவே உடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே.

பதப்பொருள் : நக - நாட்டார் நகை செய்ய, ஞாலத்துள் புகுந்து - உலகில் எழுந்தருளி, நாயே அனைய - நாயைப் போன்ற, நமை ஆண்ட - நம்மை ஆட்கொண்ட, தகவு உடையான்தனை - பெருமையையுடைய இறைவனை, சார - அடைந்தால், தாம் தாம் - அவரவர், தளராது இருப்பார் - தளர்ச்சி நீங்கி இருப்பார்கள், ஆதலின், அடியவர்களே, நீர் - நீங்கள், புலன்களில் - ஐம்புல விடயங்களில், புகவேண்டா - செல்ல வேண்டா, புயங்கப் பெருமான் - பாம்பணிந்த பெருமானது, பூங்கழல்கள் - தாமரைப் பூவை ஒத்த திருவடிகளை, மிக நினைமின் - மிகுதியாக நினையுங்கள், மிக்க எல்லாம் - எஞ்சியவையெல்லாம், வேண்டா - நமக்கு வேண்டா, போக விடுமின்கள் - அவற்றை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டுவிடுங்கள்.

தாமே தமக்குச் சுற்றமுந் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

பதப்பொருள் : தமக்குச் சுற்றமும் தாமே - ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே, தமக்கு விதி வகையும் தாமே - நடைமுறைகளை வகுத்துக்கொள்பவரும் அவரே; ஆதலால், அடியவர்களே, நீங்கள், யாம் ஆ£¢ - நாம் யார், எமது ஆர் - எம்முடையது என்பது யாது, பாசம் ஆர் - பாசம் என்பது எது, என்ன மாயம் - இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து, இவை போக - இவை நம்மை விட்டு நீங்க, கோமான் - இறைவனுடைய, பண்டைத் தொண்டரொடும் - பழைய அடியாரொடும் சேர்ந்து, அவன்றன் குறிப்பே - அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே, குறிக்கொண்டு - உறுதியாகப் பற்றிக்கொண்டு, பொய் நீக்கி - பொய் வாழ்வை நீத்து, புயங்கன் - பாம்பணிந்தவனும், ஆள்வான் - எமையாள்வோனுமாகிய பெருமானது, பொன் அடிக்கு - பொன் போல ஒளிரும் திருவடிக்கீழ், போம் ஆறு அமைமின் - போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

அடியா ரானீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசேர் உடலைச் செலநீக்கிச் சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிச்சேர் மேனிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே.

பதப்பொருள் : அடியார் ஆனிர் எல்லீரும் - அடியாராகிய நீங்கள் எல்லீரும், விளையாட்டை - உலக இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை, அகல விடுமின் - நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள்; கடிசேர் அடியே - மணம் தங்கிய திருவடியையே, வந்து அடைந்து - வந்து பொருந்தி, திருக்குறிப்பை - திருவுள்ளக் குறிப்பை, கடைக்கொண்டு இருமின் - உறுதியாகப் பற்றிக்கொண்டிருங்கள்; பொடி சேர் மேனி - திருவெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய, புயங்கன் - பாம்பணிந்த பெருமான், செடி சேர் உடலை - குற்றம் பொருந்திய உடம்பை, செல நீக்கி - போகும்படி நீக்கி, சிவலோகத்தே - சிவபுரத்தே, நமைவைப்பான் - நம்மை வைப்பான், தன் பூ ஆர் கழற்கே - தனது தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே, புகவிடும் - புகும்படி செய்வான்.

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ டுடன்போ வதற்கே ஒருப்படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
புடைபட் டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே.

பதப்பொருள் : (அடியார்களே!) மிக - மேன்மைப்படுவதற்கு, இனி ஓர் காலம் இல்லை - இனிமேல் ஒரு காலம் கிடையாது; ஆகையால், அணியார் கதவு அடையாமே - சிவலோகத்தின் அழகிய கதவு நமக்கு அடைக்கப்படாதிருக்கும்படி, வெகுளி - கோபத்தையும், வேட்கை நோய் - காம நோயையும், விடுமின் - விட்டுவிடுங்கள், உடையான் அடிக்கீழ் - நம்மை உடைய பெருமானது திருவடிக்கீழ், பெருஞ்சாத்தோடு - பெரிய கூட்டத்தோடு, உடன் போவதற்கே ஒருப்படுமின் - உடன் செல்வதற்கு மனம் இசையுங்கள், புயங்கன் - பாம்பை அணிந்தவனும், ஆள்வான் - நம்மை ஆள்பவனுமாகிய இறைவனது, புகழ்களை - பெருமைகளை, புடைபட்டு - எங்கும் சூழ்ந்து, உருகிப் போற்றுவோம் - மனமுருகிப் போற்றுவோம்; போற்றினால், சிவபுரத்துள் - சிவலோகத்தில், நாம் போய் அடைவோம் - நாம் போய்ச் சேர்ந்துவிடுவோம்.

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட்
டிகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே.

