கடவுள்

Thursday, November 25, 2010
ஞானத்தின் வடிவமான குரு ஒருவர் வலம் வந்தார். அவரது திருவோட்டில் ஒருவர் அன்னமிட்டார். அந்தச் அன்னத்தில் ஒரு நாய் வாய் வைத்து உண்டது. நாயின் முதுகில் ஞானி அமர்ந்தார். பாரம் தாங்காமல் நாய் திணறியது. இந்த செய்கையை ஊர் கூடிப் பார்த்தது. வெளியில் சென்றிருந்த சீடன் திரும்பினான். குருவின் செய்கை அவனுக்குத் திகைப்பைத் தந்தது!

“என்ன இது குருவே?” என்றான் அவன். “பிரமத்தில் ஒரு பிரம்மம், பிரமத்தை இட்டது. அதை ஒரு பிரம்மம் உண்டது. அந்த பிரம்மத்தின் மேல் இந்த பிரம்மம் அமர்ந்திருப்பதை, இத்தனை பிரம்மங்கள் கூடிப் பார்க்க, ‘என்ன இது?’ என்கிறது ஒரு பிரம்மம்!” என்று சிரித்தபடி சொன்னார் ஞானி. திருவோடும் பிரம்மம்; அன்னமும் பிரம்மம்; நாயும் பிரம்மம்; பார்த்த மக்களும் பிரம்மம்; கேட்ட சீடனும் பிரம்மம்; தானும் பிரம்மம்; என்ற ஞானியின் பார்வைதான் ஞானத்தின் உச்சம்.

· ஸ்ரீராமானுஜரைத் தேடி வந்த ஒருவன், “ஆண்டவனை அடையும் வழி என்ன?” என்றான். “மனிதர்கள் மீது அன்பு வைப்பதுதான் ஒரே வழி” என்றார் அந்த மகான்.

· ‘கடவுள் இல்லை’ என்று காலமெல்லாம் வாதித்த அமெரிக்க அறிஞர் இங்கர்சால், ‘கடவுள் இருந்தால் மன்னிக்கட்டும்’ என்று தனது நூலில் எழுதினார்.

· ‘உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு’ என்றார் அண்ணல் காந்தி.

சக மனிதர்களிடம் இறக்கி வைக்க முடியாத இதயத்தின் பாரத்தை, ஒருவன்மேல் நம்பிக்கையோடு நாம் இறக்கி வைப்போம். அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு என்று உணர்ந்து கொள்வோம்.

No comments:

Post a Comment