பிரணவம் - 2

Sunday, November 14, 2010
முதல் எழுத்து:

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும்
முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக்
குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம்
முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,

அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "

"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.


உருவமும்- உடலும்.

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்

"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து
அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி
நிற்கும். இதை விளக்கும்படி திருமூலர்,

" ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்
தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின் அழித்தற்
தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே
இணைத்து அடக்கி நிற்கும்.

No comments:

Post a Comment