பதப்பொருள் : (அடியார்களே!) நாம் - நாம், இனி -இனிமேல், ஒர் இடையூறு அடையாமே - ஒரு துன்பம் வந்து சேராவண்ணம், திகழும் - விளங்குகின்ற, சீர் ஆர் - சிறப்பு அமைந்த, சிவபுரத்துச் சென்று - சிவபுரத்துக்குப் போய், சிவன் தாள் வணங்கி - சிவபெருமானது திருவடியை வணங்கி, நிகழும் - அங்கே வாழும், அடியார் முன் சென்று - அடியார் முன்னே சென்று, நெஞ்சம் உருகி நிற்போம் - மனம் உருகி நிற்போம்; அதற்கு, புயங்கள் தாளே - பாம்பணிந்த பெருமானது திருவடியையே, புகழ்மின் - புகழுங்கள், தொழுமின் - வணங்குங்கள், பூப்புனைமின் - அவற்றுக்கு மலர்சூடுங்கள், புந்தி வைத்திட்டு - அதனையே நினைவில் வைத்துக்கொண்டு, எல்லா அல்லலையும் - பிற எல்லாத் துன்பங்களையும், இகழ்மின் - இகழுங்கள்.

நிற்பார் நிற்கநில் லாஉலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெம்மானே.

பதப்பொருள் : பொற்பால் - அழகினால், ஒப்பு ஆம் - தனக்குத் தானே நிகரான, திருமேனி - திருமேனியையுடைய, புயங்கன் ஆள்வான் - பாம்பணிந்த பெருமானது, பொன்னடிக்கே - பொன் போன்ற திருவடியை அடைவதற்கே, நிற்பீர் - நிற்கின்றவர்களே, நில்லா உலகில் - நிலையில்லாத உலகின்கண், நிற்பார் நிற்க - நிற்க விரும்புவார் நிற்கட்டும், நாம் இனி நில்லோம் - நாம் இங்கு இனி நிற்கமாட்டோம், செல்வோம் - சென்றுவிடுவோம்; செல்லாமல், நின்று - தங்கி நின்று, பிற்பால் பேழ்கணித்தால் - பின்பு மனம் வருந்தினால், பெம்மான் - எம் பெருமான், பெறுதற்கரியன் - பெறுதற்கு அரியவனாவான்; ஆதலால், எல்லாம் தாழாது -எல்லோரும் காலந்தாழ்த்தாது, நிற்கும் பரிசே - நீங்கள் நினைந்து நின்றபடியே, ஒருப்படுமின் - செல்ல மனம் இசையுங்கள்.

பெருமான் பேரா னந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமால் உற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந் திறந்த போதே சிவபுரத்துத்
திருமால் அறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே.

பதப்பொருள் : பெருமான் - இறைவனது, பேரானந்தத்து - பேரின்பத்தில், பிரியாதிருக்கப்பெற்றீர்காள் - பிரியாமல் மூழ்கியிருக்கப் பெற்றவர்களே, நீர் அருமால் உற்று - நீங்கள் அருமையான மயக்கத்தில் பொருந்தி, பின்னை - பின்பு, அம்மா - ஐயோ என்று, அழுங்கி அரற்றாதே - வருந்தி அலறாவண்ணம், திருமா மணிசேர் - அழகிய சிறந்த மணிகள் இழைக்கப்பெற்ற, திருக்கதவம் - திருக்கதவு, திறந்த போதே - திறந்திருக்கும்போதே, சிவபுரத்து - சிவபுரத்திலுள்ள, திருமால் அறியா - திருமாலறியாத, திருபுயங்கன் - அழகிய பாம்பணிந்த பெருமானது, திருத்தாள் - திருவடியை, சென்று சேர்வோம் - சென்றடைவோம் (ஒருப்படுமின்).

சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங் கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே.

பதப்பொருள் : போரில் பொலியும் வேல் - போரில் விளங்குகின்ற வேல் போன்ற, கண்ணாள் - கண்களையுடைய உமையம்மையின், பங்கன் - பாகனும், புயங்கன் - பாம்பணிந்தவனும் ஆகிய இறைவனது, அருள் அமுதம் - திருவருள் அமுதத்தை, ஆரப் பருகி - நிரம்பப் பருகி, ஆராத ஆர்வம் கூர - தணியாத ஆசை மிக, அழுந்துவீர் - மூழ்கியிருப்பவர்களே, பொய்யில் கிடந்து புரளாதே - பொய்யான வாழ்வில் கிடந்து புரளாமல், சிவன் கழற்கே - சிவபெருமானது திருவடியிலே, போரப் புரிமின் - அடைய விரும்புங்கள், சேரக் கருதி - அதனையடைய எண்ணி, சிந்தனையை - சித்தத்தை, திருந்த வைத்து - தூய்மையாக வைத்துக்கொண்டு, சிந்திமின் - இடைவிடாமல் நினையுங்கள்.

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீ ராகில் இதுசெய்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கள்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே.

பதப்பொருள் : புரள்வார் - புரள்பவராயும், தொழுவார் - வணங்குபவராயும், புகழ்வார் - துதிப்பவராயும், இன்றே வந்து - இப்பொழுதே வந்து, ஆள் ஆகாதீர் - ஆட்படாதவர்களாய், மருள்வீர் - மயங்குகின்றவர்களே, பின்னை - பின்பு, மதியுள் கலங்கி - அறிவினுட்கலக்கமடைந்து, மயங்குவீர் யாவர்? தெருள்வீர் ஆகில் - தௌ¤வடைய விரும்புவீரானால், இது செய்மின் - எம்பெருமானுக்கு ஆட்படுதலாகிய இதனைச் செய்யுங்கள்; சிவலோகக்கோன் - சிவலோக நாதனாகிய, திருப்புயங்கன் - பாம்பணிந்த பெருமானது, அருள் - திருவருளை, அகல் இடத்து - அகன்ற உலகின்கண், ஆர் பெறுவார் - யார் பெற வல்லார்கள்? அந்தோ அந்தோ அந்தோ - ஐயோ ஐயோ ஐயோ!

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment